Wednesday, 30 January 2013

என் பார்வையில் பட்டாம்பூச்சி !ஃப்ரெஞ்சு மொழியிலிருந்து 'பாப்பில்லான்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பெற்ற ஹென்றி ஷாரியரின் இந்த நாவல் உண்மைக்கதை இக்கதை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு திரைப்படமாகவும் வெளிவந்துள்ளதாம். நல்ல நூல்கள் தாய்மொழியாம் தமிழில் கிடைக்க வேண்டும் என்ற ஆவலில் திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்களின்   உழைப்பினால் கடமை உணர்வினால் கிடைத்த பொக்கிஷமே இந்த 'பட்டாம்பூச்சி' ஆகும்.

வாழ்க்கையில் போராடி ஜெயித்த மனிதர்கள் மட்டும் தனது வாழ் நாட்களை இப்படி சரித்திர மாக்க முடியும். அந்த வகையில் பட்டாம்பூச்சி தனது அறுபத்தாறு வயதில் தன்னைப் பற்றி எழுதிய புத்தகம் தான் இந்த நாவல்.

ஒரு கதையை நாம் படிக்கும் போதே அது கற்பனைக் கதை என்றாலும் அதில் நம் மனம் ஒன்றி விடும். அந்த கதாநாயகியோ நாயகனோ அழுதால் நாம் அழுது, சிரித்தால் நாமும் சிரித்து அக்கதையோடே ஒன்றிவிடுவோம். அந்த வகையில் 'பட்டாம் பூச்சி' உண்மைக் கதையாதலால் வரிகளில் உயிரோட்டம் காண முடிகிறது.

இருபத்தைந்து வயதில் இளைஞன் எப்படி எந்த மனநிலையில் இருப்பான் என்று நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாத படி கதையின் தொடக்கத்தில் இருந்தே சிறை வாழ்க்கை அதுவும் விடுதலை என்பதே இனி வாழ்வில் இல்லையென்றான ஒரு சிறை வாழ்க்கை இப்படி ஒரு சூழலில் எந்த மனிதனாக இருந்தாலும் அழுதோ அல்லது புலம்பியோ சிறை வாழ்வை அனுபவித்து செத்திருப்பான். ஆனால் பட்டாம் பூச்சி கொடிய தீவாந்திர சிறை வாழ்விலும் விடுதலை என்ற சிந்தையிலேயே போராடி வெற்றி கண்ட மாபெரும் விடுதலை சாசனம் தான் இந்த பட்டாம்பூச்சி. எந்த மனிதனுக்கும் செய்யாத குற்றதிற்காக தண்டனை கிடைத்தால் அவன் மனநிலை எப்படி இருக்கும் வசதி படைத்தவன் என்றால் கோர்ட் வக்கில் என பணம் செலவழித்து வெளி வந்திருக்காலம் ஒரு சராசரி மனிதனான பட்டாம்பூச்சி தம் மீது பழி சுமத்தியவர்களை பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே ஆரம்பத்தில் தான் தப்பிப்பதற்கான காரணத்தை மூர்க்கமாக எதிர்கொண்டான்.

சிறை வாழ்க்கையில் ஆயுள் தண்டனை பெற்று தென்னமெரிக்காவில் உள்ள கயானா சிறைக்கு கடத்தப்படுவது தெரிந்தும் பட்டாம் பூச்சியின் தைரியம் தன்னம்பிக்கை விடாமுயற்சி அவரை இவ்வாறு சிந்திக்க வைத்து படிக்கும் ஒவ்வொருவர் மனதிலும் விடுதலை உணர்வை தூண்டும் வரிகள்   'குற்றமற்றவன் குற்றமற்றவன் என்று ஒவ்வொருவரிடமாகப் போய் அளந்து கொண்டிருக்காதே !' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். உன்னைப் பார்த்துச் சிரிப்பார்கள். ஒரு கொலைக்காக ஆயுள் தண்டனை பெற்று விட்டு கொலை செய்தவன் வேறு யாரோ என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் சுத்தக் கோமாளித்தனம். ' என்று தனக்குத் தானே சொன்னதோடு மட்டுமல்லாமல் தப்ப முயற்சி செய்து பல முறை தோல்வி கண்டும் துவலாது வெற்றி கண்ட விதம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

"கயானாவில் படுபயங்கரம் ஒவ்வொரு வருடமும் 100க்கு 80 பேர் செத்துப் போகிறார்கள். முந்தின கும்பல் மொத்தமும் இறந்ததும் அடுத்த கும்பல் புறப்படுகிறது". என்ற சக கைதிகளின் எச்சரிக்கையையும் பொருட் படுத்தாது அவர்களையும் தோழர்களாக்கி அவர்களுக்கும் விடுதலை உணர்வை ஊட்டும் பட்டாம் பூச்சியின் துணிவு பாராட்டுக்குரியது.

தன் மனைவி மக்கள் என்ற நினைவையும் அந்த சுமைகளையும் சுமக்க தயாராக இருக்கும் ஓரெ ஜீவன் தன் தந்தை என்பதை   நினைத்து பெருமிதம் அடையும் கையிதின் மனநிலையை கண் முன் கொண்டு போகும் அழகிய தமிழ் மொழிபெயர்ப்பு  நடை படிக்கும் நம்மை மொழிபெயர்த்த திரு .ரா.கி. ரங்கராஜன் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.

கடலிலும் ,கட்டு மரத்திலும், காட்டுப்பகுதிகளிலும் சிதறியோடி மறுபடி சிக்கி கொடிய தண்டனை அனுபவித்தும் மறுபடி மறுபடி விடுதலை என்ற ஒரு உணர்வை மட்டுமே உயிரில் சுமந்து போராடி சுதந்திர மனிதனாக ஆகும் சராசரி மனிதனின் காதலும் நகைச்சுவையும் கோபாவேசமும் திகிலும் நட்பும் கொடுமையும் நிறைந்த போராட்ட வரலாறு தான் பட்டாம்பூச்சி.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய சுஜாதா அவர்களின் வரிகள் நம்மை வியக்க வைக்கின்றன. அவர் திரு ரங்கராஜனைப்பற்றி குறிப்பிட்ட வரிகள் சில " ஒரு தபால் தலையில் அடங்கிவிடக்கூடிய திறமை உள்ள எழுத்தாளர்கள் எல்லாம் சுயவிளம்பரமும் பட்டங்களும் பரிசுகளும் ஏற்பாடு பண்ணிக்கொண்டு சொந்த பெருமையில் குளிர்காயும் சூழ்நிலையில் ரங்கராஜன் ஒரு கர்ம யோகி.  இத்தனை சாதனை படைத்தவருக்கு குறைந்த பட்சம் ஒரு பொன்னாடைகூடப் போர்த்தாதது தமிழகத்தின் விசித்தரமான முரண்பாடுகளில் ஒன்று! " என்று குறிப்பிட்டுள்ளார். இவ்விதம் திரு. ரா.கி. ரங்கராஜன்அவர்களின் முழுத் திறமைகளையும் சுஜாதா அவர்கள் தமது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இந்த மகத்தான மனிதருக்கு தகுந்த மரியாதைகளும் பராட்டும் கிடைக்கவில்லை என்பதை நினைக்கும் போது நெஞ்சம் கனக்கவே செய்கிறது. எல்லா மனிதர்களுமே தமக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதில்லை. அதுவும் சிறுகதை தொடர்கதை கவிதை கட்டுரை நாடகம் இப்படி பல துறையிலும் முத்திரை பதித்த மனிதனை போற்றத் தெரியாத தமிழகத்தை என்ன செய்வது ஆதங்கப்படுவதை விடுத்து.  மாபெரும் மானிட சாசனத்தை நீங்களும் நேரம் கிடைப்பின் வாசித்து மகிழுங்கள்.

நூலின் பெயர் : பட்டாம் பூச்சி
ஆசிரியர் : ஹென்றி ஷாரியர்
தமிழில் மொழிபெயர்ப்பு : ரா.கி . ரங்கராஜன்.
பக்கங்கள் : 856
விலை : 250.

-- படம் டிஸ்கவரி இணைய பக்கத்தில் இருந்து எடுத்தது.

14 comments:

 1. இப்போது மட்டுமல்ல இந்த நிலை நல்லவொரு திறமைசாலிகளுக்கு. நம்முடைய அய்யன் திருவள்ளுவருக்கும் கூட இப்படித்தான் ஒரு நிலைமை திருக்குறளை அரகேற்றுவதில்.. கடைசிவரை மதுரை தமிழ்சங்கத்தில் உள்ள ஆணவம் மிக்க புலவர்கள் இறுதிவரை ஏற்றுக்கொள்ள மறுத்து அவரை திருப்பி அனுப்பியே விட்டுவிட்டார்கள்....

  நமது ஔவைபாட்டி தானே தானே முன்வந்து போராடி அந்த ஆண்டவன் ஈசனே ஏற்றுக்கொள்ளும் படி பொற்றாமறை குளத்தை பொங்கவைத்து போராடி அல்லவா நம் திருக்குறளை அரங்கேற்றம் செய்தார். நம் திருவள்ளுவருக்கே இந்த கதி என்றால் நம்முடைய ரா.கி. ரங்கராஜன் ஐயாவையும் சொல்லவும் வேண்டுமா. ஆதியிலிருந்தே இந்த நிலைமை தான் எழுத்தாளர்களுக்கும் நல்ல புலமை மிக்கவர்களுக்கும்...

  சசி கலா தங்களின் ஆதங்கம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று. அவருக்கு ஏற்ற மரியாதையை கொடுத்தே ஆகவேண்டும் சரியான நேரத்தில்... கிடைக்கும் என்றே நம்புவோம் நம்பி செயல்படுவோம்... வாழ்க அவரின் எழுத்துகள். வளரட்டும் அவரது புகழ் எட்டுத்திசையும்....

  பிறருக்காக வருத்தப்பட்டு குரல் கொடுக்கும் தங்களின் பேருள்ளத்தை நல்லுள்ளத்தை பெரிதும் பாராட்டுகிறேன் சசி கலா. பிறர் வாழ நினைக்கும் தாங்களும் பல்லாண்டு வாழ அன்போடு வாழ்த்துகிறேன்....

  ReplyDelete
 2. ஏற்கெனவே குமுதத்தில் தொடர வெளிவந்தபோது
  படித்த ஞாபகம் இருக்கிறது.ஆயினும் தங்கள்
  விமர்சனம் படித்ததும் தொடர்ச்சியாகப் படிக்கவேண்டும் என்கிற
  ஆவல் பெருகுகிறது.அருமையாக பதிவு க்கு
  மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. திரு ரா.கி ரங்கராஜன் அவர்கள் 1973 இல் குமுதத்தில் மொழி மாற்றம் செய்து இந்த நாவலை (உண்மைக் கதையை) எழுதியபோது தொடர்ந்து படித்து இரசித்தவன் நான். சுவையாக மொழிபெயர்த்த இந்த நாவலைப் படித்தபின் இதனுடைய தாக்கத்தால் திரும்பவும் ஆங்கிலப் பதிப்பையும் படித்தேன். இந்நூலைப்பற்றிய உங்கள் மதிப்புரையும் அருமை.

  ReplyDelete
 4. நான் இது வரை இந்த நாவல் படித்ததில்லை தங்களின் விமர்சனம் பார்க்கும் போது .நாவலை படிக்க வேண்டும் என்று ஆர்வம் தோன்றுகிறது படிக்க முயல்கிறேன் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. 850 பக்கங்களா ? தொடர் ஜென்மமாய் தான் நான் படிக்க முடியும் போல.
  நீங்கள் படித்து முடித்து அழகான விமர்சனமும் செய்துள்ளீர்கள். நன்று.

  ReplyDelete
 6. mikka nanry. eniya vaalthu..
  நான் இது வாசிக்கவில்லை.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 7. நல்லதொரு நாவலை அழகாகத் தந்திருக்கின்றீர்கள்.

  ReplyDelete
 8. நான் ஒரே மூச்சில் படித்து முடித்த வெகு சுவாரசியமான புத்தகம்!. உங்கள் பதிவும் இப்புத்தகம் போலவே விறுவிறுப்பாக இருந்தது.

  ReplyDelete
 9. ரா கி.ர.வின் மொழிபெயர்ப்பா?நிச்சயம் பிரமாதமாகத்தான் இருக்கும்!

  ReplyDelete
 10. சுமார் 35-40 ஆண்டுகளுக்குமுன் குமுதத்தில் தொடராக வந்ததது. வாராவாரம் படிக்கும் பொழுது அடுத்தது என்ன என்ற உணர்வைத்தூண்டும் வகையில் எழுதப்பட்ட நாவல்.பதிப்பு முதலாவதா என்பது போன்ற விபரத்தையும் குறிப்பிட்டிருந்தால் தமிழ் வாசகர்களுக்கு தரமான படைப்புக்கள் சென்றடைய எவ்வளவு காலம் ஆகின்றது என்பதையும் தெரிந்து கொள்ள உதவும். ( பிரசுரத்திற்கு அல்ல. தென்றலின் கனவு 2 பிரதிகள் வந்து சேர்ந்தன. நன்றி. ஒன்று அம்பத்தூர் கிளை நூலகத்தில் சேர்க்கப்பட்டு விடும். மேலும் ஒரு தகவல். வலைப்பதிவர்கள் சார்பாக, சென்னை ஆதித்யா மருத்துவ மனையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சோதரி வினோதினிக்கு இன்று காலை கூகிள் குழுமம், தூத்துக்குடி ந.உ.துரை தலைமையில் 75,000/-ற்கான காசோலை வழங்கப்பட்டது. )

  ReplyDelete
 11. ஏற்கனவே படித்திருந்தாலும் இப்போதும் அந்தகால பட்டாம்பூச்சி பறக்கிறது.

  ReplyDelete
 12. நல்லதொரு தொகுப்பு !

  வாசிக்க முயற்சிக்கிறேன்

  நன்றி !

  ReplyDelete
 13. நல்ல அறிமுகம். இங்கே நூலகத்தில் இருக்கிறது. எடுத்துப் படிகிறேன்.....

  ReplyDelete