Sunday, 30 September 2012

சிறை பட்ட வரிகள் !உன் கண்கள் காட்டுவது போல்
 கண்ணாடி கூட எனை
அழகாக காட்டுவதில்லை.


 சொட்டுச் சொட்டாக விழுந்து
 மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது
உன் நினைவைப் போல் மழையும்.


உனக்காக எழுத
விரல் பிடித்த பேனாவும்
விலகி ஓட்டம் பிடித்து
கிறுக்கிக்கொண்டேயிருக்கிறது.


நீ உறங்கும்
அழகைக் காண
விழித்திருக்கும் நிலவு.


சிரித்து விடாதே
சிறைப் படும்
கவிதைகள்.

Friday, 28 September 2012

அலமுவும் சசி டீச்சரும் !சசி : மாமி, மாமி...!

அலமு : வந்துட்டேன்டிம்மா...

சசி : எப்படி மாமி பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு காமெடி மாதிரியா வந்திங்க... எங்க முகத்தில் கருப்பு பவுடர காணோம்?

அலமு : ஏன்டிம்மா... என்னடி உனக்கு என் மேல அம்புட்டு கோபம்?

சசி : ஏன் மாமி, சும்மா கிண்டல் பண்ணக் கூடாதா?

அலமு : உனக்கு என்னடிம்மா கிண்டலும் பண்ணுவ... நான் கேட்டதுக்கு தான் சொல்லி தர மாட்டேன்ற. நீயும் இத்தன நாளா வீட்ல இருந்தயா... எனக்கு கொஞ்சம் பொழுது போச்சி! இப்ப வேலைக்கு கிளம்பிடுவ. எனக்கும் நீ மதுமதி, கணேஷ், ராஜி-யோடல்லாம் பேசற மாதிரி சொல்லி தர சொன்னேனே... என்னடி ஆச்சி?

சசி : ஆமா மாமி, மறந்துடேன். போயும் போயும் என்னைய போய் கேட்டிங்களே... என்னத்த சொல்ல... சரி, மொத்தல்ல ஐடி ஓபன் பண்ணிங்களா?

அலமு : என்னடிம்மா இதுக்குமா ரேசன் கார்டு ஓட்டர் ஐடி எல்லாம் தரணும்?

சசி : அஹா! அஹா! அது இல்ல மாமி... இங்க ஜிமெயில், யாகு அப்படி மெயில் ஐடி ஓபன் பண்ணனும் மாமி!

அலமு : சரி, பிறகு என்ன பண்ணனும்? நீ கவிதை சொல்றியே... அது மாதிரி நானும் சொல்ல முடியுமாடி?

சசி : சுத்தம்! எனக்குச் சொல்லித் தரவே மகேந்திரன் அண்ணா, மதுமதி, கணேஷ், பிரகாஷ்... இவங்க எல்லாம் என்ன பாடு பட்டாங்க எனக்கு தான் தெரியும்.

அலமு : அது என்னடி அவ்ளோ கஷ்டமாவா இருக்கும்?

சசி : ஆமா மாமி, அதுக்கெல்லாம் நிறைய படிச்சி இருக்கணும்! (இப்படியாவது சொல்லி தப்பிக்கலாம்.)

அலமு : சரி அத என் பேரன் ஃப்ரான்ஸ்ல இருந்து வந்த பிறகு பார்த்துக்கிறேன் . இப்ப என் பேரனோட பேசறதுக்கு சொல்லித் தா.

சசி : சரி மாமி, முதல்ல உங்களுக்கு முகநூல் ஐடி ஓபன் பண்ணி தரேன். அதுல பேசுங்க சரியா.

அலமு : தைக்கற நூல் தெரியும். அதென்னடிம்மா முகநூல்?

சசி : ஐயோ... மாமி... ஃபேஸ்புக்னு ஒண்ணு இருக்கு. அதத்தான் தமிழ்ல சொன்னேன். அது மூலமா பேரன்கூட நீங்க பேசலாம்.

அலமு : சரிடி மா ஒரு தடவ சொல்லிக்கொடு .

சசி : முகநூல் பக்கத்தில் உங்களுக்குனு கொடுத்து இருக்கிற ஐடி, பாஸ் வேர்ட் கொடுத்து உள்ள போங்க...

அலமு : என்னடிம்மா... அது என்ன இத்தூண்டு சின்ன பொட்டி மாதிரி இருக்கு? அதுல போய் உள்ள போக சொல்ற... சரி, வலது கால வச்சி மொதல்ல போகவா?

சசி : அஹா! அஹா! மாமி, அது மாதிரி எதுவும் செய்து வக்காதிங்க வெடிச்சிட போகுது.


            தொடரும் என்றால் தொடராது
             தொடராதென்றால் தொடர்ந்து விடும்.

                                                                                     

Thursday, 27 September 2012

தூரத்துப் பசுமை !கட்டுச் சோறும் சுமையாச்சி
போகுமிடம் தூரமாச்சி
வெத நெல்லு வாங்கிடவே
காது மூக்கு காலியாச்சி.

கட்டாந்தர நெலத்த உழ
கால் சொம்பு தண்ணியில்ல
துந்தக் கிணறு தூர் வார
வந்த சீதனம் வம்பிழுக்க
ஏரித்தண்ணி ஏச்சியிங்கே
வந்து சேர காவா வறண்டிருக்கும்.

வேட்டிக்கர மடிச்சுகட்டி
வெறசாத்தான் போயி மச்சான்
வெள்ளாமைய பாத்து நிப்பான்
என்றே தினம் கனவுகண்டேன்
பகல் கனவா போச்சுதுவே
பக்கத்து நில பங்காளியோட
பாத வழித் தகராறில் வந்துநின்னான்.

முட்டி மோதி விளைஞ்ச நெல்லும்'
களத்து மேடு சேர்க்க ஆளுமில்ல
காவல் காத்து கட்டி எடுத்து
வீடு வந்து சேர்ந்தா
கால் வயிறு காணவில்ல...

துக்கத்த விட்டு மாமா-
தூர தேசம் போய் -நீயும்
தொலைச்ச பணம் சேர்த்திடுவோம்
தூரத்துப் பசுமைய நாம்
பக்கத்திலே கொண்டு வருவோம்.

சின்னச் சின்ன சிதறல்கள் !இருளை அள்ளி 
முகப்பூச்சாய் பூசிக்கொள்கிறது
நிலவு.முகப்பூச்சு தேவையில்லை
முன்னெதிரே நீயே நின்றுவிடு
வெட்கத்தைவிட வேறொரு
அலங்காரம் தேவையா ?
என் எண்ணங்களை மட்டுமல்ல
உன் எதிர்பார்புகளையும்
நிறைவேற்ற ஆயு(த்)தமாயிருக்கிறது
எழுதுகோல்.


Tuesday, 25 September 2012

எல்லாமே எனக்கெதிராய் !முற்றத்தில் நிலவும்
மேகத்தில் தனை மறைத்து
என் முகம் காண மறுத்ததுவே.

தோட்டத்துப் பூக்களும்
தோள் தட்டி எனை அழைத்து
புரியாத பாஷையில்
புதுக்கவிதை கேட்டதுவே.

சிரித்தழைத்த புதுமலரும்
பொத்தென்றே தலை கவிழ்த்து
மணம் வீச மறந்ததுவே.

மெல்ல வீசிய பூங்காற்றும்
மேகம் விரட்டும் சூரியனாய்
சுட்டெரித்து நிற்கிறதே.

குளத்தில் மீனும் துள்ளியெழுந்து
கொக்கெனவே எனை நினைத்து
குதித்தோடி மறைந்ததுவே.

கண்ணிமையும் கலந்துபேசி
காட்சி காட்ட மறுத்ததுவே.

என் பிள்ளைத்தனத்தால் எழுந்த
உன் செல்லக் கோபம் தனை
இவைகளிடத்தும் ஏன் சொல்லிப்போனாய் !

Sunday, 23 September 2012

சிறகொடித்தப் பார்வை !


பாவாடை ஏத்திச் சொருகி
படிக்கட்டில் ஆடி ஓடி...

பஞ்ச வர்ண கிளி ரசித்து
பாட்டுக்கு மெட்டெடுத்து

பனித்துளி படுத்துறங்க
பார்த்து ரசித்த மலர் வனம்

விரட்டிப் பிடித்த பட்டாம்பூச்சி
விரலிடுக்கில் ஓடிய மீனீனம்

விண்மீன்  பிடித்திழுத்து
விரலுக்கு சொடுக்கெடுத்து

நிலாச்சோறுக்கு நீண்ட கைகள்
கதை கேட்டே உறங்கிய திண்ணை

விட்டுக் கொடுக்காத பிடிவாதம்
விட்டு விலகாத நண்பர் கூட்டம்

படுத்துறங்க அன்னை மடி
பகற்ப்பொழுதில் பள்ளிக்கூடம்...

கூட்டாஞ்சோறாக்கிய களத்துமேடு
வரப்போறம் வம்பிழுத்த ஒற்றைப்பார்வை

உணர்வில் கலந்த குறும்பை
ஒடித்துப்போட்ட அந்தப் பார்வை

எதுவும் நினைவில் இனி
வேண்டவே வேண்டாம்
எடுத்து செல் இல்லை
எனை எரித்துச் செல்!

Thursday, 20 September 2012

படைப்பிலேன் பேதங்கள் !


கடவுளைக் கேட்ப்பதற்கு
கேள்விகள் ஏராளமுண்டு!
படைப்பிலேன் பேதங்கள்
ஊனமென்றும் குருடெனவும்!

உதாரணமவரென்றுரைத்தல்
நீதியில்லையது அநீதிதான்!
என்ன பாவமவர் செய்தார்
கேட்டால் முன்னோர் செய்த
முன்வினை பாவமென்பார்!

படைத்தது பாவமா அதில்
பாவம் கலந்தது மாபாவமா?
சிந்தித்தால் குற்றவாளி....?
அறிவுவைத்த இறைவனேன்
அளவுகோல் வைக்கவில்லை?
நன்மையெது தீமையெதறிய
கண்ணுக்கும் தெரிவதில்லை!

வெற்றியொருவன் பெறுவதற்கு
தோல்வியொருவர் சுமக்கலாமா?
கரையெது தெரிந்துவிட்டால்
கவலையில்லை பயணத்திலே!
வரம்புகளை வைத்துவிட்டு
நாடகங்கள் அரங்கேற்றம்!

அவரவர் பாத்திரத்தை
நடிக்கின்ற போராட்டம்!
நேராய் ஓடா நண்டினங்கள்
நேர்மைதவறும் மனிதர்போல்!
நாணயமில்லா நரிக்கூட்டம்
ஏய்த்துப் பிழைக்கும் எத்தகராய்!

பாடித்திரியும் பறவைகள்போல்
இசைக்காய் வாழும் வித்தகர்கள்!
ஆடிக்களிக்கும் அன்னவடிவில்
கலைகாக்கும் மணிப்பாதங்கள்!
காக்கின்ற உயர் சிங்கங்களாய்
வாழ்ந்திருக்கும் வழிகாட்டிகள்!

பாய்ந்தோடும் ஜீவநதிபோன்று
கவிதைபாடும் கண்ணொளிகள்!
அசைந்தோடும் மெனகாற்றாக
தழுவிநிற்கும் மலைமேகங்கள்!
கனிகொடுக்கும் மரங்களாக
வாழ்ந்திருக்கும் பூமாதேவி!

நீலவான் மேனியிலே தாங்கும்
கதிரோனும் வெண்ணிலவும்!
உப்புநீர் பள்ளத்தாக்கில் வாழும்
கோடிகோடி உயிரினங்கள்!

எல்லாம் சரியாய் சமைத்து
எமக்குமட்டும் ஆறறிவுவைத்து.
நன்மைதீமை சேர்த்துதந்து
விதியெழுதியதேனோ-இது
மதியெழுதிய வினையோ?

Wednesday, 19 September 2012

மனமெழுதும் காட்சிகளாயிரம் !

மனமெழுதும் காட்சிகளாயிரம்
மண்ணிலுதிர்வது அதிலதிகம்!
மறந்துபோவது கானல்நீராய்
பிரிதெல்லாம் பூங்கவிதைகளாய்!

இதயத்திலெண்ணம் எழுதிசெல்லும்
இமயமெல்லாம் பறந்து தேடும்!
இரக்கமின்றி நினைவு உருண்டோடும்
இனியவைப்பல கருவில் மாயும்!

வந்தவிடம் திரும்பா பிறப்புகள்
வலையில்பட்டு மரிக்கும் மீனாய்!
வண்ணநிலவாய்த் தேயும் காலமும்
வழக்காடியதை வென்றவரில்லை!

படைப்பாளி கையில் உளியதுவேண்டும்
பகலிரவாய் செதுக்குதல் மாண்பு!
பகிர்ந்துரைக்க எழுத்தேடுகளிருப்பின்
பசித்த நினைவே கவிதைச்சோலை!

ஜனனத்தின் நேரம் நம்மிடமில்லை
பிள்ளைப்பூச்சியும் கவிதைதரும்!
பிறைநிலவுபோன்ற குறையோட்டம்
பிழையாய் நாமுதிர திறக்கும் வாசல்!

ஆயுதமின்றி யுத்தமில்லை -நமக்குள்
ஆசைின்றி நற்படைப்புமில்லை!
ஆள்பவர்கையில் ஆயுதமிருப்பின்
ஆண்டவரே நல்படைப்பாளி!

கவிதையெல்லாம் நன்னெறியே
களைக்களத்தில் மனதின் கற்பல்ல!
கற்பாதைக்கும் கண்ணீர் கதையுண்டு
கரையுமதுவும் மணல் வடிவெடுத்து!

சேர்ப்பதெல்லாம் நமக்காயல்ல உலகில்
சேர்வதெல்லாம் நமதானால் பிரிவுமில்லை!
சேற்றில்மலரும் தாமரையும் வாழத்தானே
சேம நலம் சுயத்தின் ஒரு பகுதியாமே !

Tuesday, 18 September 2012

அவன் கனவே...!


காத்து வந்து கதவடைக்க
கண நேரம் மனந்துடிக்க
ஆத்தோரம் தோப்போரம்
அருகிருக்கும் உன் விழியோரம்..

அடுக்கடுக்கா தும்மல் வர
அலர்ஜி என்றே மனம் கதற
அடுத்த வேள என்ன செய்ய
ஆத்தாடி ஒண்ணும் விளங்கலியே.

சூதாட்டம் போல  என்ன
சொக்குப் பொடி வச்சானோ ?
சொக்கி தினம் தவிக்கவிட்டே
சொப்பனத்தில் மிதக்கவிட்டான்.

கரையேற வழியுமில்ல
கனாக் காண உறக்கமில்ல
கண்கட்டு வித்தையாட்டம்
கண்ணுக்குள்ள அவன் கனவே...
காணும் பொருளிலெல்லாம் சிரிக்குதடா.

Sunday, 16 September 2012

உள்ளத்த மூடிவச்சி...!


புல்லுகட்ட தூக்கிட்டு
பொம்மலாட்டம் போட்டுகிட்டு
பொழுது சாயும் நேரத்துல...
பொறுமையாதான் போறவரே !

கரகாட்டக் கூட்டத்திலே
கண்ணடிச்சி அழைத்தவரே
கனகம்மா பார்த்துப்புட்டே
கனகாம்பரம் கடனாக் கேட்டா...

சவுக்குத் தோப்புப்பக்கம்
சாயங்கால நேரத்துல
சத்தம் போட்டு அழைச்சவரே
சந்தானம் தான் கேட்டுப்புட்டான்.

உலைவாய மூடி வச்சி
உள்ளத்தையும் மூடிபுட்டேன்
ஊர் வாய என்ன சொல்ல
ஊர்கோலமா வந்து அழைப்பீரோ ?

Friday, 14 September 2012

தேன் அருந்தா வண்டினமாய் !அகமுக மகிழ
நகமது நாட்டியமாட
சுகமா என்றாயோ நீயும்
சுற்றமும் மறந்தே போனதே !

பல்லவியும் மறந்தே போக
அந்தரத்தில் கால்கள் நிற்க
சந்ததிகள் சற்றே பிறழ
சந்நிதியாய் நெஞ்சமாக !

மலர் உரசலில் எல்லாம்
மன்மத பானம் வீச
தேன் அருந்தா வண்டினமாய்
மனம் தேம்பியழ நின்றேனடா !

தேவகானம் இனிக்கவில்லை
தேனிசை பாட குயிலுமில்லை
ராகமெலாம் ரகசியம் தேடி
உன்னிடத்தில் சங்கமம் ஆனதடா !

Thursday, 13 September 2012

பனித்துளி சேகரிப்பாய் !மண்ணோடு விழுந்த விதையாய்
மனதோடு சேர்ந்த நினைவே
மன்னவனைக் காணமல்
மனம் சோர்ந்த கதையாமே !

திண்ணையில் முகம் தேடி
தினம் தினம் பாட்டெழுதி
திகட்டாத செந்தமிழும்
தித்திப்பாய் இனித்த போதும் !

திங்கள் ஒன்று ஓடிப்போச்சே
மனம் தின்றவனைக் காணோமே.
மன்னவனாய் வருவானோ ?
மலர் கொண்டு தருவானோ ?

கன்னம் குழிவிழ சிரிக்க
கதை சொல்லிப் போவானோ ?
முன்னம் ஒரு நாள் செய்தபடி
முறைத்தபடி நிற்பானோ ?

பனித்துளி சேகரிப்பாய்
பகல் கனவு கண்டிருந்தேன்
வழித்துணையாய் வந்தவனே
விழிக்கனவு பலித்திடுமோ
விரைந்தோடி வருவானோ ?

Tuesday, 11 September 2012

மறைந்தோடிப் போனானே ..!


பார்வையாலே கயிறு திரித்து
பம்பரமாய் சுழல வைத்தான்.

சுவாசத்தில் பொடி வைத்தே
சுத்திச் சுத்தி சுழல விட்டான்.

வார்த்தியிலே வசியம் வைத்து
வாழ்வே அவனென புலம்ப விட்டான்.

கன்னக்குழி இரண்டில் மயங்க வைத்தே
கதை கதையாய் பேச வைத்தான்.

கையசைவில் எனை அழைத்தே
கரகாட்டம் ஆடவைத்தான்.

நடை பழக விரல் பிடித்தே
நாட்டியத்தை பயிற்றுவித்தான்.

மவுனத்தின் பாஷை தனில்
மன்மதனாய் அம்பெய்தி...

மலங்க மலங்க விழிக்க வைத்தே
மறைந்தோடிப் போனானே ..!

Sunday, 9 September 2012

காதல்செய்தல்-விதி !


இதயம் பூத்திருக்கும்
கண்கள் காத்திருக்கும்
மேனி சிலிர்த்திருக்கும்
நினைவு தனைமறக்கும் !

தனிமை இனித்திருக்கும்
நிஜங்கள் நிழலாய் தெரியும்
உறவுகள் கசப்பாய்மாறும்
வார்த்தைகள் வம்புபேசும் !

எண்ணங்கள் சிறகுவிரிக்கும்
உறக்கத்தை கனவு சிதைக்கும்
கண்ணாடி புதுகதை சொல்லும்
தன்னுயர் தான் வெறுக்கும் !

சுவர்பல்லி புத்தியுரைக்கும்
வெற்றிலையில் முகம்தெரியும்
புரியமனம் தேடி அலையாடும்
ஏனிப்படி கேள்வி தோற்கும் !

கண்ணைத் திரை மறைக்கும்
தெய்வாமிர்தம் என்றியம்பும்
வண்டுவந்து மனமமரும்
அடிமைசாசனத்தின் ஆரம்பம்....
ஆனாலும் காதல்செய்தல்-விதி!

Wednesday, 5 September 2012

உயிர் வருடும் காதல் இதோ?பத்து விரல் பிடித்திழுத்து
பக்கத்தில் எனையமர்த்தி
பாடென்று சொன்னதினால்
பயந்தோடி ஒளிந்தேனே...

கூடொன்று கண்டதினால்
குதித்தோடி மகிழ்ந்திருந்து
கும்மியடித்து தினம் ஓடி.....
குதூகலமாய் வாழ்ந்திருந்தேன்.

தென்றலெனை தீண்டியதாய்
புயலது கவி மழையாய்
காற்றசைவும் கீதமாய்
கடலினிலும் அலை தாலாட்டாய்.

உதிரத்தில் உன்நினைவே
உழன்றாடிக் களித்திருக்க
உறக்கத்தை தினம் விரட்டி
உயிர் வருடும் காதல் இதோ?

களவும் கற்றதே !


கண்ணா உன்னை பார்த்த பின்னே
கதையும் பேசுதே விழியிரண்டும்
களவும் கற்றதே....

முன்னே உனை போகவிட்டு
பின்னே அலையுதே -மனமும்
உன்னே சுத்துதே....

கண்ணே மணியே எனவும் கொஞ்ச
கனவு காணுதே -என்னில்
என்னே விந்தை -மதியில்
எண்ணும் எழுத்தும் மறந்தே போனதே !

Monday, 3 September 2012

உன்னுருவில் வாழ்ந்திருப்பேன் !

நேரம் காலம் புரியலையே
நேத்திரவு தூங்கலையே

நெற்றி வியர்வை சிந்தலியே
நெஞ்சோடணைத்து தூங்கலியே

காற்றடிக்கும் திசை வழியா ?
கதவடிக்கும் ஒலி வழியா ?

விரல் பிடித்த நடை வழியா ?
விட்டொழிந்த பகை வழியா ?

கண் கூசும் வெயில் வழியா ?
காதிசைத்த இசை வழியா ?

கண் மலர்ந்த பூ வழியா ?
கால் நடந்த பாதை வழியா ?

எந்த வழி தெரியலையே
எனக்கொன்றும் புரியலையே

என்னில் எப்படிக் கலந்தாயோ ?
எனக்கென கவி முகவரி தந்தாயோ...

எம்தமிழே என்னுயிரே
இப்பிறவி போதாதே....

உன்னழகை நான் ரசிக்க
உயிர் பிரிந்து போனாலும்
உன்னுருவில் வாழ்ந்திருப்பேன் !

Saturday, 1 September 2012

ஓடி ஒளிய இடம் தேடி !


மனம் ஏனோ மயங்குதடா
மல்லிகையாய் மலருதடா
மண் வாசம் கூட என்னோட
மல்லுக்கு நிக்குதடா...!

சொல்லுக்கு மயங்கி தினம்
சொப்பனத்தில் மிதக்குதடா
கள்ளத்தனம் ஏனடா !
பார்த்த விழி பூத்திருக்க
பாட்டெல்லாம் கேட்டிருக்க
பரவசமாய் உன் முகமே
பாடாய் படுத்துதடா !

பாடலில் உன் அழகே
பல்லவியாய் ஆனதடா..
தேடலிலும்  உன் முகமே
முன் வந்து நிற்குதடா...
ஓடி ஒளிய இடம் தேடி
உன் இதயம் கண்டேனடா..
என்னிலே அது இருக்க
நான் எங்கு போவேனோ ?