Monday 7 January 2013

என்னுயிரே கண்ணம்மா !



பச்சை நெல்மணிவாழ் பால்துளி
நீதானோ கண்ணம்மா!

பசுந்தளிர் புல்நுனி பனித்துளியது
நீயோ பொன்னம்மா!

குருத்தோல் வடிவாகி
சாய்ந்தாடுந் தென்றல்யாரம்மா!

மலையாழம் ஒளித்திருக்கும்
வெண்மேகம் உருவுனக்கு ஏனம்மா!

ஆற்றோரம் தலைகவிழ்த்து
நாணலாய் நீ நிற்பதென்ன சோகமா!

நெடுதுயர்ந்த பனைமரமாய்
அன்பிலையோ அதுவேனம்மா!

தண்ணீர்மேலாடும் தாமரைவாழ்
நீ்ர்துளியோ நம் உறவம்மா!

ஆலமர ஊஞ்சலிலே ஆடியகதை
நிழலோ என் கிளியம்மா!

அலையாடிய காதலில் விளையாடிய
மீன் கரைவிழுந்தது ஏனம்மா!

வான்விட்ட விண்மீனாய்
உருகுகிறேன் கண்பாரம்மா!

செங்கதிராய் கதவைத்தட்டி
காத்திருக்கும் எனைப்பாரம்மா

எங்கே என்னிதயம் எங்கே என்னுயிர்
எங்கேயென் கண்ணம்மா!

இருளாகி மடிகின்றேன் நிலவாய் நீ
வருவாய் நம்பிக்கையில்!

சொர்கமோ நரகமோ எங்கே நீ
அழைத்தாலும் அங்கிருப்பேன்!

என்னுயிர் புன்னகை நீதானே கண்ணம்மா
எதற்காய்யினி மௌனம்!

பவளவாய் மலர்ந்து கவிதைதா
பொன்னம்மா உனக்காய்!

விடியும்வரைக் காத்திருப்பேன்
வாராயோ வினைதனைத் தீராயோ?

10 comments:

  1. சசிகலா,என் நினைவுகளைத் தட்டி எழுப்பி விட்டாள் உங்கள் கண்ணம்மா!
    நன்று

    ReplyDelete
  2. பாடல் தாலாட்டுகிறது சசிகலா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சொர்கமோ நரகமோ எங்கே நீ
    அழைத்தாலும் அங்கிருப்பேன்!
    //எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு!"//
    இரசித்தேன்!
    நன்றி!

    ReplyDelete

  4. வணக்கம்!

    என்னுயிரே கண்ணம்மா என்ற பாடல்
    இதயத்தை வருடியது! வாழ்த்து கின்றேன்!
    இன்னமுதே தோற்கின்ற சொற்கள் சோ்த்து
    நெல்மணியைப் பால்துளியாய் உவமை இட்டாய்!
    பொன்னொளியே! புதுமலரே என்றே போற்றும்
    புலவரெலாம் வியக்கின்ற ஆக்கம் என்பேன்!
    தென்மொழியே! செந்தமிழே! வளா்க ஓங்கி!
    தித்திக்கும் கவிதைகளைத் தலைமேல் தாங்கி!

    ReplyDelete
  5. கண்ணம்மாவிற்கு நீங்கள்
    கொடுத்துள்ள உருவகங்கள்
    மிகமிக அழகாக உள்ளது சகோதரி...

    ReplyDelete
  6. குழந்தையின் அழகைப் பாடிய கவியம்மா. வார்த்தைக்கு வார்த்தை ரசித்துப் படித்தேன் தென்றலம்மா. இன்னும் அழகாய் நிறைவாய் எழுத வாழ்த்துக்களம்மா...

    ReplyDelete
  7. பால்ய நினைவுகளை தட்டி எழுப்பும்
    தமிழ் அமுது அருமை தோழி
    சந்தம் இனிது

    ReplyDelete
  8. கண்ணம்மாவுக்கான தாலாட்டு என்னையும் தூங்கவைக்கிறது சசி !

    ReplyDelete