Tuesday 23 September 2014

பகிர்ந்து மகிழ்தல் ...!

வணக்கம் உறவுகளே நீண்ட நாட்கள் கழித்து வந்தாலும் விருதுடன் எனை வரவேற்கும் அன்பான உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு இந்த விருது பெற்றவர்களின் விதிமுறையின் படி...

இந்த விருதை எனக்கு  கொடுத்து மகிழ்வித்தவர்கள்

 1. தளிர் சுரேஷ்
2.. அவர்கள் உண்மைகள் இருவருக்கும் நன்றி நன்றி நன்றி.

முதலில் பகிர்ந்து மகிழ்தல்

1. இ.சே. இராமன்
2. தமிழ்ச்செல்வி
3. விமலன்

 இன்னும் என் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் என்பதில் சந்தேகம் இல்லையென்றாலும் இவர்கள் தொடர ஐந்து பேர் தேடும் போது சிரமமாக இருக்கும் என்பதால் இவர்களோடு ..... இவர்கள் அன்போடு நான் பகிர்ந்த விருதை பெற்று மகிழ்வார்கள் என்ற நம்பிக்கையோடு.

என்னைப்பற்றி
 என் பெயர் சசிகலா.  பிறந்த ஊர் வந்தவாசி பக்கத்தில் அம்மையப்பட்டு. தாயாள் உலகுக்கு அறிமுகமானவள் தமிழாள் உங்களின் அன்பை பெற்றவள். எழுதுவதும் படிப்பதும் இயற்கையை ரசிப்பதும் மிகவும் பிடித்தது.   எனக்கு பிடித்த இவற்றையெல்லாம் ரசிக்க தடை சொல்லாத கணவரை மிகவும் பிடிக்கும். பிறகென்ன என் செல்லப் பிள்ளைகளை பிடிக்கும். எல்லாமே பிடிக்கும் பிடிக்கும் என்று மட்டும் சொல்கிறேனே என்று கேட்பது புரிகிறது. எனக்கு பிடிக்காதது என் கோபம். (அது எப்பவாவது தான் வரும்... ) இனி வராம இருக்க பார்க்கனும். சரிங்க அன்பால் இணைவோம். அன்பாய் இருப்போம். மகிழ்ச்சி...

Sunday 14 September 2014

நீ யாரோ ?

தேடலின் ஆரம்பமும் நீ
தேக்கத்தின் தொடக்கமும் நீ
உள்ளிருந்து உணர்த்துகிறாய்
உயிரோட்டத்தை நிகழ்த்துகிறாய்..
ஆரம்பமும் முடிவுமில்லா
வானலாவிய இருப்பும் நீ.
ஓட ஓட விரட்டுகின்றாய்
ஓரிடத்தில் நிறுத்துகின்றாய்.
நீயில்லா இடத்தினிலே
நின்று போகும் எல்லாமங்கே..
நிம்மதி என்ற பெருமூச்சை
வழங்குகின்ற வள்ளல் நீ..
அறிவுசார் ஜீவனல்லாது
 அனைத்திலுமே நிறைந்திருக்கும்
நீ யாரோ ?

Thursday 11 September 2014

ஒரு பார்வை ...!

கேட்கவும் சொல்லவுமான
எண்ணற்ற முனகல்களில்
முடங்கிப்போன மௌனங்கள்...
மொழிபெயர்ப்பின் பரிதவிப்பில்
உறங்கிக்கிடக்கும் காதல்...
கடந்து போகும் நேரமெலாம்
கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறேன்.
கட்டிவைத்தாவது கொட்டிவிடவேண்டும்
என்றேனும் காதல் சினுங்கள்களை...
அச்சமென்று ஏதுமில்லை
அழிச்சாட்டியத்தின் அலங்காரத்தில்
மழுங்கிப்போன நேசம்
புதுபிக்கும் முயற்சிவேண்டாம்..
அடையாளத்திற்கேனும் அவ்வப்போது
ஒரு பார்வை ...
இல்லையாங்கு கேள்வியாவோம்
தமிழ்க் காதலின் முன்பு...!