Wednesday, 30 October 2013

திண்ணைப் பேச்சு !-5


பார்வையிலே புது தினுசு
பட்டாசுகளின் அணிவகுப்பு
பார்க்க பார்க்க இனித்திடுமே
பல கைகள் இணைந்திடுமே.

மகிழ்விற்கோ எல்லையில்லை
மனங்களிலோ வந்தாடும் கிள்ளை
கைகளில் சிரிக்கும் சுறு சுறு மத்தாப்பு
கண் கவர்ந்திழுக்கும் வானவேடிக்கை

திண்ணைக்குத் திண்ணை சிரிப்பொலி
தினம் தேடும் மனம் இந்த தீப ஒளி
தீபாவளிப் பலகாரமோ பல ரகமே.
தின்னத் தின்ன திகட்டா சுவை தருமே.

ஒரு நாள் கூத்து முடியுமடி
ஒய்யார நடை போட்டு போகுமடி
தின்னப் பலகாரங்கள் செரிமானமாக
தீபாவளி லேகியமும் செய்தாயோடி

சீரகத்தை மல்லியோடே
ஊறவைத்து இஞ்சியும்
சேர்த்தரைத்து வெல்லத்தை
கலந்து நீயும் நெய் விட்டு
காய்ச்சி இறக்கி ..
பாங்குடனே பத்திரப்படுத்திய
லேகியத்தை உண்டு நாமும்
சேமத்தை கொண்டு வருவோம்.

Monday, 28 October 2013

வெள்ளைப் புறா ஒன்று !


புல் தரையில்
புது நளினம்
புதிர்போடும்
கால் நடனம்..
அதோ 
வெள்ளை நிறத்தில்
புறா ஒன்று...
நீதான் சமாதானத்திற்கு
 அனுப்பியதோ ?

இருக்காது
இருக்கவே இருக்காது.
உன் கோபத்தைப்பற்றி
எனக்குத் தெரியும்..
என்னை மட்டும் 
அந்தக் கோபம்
தொற்றிக்கொள்ளாதா  என்ன ?

எப்படியோ..
புறாவின் நிறம்
மனதில் ஒட்டிக்கொண்டதில்
கோபத்தின் சாயம் 
வெளுத்ததென்னவோ உண்மை தான்...

Saturday, 26 October 2013

திண்ணைப்பேச்சு !-4


தகர டப்பா உருட்டும் மச்சான்
தகராறுக்கு போகாத மச்சான்
தறி போட்டு ஆடும் மச்சான்
தள தளன்னு இருக்கும் மச்சான்

கறுப்பான என் நிறத்தை
கடன்கேட்டு போனான்டி
போனவன காணோமடி
பொலம்பித்தான் சாகுறேன்டி

பொலம்பலேன்டி கண்ணம்மா
பொறுத்திரு அவனும் வருவான்டி
உண்டு உறங்கி எழுந்தாக்கா
உனக்கேன்டி அவன்நெனப்பு ?

காலம் வரும் கவனத்தை திருப்பு
கறுப்புன்னா கண்டனமா ?
கடை கண்ணிக்கு போனா நீயும்
கவனமா பார்த்து வாங்கும்
தக்காளிய ஏன் மறந்த ?

பளபளக்கும் மேனிக்கு
உணவாகவும் சாப்பிட்டு
உடல் நிறத்துக்கும் பூசிவர
பக்குவமா பலனைத்தான்
பல விதத்தில் தந்திடுமே.


Monday, 21 October 2013

மன வெளியில் !


மன  வெளியில்
சாத்தியமேதும்
இல்லையென்றாலும்
அசாத்தியமாய்
அமர்ந்திருக்கிறது.
வெகு நாளாய்
ஒரு நிகழ்வு...

சாலையோரக்
கழிவுகளில் நீராடி
சாக்குப் பையை
ஆடையை உடுத்தி
எச்சில் இலைக்கு
நாயோடு சரிசமமாய்
சண்டையிட்டு...
ஐந்தறிவை ஜெயித்துவிட்ட
இறுமாப்பில்...-சக

ஆறறிவு இனத்தாரிடம்
கையேந்தும் மனிதனை
மிருகத்தை விடவும்
கேவலமாய்  பார்த்தபடி.

அந்த மனிதனின் முன்னோட்டம்
நம்மைப் போல் பதவிக்காய்
படி ஏறி இறங்குவதைப் போல்
இருந்திருக்கக் கூடுமோ ?


Friday, 18 October 2013

திண்ணைப்பேச்சு ! -3


கால் முளைச்ச 
நாளாக கையினிலே
இருப்பதில்லை
பிள்ளை கண்டதையும்
எடுத்துப் போட்டு
ஆடும் ஆட்டத்திற்கோ
அளவுமில்லை..

பள்ளம் மேடு
தெரிவதில்லை..
பார்த்துப் போக
பக்குவமும் இல்லை..

கண்ணுக்குள்ள
வைத்துப் பாத்தாலும்
கர்ணமடித்து விழுகின்றான்.
கஞ்சி குடிக்கவும்
நேரமில்லை.
காத்து வாங்கவும் 
போகவில்லை.

அப்படிப்பார்த்தும்
உடம்பெல்லாம்
வீக்கங்கண்டு
உருண்டு புரண்டு
அழுகின்றான்.

எந்த ஊரு
நான் போக
எந்த வைத்தியத்தை
நானும் செய்ய...

தவம் இருந்து
பெத்தவளே..
தடிப்புக்கு மருந்தேன்டி
அரிப்பதுவும் நின்றிடவே
உள்ளுக்கு நல்லெண்ணெய் 
குடுத்துப்பாரு..
தடம் தெரியாம
மறைந்திடுமே தடிப்பெல்லாம்.

Wednesday, 16 October 2013

காதலாகி !


என் தோட்ட பூப்பறிக்கும் 
எதிர்வீட்டு பெண்ணழகி
சுருட்ட முடி பின்னலிலே
சொக்கத்தான் வைக்கிறியே..

கழனியில களையெடுத்தா
கன்னியுன் முகம் தெரியுதடி
கடுப்பாகி நான் நிமிர்ந்தா
கண்ணெதிரே நிக்குறடி.

போர்த்தி நானும் படுத்துக்கிட்டா
(உள்ளம்)போர்களமா தெரியுதடி...
உறக்கமேது கண்ணுக்குள்ள
உன்னப்பார்த்த நாள் முதலா ..

சட்டியில சோறு திண்ணு
சாக்கடையில் நான் குளிச்சேன்
முச்சந்தியில தான் நின்னு
முத்த மழைக்கு காத்திருந்தேன்.

சிரிப்பா தான் சிரிக்குதடி
சிரிக்கி மவளே என் பொழப்பு
கள்ளத்தனம் இனியுமேன்டி
கண்ணசைவில் சொல்லேன்டி
காதலாகி வந்தவளே.

Monday, 14 October 2013

மாபெரும் கவிதைப் போட்டி !


தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்… வாருங்கள்…  வாருங்கள்…


போட்டிக்கான தலைப்பு
1. நாம் சிரிக்கும் நாளே திருநாள்
2. ஒளி காட்டும் வழி
3. நாம் சிரித்தால் தீபாவளி
போட்டியின் விமுறைகள் :
1. கவிதை மரபு சார்ந்தும் இருக்கலாம், வசன கவிதையாகவும் இருக்கலாம், கவிதை வரிகள் 15க்கு குறையாமலும் 25க்கு மிகாமலும் இருத்தல் நலம்.
2. ஒரு பதிவரின் ஒரு தலைப்பிலான ஒரு கவிதை மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படும்.
3. கவிதையினை தங்கள் பதிவில் 31/10/2013 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.
4. நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாக இருக்கும்
5. உங்களின் தளத்தில் கவிதையை வெளியிட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : rupanvani@yahoo.com& amp; dindiguldhanabalan@yahoo.com

பரிசுகள் :
முதல் பரிசு : ரூ.1500 + சான்றிதழ்
இரண்டாம் பரிசு : ரூ.1000 + சான்றிதழ்
மூன்றாம் பரிசு : ரூ.500 + சான்றிதழ்
ஆறுதல் பரிசாக தேர்வு செய்யப்படும் ஏழு கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்… கலந்து கொள்பவர்கள்  தங்களின் பெயர்,மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரிகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்…

எண்ணச் சிறகுகளை பறக்க விடுங்கள்.. பரிசினை தட்டிச்செல்லுங்கள்.

இன்பாக்சும் இவளும் !


இணையமே...
என்றாவது ஒரு நாள்
உனை தேடி வருவேனென்று
குவித்து வைத்திருக்கிறாய்
எனக்கான செய்திகளை
என் தேவையெது என்றறிய 
பொழுதொன்று போதாது..
தேடியெடுக்கும் பொருட்டு
மீண்டும் தொலைக்க கூடும் உனை.

உன்னைப் பற்றி 
மிகைப்படுத்தி கூறிவிட
ஆயிரம் இருந்தும்..

அர்த்தமற்ற பயத்தினால்
மௌனித்து கிடக்கிறேன்.
தனிமை யுத்தத்தை
எத்தனை நாளைக்குத்தான்
தொடர முடியும்..

இதோ நிவாரணமாக
பின்னூட்ட  உருவில்
நீயே எனை ஆக்கிரமித்துவிடுகிறாய்.

Wednesday, 9 October 2013

தண்ணீரின் தாகம் !

திண்ணை இணைய வாரப்பத்திரிகையில் வெளியான எனது கவிதை. நன்றி திண்ணை இதழ் ஆசிரியருக்கு.

இன்று முதல் 
இலவசப்பட்டியலில்
இணைக்கச் சொல்லுங்கள்
தண்ணீரையும்..

யாசித்தும் கிடைக்காத 
பொருளாகி விட்டது
தண்ணீரும்.

யாசிக்கிறோம்
தண்ணீரை..
உடம்பு நாற்றத்தை
கழுவ அல்ல
உயிர் அதனை
உடம்பில் இருத்த.

இன்று முதல்
இலவசப்பட்டியலில்
இணைக்கச் சொல்லுங்கள்
தண்ணீரையும்..

வேண்டாம் வேண்டாம்
பழங்கால ஞாபகங்களாய்
எங்கோ ஓடும் நதிகள் கூட
ஓடும் லாரியில் ஓடக்கூடும்..

நாளைய வரலாற்றில்
வறண்ட பூமியின்
எண்ணிக்கையை விட
நா வறண்டு செத்தவர்களின்
எண்ணிக்கை அதிகமாக
இருக்கலாம்.

வள்ளல்கள் வாழ்ந்த 
பூமி இதாம்..
வாரி வழங்க வேண்டாம்
வழிக்காமல் இருங்கள்
இயற்கை அன்னையின் மடியை.

இன்று வலைச்சரத்தில் பகிர்வினைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.

Monday, 7 October 2013

திண்ணைப் பேச்சு ! -2


அடிக்கொரு தும்மலும்
அடி வயிற்றை பிடித்து
இருமலும்...
ஆத்தாடி பிள்ளை 
படும் பாட்டை...
காணச் சகியவில்லையே.

மருத்துவரை பார்த்தும் 
மாத்திரையை கொடுத்தும்
நெஞ்சு சளி குறையவில்லை
நேத்து இரவு தூங்கவில்லை.

பச்சை தண்ணியில
ஆட்டம் போட்டு
பிள்ளை படும் பாட்டை 
என்ன சொல்ல..

பத்தியமிருந்து பெத்தவளே
பாசமா வளர்ப்பவளே
பாட்டி சொன்ன 
வைத்தியம் மறந்திடுச்சா ?

தேங்காய் எண்ணெய் 
சூட்டில் கற்பூரத்தை 
சேர்த்து வெதுவெதுப்பா
நெஞ்சில தான் தினம்
தடவி விட சளி கரையும்...

வாரத்தில ரெண்டு நாள்
கொதி நீரில் துளசியத்தான்
கொதிக்க விட்டு வடிகட்டி
குடிச்சி வர நோய்க் கிருமி
ஓடிடுமே...

சொன்னதெல்லாம் நினைப்பிருக்கா ?
பாட்டி வைத்தியத்தில் பிழையிருக்கா ?

இந்த வாரம் வலைச்சர ஆசிரியராக எனது பகிர்வுகளை காண இங்கே க்ளிக் செய்யவும்.

Saturday, 5 October 2013

சமீபத்திய சாதனைகள் !

அதீதம் இதழில் வெளியான கவிதை. நன்றி அதீதம்.


காலார நடந்ததில்லை - உறவோடு
கலந்து பேசி பழக்கமில்லை.

அடுக்களையில் புழக்கமில்லை
அரைச்செடுத்து சமைக்கவில்லை.

ஆடு மாடு வளர்க்கவில்லை
ஆடை அழுக்கெடுக்க தெரியவில்லை.

கோயில் குளம் போனதில்லை
கோலமும் தான் போட்டதில்லை.

சாதி சனம் பழக்கமில்லை
சந்ததிக்கும் யாரையும் தெரியவில்லை.

பச்சை வயல் பார்த்ததில்லை
பத்தியமும் இருந்ததில்லை

நின்று பேச நேரமில்லை
நீரோடையும் பார்த்ததில்லை.

மண்பாண்ட உணவுமில்லை.
மருந்துக்கும் அன்பு இல்லை.

அன்னை தந்தை அந்நியமில்லை
ஆனாலும்..
அரவணைக்க அவகாசமில்லை.

ஆடி ஓடி விளையாடவில்லை
அதனால இங்கே ஆரோக்கியமில்லை.

Friday, 4 October 2013

மலரும் மணமும் !


நேத்துப் பூத்த ரோசாவ
நின்னுப் பார்க்கும் ராசாவே

காத்தடிக்க உதிர்ந்திடுமே
கன நேரம் துடித்திடுமே

இதழ் இதழா உதிர்கையில
இவ நெனப்பு உனக்கில்லையா ?

பூவாசம் உனைத் தீண்டையில
புது வாசமா இவ மணக்கலையா ?

அசைந்தாடும் செடியினிலே
அசையுதைய்யா என் உசிரு

பச்சை நிற இலையினிலே
படர்ந்திருக்கும என் நேசம்

நித்தம் உனக்குச் சொல்லலையா ?
நினைப்பிருந்தா வாருமைய்யா ?

திங்கள் மூனு ஓடிப்போச்சி
தினக்கூட்டமும் குறைந்து போச்சி.

சந்தையில தானிருப்பேன்
சங்கதிக்குக் காத்திருக்கேன்.

Wednesday, 2 October 2013

திண்ணைப் பேச்சு !


என்னாத்தா
பொன்னாத்தா
எங்க ஊரு மாரியாத்தா.
அந்த புள்ளைக்கு 
என்ன ஆச்சோ தெரியலையே
சிரிச்ச முகம் காட்டலையே
செத்த நாழி நிக்கலையே
மருத்துவர தேடிப்போறோம்
மருந்தாக நீ வரவேனும்.

போடி கிறுக்கச்சி
பொசகெட்டவன் 
பொண்டாட்டி..
சூட்டால வயித்து வலி
சுருங்கிப் படுத்தா 
சரியாகுமா ?
சூரத்தேங்காய் 
உடைச்சா தான்
சுருக்கா ஓடிடுமா ?

பணங்காசு சேந்துபுட்டா
பவுசு கூடிப்போகும்
உன் கணக்கா...
மாட மாளிகை
மருத்துவத்தை 
தேடிப்போகும்...
சட்டுனு தான்.

விளக்கெண்ணெயை 
போட்டுப் படு...
விரைசா ஓடும்
வியாதியுந்தான்.
பாட்டி இருந்தா
கேட்டுக்க..
பணத்த பதுக்கி
வச்சிக்க.

வாரம் ஒரு பாட்டி வைத்திய முறையில் கவிதை எழுத நினைக்கிறேன். தங்கள் கருத்துக்களை சொல்லுங்க உறவுகளே.