Thursday 31 January 2013

எல்லாமே இங்கு இருப்பது தான் !



இறக்கையின்றிப் பறக்கின்ற
பகலவனும் வான்முகிலும்
விழாமல் காக்கின்ற
அவன் யார் தேடுகிறேன்.

மண்ணில் வாழும் அத்தனையும்
மனிதனுக்கு பயன்படும்
விந்தையை கண்டுபிடித்த
விஞ்ஞானியைத் தேடுகிறேன்.

புறப்படுமிடம் அறியாமல்
உருவெதுவுமில்லாமல்
சுழன்றாடும் காற்றதனை
இயக்குவது யார் ? நினைக்கின்றேன்.

நீர் வேறு நிலம் வேறு எனப்
பிரித்து வைத்து கோடு போட்டு
கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
காவலன் யார் ? பாடுகிறேன்

திரவத்தின் மேல் மண் அடுக்கை
நேர்த்தியாய் அடுக்கி வைத்து
நடையெல்லாம் அதன் மீது
வாழவைத்தது யார்? கேட்கின்றேன்.

கண்டுபிடிக்க ஒன்றுமில்லை
எல்லாமே இங்கு இருப்பது தான்
கண் கண்ட பொருளை நாம்
மற்றவர்க்கு இயம்பின் - கண்டுபிடிப்பு.

Wednesday 30 January 2013

என் பார்வையில் பட்டாம்பூச்சி !



ஃப்ரெஞ்சு மொழியிலிருந்து 'பாப்பில்லான்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பெற்ற ஹென்றி ஷாரியரின் இந்த நாவல் உண்மைக்கதை இக்கதை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு திரைப்படமாகவும் வெளிவந்துள்ளதாம். நல்ல நூல்கள் தாய்மொழியாம் தமிழில் கிடைக்க வேண்டும் என்ற ஆவலில் திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்களின்   உழைப்பினால் கடமை உணர்வினால் கிடைத்த பொக்கிஷமே இந்த 'பட்டாம்பூச்சி' ஆகும்.

வாழ்க்கையில் போராடி ஜெயித்த மனிதர்கள் மட்டும் தனது வாழ் நாட்களை இப்படி சரித்திர மாக்க முடியும். அந்த வகையில் பட்டாம்பூச்சி தனது அறுபத்தாறு வயதில் தன்னைப் பற்றி எழுதிய புத்தகம் தான் இந்த நாவல்.

ஒரு கதையை நாம் படிக்கும் போதே அது கற்பனைக் கதை என்றாலும் அதில் நம் மனம் ஒன்றி விடும். அந்த கதாநாயகியோ நாயகனோ அழுதால் நாம் அழுது, சிரித்தால் நாமும் சிரித்து அக்கதையோடே ஒன்றிவிடுவோம். அந்த வகையில் 'பட்டாம் பூச்சி' உண்மைக் கதையாதலால் வரிகளில் உயிரோட்டம் காண முடிகிறது.

இருபத்தைந்து வயதில் இளைஞன் எப்படி எந்த மனநிலையில் இருப்பான் என்று நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாத படி கதையின் தொடக்கத்தில் இருந்தே சிறை வாழ்க்கை அதுவும் விடுதலை என்பதே இனி வாழ்வில் இல்லையென்றான ஒரு சிறை வாழ்க்கை இப்படி ஒரு சூழலில் எந்த மனிதனாக இருந்தாலும் அழுதோ அல்லது புலம்பியோ சிறை வாழ்வை அனுபவித்து செத்திருப்பான். ஆனால் பட்டாம் பூச்சி கொடிய தீவாந்திர சிறை வாழ்விலும் விடுதலை என்ற சிந்தையிலேயே போராடி வெற்றி கண்ட மாபெரும் விடுதலை சாசனம் தான் இந்த பட்டாம்பூச்சி. எந்த மனிதனுக்கும் செய்யாத குற்றதிற்காக தண்டனை கிடைத்தால் அவன் மனநிலை எப்படி இருக்கும் வசதி படைத்தவன் என்றால் கோர்ட் வக்கில் என பணம் செலவழித்து வெளி வந்திருக்காலம் ஒரு சராசரி மனிதனான பட்டாம்பூச்சி தம் மீது பழி சுமத்தியவர்களை பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே ஆரம்பத்தில் தான் தப்பிப்பதற்கான காரணத்தை மூர்க்கமாக எதிர்கொண்டான்.

சிறை வாழ்க்கையில் ஆயுள் தண்டனை பெற்று தென்னமெரிக்காவில் உள்ள கயானா சிறைக்கு கடத்தப்படுவது தெரிந்தும் பட்டாம் பூச்சியின் தைரியம் தன்னம்பிக்கை விடாமுயற்சி அவரை இவ்வாறு சிந்திக்க வைத்து படிக்கும் ஒவ்வொருவர் மனதிலும் விடுதலை உணர்வை தூண்டும் வரிகள்   'குற்றமற்றவன் குற்றமற்றவன் என்று ஒவ்வொருவரிடமாகப் போய் அளந்து கொண்டிருக்காதே !' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். உன்னைப் பார்த்துச் சிரிப்பார்கள். ஒரு கொலைக்காக ஆயுள் தண்டனை பெற்று விட்டு கொலை செய்தவன் வேறு யாரோ என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் சுத்தக் கோமாளித்தனம். ' என்று தனக்குத் தானே சொன்னதோடு மட்டுமல்லாமல் தப்ப முயற்சி செய்து பல முறை தோல்வி கண்டும் துவலாது வெற்றி கண்ட விதம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

"கயானாவில் படுபயங்கரம் ஒவ்வொரு வருடமும் 100க்கு 80 பேர் செத்துப் போகிறார்கள். முந்தின கும்பல் மொத்தமும் இறந்ததும் அடுத்த கும்பல் புறப்படுகிறது". என்ற சக கைதிகளின் எச்சரிக்கையையும் பொருட் படுத்தாது அவர்களையும் தோழர்களாக்கி அவர்களுக்கும் விடுதலை உணர்வை ஊட்டும் பட்டாம் பூச்சியின் துணிவு பாராட்டுக்குரியது.

தன் மனைவி மக்கள் என்ற நினைவையும் அந்த சுமைகளையும் சுமக்க தயாராக இருக்கும் ஓரெ ஜீவன் தன் தந்தை என்பதை   நினைத்து பெருமிதம் அடையும் கையிதின் மனநிலையை கண் முன் கொண்டு போகும் அழகிய தமிழ் மொழிபெயர்ப்பு  நடை படிக்கும் நம்மை மொழிபெயர்த்த திரு .ரா.கி. ரங்கராஜன் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.

கடலிலும் ,கட்டு மரத்திலும், காட்டுப்பகுதிகளிலும் சிதறியோடி மறுபடி சிக்கி கொடிய தண்டனை அனுபவித்தும் மறுபடி மறுபடி விடுதலை என்ற ஒரு உணர்வை மட்டுமே உயிரில் சுமந்து போராடி சுதந்திர மனிதனாக ஆகும் சராசரி மனிதனின் காதலும் நகைச்சுவையும் கோபாவேசமும் திகிலும் நட்பும் கொடுமையும் நிறைந்த போராட்ட வரலாறு தான் பட்டாம்பூச்சி.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய சுஜாதா அவர்களின் வரிகள் நம்மை வியக்க வைக்கின்றன. அவர் திரு ரங்கராஜனைப்பற்றி குறிப்பிட்ட வரிகள் சில " ஒரு தபால் தலையில் அடங்கிவிடக்கூடிய திறமை உள்ள எழுத்தாளர்கள் எல்லாம் சுயவிளம்பரமும் பட்டங்களும் பரிசுகளும் ஏற்பாடு பண்ணிக்கொண்டு சொந்த பெருமையில் குளிர்காயும் சூழ்நிலையில் ரங்கராஜன் ஒரு கர்ம யோகி.  இத்தனை சாதனை படைத்தவருக்கு குறைந்த பட்சம் ஒரு பொன்னாடைகூடப் போர்த்தாதது தமிழகத்தின் விசித்தரமான முரண்பாடுகளில் ஒன்று! " என்று குறிப்பிட்டுள்ளார். இவ்விதம் திரு. ரா.கி. ரங்கராஜன்அவர்களின் முழுத் திறமைகளையும் சுஜாதா அவர்கள் தமது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இந்த மகத்தான மனிதருக்கு தகுந்த மரியாதைகளும் பராட்டும் கிடைக்கவில்லை என்பதை நினைக்கும் போது நெஞ்சம் கனக்கவே செய்கிறது. எல்லா மனிதர்களுமே தமக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதில்லை. அதுவும் சிறுகதை தொடர்கதை கவிதை கட்டுரை நாடகம் இப்படி பல துறையிலும் முத்திரை பதித்த மனிதனை போற்றத் தெரியாத தமிழகத்தை என்ன செய்வது ஆதங்கப்படுவதை விடுத்து.  மாபெரும் மானிட சாசனத்தை நீங்களும் நேரம் கிடைப்பின் வாசித்து மகிழுங்கள்.

நூலின் பெயர் : பட்டாம் பூச்சி
ஆசிரியர் : ஹென்றி ஷாரியர்
தமிழில் மொழிபெயர்ப்பு : ரா.கி . ரங்கராஜன்.
பக்கங்கள் : 856
விலை : 250.

-- படம் டிஸ்கவரி இணைய பக்கத்தில் இருந்து எடுத்தது.

Monday 28 January 2013

உலகம் ஒரு வாடகை வீடு !


அப்பாவின் அறிவுரைகள்
அடிக்கரும்பு உணருமுன்.

ஆட்டத்தின் நுனுக்கத்தை
ஆலாய் நின்று உணர்ந்தபோது
ஆறறிவும் ஏற்கவில்லை
ஆசை வென்று வீழ்த்தியது.

இதயத்தில் சுத்தம் வேண்டும்
இருப்பதில் வாழ வேண்டும்
இல்லாததைத் தேடிப்போனால்
இன்பங்கள் விடை கேட்கும்.

ஈடில்லா வாழ்வமைய
ஈகைகள் செய்ய வேண்டும்
ஈரேழு உலகம் இணைந்து
ஈனம் சொன்னாலும் ஏற்காதே.

உண்மையாய் நன்மை செய்
உயர்வான எண்ணம் சூடி
உனதென்று ஏதுமில்லை
உலகம் ஒரு வாடகை வீடு.

ஊமையாய் உண்டு உறங்கும்
ஊற்றுக்கண் திறந்து வை
ஊசலாடும் ஆசைப்பாதை
ஊனமெனத் தள்ளிவிடு.

எச்சல் சோறு வேண்டி
என்னாளும் கலங்காதே
எரிகின்ற வீட்டிலிருந்து
எதையும் ஏய்த்து எடுக்காதே.

ஏமாற்றும் விழிகளுக்குமுன்
ஏமாந்து மாயாதே..

ஒன்றில் ஒன்று வாழ்ந்தால்
ஒற்றுமை அதை அழிக்காதே
ஓய்வின்றி பணம் சேர்க்க
ஓடியோடி பதறாதே..

ஔஷதமாய் அன்பை அணி
அஃகினியாய் தீமை எதிர்.

Sunday 20 January 2013

கானல் நீராய் நம்பிக்கை !



-- ஏர்முனையில் சிக்கிமாயும்
மண்புழுவின் தியாகங்கள்
அறிகின்ற அறிவிருந்தால்
விவசாயத்தின் கதைகளில்
வாழ்ந்திருக்கும் சோகம்புரியும்.

உழைப்பவன் அழுதிருக்க
உண்பவன் சிரிக்கின்றான்
உடைந்த மண்பாண்டமாய்
உலகத்தில் விவசாயி.

காசிருந்தால் வாங்கிடலாம்
கானல் நீர் போல் நம்பிக்கை
பொருளின்றி எதை வாங்குவது
விதைத்தால் தானே அறுத்தெடுக்க..

விளை நிலத்தில் விழுகின்ற
தானியம் மட்டும் விதையில்லை
இதயத்தில் விதைக்கப்படும்
நன்மை தீமையும் விதைகளே.

வாழ்வும் விளை நிலம்தான்
நாம்தான் சீர் செய்யவேண்டும்
நன்றாய் அதை உழுதெடுத்து
நன்மை வளர்த்தால் செழித்தோங்கும்.

Saturday 19 January 2013

மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு !


மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு ஆமாங்க பிரபலங்களை சந்திக்க கிடைத்த ஒரு அறிய வாய்ப்பு நேற்று நிகழ்ந்தது. புத்தக கண்காட்சியில் மிகுந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே ஆங்காங்கே மிட்டாய் கடையை முறைப்பதைப்போல அங்காடியை பார்வையிட்ட படி நம்ம உறவுகளை சந்தித்த  நிகழ்வு பெரு மகிழ்வளித்தது. முதல் சந்திப்பில் தான் அறிமுகம் இந்த சந்திப்பில் நலம் விசாரித்து நகைத்துப் பேசி நிகழ்வு உற்சாகமாக தொடர்ந்தது.

சக பதிவர்களின் புத்தக அறிமுகம் இனிதே நடந்தது. பிறகு அகம் குளிர்ந்தது போக தொண்டையையும் குளிர்பானத்தால் குளிர்வித்து பிரிய மனமில்லாது விடைபெற்றோம்.

அகிலா , கோவை சரளா , கோவை நேரம், கண் கொத்திப் பறவை மற்றும்  கவியாழி அவர்களின் புத்தகமும் சகோவின் சரிதாயணமும்

 மேலும் சில புத்தகங்களையும் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். ரயில் நிலையம் வரை காரில் அழைத்து வந்து விடைகொடுத்த புலவர் ஐயாவிற்கும் கவியாழி நண்பருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Friday 18 January 2013

கேளு சாமியோ கேளு !



ஊர் ஊரா சுத்தி வந்தே
ஓரு கதையும் சொல்ல வந்தேன்
                                            (கேளு சாமியோ கேளு)
டப்பா அடிச்சி பாடி நானும்
டப்பாங்குத்து ஆட வந்தேன்.
                                          (கேளு சாமியோ கேளு)
ஊசி மணி பாசி மணி
உணவளிக்கும் உழைப்பு மணி.
                                               (கேளு சாமியோ கேளு)
பொழப்பேதும் தெரியவில்ல
நாடோடி பொழப்பிதுவே...
                                            (கேளு சாமியோ கேளு)

தனித்தனியா சுத்திடுவோம்
இரவில் கூட்டத்தோடே சேர்ந்திடுவோம்
குழிபறிக்கும் எண்ணமில்ல
குடிகெடுக்கும் ஐ◌ாதியில்ல    (கேளு சாமியோ கேளு)

ஊர் கூடி விழாயெடுக்கும்-எங்கள
ஓர் ஓரம் ஒதுக்கிவைக்கும்..
ரேட்டு பேச ஆளுமுண்டு
ரேசன் காடு கொடுக்க யாருமில்ல
                                                (கேளு சாமியோ கேளு)
கூத்தாடி பொழப்பிதுவே
குலம் தழைக்க வழியுமில்லையே !

Friday 11 January 2013

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !



தை முதல் நாள்
வெள்ளி முளைச்சிருக்கு
விடியலுந்தான் காத்திருக்கு
மாட்டுச்சாணம் தெளித்துவிட்டு
மனம் போல கோலமிட்டு
மன்னவனாம் சூரியனுக்கு 
வணக்கம் சொல்லி...
நீர் குடித்த கரும்பெடுத்து
நிலத்தினிலே ஊன்றி வச்சி
புதுப்பானை கழுத்தினிலே
புது மஞ்சள் சிரித்திருக்க..
புத்தாடை தனையுடுத்தி
நிலமகளை உழுதவர் தம் பாதம் பணிந்து
தை மகளை...
பொங்கலிட்டு வரவேற்று...

அடுத்த நாள்..

ஆடு மாடு குளிக்கவச்சி
அடுப்பங்கரை மொழுகிவச்சி
ஆட்டுக்கல்லில் அரைச்செடுத்த
அரசிமாவு இட்லியாக...
கொழவிக்கல்லும் குளித்தெழவே -நானும்
கொத்தமல்லி அரைச்செழவே.

பட்டு வேட்டி தரை தழுவ
பளபளனு மனம் நழுவ
தலை வாழை இலை போட்டு
தாளிக்க கடுகுமிட்டு...
மாமரத்து நிழலிருக்க - அருகே
மச்சானோட மனசிருக்க
பரிமாற பக்கம் போக-அவன்
பார்வை பட்டே அல்லி பூத்ததென்ன.

அரை நாளு போச்சிதடி சீக்கிரம்
அரைச்சி வாடி அம்மியில் மசாலாப்பொடி
மச்சானே மணக்குதிங்கே மீன் குழம்பு
மதிய விருந்துக்கு நடுவே ஏன் வம்பு
பறந்தோடும் கோழியப்பிடி
பக்குவமா உதவும் நானெப்படி
ஜாதி மல்லி கோத்து வரேன்
ஜல்லிக்கட்டு பார்க்கப் போவோம்.
கண்டு வந்த காட்சியெலாம் 
கதை கதையா பேசி மகிழ்ந்து
உறவெலாம் ஒன்று கூடி
ஒருவர்க்கொருவர் அளாவி மகிழ்ந்து
அவரவர் இல்லம் சேர்வோம்.
 உறவுகள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். 


Thursday 10 January 2013

உனக்கான இடைவெளியில் !



உனக்கும் எனக்குமான
இடைவெளியை இட்டு நிரப்ப
நினைவுகளை உடனழைக்கிறேன்
இடம் வலம் என அதுவும்
தனக்கொரு இடத்தை தேடியபடி.

மழலையின் நடனமாய்
நானும் ரசித்து  நிற்க.
நீயோ எனைப்பார்த்து
காற்றில் அசைந்தாடும்
மலர்க்கொத்து என்கிறாய் - உன்
வர்ணனையில் வழுக்கி விழுந்த
நாணத்தை மறைக்கத்தெரியாது.

மௌன மடலவிழ்க்குமுன் -நீயோ
இதழ் மெத்தையில் உறங்கும்
வார்த்தைகளை எழுப்பிவிடாதே என்கிறாய்.
கவியரங்கத்தில் நுழைந்த ரசிகையாய்
நமக்கான ஒவ்வொரு தனிமையிலும்..
விமர்சிக்கவும் மறந்து வியந்து நிற்கிறேன்.

Tuesday 8 January 2013

துளித் துளியாய் !



நினைவுகளைத் தின்றே
உயிர் வாழும்
காதல் பறவை நான்.

உறக்கம் மறந்து
உலவுகிறேன்...
உனக்கான வார்த்தை தேடலில்.

நேற்றைய தேடலிலும்
இன்றைய கோபத்திலும்
நாளைய புரிதலிலும்-உன்னில்
பிறழாமல் ஒட்டிக்கொண்டிருக்கும்
எனக்கான நேசம்.

தவிர்க்க முடியாத
சுவரொட்டி விளம்பரமாய்
நீ போகும் பாதையில்
என் புன்னகைப் பூக்கள்.

சாப்பிடக் கூடவிடாமல்
மடியில் சம்மணமிட்டு
அமர்ந்திருக்கிறது உன் நினைவு
நீ போகும் போதே அதையும்
அழைத்துக்கொண்டு போகமாட்டாயா ?

Monday 7 January 2013

என்னுயிரே கண்ணம்மா !



பச்சை நெல்மணிவாழ் பால்துளி
நீதானோ கண்ணம்மா!

பசுந்தளிர் புல்நுனி பனித்துளியது
நீயோ பொன்னம்மா!

குருத்தோல் வடிவாகி
சாய்ந்தாடுந் தென்றல்யாரம்மா!

மலையாழம் ஒளித்திருக்கும்
வெண்மேகம் உருவுனக்கு ஏனம்மா!

ஆற்றோரம் தலைகவிழ்த்து
நாணலாய் நீ நிற்பதென்ன சோகமா!

நெடுதுயர்ந்த பனைமரமாய்
அன்பிலையோ அதுவேனம்மா!

தண்ணீர்மேலாடும் தாமரைவாழ்
நீ்ர்துளியோ நம் உறவம்மா!

ஆலமர ஊஞ்சலிலே ஆடியகதை
நிழலோ என் கிளியம்மா!

அலையாடிய காதலில் விளையாடிய
மீன் கரைவிழுந்தது ஏனம்மா!

வான்விட்ட விண்மீனாய்
உருகுகிறேன் கண்பாரம்மா!

செங்கதிராய் கதவைத்தட்டி
காத்திருக்கும் எனைப்பாரம்மா

எங்கே என்னிதயம் எங்கே என்னுயிர்
எங்கேயென் கண்ணம்மா!

இருளாகி மடிகின்றேன் நிலவாய் நீ
வருவாய் நம்பிக்கையில்!

சொர்கமோ நரகமோ எங்கே நீ
அழைத்தாலும் அங்கிருப்பேன்!

என்னுயிர் புன்னகை நீதானே கண்ணம்மா
எதற்காய்யினி மௌனம்!

பவளவாய் மலர்ந்து கவிதைதா
பொன்னம்மா உனக்காய்!

விடியும்வரைக் காத்திருப்பேன்
வாராயோ வினைதனைத் தீராயோ?

Sunday 6 January 2013

உன் வரவே பூவாசம் !



அக்கரையப் பாத்திருந்தேன்
ஆத்தங்கர ஓரத்திலே-மாமா
இக்கரைக்கு வருவாயா-உன்
ஈரக்கால் பதிப்பாயா-கண்
உனையே  தேடிநிக்க-பெண்
ஊமைமனம் தாங்கி நிற்க
என்னையிங்கே  தவிக்கவிட்டு
ஏன்போன பொழப்பத் தேடி...
ஐயிரண்டு ஜாமம் போச்சியிங்க
ஒதுக்கிப்போட்ட நார்போல
ஓரமா நானிருந்து வேவது ஏனய்யா?
சூறாவெளிக் காற்றுபோல மனம்
ஏதேதோ நெனைக்குதய்யா
சூரியனும் வம்புக்கு தினம் இருள்
போர்வப் போத்திப் போகுதய்யா!
காட்டத்தி சிரிப்பாக பூத்துநிற்கையில
நான்மட்டும் நீரோடை நிலவுபோல
நிழலாடி மாய்கின்றேன்-கண்ணாளா
உன்வரவே பூவுக்கு வாசம் கண்ணா
எனையாளும் சீமானே எம்புட்டுநாள்
துயில்மறக்க தாலாட்டு சீர்வெறுக்க!

Friday 4 January 2013

சோக ராகம் !



அல்லிக் குளத்தோரம்
பாட்டு கேட்கும் தேவாரம்
சொல்லெடுத்து நான் தரவா
சோகத்தையும் தான் சொல்லவா

வெட்டருவா தேஞ்சிருக்கு
வேலி மட்டும் மீந்திருக்கு
கொட்டு மழை ஓய்ந்திருக்கு
கோடை எப்பவும் நிறைந்திருக்கு

கூத்து மேடை காணலியே
கொண்டைச் சேவல் கூவலியே
மஞ்சத் தாவணி பறக்கலையே
மார்கழி கோலமும் நிறக்கலையே

ஆத்தங்கரை அம்மணமா
அடுக்குமாடி சம்மணமா
தோத்ததிங்கே இயற்கையம்மா
தோல்வியுந்தான் நமக்கம்மா

Wednesday 2 January 2013

சட்டத்தால் பயனில்லை !



 முன்னுரை மொட்டாக மகவாக
முகவுரை குமரியாக மலராக
பதிவுரை தாரமாக தாயாக
முடிவுரை உதிர் இலையாய்.

பெண்ணென்றால் கண்ணென்று
பேசுகின்ற சமுதாயம்
கள்ளிப்பாலுக்கு தப்பிய இனம்
காமப் பார்வையில் தப்ப இயலாது
கொல்கின்ற அவலங்கள்.

குலமகள் என்றுரைப்பார்
லட்சுமி என்றழைப்பார்
வார்த்தையில் வாழும் நேசம்
வாழ்க்கையில் பொய்யுரையாய் .

மான் மயில் போலென்பார்
குடும்பத்தலைவி என்பார்
குலவிளக்காய் பாடிடுவார்
கிடைக்கும் வரை தேடிடுவார்
கிடைத்தால் அடிமைகளாய்.

தூண்டில் மீன்வாழ்வெதற்கு ?
துவண்டு போகும் நினைவோடு
துடித்து வாழும் நிலையெதற்கு ?
வேலை செய்யும் அடிமைகளாய்
வேஷங்கள் போட்டெதற்கு ?

தன்னையும் கொடுத்திங்கே
தண்டனையும் அடைந்தாலும்
தரணியில் பெண் என்றும்
சுக போகப் பொருளாக.
பிள்ளை பெரும் இயந்திரமாய்
இணையாய் நினைப்பாரில்லை.

ஆற்றுவார் யாருமில்லை
அணைத்து தேற்றுவார் காணவில்லை
போற்றுவார் தேடியோடு முன்
சாற்றுவார் தெரு நாய்ப்பட்டம்
மனித குலம் மாறாதா ?
மன எண்ணம் மாறாமல்
சட்டத்தால் பயனில்லை.

Tuesday 1 January 2013

பூ வாசம் !



பூ பறித்து போகும் செல்லையா-எனை
ஆர்பரித்து போவதேன் சொல்லையா

குண்டு மல்லி பறிச்செடுக்க
கூடையுந்தான் நிறைஞ்சிருக்க-நானும்
அரை குடமா தளும்புறேனே
அல்லாடி நிக்குறேனே

ஆத்தோரம் போறவரே - நெஞ்ச
அணை கட்டி போவிரோ
தோப்போரம் நான் வரவா -பூவும்
தொடுத்தெடுத்து நான் தரவா

காதோரம் சேதி சொல்லி
காத்தாட்டம் போறவரே
காதல் சூதாட்டம் ஆடுறியே-என்
கண்ண கட்டி ஓடுறியே.

கோத்தெடுத்த மாலையுந்தான்
கோவமாத்தான் பாத்திடுதே..
சாளரத்த சேர்த்தணைச்சா
சாந்தி பெருமா எம்மனசும்.