Monday 31 December 2012

துளித் துளியாய் !



எத்தனை எத்தனை
நாட்கள் மாதங்களாகி
மாதங்கள் வருடங்களாக..
கழிந்தாலும்..
உனக்காக சேமித்து வைத்த
சொல்லப்படாத வார்த்தைகள்
யுகங்கள் தாண்டியும்
வெளி வராத கவிதை
தொகுப்பாக.

புதிதாய் வந்த எதுவும்
நிரந்தரமும் அல்ல
பழையன எல்லாம்
அழிந்து விடுவதுமல்ல
நினைவலைகளில்
முன்னும் பின்னுமாய்
கிழிபடும் நாட்காட்டியாய்.

கட்டி வச்ச மாடாட்டம்
மனசு உன்னையே சுத்தி சுத்தி
வருதய்யா...
மண்ணில் புதைஞ்ச
முளைக்குச்சியாட்டம்
நெனப்பு பேயாட்டம்
ஆடுதய்யா...

உன் கோபத்தை மட்டுமல்ல
மவுனத்தையும் ரசிக்கத்
தெரிந்தவள் நான்....

அவசர அவசரமாய்
கிளம்பிச்  செல்லும் போது
எதற்கு அந்த பார்வை வேறு ?

கன்னம் குழி விழ
சிரிக்க வைத்து
களவாடிப் போகிறான்
வெட்கத்தை.


வாழ்த்தொன்றை சொல்லிவிடவே
வரிசைப்படுத்த முயன்று தோற்கிறேன்...
வார்த்தைகளை.

புத்தாண்டே வருவாய் !



அகிலம்தானே சுழல்தல்போல்
ஆக்கமது சுழன்றாடின் நன்று!

இமயம் உயர்ந்து நிற்பதுபோல்
ஈரம் இதயம்வாழினது மேன்மை!

உயிரில்லா வானம் பொழிதல்போல்
ஊருயர நாமுழைப்பினது தியாகம்!

எங்குமன்பு மட்டும் கோலோச்சின்
ஏணியாகுமே உறவென்ற பாசம்!

ஐயமில்லா நட்பு வந்து கூடினதுவே
ஒருநாளுமொழியா விதிசெய்யுமே!

ஓரணியாய் நன்மையது கைகோர்ப்பின்
கடலளவாய் மெய்யெழுந்து நமைஆளுமே!

காலத்தின் ஓட்டம் கவிதைகள் பாடட்டும்
புதுமலராய்ப் நற் புத்தாண்டு பூக்கட்டும்!

நறுமணம் மட்டும் வாழ்வை சூழட்டும்!
இல்லாதார் புதுவாழ்வேந்தி உயரட்டும்!

உள்ளாரிரங்கி மனமுவந்து ஈயட்டும்!
கல்லார்கு கல்விகிடைக்க வழிபிறக்கட்டும்!

பெண்டிர் தம்முரிமை பெற்றுயரட்டும்!
தீமைகள் தோற்கட்டும் நன்மை ஜெயிக்கட்டும்!

புத்தாண்டே நீவருவாய்-கண்திறவாய்
நாடும் வீடும் இயற்கையும்வாழ வரமளிப்பாய்!

பாசத்துடன் நேசத்துடன் அன்புடன் வாழ்த்தோடு
                                             தென்றல்.......

Sunday 30 December 2012

முடிவில்லா நிகழ்வுகள் !



இதயயிமை மூடிவைத்தே சிலர்
இருளாக வாழ்கின்றார் இவர்
அம்மாவாசை பயணத்தால பல
பௌர்ணமிகள் மாசுபட்டுலகில்
உதிர்வதேன்?காரணம் தேடலாய்!

பெற்றவர் செய்த தவறின் பலனோ?
வளர்ப்பால் விளைந்த பாவப்பதரோ?
போதையால் பாதை மாறிய நிலையோ?
கூடாதநட்பு காட்டிய தீமை வழியோ?
கலாச்சாரச் சீரழிவின் அரங்கேற்றமோ?
கறுப்பாடுகளின் இச்சைசெய்யும் மோசமோ?
சட்டத்தின் ஓட்டை கொடுக்கும் தைரியமோ?
சாகவரம்பெற்ற ஆசையின் தூண்டுதலோ?
தேடினனெல்லாமே மனிதன் மிருகமாக!

அன்புமகள் சல்லடையாய்,மனிதநேயம்?
சட்டமும் சரியாயில்லை சமூகப்பார்வை
சந்தைக்குவந்த விளைபொருளாய் விற்க!
உயிர்போனால் ஒப்பாரி -வருமுன் காக்க
ஆள்வாருமில்லை ஆண்டவனுமில்லை!
முடிவில்லா நிகழ்வுகள் முடிவுரையறியாது
கண்ணீரால் லாபமில்லை தீமைவேறறுக்க
கையில் ஆயுதமேந்தினுமினி பாவமில்லை!

ஆண்டொன்று போனால் ...


எதிர்பார்ப்பு இல்லையெனில்
வாழ்க்கையில் ஒன்றுமில்லை
எதிர்பார்ப்பே வாழ்வானால்
ஏமாற்றம் எஞ்சி நிற்கும் !

எனக்கென்று எதைத் தருவாய் ?
கனவோடு காத்திருந்தேன்.
கரைந்தோடும் நீர் மணிபோல்
மறைந்தோடிப் போகின்றாய்.

விரிந்து பரந்த நீலவானில்
நெற்றிச்சுட்டி விண்மீனில்
மறைந்திருக்கும் மாயங்களை
எனக்காய் தருவாயோ ?

மேகங்களில் மறைந்திருந்து
வழிகாட்டும் பார்வையிலே
வாழ்ந்திருக்கும் கவிதைகளை
அள்ளித் தந்து மகிழ்வாயோ ?

காற்றின் இசைப் பாட்டுகளாய்
காதில் சொல்லும் மந்திரத்தை
காதோரம் கொண்டு தந்து
கதைகள் சொல்வாயோ ?

ஆண்டொன்று முடிந்ததுவாம்
ஆசைக்கேது முடிவிங்கே !

Friday 21 December 2012

உயிரெதற்கு உடம்பினிலே !


சந்தனத்தில் குளித்தெழுந்து-உனை
         சந்திக்க வருகிறேன்
நினைவுகள் துரத்த - ஓடி மறைய
    நீண்ட வெளி தேடுகிறேன்.

எட்டு திக்குமெங்கும் - என்னில்
      எரி கல்லே விழுந்திடுதே
எரிந்து முடித்த பின்னும்
     எலும்பிலும் உன் நேசம் .

அந்தியில்  ஆற்றங்கரையில்
     அடுத்தடுத்து காத்திருந்த பொழுதெலாம்
கனவாய் போனதடி - நானும்
    கல்லாய் நின்னேனடி.

இமை இரண்டும் வாடி - நெஞ்சில்
    ஈரம் தெரிந்ததடி 
இதயத்தில் துடிப்பிருந்தும்
    ரத்தம் உரைந்தே போனதடி.

பாடும் பறவையினம் - உனை
   பாடி அழைப்பதென்ன
பாவி என் நிலையை
  பார்த்து சிரிப்பதென்ன.

உன்னைப் பார்த்த விழி
    ஓவியம் காண மறுக்குதடி
கன்னல் மொழி கேட்ட பின்னே - திண்ணை
    கதைப்  பேச்சும் மறந்தேனடி.

உயிரெதற்கு உடம்பினிலே
   உதிரம் குடிக்கும் காதலாளே...

Thursday 20 December 2012

பழசு போய் புதுசு வந்தது !



குடம் குடமா நீரெடுத்து
குளத்து தண்ணீ வத்திப்போச்சி
கூடை கூடையா மண்ணெடுத்து
குழியுந்தான் பெருசாச்சி...
மச்சானே சட்டிப் பானை
செய்தது போதும் மச்சான்
நாட்டில் நாகரீகப்  பெயராலே
மண்பாண்டமெலாம் மறந்தேபோச்சு

மண்ணைச் சுரண்டி சுரண்டி
மாடி வீடுந்தான் பெருகிப்போச்சு
சுரண்டல் இங்கு பெருகியதாலே
இயற்கை வளமும் தான் சுருங்கிப்போச்சு.

குலத்தொழிலும் அழிந்தொழிந்து
குடும்பமெலாம் சிதைந்து போச்சு
மண் அடுப்பு மறைந்து போக
கேஸ் அடுப்பு வெடிக்குது மாமா.

மாட்டு வண்டி பயணம் குறைய
மாசு பெருகி மருந்து கடை 
பெருகிப் போச்சு....
மச்சானே பழசு போய்
புதுசு வந்தா பரவாயில்ல
பாதிப்பு பெருகுதே என்ன சொல்ல.

Wednesday 19 December 2012

புத்தக வெளியீட்டு விழா காணொளி !



எண்ணங்களைப் பகிர்ந்து எழுத்துக்களால் அறிமுகமாகி வலையில் வலம் வந்த சகோதர மற்றும் நட்பின் உறவுகளை சந்திக்க வாய்ப்பளித்த மாபெரும் விழாவான
-- பதிவர் சந்திப்பை நம் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத , மகிழ்ச்சி தரும் விழாவாக நடந்தது. புலவர் ஐயா அவர்களின் உரையைப் போல நம் இல்ல விழாவினைப் போல அவ்வளவு ஆர்வத்துடனும், அன்புடனும் மீண்டும் மீண்டும் பேசி மகிழ்ந்தோம். இனி வரும் சந்திப்புகள் எத்தனை இருந்தாலும் முதல் சந்திப்பை அசைபோட வைக்கும் விதமாக புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் மூலமாக அனைவரும் வெளியிட்டு மகிழ்ந்தோம். எனினும் அன்றைய விழாவினை காணொளியில் கண்டு மகிழ சகோதரர் மதுமதி தம் கடும் உழைப்பினாலும் ஆர்வத்தினாலும் தயாரித்து நமக்கு பகிர்ந்தளித்து சில தினங்களாக நம்மையெலாம் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி வருகிறார் என்பது மிகையாகாது. அந்த மகிழ்வான தருணத்தில் தான் எனது முதல் கவிதை வெளியீடும் நிகழ ஆர்வம் கொண்டு எனது விருப்பத்தை புலவர் ஐயா மற்றும் சென்னைப் பித்தன்  அவர்களிடமும் சகோதரர் மதுமதி மற்றும் கணேஷ் அவர்களிடமும் கூறிய போது மிக்க மகிழ்வுடன் சம்மதித்து உடன் இருந்து ஊக்கமளித்து புத்தக வெளியீட்டை அன்றைய தினம் வெகு சிறப்பாக எனது வாழ் நாளில் மறக்க முடியாத நிகழ்வாக நடத்திக் கொடுத்த தாய் நாடு மக்கள் அறக்கட்டளை நிறுவனத் தலைவருக்கும் பதிவர் சந்திப்பிற்கு வருகை தந்து நூலினை வெளியிட்ட பட்டுக்கோட்டை பிராபாகர் அவர்களுக்கும் நூலினைப் பெற்றுக் கொண்ட சேட்டைக் காரன் அவர்களுக்கும் குறிப்புரை வழங்கிய கணக்காயர் அவர்களுக்கும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்து அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் விழாவிற்கு வருகை தந்து வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும் ......

உயிர் கொடுத்த தாய்தந்தைக்கும்
உதிரத்தில் கலந்த தமிழுக்கும்
உன்னத நட்புக்கும் உடன் பிறப்புகளுக்கும்
உடனிருந்த உறவுகளுக்கும்
காதலீந்த கணவருக்கும்
கனவையும் ரசித்த மழலைகளுக்கும்
காட்சியாய் விரிந்த இயற்கைக்கும்
மண் வாசமிட்ட மழைக்கும்
மழை தந்த மரங்களுக்கும்
மன்னவனாம் சூரியனுக்கும்
மயங்க வைத்த நிலவுக்கும்
மின்னிச் சிரிக்கும் விண்மீன்களுக்கும்
எனது மன மார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்றைய நிகழ்வை காணொளியாக பகிர தயாரித்துக் கொடுத்த மதுமதி சகோவிற்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறி காணொளியைப் பகிர்கிறேன்.



Tuesday 18 December 2012

மாய வாழ்க்கை வாழ்ந்தெதற்கு ?



சாமியும் சரியில்லை
ஆசாமியும் நிலையில்லை
கருத்துப் போட்டியிலே
கவிதைகள் பிறக்கலாம்.

சொத்து பத்துக்களால்
சொந்தம் பிரியலாமா ?
ஆறடி மண்ணுக்கும்
அவகாசம் இல்லையடா ?

மின்சார நெருப்பினிலே
எரிகின்ற மேனியடா.
உருகாத வெண்ணை தேடும்
அறிவு சார் ஜீவிகளும்.

கிரகங்கள் ஒன்பதும்
ஆள்கின்ற சக்திகளாய்.
வான் கடல் நீந்தி வாழும்
விண்மீன்கள் பாவமடா.

கதிரவன் திமிங்கலமாய்
நிலவு மகள் மீனினமாய்
துருவங்கள் முத்துக்களாய்
நீலவானும் கடல் தானோ ?

அழுக்கில்லா மேனிதனை
தேடியோடும் மனம் கண்டேன்
அப்பழுக்கில்லாத மனம்
தேடயாருமில்லை.

மாசு நீக்க வழிவேண்டும்
மாய வாழ்க்கை வாழ்ந்தெதற்கு ?

Monday 17 December 2012

உண்மையன்பு எதுவென்றே ஓர்தேடல் !


அரசவைக்கவியுடனே அரசனானகலையரசும்
அரங்கேற்றிய விவாதமேடைப் பொருளாய்
உண்மையன்பு எதுவென்றே ஓர்தேடல் அரங்கேற!

அற்றவன் வந்துரைப்பான் அன்பு பொய்யதனால்
அனைத்தும் விட்டொழித்து துறவறம் பூண்டிங்கே
ஆசைதனைத் துறந்து அட்சயபாத்திரம் ஏந்தினன்!

ஆண்டவன்மேல் கொண்ட அன்பேயன்பு என்றியம்ப,
மன்னனவன் சொல்வான் மக்கள்மீது அன்புவைத்து
அவர்காத்து துன்பம் நீக்குதலே தலையாய அன்பென்றான்!

குடிமகனவனெழுந்து கொண்டாளை நேசித்து பிள்ளைகளை
சீர்படுத்தி பண்போடும் அறிவோடும் வளர்த்தலழகென்றான்!
சுட்டிச் சிறுமியொருத்தி பட்டன துள்ளியெழுந்து பட்டாடை
பளபளக்க சொல்வாள் என் அம்மாவின் அன்பே அன்பென!

தாயன்பு பெரிதா?சேயன்பு சிறப்பா?காதலன்பு அரிதா?
எத்தனையோ கேள்விகளும் எதிர்கருத்தும் புயலானவேளை
அவையிலேயொரு பைத்தியம் அத்துமீறி உள்நுழையக்
காவலன் அவளையடித்து புறம்பேதள்ள முயல்கையிலே
பாடினள் ஓர்பாட்டு யாரும் பாடாதப் புதுப்பாட்டு!

புரிதலுமில்லே பகிர்தலுமில்லே புரியாமல் அன்பேதடா
புரிந்துகொண்டால் நானேதடா எல்லாமே நாம்தானடா!
நடுவர் தீர்ப்புரைத்தார் -புரிதலும் பகிர்தலுமில்லா அன்பு
அன்பில்லை அதுவாழின் எல்லாஅன்பும் நன்றேயென்று!
பைத்தியத்தின் உளரலா?இல்லை வாழ்க்கைப் பாடமா?

Friday 14 December 2012

அன்புள்ள மனம் தனில்வாழும் !


பச்சைப் பசுந்தளிர் உதிர்வோப் பண்பாடு-தீய
இச்சையின் இம்சையில் அழுகியதோ இதயம்!
பகலை இரவாள்வதோப் பகைமை இனிமை
உறவையதடித்துப் புசித்து பசியாறுமோ நாளும்!

முயற்சியது மூலை முடங்கியழுதுக் கிடக்க-துயில்
முந்தானை விரித்தே மடமையாய் வந்தாண்டிடுதே!
நல்லதென்றக் கரு உருபெறாமல் போகுமோ-நன்மை
கருவழிந்த பிண்டமாகி மண்ணில்போயது சேருமோ!

இமையது மூடின் பொய் நினைவாகி வாழுமோ-கனவு
தினம் நம்பிக்கை விதைத்து கனவாகவேயது ஓயுமோ!
கற்றாழைச்செடி ரோஜா மலரையிங்கு ஈன்றிடுமோ
அறியுமுன் பொருளுரைத்தே மனமிங்கே வேகலாமோ!

கொண்டதெல்லாம் கொடுமதியோ பொய் வாழ்வில்
கண்டு நிற்பதெலாம் கண்ணீர்ப் புயல் மழைதானோ!
வடிவமெலாம் பனியாகி நிழலாகி உருமாறி போனதோ
உரத்துக்குமாகா நாயினங் கீழான மனித உடலின் வாழ்வு.

உலகாளுதல் கூடுமோ அறியாமை அழிமதிதான் வாழுமோ!
கொற்கை வேந்தனுமே வெட்டியான்கை எரிபொருளாய்
மண்பாண்டமுருகி வடிவங்கள் வேறுவேராய் வேறில்லை!
சேமித்தலொன்றுண் டதுவே நாளை நம் பெயர் சொல்லும்.

அன்புள்ள மனம் தனில்வாழும் அறமன்றி வேறேதுமில்லை!
அன்பைத்தேடி நாடி யோடின் அதுபுனிதம் அறிதல் மேன்மை!!

Thursday 13 December 2012

துளித் துளியாய் !



என்னோடு உனைப்பார்த்தால்
கடிகார முட்களுக்கும் கை கால்
முளைத்துவிடுமோ ?
ஏன் இந்த ஓட்டம் பிடிக்கிறது.

சிறு சிறு பிரிவுகள் தான்
உனக்கான என் நெருக்கத்தை
வெளிபடுத்துகின்றன.

புள்ளி மானாய் ஓடி
மெழுகாய் உருகி
நீரில்லா மீனாய் தவித்து
வாடிய பயிராகிறேன்
வழக்கமான உன் உரையில்லாத போது.

தினத்தேடல்கள் கூட
திகட்டாத உன் அன்பில்
காணமல் போகின்றன..
கள்வனே கவர்ந்ததை
கொடுத்துவிடு.

இல்லையென்பதற்கும்
இருக்கு என்பதற்கும்
அதிக வித்தியாசம் இல்லை
இதோ என் முன்னே இருக்கிறாயே
அன்பு இருப்பதை உணரமுடிகிறது.

பகலுக்கான
இரவின் காத்திருப்பாய்
அர்த்தமற்றுப்போகிறது..
சில காத்திருப்பு.

Tuesday 11 December 2012

இன்றைய பெற்றோரின் வளர்ப்பு முறை !



மாந்தளிரும் மான்விழியும்
ஆறாட்டம் ஓடுதிங்கே...
கிள்ளை மொழி பேசியே
கதிராட்டம் ஆடுதிங்கே!

அன்னத்தின் நடை நடந்து
அருகம்புல்லின் விரல் கொண்டு
ரோஜா இதழால் முத்தமிட்டு
ராசாவைப் போல் மனமாள
பிறந்தவன் நீ தானடா...

அகிலமாளப் பிறந்தவனே
ராஜாக்கள் கதை கேளடா
ஜான்சி ராணியும் ஆண்ட தேசமடா..
தாத்தா பாட்டி கதை கேளடா
தரணியையும் அன்பால்வெல்லடா!

மன்னராட்சி காலத்திலும்
மக்களாட்சி நடந்த போதும்
ஆடல் பாடல் கலை வளர்த்து
ஆன்மிகத்தில் மனதை செலுத்தி
வாழ்ந்து வென்றோமடாநாமே
வளர்ந்து நின்றோமடா!

ஒற்றுமையின் பலம் உணர்ந்து
ஒருமித்த கருத்துடனே மக்கள் வாழ
பாடுபடும் தேசம்தானடா நம்மை
வாழவைக்கும் மண்தானடா நம்
தாய் நாடு பொன்நாடடா!

கேள் கண்ணே கேளு நீயே
 வளர்த்து வைத்தப் பண்பு மாறி
வேஷமிட்டப் பொய் உலகம் நாடி
பின்னாலேப்போனோமடா நாமே
புழுதியாகி நின்றோமடா நம்மை
காக்கின்ற உறவேதடா இனியும்
பொய்மை ஆள்வது முறைதானடா?

ஆபாச நடனம் பயில எங்கோ
ஆலாப்ப் பறக்கும் கூட்டம்
ஒழுக்கமிங்கே ஒழுங்கீனமே கண்ணே
உண்மையிங்கே காணத உரலாகுதே!

தீயைத்தேடு்ம்  விட்டில்பூச்சி
வாழ்வுக்கு விளம்பரமேன் கனவுகள்
காண்பதுமேன் பெற்றோரே ...
சிதைவது நல் வாழ்வாகுமேயினி
நலம்வாழ வழிகாட்டுங்களேன்
கண்ணின் மணியாக வாழுங்களேன்!
நல்லொழுக்கம் சிந்தனையை ஊட்டி
அன்பாய்ச் சீராட்டுங்களேன் அறிவை
ஏர்பூட்டித் தாலாட்டுங்களேன் ஒளியை
பிள்ளை வாழ்வில் ஏற்றுங்களேன்!!

Sunday 9 December 2012

கேள்விகளுக்கு விடையில்லை !



எதிர்காலம் தேடுகிறேன்
இருளாய் விரிகிறது
திரும்பிப் பார்க்கிறேன்
மலைப்பாய்த் தெரிகிறது
ஆதாம் ஏவாளென்ற
பரம்பரையில் வந்தோமா ?
குரங்கென்ற வர்கத்தின்
குலமாய் மலர்ந்தோமா ?

அணுக்களின் சேர்க்கையிலே
அவதாரம் ஆனோமா ?
தண்ணீர் படிவத்தின்
மறுபடிவம் நாம் தானா?
கேள்விக்கு விடையில்லை
தேடுகிறோம் என்னாளும்
கண்டு சொன்னாலும்
கடவுள் படைப்பென்போம்!

உலகம் நமதென்று
சட்டங்கள் எழுதிவைத்தோம்
அனைத்தும் சுயநலத்தால்
விளைந்த தீமைகளே !
கானகம் அழித்திங்கே
வானம் பொய்க்கச் செய்தோம்
கனிவளம் கொள்ளையிட்டு
பொக்கிஷம் சேர்த்து வைப்போம்.

கருவறைப் பிள்ளைகளின்
கை கால்கள் முடக்குகின்ற
அணு அரக்க சக்திகளை
நமக்காக ஆக்கிவைப்போம்.
மரங்களை வெட்டிவிட்டு
காற்றைத் தேடுகிறோம்
மனங்களைக் கிழித்தெறிந்து
உறவைத் நாடுகிறோம்.

கடல் நீர் துவர்ப்பிழந்தால்
உலகம் மயானமாகும்
மனிதன் நிலைமறந்தால்
எதிர்காலம் பாலையாகும்!
உள்ளதில் மனம் மகிழ்ந்து
நல்லதை நாம் செய்தால்
நாளை கவி பாடும்
நன்மைகள் தழைத்தோங்கும் !

படித்தும் பயனில்லை
உடுத்தியும் மானமில்லை
தடுத்தும் கேட்பதில்லை
தரணியை அழிக்கின்றோம்
நமக்குச் சொந்தமில்லா
பூமியை அழிப்பதற்கு
மனிதா உரிமையில்லை
மனமாசு கழுவி விடு.

இன்று நாமிருப்போம் -நாளை
நாம் செல்வோம் -என்றும்
வாழ்ந்திருக்கும் காலத்தை
வாழ விடு- அழிப்பதை நிறுத்தி விடு.

Thursday 6 December 2012

தோழி ஒருத்தி வேண்டும்..!



பார்த்துப் பார்த்து சிரித்திட்டான்
பார்க்கும் இடமெலாம் முகம் பதித்தான்
சிந்தை முழுதும் அவன் நினைவிருந்தும்
சிரித்துப் பேச மறந்தேனடி தோழி...

விழியசைவில் எனையழைத்தே
மடியினில் அமர்த்திட்டான்
'செல்லமே' என்றழைத்தான்
செவிகுளிர பாட்டென்று நினைத்தே-நானும்
அடுத்த வரி எனக்கேட்டேன்
அந்தோ பொத்தென கீழே தள்ளி
பறந்தோடிப் போனானடி..தோழி

அவனுள் விழுந்ததினால் வலிக்குதடி
சோற்றுப் பருக்கையோடு நானும்
சோதிடக் கட்டம் வரைகிறேனடி தோழி...
மாவரைக்கப்போனாலும் உரலிடுக்கில்
அவனுருவம் தெரியுதடி..தோழி

அவனிடத்தில்
என் அறியாமை கூறாயோ..?
பாட்டெல்லாம் தேவையில்லை
அவனைப் பார்த்திருந்தால் போதுமடி ..தோழி
பக்கம் வர சொல்வாயோ..?

Wednesday 5 December 2012

தென்றல் பிறந்த நாள் !

தென்றலில் எழுதத் தொடங்கி இன்றோடு ஒரு வயதாகிறது தென்றலுக்கு....
 வாழ்த்துக்களால் வளர்கிறேன்.......வணங்கித் தொடர்கின்றேன் .

  தமிழ்த்தாயின் விரல்நுனிபற்றி,
   நடக்கப் பழகிய தென்றலின்று,
   இந்தியத்தாயின் பாதம் பணிந்து,
   பயணம்தொடர விரும்புகிறேன்!
   இந்தியராய்ப் பிறப்பதென்பது,
   இனிமையான ஓர் வரனென்பேன்,
   அதிலும் தமிழராய் ஜெனித்தல்,
   தரணியில் பெரும் பேரென்பேன்!

   இமயம்முதல் குமரிவரை,
   இதயங்கள் வாழ்ந்திருக்கும்,
   சொர்கபுரி பார்க்கின்றேன்-அதில்,
   நானுமொரு பாத்திரமாய்,
   உடன் வாழ வரம் பெற்றேன்.
    மனம் பாடும் பாட்டு இதுவே !
   என்னினிய உறவெல்லாம்,
   எனதருமை நட்புகளே!

   எதுவும் கொடுக்க என்னிடமில்லை,
   எதையும் நீங்கள் கேட்பதுமில்லை,
   அள்ளி,அள்ளித் தந்த அன்பை,
   இதயத்தில் வைத்து வணங்குகிறேன்!
   ஆராதனைப் பொருளாக-அதை,
   ஆராதிப்பேன் உயிருள்ளவரை!

   நேற்றுவரைப் பிறை நிலவு,
   இன்று வளர் பிறையாய்!
   பௌர்ணமியாய் வளர்கவென,
   வாழ்துகின்ற சுடரொளி உங்கள்,
   பாதம் தொழுது வளர்கின்றேன்,
   பயணத்தைத் தொடர்கின்றேன்!

   உங்களில் நானுமாகி!!
   மீன்குஞ்சாய் கடலில் நீந்தி,
   விண்மீனாய் வானில்பறந்து,
   கார்முகிலாய் கவிதைபாடி,
   காற்றாகி ,தென்றலாகி,
   ஊற்றாகி தாகம் தீர்த்து
   இந்தியத்தாயின் மடியினலே,
   தமிழாய் மடியவேண்டும்.
   அழைப்பு வரும்வரையில்,
   எழுதும் என் எழுதுகோல்!
   நீதிக்காய்-அநீதியெதிர்த்து!

   தமிழுக்காய்-குரலை உயர்த்தி,
   அன்புக்காய்-தலைவணங்கி,
   உண்மைக்காய்-போராடி,
   அறிவுக்காய்-அறியாமைஅகற்றி,
   நட்புக்காய் -விட்டுக்கொடுத்து,
   ஆத்மாவுக்காய்-ஆறுதல்பாடி,
   இல்லார்காய்-நாழும் அழுது,
  தொடரும்  பயணமதை!
   உங்கள் வாழ்த்தோடு!தொடர்கிறேன் முடிந்தமட்டில் ...

திக்குத் தெரியாமல்; வாய்ப்புகளுக்காய் தட்ட வேண்டிய வாசல் புரியாமல் ஓடி மாய்ந்து ஆயரமாயிரம் எழுத்தாளர்கள் அலைந்து திரிகையிலே ,வழிகாட்டியாய் வந்த வசந்த மண்டபம் திரு .மகேந்திரன் அண்ணா அவர்களுக்கும், வயதில் முதிர்ந்தவர் என்றாலும் மரபுக் கவிதைகளால் என்றும் இளமையாய் தென்றலுக்கு புயலென பெயரிட்டு மகிழும் புலவர் ஐயா அவர்களின் ஆசியுடனுடனும் ,வலைச்சரத்தில் முதல்  முதலாக அறிமுகப்படுத்திய திரு . மதுமதி அவர்களுக்கும் ,மற்ற அன்பு நெஞ்சங்களுக்கும் ,ஆசிரியராக அமர்த்தி மகிழ்ந்த வணக்கத்திற்குரிய சீனா ஐயா அவர்களுக்கும் ,முதன் முதலாக எனது பதிவிற்கு வருகை தந்தும் தொடர்ந்தும் வழிநடத்தும் ரமணி ஐயா அவர்களுக்கும் ,தொடர்ந்து எனது பதிவுகளுக்கு வருகை தந்து கருத்துக்களால் எனை ஊக்கப் படுத்தும் சக தோழமைகளுக்கும் மீண்டும் மீண்டும்  பல முறை எனது மனமார்ந்த  நன்றியை தெரிவித்து தொடர்கிறேன் . இனிப்பு எடுத்துங்க உறவுகளே...
கவிதை மீள் பதிவு

Tuesday 4 December 2012

எது வெற்றி ...?


வெற்றி வெற்றி வெற்றியென
முழக்க ஒலி கேட்கிறது
வென்றது யார் எனப்பார்த்தால்
அண்ணன் தோற்றதற்கு
தம்பியின் கொக்கரிப்பு.

விழுந்ததும் ஒரே இரத்தம்
எழுந்ததும் அதே உதிரம்
உறவு தோற்றதனை
அவர் உள்ளம் அறியாமல்
பாராட்டும் சீராட்டும்
பாடை வரை அதன் பிறகு ?

வாழும் வாழ்வைத் தொலைத்துவிட்டு
வசந்தமென சூளுரைத்தால்
வாடிவிழும் நாளில்
வாய்க்கரிசி கிடைத்திடுமா ?
எண்ணல் நன்றென்பேன்!

Monday 3 December 2012

விட்டொழிய மனமுமில்ல..!



குலுக்கிப்போட்டச் சோழியாட்டம்
குதித்தோடிப் போவதேன்
கொம்புத் தேனே..

விரட்டிப் பிடிக்க
எண்ணமில்லை
விட்டொழிய மனமுமில்ல..

உன் முன்னே
வண்டாட்டம் நிக்குரேன்டி
முன்னே வாடி சின்னப்புள்ள..

கன்னம் தொட்டுப் பேசப்போறேன்
கதவடைத்து காத்தா உரசப்போறேன்
உரக்கக் கூவி ஊர அழைத்திடாதே...
ஓடிப்போகவும் எண்ணமிடாதே..

சொக்கத் தங்கமென உன் உடலா?
சொர்ணமென்ன உன் பெயரா ?
சொக்க வைக்கும் உன்னழகே-வா
ஜோடியா தான் சேர்ந்திடுவோம் பேரழகே.

மவுனமென்ன மான்விழியே
மயங்கி நிற்பதென்ன தேன்மொழியே?
பதிலெனக்கும் சொல்லேன்டி
இல்ல பார்வையாலே கொல்லேன்டி.

Sunday 2 December 2012

செல்லக் கோபமும் ஏனோ ?


முல்லை அரும்பும்
முறைத்துக்கொண்டு
கொடியோடு நிற்குதடி
கொண்டையில் ஏறாமலே

கொஞ்சிப் பேசும் மழலையும்
கோபம் கொண்டே ஓடுவதேன்
எனைப் பாராமலே...

தங்கமேனி ஆடைபூண்டு
தளதளனு ஓட்டமிடும் நீரோடையும்
தயங்கி நின்னே தேங்குதடி
என் கால்கள் சேராமலே...

வானவில்லின் வண்ணம்பூசி
வளைந்து நெளிந்து ஆட்டமாடி
வசந்தக் காற்றை சுருட்டிப் போகுதே
பட்டாம்பூச்சியும் என் வாசல் வாராமலே..

தோப்போர குயிலிரண்டு
தோள் உரசி பேசிடுதே
தூது செல்ல அழைத்து நின்றேன்
ஒன்றோடொன்று துரத்தி ஓடிமறைந்ததெங்கோ ?
செவிக்கும்  கேட்காமலே...

தேடிப்போனதெல்லாம்
விட்டு ஓடிப்போவதேனோ ?
விரும்பி நாடி வந்த நீயும்
விளையாட்டாகவும் கோபம் கொண்டுவிடாதே ?