Monday, 30 January 2012

அவர் வாழ்வு கனவுகளோ?

“உன் மீது கொண்ட காதலை
என்னென்று உரைப்பேனடி!
உரக்கச் சொல்லி மாளாது !!
ஊர்ப் பஞ்சாயத்திலும் ஜெயிக்காது !!!
"உப்பிட்டவரை உள்ளளவும் நினைகச் சொன்னார்;
எங்கள் உயிர் காக்கும்
உனை காக்க வியலாத, பாவியாய்,நானிங்கே!
கருவறையை விற்கும்
புதுமை காலமிது ...
நெல்மணியை சுமக்கும் ;
என் தாய் மண்ணே! உனை
உன் பிள்ளைகளே கூறுபோடும் அவலமும் கண்டேனே!
ஏர் பிடித்து,நெல் அறுத்து,
என்பிள்ளை வாழ்வினிலே; ஏற்றம் கண்டேனே!
இன்றவனே; மாளிகை இருக்க
மண் எதற்கு என்றுரைத்தானே?
ஏர் உழவன் எதிர்காலம் ,
கேள்வியாக!,இயற்கைக்கு இடிதாங்கி ,
வீட்டிற்கு சுமை தாங்கி ,
நமக்கு பாலையில் துடிக்கும்,
அறியாத மண்புழுவாய் !
கடலைரித்து காயங்கள், புயலாக வேதனைகள். ..,
உன் பிள்ளையாலும் போராட்டம்.
உழவன்,உழவுமாடு இல்லையெனில்,
உலகம் நாளையில்லை.ஆனாலும்,
அவர் வாழ்வு கனவுகளோ?
கண்ணீர்வருகிறது்.கவனிப்பார் யாருமில்லை...
சசிகலா

Thursday, 26 January 2012

கேள்விக்குறியாய்


“வாகன நெரிசலின் போது
வளைந்து நெளிந்து   சாலையில்,
தவறாமல் வருகை தரும்
கையில் குழைந்தையோடு பெண்மை!
பிழைப்புக்கு வழிதேடியா ?-இல்லை!
பிழைக்க வழில்லாமலா ..?
ஏனிந்த இந்த அவலம்?
இது போன்றவர்களை
ஊக்கப் படுத்தாதிங்க
எனவும் சில குரல்கள் ...
வாகனப் புழுதியில்
பவுடர் பூசப்பட்டு
வாஞ்சையோடு வாகனங்களை
நோக்கும் அக்குழந்தையின்
நாளைய எதிர்காலம் கேள்விக்குறியாய் !

ஒட்டிய வயிறோடு
குழந்தையை தெருவில் போட்டு
பிச்சை கேட்கும் அத்தாயும்
பாரதத்தின் கண்மணியே!
வீசி வெளியே எறியப்பட்டவளோ?
வீதியில் வந்து விழுந்தவளோ?
தீண்டாத எருக்கம் பூவோ?
 யாராய் இருந்தால் நமக்கென்ன?
நம் உதிரம் என்றானால்
இப்படி பாரா முகமாய் இருப்போமா ..?
சாலை வரி நாம் விதிப்போம்!
சாலை பெருக்க ஆள் வைப்போம்!
சுத்தமான சாலையில்,
இவள் போலும் குப்பைகள்.
கண்டுகொள்ள யாருமில்லை.
எல்லோரும் இந்நாட்டு மன்னரென,
இவரிடமும் அரசாள வாக்குகேட்பார்!
பிச்சை வாங்கி அரியணை ஏறிஅமர்ந்த
அடுத்த நொடி... பயணத்தில்,
இவர் யாரோ!! அவர் யாரோ!!! .

Wednesday, 25 January 2012

பத்தாவது திருமணநாள்

ஒன்பது ஆண்டுகள்
ஓடிப்போனது இன்று நம்
பத்தாவது திருமணநாள் ...
ஜென்மம் ஜென்மமாய்
தாயாய் ....சேயாய்
உறவாய் , உதிரமாய் ...
நட்பாய் ....அனைத்துமாய்
உன்னோடு நான் வாழ வரமொன்று
வேண்டுகிறேன் ...
மக்கள் தொகை பெருக்கத்தில்
துளிகூட விருப்பம் இல்லை
ஆதலால் இரண்டு செல்வங்களோடு
நிறுத்திக்கொண்டோம்
நம் காதல் தந்த
கவிதைக்  கரு போதும்
எத்தனை ஆயிரம் குழந்தைகள்
வேண்டுமானாலும் பெற்றெடுப்பேன் ...
பொறுத்திரு  என் கண்ணாளா....

Friday, 20 January 2012

முதுமையையும் தாலாட்டுங்கள்

பட்டம், பணம்,பதவி,வேலை,
நாகரீக மோகம்,வாழ்வு தேடி,
இன்னும் ஏதேதோ
காரணங்களினால்
பட்டினம் நோக்கி
படையெடுக்கும் கிராமவாசிகள்.
அதிகாலைக் சூரியனை,
அரைத்தூக்கத்தில் பார்த்து,
ஆண்டுகள் பலவாயிற்று.
உயர்ந்து நிற்கும்
கட்டிட இடிபாடுகளுக்குள்
சிக்கி சிதறி விழும்
ஆதவனின் வெளிச்சத்தையும்
கண்டும் காணாமல்
நகரும் நகர வாழ்வில்,
தீபாவளி , பொங்கல், கிறிஸ்மஸ்,ரம்ஜான் என
ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே
வந்துபிரிவெழுதிப் போகும்-
சந்ததிகளுக்காக ஆண்டாண்டு,
விழிமேல் வழிவைத்து, காத்துக் கிடக்கும் முதுமை ..

அடிப்படை வசதிகள் இல்லையென,
வர மறுக்கும் இளசுகளோடு
சண்டையிடாமல்
வாரிச்சுரிட்டி எழுந்து
விறகடுப்பில் தன்
அறுபது எழுபது வயதுகளை
எரித்தும் ..
கிணற்றடியில் தன்
சுருக்கம் விழுந்த
தசைகளுக்கு பயிற்சி கொடுத்தும்
யோகாசனதிற்கென நாம்
கழிக்கும் நேரங்களை,
ஆங்கே குனிந்து நிமிர்ந்து
கூட்டும் போதும்
ஆற்றங்கரையில் நம்
அழுக்குகளை அடித்து
துவைத்தும் விரட்டியடித்தும்,
தோட்ட செடிகளுக்கு
தூய்மை ஆடை உடுத்தியும்,
நாம் நேர மின்மை காரணமாக
ஆள் வைத்து செய்யும்
அனைத்து வேலைகளையும்
அசுர வேகத்தில்
தனி ஒருத்தியே செய்து முடித்து, ,” சிரிக்கும் போதும்”,
அன்றேனும் மலர்ந்தமுகம் ‘நாம் காட்ட மாட்டோமா’?
என மனதில் ஏங்கித்  தவித்து,
புது மலரைப்போல்
புன்முறுவலோடு
நம்மை உபசரிக்கும்
அன்னை அவளை காணும் போது
ஆண்டு முழுவதுமாய்
தேக்கி வைத்த அன்பின்..பாசத்தின்,
வெளிப்பாடு மட்டுமே தெரிகிறது.
அவசர அலைக்கழிப்பில்
தொலைத்து கொண்டிருக்கும்
உங்கள் நிம்மதிகளை
கூத்து , கேளிக்கை
சினிமா , இன்பக் சுற்றுலா,
இப்படி எதிலும் தேடாமல்!
இயந்திர வாழ்க்கை விடுத்து,
உங்கள் வருகை நாட்களை மட்டுமே
நாட்காட்டியில் பார்த்துப் பார்த்து,
பசியாறும் இதயங்களையும்
தாலாட்டுங்களேன். .

Thursday, 19 January 2012

தேடுங்கள்

தேடலென்ற
ஒன்று மட்டும், “இல்லை”யென்றானால்,
வானுக்கும்- வையத்துக்கும்,
இடையில்வாழ்ந்திருக்கும் காற்றற்ற வெற்றிடம் போல்,
அனைத்தும் அசைய மறுத்து,
ஸ்தம்பித்து நின்று விடும். ...
கண்ணைக் கண்ணில் வைத்து,
பார்வையைத் தேடுதல் விட்டு,
கருத்தை நெஞ்சில்புதைத்து,
“கவிதை”தேடுதல் போலின்றி,
உண்மையாய்த் தேடுங்கள்....
தேவைகள் பூர்த்தியாகும் வரை ....

Wednesday, 18 January 2012

இருந்தும் இல்லாமல்

பறவைகளின் கரகோஷம்,
பனி மழையே பன்னீர் தூறலாய்..
தூரிகை இல்லாமலே,
வண்ணச்சாயம்பூசி,
பகலவன் பார் நோக்கி ...
தினம் பயணம் வந்து தானே, வருகை பதிவேடு செய்கிறது !
அன்று ஏனோ ? அசதி போலும்!
வந்த சில நொடிதன்னில்,
மீண்டும் மேகப் போர்வைக்குள்,
இளைப்பாற சென்று விட்டான்..!!
தான் விடுப்பில் இல்லை
என்பதை உறுதி செய்ய
அவ்வப்போது வந்து போகும் சூரியனால்
ஈரம் காயாத துணிகளும்,
நாளை அரைக்கலாம் என
எடுத்து வைத்த மிளகாயும் ,
இரவு மீந்த சாதத்தில்
பிடித்து வைத்த வத்தலுக்குமாய்,
சேர்த்து காவல் இருக்கின்றேன் .....
“இருந்தும் இல்லாமல்
இருப்பதன் அவஸ்தை”
நம்மை விட
அடுத்தவரை அதிகம்
எரிப்பது புரிகிறது ...இப்போது !!!
சசிகலா

Wednesday, 11 January 2012

எந்த தப்பு விதையில் முளைத்தது

ஒரு அழகான
நீண்டதொரு கவிஎழுதும் ஆவலோடு
இயற்கையோடு மட்டுமே பேசும்படியாய்
அமைதியான ஓர் இடம் தேடி அமர்கிறேன்
கண்ணாடியை ஜொலிக்கும்
மார்கழிப்பனி
பூ புல் என் ஒன்று விடாமல்
முத்தமிட்டு சென்றிருந்தது
அதனை கரைத்துப் போக வரும்
காலை சூரியன்
காற்றில் மிதந்து வரும
பறவைகளின் கீச்சிடும் சத்தங்கள்
அப்படி என்ன பேசிக்கொள்ளும்
அதிகாலையிலேயே இந்த பறவைகள்
என் யோசிக்கும் முன்னமே
நாசி தொட்டு நாவை அழைக்கும்
அம்மாவின் சமையல் வாசம்
சீ சீ ....
வந்த நோக்கமே மறந்து போனதே என
நிமிர்ந்து அமர்வதற்குள்
நிசப்தத்தை கிழித்து கொண்டு வருகிறது
இளையராஜாவின் இன்னிசை
எனையும் அறியாமல்
கைகள் தாளம் போட
அதற்குள்
சிணுங்கிக்கொண்டே வந்து
மொட்டவிழும் மலரை
முகர்ந்து போகிறது வண்டினம் ஒன்று
வாஞ்சையோடு நோக்கினேன்
என் கவிதைக்கென
எந்த ஒரு வார்த்தையும் தராமல்
எனைச் சுற்றி ஒரு வட்டமிட்டு போனது
அந்த பட்டாம்பூச்சியும்
என் பார்வைக்குள்
பட்டுத் தெரிந்த எந்தொரு
நிகழ்வைப் பற்றியும்
எழுதவியலாது .....
இறுதியாய் எழுதி முடிக்கிறேன்
"நாலு நொடிக்குள்
நாற்பது செயலை நினைக்கும்
மனது ....."
எந்த தப்பு விதையில் முளைத்தது என்று .......
சசிகலா

தொலைந்து போன

காலையில் குக்கூ குக்கூ ..
குயில் பாட்டு
அதை அடுத்து அழகாய்
நடனமிடும் மயில்
தூகைக்குள் தொலைந்து போன
எனது விழிகள்
தென்னந்தோப்பில் சருகி ஓடும் அரவம்
வந்து நிற்கும் மழைமேகம்
விழுந்து அடித்துக்கொண்டு
என் முன் முட்டி மோதி வரும்
என் கவிதைக்கான கரு
என் செய்வேன்
இதன் நடுவே வாடி நிற்கிறேன்
வரிகளை எழுத முடியாது
காலையில் எழுந்து மச மச என்று
நிற்கிறா பாரு எனும்
மாமியாரின் பார்வைக்கு பயந்து
சசிகலா

Tuesday, 10 January 2012

தானே புயல் போலும்

"உட்கார யோசித்து
நடக்கும் போதும்
அத்தனை நளினத்தோடு
படியில் அமராமல்
வயித்தக்  கட்டி  .....
வாயைக் கட்டி
உறங்கும் போதும்
உருண்டு, பிரண்டு
படுக்காமல் எழுந்தமர்ந்து திரும்பி படுத்து ....
இப்படி என்னும் ஏதேதோ ...
பத்தியமெல்லாம் இருந்து
பகல் இரவாய் ...
உன்னை கருவில் பத்திரப்படுத்தி
ஈன்றெடுத்த பின்னும்
இமைக்குள் வைத்து தாங்கி
பாலூட்டி சீராட்டி
பள்ளிக்கு அனுப்பிவைத்து
உயிர்ரென நினைத்திருந்த
தாய் தந்தை உறவுதனை 
"தானே புயல் போலும் "
வருமிந்த   பாழாய்ப் போன  காதல்
ஏனோ படுசீக்கிரத்தில்
காதலின்  விரல் பிடித்து
பெற்றோரை உதறி
சென்று விடுகிறதே ஏன் ?
சசிகலா

Monday, 9 January 2012

நினைவுகளின் வருடல்கள்


கண்ணாடி மாளிகைக்குள்
இருந்து கொண்டு
வீதியில் போகும் உன்னை
கல் எறிந்து கூப்பிடுகிறது காதல்


 காக்கைக்கும் தன் குஞ்சு
 பொன் குஞ்சாம்
என்னை நீ வர்ணிக்கும்
போதெல்லாம் இப்படிதான்
நினைத்துக்கொள்கிறேன் .


உன்னை தீண்டினால்
காற்றுக்கும் காய்ச்சல்
வந்துவிடும் ....
அதுதான் அசைய
மறுக்கின்றன மரங்கள் .
 
மின்னலுக்கும்
உனக்கும் ஒரு ஒற்றுமை
மின்னலை பார்த்து
பயத்தில் கண் மூடிக்கொள்வேன்
உன்னைப் பார்த்து
வெட்கத்தில் கண்களை மூடிக்கொள்கிறேன் .

Sunday, 8 January 2012

ஏமாளிகளாய்

இறந்த கன்றுக்குட்டிக்குள் ,
வைக்கோலை திணித்து ..
தாய்ப்பசுவை ஏமாற்றுவது 

போல் இருக்கிறது ..
தேர்தல் வாக்குறிதிகள் யாவும் .

கண்ணாடி

மாற்றம் ஒன்றே
மனிதனை உலகிற்கு
அடையாளம் காட்டும் கண்ணாடி .

சசிகலா 

 

Friday, 6 January 2012

யார் கற்றுக்கொடுத்தது

காக்கைக்கும்
யார் கற்றுக்கொடுத்தது
ஏமாற்றும் புத்தியை
முதியோர் இல்லத்தின்
முகவரி தேடிச் சென்று
தினம் தினம் கரைகிறதே .....
சசிகலா

Thursday, 5 January 2012

குட்டி குட்டியாய்

வீதி உலா வருகிறேன்
என்று வெளியில் வந்துவிடாதே
முழுமதியும் வெட்கத்தில்
மேகப்போர்வைக்குள் ஒளிந்து கொள்கிறது

சசிகலா
 
 
எங்கெல்லாமோ வார்த்தை
தேடுகிறேன் என் கவிக்கு
உன் ஓரப்பார்வையில்
ஒளிந்துகொன்டிருப்பது
தெறியாமல்

சசிகலா
 
 

Wednesday, 4 January 2012

நட்பு

ஜாதி , மத , இன வேறுபாடுகளை
கடந்தது நேசம்
நட்புக்  கரம் நீட்டுங்கள்
நடக்கும் செயல் யாவுமே நல்லதாகும் .
சசிகலா

Monday, 2 January 2012

நட்பில் பிரிவில்லை


சில நேரம் முகம் சுளித்து
சில நேரம் முதுகுகாட்டி ..
சிரிக்க மறந்து ..
ஏன் இந்த அவஸ்தை ..
நம் நட்பின்மீது
கண்பட்டு விட்டதோ ..
கலங்காதே இனி
நம் நட்பில் பிரிவில்லை .
சசிகலா

திமிராய்


நீ எனைத்தான்
விரும்புகிறாய் எனத்தெரிந்த பிறகு
சற்று திமிராய்தான் ...
நடக்கிறது காதல் .

Sunday, 1 January 2012

விலைவாசியைப்போல

எண்ணுவதை எல்லாம்
ஏட்டில் எழுதி
கடிதங்களாய் பரிமாறிக் கொண்ட
காலம் மாறி
நினைத்தால் பேசிக்கொள்ளும் நிலையில்
அலைபேசியில் அழைக்கிறாய்
ஹலோ..... ஹலோ என நியும்,
கேட்குதா ...கேட்குதா என நானும் .....
அறையை விட்டு வெளியில் வந்தும் ,
விறுவிறுவென மாடிக்கு ஓடியும் ,
கிழக்கு மேற்க்கு திசைகளை அளந்து பார்த்தும்  ....
ஒரு வார்த்தையும் கேட்க வியலாது
எனக்கு எங்கு துண்டித்து போக
உனக்கோ அங்கு ...
கிடு கிடு வென ஏறும் விலைவாசியைப்போல
எகிறிக்கொண்டு இருக்கும்
என்னோடு பேசவியலாது போன ஏக்கமும் ....
அலைபேசி கட்டணமும் .
சசிகலா

விருப்பமில்லை எனக்கு


ஆங்காங்கே சிதறிக்கிடக்கும்
உறவுகள் ஒன்று கூடும் ...
குலதெய்வ வழிபாடு ....
பங்காளி , கொண்டான் குடுத்தான் என
எல்லா உறவுகளும் ஒருசேர
ஒரு வாரத்திற்கு முன்பே
கலந்து பேசி தேதி குறித்து ...
பயணத்திற்கு என வாகனமும் தயார் செய்து
சிரிப்பு , கூத்து கும்மாளம் குதூகலம் என
கல கல வென தொடரும் பயணம்
பால்ய நினைவுகளை
அசை போடும் அத்தை மாமாக்கள்
அந்த காலத்துல நாங்க இப்படியா ......
என அலுத்துக்கொள்ளும் தாத்தா பாட்டிகள்
அம்மா எடுத்து வைக்க மறந்த
இலைகட்டுக்கு இரைச்சலிடும் அப்பா
சமாதான படுத்தி அமரும் சித்தப்பாக்கள் .
இவர்களின் கவனத்தை எல்லாம்
திசை திருப்பும்
பாட்டுக்கு பாட்டு நிகழ்வும் ,
பரிகாச நடனங்களும்
அவ்வப்போது நாம் போகும் பாதையை
உறுதி செய்ய ஜன்னலோர இருக்கைக்கு
சண்டை இடும் சகோதர உறவுகள் ...
ஒவ்வொரு நிறுத்தத்திற்கான
அடையாளங்களும் அழியாமல் உள்ளன என்பதை
என உறதி செய்யும் உரையாடல்கள் ....
இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ
நம்மை கடந்து போகும்
பசுமை நிகழ்வுகளை காண முடியாமலும்
உள்ளம் மகிழ
உறவுகளுக்குள் உழன்று கொண்டிருக்கும்
உல்லாச பொழுதுகளையும் ...
ஒட்டு மொத்தமாய் பிடுங்கி தின்றுக்கொண்ட
பெருமிதத்தில் சத்தமிடும்

இந்த வண்ணத் திரைப் பேருந்தில் பலிகொடுக்க
உடன் எடுத்துச் செல்லும் ஆட்டுடன்......
பயணிக்க சற்று கூட விருப்பமில்லை எனக்கு .
சசிகலா