Sunday, 28 April 2013

ஜன்னலுக்கு வெளியே !


மலர் கொடியொன்று அசைந்து வந்து

பட்டு ரோசா முகம் கொண்டு
துளிர் பூங்கரம் கொண்டு
துணிவுடனே கன்னம் வருடி
எச்சிலால் முகம் தீண்டி
எண்ணங்களை கவர்ந்து நிற்க..
நடையழகு நாட்டியமே
கண்ணசைவில் ஒரு காவியமே
சொல்லொன்றை உதிர்த்திடவோ
பிறந்திடுமே எண்ணிலா அதிசயங்கள்...
அவன் சிரிப்பை ரசித்திடவே
ஆயுள் முழுதும் கரைந்திடுமே
அவன் அழகை அள்ளிபருகிடவே
கண்ணிரண்டும் போதாதே...
அந்தோ என் செய்வேன்
அவன் அசைவுகளை
பதிவு செய்ய என்னில்
உடற் கருவி ஏதுமில்லையே.
கனவிலவன் நிஜமாய்
நினைவிலவன் கனவாய்
நிஜமது பொய்யோ?
கனவதுதான் நிஜமோ?

Thursday, 25 April 2013

மாறும் மனமே !


அண்ணாவியொன்று கண்ணாறக்கண்டு
கிள்ளைக்குப் பாலூட்ட!
ஆகாயம் தொட்டே வல்லூறு பறந்தே
பிள்ளைக்கு இரைதேட!
காவல் தோடுஒன்றுசுமந்தே நத்தையதுவும்
ஊர்கோலம் சென்றிருக்க!
மீன்நாடிக் கொக்கும் காலம்பொய்க்க
காற்றோடு காத்திருக்க!
பனியுதிர் கொண்டே இலையுதிர்கண்டு
மரங்கள் நாணிநிற்க!
மேலாடைதுறந்தே நீலவானில் நிலவது
பயணம் போக!
கோலமங்கை காலையெழுந்தே வண்ணக்
கோலம் போட்டுமகிழ்ந்திருக்க!
அவனியில் மானிடர் அவர் பசிப்போக்கிட
ஏர்தனைப் பூட்டிநிற்க!
கார்குழலேந்திய பயிர்கள் மணமீந்து
ஆராட்டித் தாலாட்ட!
மணியோசைஏந்திக் கறவை மாடுகள்
கன்றினைத் தேடியழ!
தூண்டில் மாட்டிய மீனின் கதியாய்
அவள் வம்பர் வாயில்விழ!
கரும்புத் தோட்டமும் கட்டுக் கதையும்
காலத்தைக் கொன்றுநிற்க!
மிருகமும்பறவையும் வாழ்க்கைப்பாடம்
படித்துக் கொடுக்கின்ற!
அவலநிலையில் மாமனிதர் கூட்டம்
ஆறறிவு சுமந்தே காண்!
மனமே மனமே மாறும் மனமே
மாறுவதென்னாளோ?
குணமே குணமே மாயக் குணமே
சீர்பெற மாட்டாயோ?

Sunday, 21 April 2013

நீ வாசிக்க மறந்த கவிதையாக ! பார்த்த நாள் முதலாய்
சேமிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன்
 ஆமாம் சுவாசப் பையில்
உனக்கான நேசத்தை...

நீ வாசிக்க மறந்த 
கவிதையாக...
உன் பரஸ்பரம் உணராமையால்
இவள் சுவாசிக்க மறந்தவள்.

நான் சிலையாகி நின்றாலும்
அதில் உளியாக உன் அசைவிருக்கும்.

உனக்கான காவிய 
பக்கங்களில் எல்லாம்
எங்காவது ஒரு மூலையில்
முற்றுப்புள்ளியாகவாது நான் இருப்பேன்
என்ற நிம்மதியில்...
உன் வரிகளை வாசித்தபடியே

Saturday, 20 April 2013

கொஞ்சம் பார்த்து சிரியேன் !இனம் புரியாத வலி
 இதயத்தை கிழிந்தெறிந்து 
கொண்டிருக்கிறது 
என்ன கோபமாக இருக்கும் 
என் மேல் அவனுக்கு 
நினைத்து நினைத்து 
நெஞ்சடைத்ததே மிச்சம்.

பணி அழுத்தமாக இருக்குமோ ?

பாதி வயிறாக இருந்துவிட்டுப் போகிறேன்
பதவியே போனாலும் சரி
கொஞ்சம் பார்த்து சிரியேன்
என்று கூறினால் முறைப்பானோ ?

வலி பொருக்காதவனாயிற்றே
அவனுள் இருக்கும் 
என் வலி எப்படித்தான் 
சகிக்கிறானோ ?

ஏ மனமே 
அமைதியாய் இரேன்
என்றால் கேட்கவா செய்கிறது.

எந்தப் பொருளை 
தொட்டாலும் அவனே
முகம் சுளிக்கிறான்.

வாசலுக்கும் இதயத்திற்குமாய்
வம்படித்துக் கொண்டிருக்கிறது
கால்கள்...

வரட்டும்....வரட்டும்...

கோபத்தில் இரண்டு 
அடியாவது அடித்து விடு
பேசாமல் மட்டும் இருந்துவிடாதே.
என்று கூறி முடிக்குமுன்னே
வெம்பி வெடித்து விடுவேனோ ?

Friday, 19 April 2013

மனக்கதவை அடைத்து !


தினம் பூக்கும் ரோசாவே
திரும்பிப் பாரேன் ராசவ

ஒடிசலான உன் தேகம் -அதில்
ஒட்டிக்கிடக்கும் என் மோகம்.

கட்டியிழுக்கும் உன் வாசம்
கட்டாந்தரையே என் தேசம்

நீர் உறுஞ்சும் பாவையே - உன்
நினைவருந்தும் இக்காளையே

முள் உனக்கு ஆடையாச்சி -உன்
முன்னிருப்பதே என் வேலையாச்சி.

காற்றிலாடி சிரிக்கிறியே
கன நேரம் எனை பாரடியே

இதழ் விரிய அழைக்கின்றாய்
இதயம் நுழைய மறுக்கின்றாய்.

மலர் முகம் கையிலேந்தி நிற்க்கிறேனடி-ஏன்
மனக்கதவை அடைத்து போகிறாயடி.

Wednesday, 17 April 2013

வரம் ஒன்று கேட்கிறேன் !


என் விழித்திருக்கும்
நேரமெல்லாம் உன்
அருகில் இருக்கவே 
வரம் ஒன்று கேட்கிறேன்.

நீயோ வரம்,
சாபம்
இதில் எல்லாம் நம்பிக்கை
இல்லாதவன்...
என்ன சொல்லி புரியவைக்க..?

உனக்காக என்று 
தனியே ஒதுக்க எதுவும் இல்லை.
என்னில் எல்லாமே நீயாகிப்போனதால்.

உன் சோகத்திற்கு 
நான் அழுகிறேன்.
நீ சிரித்தால் 
நான் மகிழ்கிறேன்.
என் சிந்தையில்
நீ சிரிக்கிறாய்..
எழுதுகோல் நானாகிறேன்
எழுதவைப்பது நீ தானே.
-- 

Tuesday, 16 April 2013

எண்ணச்சிறகுகள் !

எண்ணச்சிறகுகள் 
எல்லாயில்லா தொலைவில்
எம்பிப் பிடிக்க முயன்று
தோற்றுக்கொண்டிருக்கிறேன்.

எதேச்சையான செயல்களிலும்
யதார்த்தம் மீறிய வேகம்
நினைவுகளுக்குள் முட்டிமோதி
நீந்த முடியாது மூழ்கியபடி...

முன்னெப்போதுமில்லாமல்
முன்வரிசையில் வந்து நிற்கும்
முற்றதை வெறித்த பார்வையும்
முகம் பார்க்க மறுக்கும் தனிமையும்.

சொல்லத்தான் வார்த்தையில்ல
சொல்லி அழுதாலும் தீரவில்ல

மல்லிப் பூ பறிக்கையில
மல்லுக்கு வந்து நின்னான்

தண்ணிக்கு நான் போகையில
தாமரப் பூ கொண்டு தந்தான்

கோலமிடும் வேளையில
கொக்கரக்கோ என்று சொன்னான்.

விடிகின்ற பொழுதினிலே
விடுகதையா வந்து போனான்

Friday, 12 April 2013

வென்றவர் நட்பு மறப்பதில்லை !ஒற்றைக்காலில் உடல் சுமக்கும்
கொக்காகுமோ மனித இனம்.

சாலையோர மணல் தனிலே
காத்து நிற்கும் சுமை தாங்கி
ஓடியோடி சுமை சுமந்திடுமோ ?

சக்கரம் பூட்டி அச்சாணியேந்தி
சுழலுகின்ற வண்டிச் சக்கரம் காண்
இரண்டானால் அது சுமக்கும்.

உறவில் உறவும் இப்படியே
இரண்டு ஒன்றானாலது மணம்.

இரண்டது நாலானால் குடும்பம்.
நாலது எட்டானால் சமூகம்.
எட்டது விரிந்து பரந்தால் நாடு.

தனித்தனியாயோடி வெலல்
கூடாது இவ்வுலகில்..
நாம் கூடி இணைந்து வாழின் நல்வாழ்வு.

கூடி எவரும் தோற்றதில்லை
இதை மறந்தவர் வென்றதில்லை
வென்றவர் நட்பு மறப்பதில்லை.

Wednesday, 10 April 2013

காட்சிகள் யாவும் புதுக்கவிதையாய் !


வாடாதே மலரேயென்று
வண்டது வாடி நிற்க.

தேடாதே உறவையென்று
தேனிதழ் உதிர்ந்து விழ.

பார்க்காதே எனையென்று
பச்சைக்கிளி பறந்தோட.

ஏய்க்காதே என்றுரைத்தே
பூனையதை விரட்ட.

நிற்காதே என்றுகாற்றும்
தன்வழி ஓடிமறைய.

சாட்சிகூற மனமின்றி
கதிரது தலைகுனிய.

இருவிழிப் பார்வையிலே
இதயமிரண்டு சறுக்கிவிழ.

சலசலவென்றோடி நீரும்
கலகலவென சிரிக்க.

கண்ணீர் துளிபோலே மழை
நிலம்வீழ்ந்து அதுமரிக்க.

கண்ணாம்பூச்சி ஆட்டமாய்
காலமது கரைந்தோட.

கற்பனையது குதிரைஏறி
கனவுடன் கலந்துவிட.

கோலமாவை எறும்புதன்
உணவென சுமந்துசெல்ல.

கண்ணின் காட்சிகளில்
எல்லாமே புதுக்கதையாய்.

வந்தது போனது வருவது
அதுவும் போகும்.

இருப்பதில் அன்பொன்றே
மீதியாய்ப் பூவுலகில்
அதையும் மறந்துவிட்டால்
அனாதையே நீயும்-நானும்!!

சிந்தனைப் பூ !நித்திரையில் எனையெழுப்பி
நித்தம் நித்தம் வார்த்தையாடி
கனவு மழையில் நனைய வைத்து...

சித்திரையில் பிறந்த எனை
சித்திரைப் பாவையாக்கி
சிந்தனைப்பூ பறித்தெடுத்து
சித்து வேலை காட்டுகிறாய்...

உன் நினைவலையில் மீனாய்
எனை வீழ்த்தி...பார்கடலதிலே
உறக்கத்தை கொள்ளையடித்தே...

பித்தெனவே அலையவிட்டு-உன்
மாயப்பிடியிலெனை உருகவிட்டாய்
சத்தான மெய்யுணவெனக்கு
உன்  நினைவென்றாகிப்போனதடி...

முத்துக் கொத்தாக மலர் பறித்து
கூந்தலில் நான் சூடிநின்றால்
கதிரொளிசாரமாய் நீ சிரித்து
புது சந்தத்தை உணர்த்துகிறாய்.

சகலத்தின் அறிமுகமும் என்னில்
நீயாகிப்போனதால்..நானிங்கே
ஏக்கத்தில் மாய்ந்தேனடி- எனைநீ
ஏந்திக்கொள் தமிழேயென்றுந்தன்
 மலர்க்கரத்தில் அதுபோதுமடி!

Tuesday, 9 April 2013

நிம்மதி !


கட்டிப்போட்ட எண்ணங்களை
களவாடிப் பறந்துபோன உந்தன்
காலடிச் சுவடி தேடி நானும்.

காத்திருந்த காலங்கள் தந்த
நினைவென்ற இனிமைகளும்
நிம்மதி பறித்த பிரிவுகளும்
நீ அறிவாயா? நான் அறியேன்.

நீண்ட பயணத்தில் தனியாக
எத்தனையுகங்கள் நானோட ?
மலர் நீ மலர்வாய்
நிஜமாய் நீ வரவேண்டாம்
நிழல் கவிதையாய் மலராயோ!

Monday, 8 April 2013

தலை சாய்க்க மடி தேடி !நெஞ்சோர வரப்பு வெட்டி
நீர்பாச்சிப் போன கண்ணே!

நெடுந்தூரம் போகவேணும்
கதிரதுவும் மெய்களம்காண!

காற்றாடிக்கும் வெயிலுரைக்கும்
வானமது பொய்த்து நிற்கும்!

போட்டவித துளிர்க்க வேணும்
நெற்கதிரா தளிர்க்கவேணும்!

களைவளரப் பறிக்கவேணும்
துயிலாம காக்கவேணும்!

நீர்பாச்சி நிக்க வேணும்
காக்காஅத வெரட்டவேணும்!

உரமிட்டு வளர்க்கவேணும்
நாத்து பிரிச்சி நடவும் வேணும்!

பாத்திகட்டி வைக்க வேணும்
பாதம் படாம நடக்கவேணும்!

அணியணியா அறுக்கவேணும்
மாடுபூட்டி போரடிக்கவேணும்!

பதரெல்லாம் நீக்கவும் வேணும்
களம்கொண்டு சேர்க்க வேணும்!

புத்தாடை புனைய வேண்டும்
புதுவரவை அவிக்கவேண்டும்!

பொங்கலிட்டு உண்ண வேணும்
மழலை சிரிக்க ரசிக்கவேணும்!

குடும்பமது தழைக்க வேணும்
நாடும் வீடும் செழிக்கவேணும்!

வாடியென் அத்தப் பொண்ணே
வாய்க்காலோரம் இளைப்பாற!

உழைப்பெல்லாம் உனக்காக
தலைசாய்க்க உன்மடிதாடி!

Sunday, 7 April 2013

குடையாக வா .

மழைக்கால இரவுக்காய்
காத்திருக்கிறோம்.
நீ மட்டும் ஏன்
குடையோடு வருகிறாய் ..?

Wednesday, 3 April 2013

பூவின் சிணுங்கல் !


பட்டு ரோசா பட்டு ரோசா
என்ன பார்க்குற...

நட்டு வச்ச நாள் முதலா -ஏன்
நாணி நிக்கிற...

முதிர்கன்னி முகமாட்டம் 
வாடி கிடக்குற..

முடிஞ்சி வச்ச பணமாட்டம்
முடங்கிப் படுக்குற...

படர இடம் போதலைனா
பதுங்கி ஒதுங்குற...

இந்த இடமும் விலையாப்போகும்
எதிர் காலத்தில...

வாழும் வரை சிரிச்சி நின்னா
வருத்தம் மிஞ்சாதே..

சிணுங்கிப் பாரு
வண்டும் கூட வணக்கம் சொல்லிடும்.

 வண்ணமாய் பூத்துக்குலுங்கு 
உன்னைப் பார்த்தே நானும் மகிழுவேன்.