Friday, 28 March 2014

மானும் மயிலும் !

கொத்தோட பூ பறிச்சி
கொண்டையில   தான் சொருகி..
கொல்லப்புறம் போயிருந்தேன்
கொடுக்காபுளி  பறிக்க...
பின்னாடி நிழல்வரவே
முன்னோடிப்போக துணிந்தேன்
என்னாடி கண்ணேயென
சொல்லாடி வந்தவனால்..
எங்கோடிப்போச்சுதடி
என் கோபம்...
தள்ளாடி நிக்குதடி காலும்.
அறுத்துப் போட்ட
கோழியாட்டம்..
அல்லாடுறேன் நானே...
அவனோ தப்புத்தாளம்
போட்டுக்கிட்டு..
துள்ளி ஓடுறான் மானா..
தொரத்தி வந்த
புள்ளி மானை
தொலைதூரம்
காணலையே...?
தொக்கி நிக்கும்
என் உசிரும்
பிழைச்சிடுமா ?
தோணலையே ?

Monday, 24 March 2014

வனப்புமிகு வடசேரி (தொடர் பதிவு)

வணக்கம் உறவுகளே அனைவரும் நலம் தானே ? தொலைதூர பயணித்தின் நடுவே கடிதப்போக்குவரத்தாக ஆகிவிட்டதா ? தென்றலின் வருகையும். என்ன செய்ய ? சரி விடுங்க. இனி அடிக்கடி தொடர்பில் இருக்க முயற்சிக்கிறேன். இப்போது திடீரென அனைவரையும் இங்கழைத்து நலம் விசாரிக்கும் ஆவல் வந்தது. ஆனால் சும்மா யாரும் அழைச்சா வருவாங்களா ? ஆதலால் ஒரு தொடர்பதிவு. யாரும் திட்டாம... தேடிவந்து அடிக்காம சமத்தா எழுதுவிங்களாம் சரியா ? பொதுவா எல்லோரும் பிறந்த ஊர் பற்றி தான் பெருமையா பேசுவாங்க.. நாம் புகுந்த வீட்டு (ஊர்) பெருமையை பேசுவோம் வாங்க...காடுகர தோப்பெங்கும் கானக்குயில் பாட்டுசத்தம்
கேட்டுதினம் மதிமயங்கி நடனமிடும் மயிலுநித்தம்
அரவமிடும் ஓட்டத்திலே சலசலக்கும் சருகுகளும்
ஆரவாரம் கேட்டுவரும் கலகலன்னு குருவிகளும்.


மா-பலா வாழையோடு மருகிநிக்கும் தேனினமும்
மாங்கனியில் உள்நுழைந்து மயங்குதங்கே வண்டினமும்
காலைநிறக் கதிரவனின் காட்சியங்கே ஓவியமே
மாலை வரக்காத்திருக்கும் அந்தியொரு காவியமே.
வண்டிமாடு சலங்கையொலி வழிவகுக்கும் பாதையுந்தான்
வாஞ்சையோடு உடனடந்து வயலுழவும் காளைமாடுந்தான்
நடவுப்பாட்டில் நாட்டு நடப்பு நாவசைய இசையுடனே
நாட்டாமையில் நீதி நேர்மை வாழ்ந்திடுதே பாங்குடனே.

அய்யனார் குளமழகு அரளிப்பூ சிரிப்பழகு
அடுக்கடுக்கா படியழகு அதனோரம் பனையழகு
ஊர்க்காக்கும் காளியம்மா உள்ளிருக்கும் காமாட்சி
உடனுறை நீராட்டில் அரசமரத்தான் அருளாட்சி.
கம்மாயில் நீரோடி கழனியெல்லாம் பாய்ந்தோடி
சும்மாயாரும் இல்லாம ஏர் பிடிக்கும் சனம்கோடி
புதனோடு சந்தையில புதிர் போடும் விந்தையில
புது மாடும் ஆடும் வாங்க புதையலாகும் மந்தையில
வான்தொடும் உசரத்தில் வளர்ந்து நிக்கும் தென்னை
வளமோடு நலம்சேர்க்கும் இளநிகிடக்கும் திண்ணை
பகுத்தறிவுப் பாதையில நடக்குமிங்கே சீர்த்திருத்தம்
பண்பாளர்கள் வாழ்ந்திருப்பர் எங்கள் வடசேரி வாழ்வில் நித்தம்.

இனி என்ன நான் அழைக்கும் அன்பு நெஞ்சங்கள்.

ரஞ்சனி நாராயணன்

கோமதி அரசு

தி.தமிழ் இளங்கோ

ஆதி வெங்கட்

ராஜி

குடந்தையூர் சரவணன்

என்ன ஆண் பதிவர்கள் பெயரும் இருக்கே என்று கேட்பது தெரிகிறது. ஏன் அவர்களும் முதன் முதலாக பெண் பார்க்கப் போன அனுபவத்தை எழுதலாமே. இவளின் அன்பு வேண்டுகோளை ஏற்று பதிவிடும் ஒவ்வொருவரும் குறைந்தது நால்வரை அழைக்க வேண்டும்.

Wednesday, 19 March 2014

வரமா ? சாபமா ?

 
பகல் இரவு வாடிக்கையாய்
பசிக்குணவு வேடிக்கையாய்.
ஓடும் ஓட்டம் தொடர்ந்திடுதே
ஓடமும் கரை தேடிடுதே.
உழைப்பே நாளும் நோக்கமாய்
உப்பு நீரே வயிற்றின் தேக்கமாய்.
கால நேரம் கரைந்திடுதே
கவலை நாளும் பெருகிடுதே.
கடமையே என்றும் கண்ணாக-மனக்
காயமே அவருக்கு வரவாக.
கனவாய்ப் போனது இன்பமே
காட்சியாய் என்றும் வறுமையே.

உறிஞ்சும் உழைப்பை கருதிடுவீர்
உண்மையாய் ஊதியம் தந்திடுவீர்.
மனிதம் இருப்பின் நோக்கிடுவீர்
மனித நேயத்துடன் காத்திடுவீர்.
எளியோர் செய்த பாவமா
ஏழ்மை என்பது சாபமா ?

Wednesday, 12 March 2014

காதலின் லாவகம் !


அவரைக்காய் தோட்டத்திலே
அந்தி சாயும் நேரத்திலே..

ஓடோடி ஒளியும் மச்சான்
ஓரக்கண்ணால் பார்ப்பதேனோ ?
சொரக்காய தேடி வந்தேனு
சொக்கி பொடி போடும் மச்சான்.
அழகான முகம் உனக்கு
அடுக்கடுக்கா பொய்யெதுக்கு ?
அத்த மக உறவிருக்க
அன்ப நீயும் மறைப்பதெதுக்கு?
தை மாசம் தொலவிருக்கு
தண்ணி குடம் பக்கமிருக்கு..
சாடமாட பேச்சு வேணும்
சங்கதிக்கு தூதும் வேணும்.
அன்ப மட்டும் வச்சிக்கிட்டு
அண்ணார்ந்து பார்த்து லாபமில்ல.

ஆத்து பக்கம் நானும் வாரேன்
அங்கோடிப் போவோம் மாமா.
காதலின் லாவகத்தை
கண்ணியமா சொல்லித்தாரேன்.

 பேச்சு வழக்கு : தொலவிருக்கு-தொலைவில்