Wednesday, 29 October 2014

முத்துக்கள் மூன்று ! (2)

விழியிருந்தும்   வையத்தில் வீணாக வாழ
வழியிருந்தும்  தேடாதார் தேவயை- பேச
மொழியிருக்க மௌனமே மாலையாக வாழ்வில்
பொலிவிழந்து போகும் அறி.அஞ்சல்  குணமோ அழகுப் பதுமையோ
தஞ்சமெனக் கொஞ்ச தயக்கமோ- பேதையை
கள்ளென போந்தும்  கயவர் தமக்கோ
உளிகல்லோ பெண்மை உலகு.

கண்ணென பேசியே காரியத்தை சாதித்து
மண்ணென தூற்ற செழிக்குமோ வையத்தில்
பெண்ணென்ற ஓரினமே பேரிடறை தாங்கிடவோ
மண்ணாகும் மாந்தர்  உலகு.

Monday, 27 October 2014

தமிழ்ச்சாரல் !


கண்ணழகு ராதையை கட்டியணைக்க தோனுதடி
பெண்ணழகு பேதையினால் பேராசை கூடுதடி
உன்னழகு ஓவியமே உருகுலையச் செய்குதடி
என்னழகு எதுவென்பேன் எழிலாளை கண்டபின்னே .


மொண்டுவிடத் தோனுதடி முத்தழகுத் தமிழை
கண்டுவிட்ட பின்னே கற்கண்டாய் ஆனதடி
தொன்றுதொட்டு வரும் மரபை நாளும்
வென்றுவிட களியாட்டம் போடும் மனமே.

காலைச் சோலையிலே கன்கவர் வித்தாக
மாலைக் காட்சியிலோ மயக்கிடும் மானாக
சேலைப் பூவிலும் சேர்ந்திடுமே உன்வாசம்
ஆலைக் கரும்பாக ஆனதடி என்னுள்ளம்.

Saturday, 25 October 2014

நேசக்கோர்வை !

கோபத்தின் உச்சம் எதுவென்று
கேட்பாய்...
ஊடலுக்கும் கூடலுக்குமான
தொடர்பரியாதவனா நீ..

நாணத்தின் நளினத்தை
ருசிக்கத் தெரிந்தவன் நீ..


நூலிழைப் பிரிவையும்
நேசமெனும் ஊசியால்
கோர்க்கத்தெரிந்தவன் நீ..

நூதனத் திருடனே காதலின்
நுணுக்கத்தை கற்றவனே
என்னிடத்தில் உன் அடமும்
அழிச்சாட்டியமும்..
சிறுபிள்ளையின் பிரியமாகிப்போனது.Wednesday, 15 October 2014

தினம் பாடும் பாட்டு !

 
கண்ணழகு கருத்த மச்சான்
காதலிலே கரைய வச்சான்.
காத்து வாங்க நானும் போனேன்
பூங்காத்தா அவனே தொடர்ந்து வந்தான்.
வாசமுல்ல மணக்கவில்ல
வாடக்காத்தும் வீசவில்ல..
காலநேரம் விளங்கவில்ல
காலும் போக திசையுமில்ல..
உண்ண உணவும் எடுக்கவில்ல
ஊரில் உலவும் வசவுத்தொல்ல..
படுத்தா நாளும் தூக்கமில்ல
படுற பாடும்  கொஞ்சமில்ல

சேதி சொல்ல யாருமில்ல
சேம நலம் கூடுதில்ல...
தினம் படும் பாட்ட நானும்
மனமுழுக்க எழுதி வச்சேன்.

மனமிருந்தா வந்திடுவான்
மணக்க மணக்க படிச்சிடுவான்.

Sunday, 5 October 2014

முத்துக்கள் மூன்று !

மாய மகிமையோ மாதேவன் மைந்தனோ
நேயக் கரம்நீட்டி நீயணைப்பாய் - தூமணியே
காயப் பெருந்துயர் கானலாய் போகிட
தூய கணபதியே காப்பு.

 தேனே கரும்பே தெவிட்டாத கற்கண்டே
ஊனே உருகுதடி உன்னெழிலாள் -சிட்டாய்
பறக்குதடி உள்ளம் கவிதொடுக்க மொட்டாய்
துறக்குமடி பூவும் களித்து.


உன்னை நினைத்தே துடிக்கும் இதயத்தால்
தன்னை மறந்ததே மாயமோ ?- என்றென்றும்
என்னில் இருக்க நலமும் செழிக்குமே
அன்னையே நீயே துணை.

Friday, 3 October 2014

மீதமாக..

 
எண்ணக்கலவையில்
விழுந்த எறும்பாக...
எம்பி எம்பி தவித்து
மீளமுடியா ஞாபக
தீவுக்குள்ளேயே தள்ளப்படுகிறேன்.
இரவெது பகலெது
அறியமுடியா...
அமானுஷ்யம்.
பசிக்குணவாக
பார்வையையும்.
தனிமைக்குணையாக
நினைவையையும்
மட்டுமே பருகிப் பருகி
காத்திருக்கிறேன்.
பார்வையாளனே பகிர்ந்ததும்
புரிந்ததும் போக
மீதமுள்ள காதலை  மட்டும்
ஏன் விட்டு வைத்திருக்கிறாய்.?