Wednesday, 28 November 2012

வார நாட்களில் !


ஞாயிறு ஒளியாய் வந்து நிற்கும்
திங்கள் மான்போல் பார்த்திருக்கும்
செவ்வாய் மயிலாய் ஆடிப்போகும்
புதன் புண்ணியர் வாழ்த்துரைக்கும்
வியாழன் இசையைச் கொண்டுவரும்
வெள்ளி முளைத்து சிரித்து மகிழ்கைியில்
சனி மட்டும் கோபம் கொண்டதனால்
பிரிவெழுதி மீண்டும் ஞாயிறு வரை....

காதல் காத்திருந்து வாடி பார்த்திருந்ததால்
விதி என்வழி என்றுரைக்கும்
நவகிரகமும் சுற்றுகின்ற புள்ளி
 'காதல்' பொய்யில்லை.

அள்ளி அணைக்கப்போகையிலே
மேகம் போய் அணைக்கிறது
துள்ளிப்பிடிக்க நினைக்கையிலே
நீலவானம் தடுக்கிறது
நீர்துளியாய் வீழ்ந்து பார்த்தால்
பூமி உண்டுவாழ்கிறது
வாழாகாதல் உன்காதல்
சொல்கின்றார் பாரினிலே
காதல் வாழும் உலகம் உள்ளவரை!

Monday, 26 November 2012

என்னருகே வந்து பேசமாட்டாயோ ?


எறும்புக்கு நிகரானவர்
எந்த நிலையிலும் மனம் சோராதவர்
மண்புழுவோடே அவர் சிநேகம்
மேய்ச்சல் மாடே அவர் உறவு..

கன்றுக்குட்டியிடம் கதை பேசி
களத்துமேட்டில் படுத்துறங்கி
வாழும் காலமெலாம் வயலினிலே
வாழ்ந்திடவே கனவு கண்டார்..

எங்கள் மேன்மை கருதி
எல்லாம் துறந்து இந்த
நகரம் நோக்கி படையெடுத்து
நசிந்தது அவர் கனவானாலும்

புன்னகையோட புதுஉலகம்
எமைக் காணச் செய்தார்..
சிறை வாழ்வும் சிறந்திடவே
பழம் கதை பேசி மகிழ்ந்திருந்தார்.

பட்டாம் பூச்சியாய் மக்கள்
திரிந்தாலும் பக்கத்தில் அமர்த்தி
பார்த்துப் பேசி மகிழ ஆசைகொண்டார்
பாவி நானும் உணரலியே
பக்கம் நின்னு பேசலியே..

எதையோஓடோடித் தேடினோம்
தேடலில் மிஞ்சியது ஏதுமில்லை
உன் அருகாமை தேடியே அழுகிறேன்
என் தந்தையே என் வலி உணராயோ
என்னருகே வந்து பேசமாட்டாயோ ?

Sunday, 25 November 2012

நினைவில் நிற்க !


அம்மாவின்
மரண படுக்கையின் முன்பு
என்ன தெரியுதா மா ?
நான் தான் சின்ன பொண்ணு..

பழுப்படைந்த கண்களுக்கு
முன்னால் கண் களங்கி
மூக்கு சிந்தி...

அருகில் அம்மாவின்
முந்திக்குப் பின்னால்
மலங்க மலங்க விழித்தபடி
நிற்கும் உறவின் மிச்சம்

வாடாம்மா
நான் தான் அத்தை...
முகம்சுளித்து நகரும்
அவனுக்கு....
ஒரு பென்சில் பாக்சும்
இனிப்பு மிட்டாயுமே அடுத்த
சந்திப்பில் என்னை
நினைவுப் படுத்தக் கூடுமோ ?

எத்தனை வயதானாலும்
எல்லா உறவுகளுக்கு முன்னும்
அறிமுகம் என்பது இப்போதெல்லாம்
அவசியமாகிப்போகிறது..என்பது
வலிக்கவே செய்கிறது.

Friday, 23 November 2012

புதிய பாதையிலே பயணிப்போம் !


கரைதேடும் வாழ்க்கையிலிங்கே
கரைந்தோடும் மேகமாய்
என்னினம் பெண்ணினம் !
காயங்கள் மட்டும்
மீதமாய்ச் சினேகிதமாய் !

விதையொன்று முளைக்கையிலே
 சுடுநீர் ஊற்றியழிக்கும்
வினைகளே அதிகம் புவியினிலே
அதைமீறிக் கொடியானால்
கிள்ளியெறியும் வீணர்கூட்டம்.

பாலையில் மலர் பூப்பது போல்
சாலையோரத்தில் சில மணப்பூக்கள்
ஊர்திகள் மட்டுமின்றி மனித
எச்சமும் இவர்மீதுத் தூற்றலாய்.

விடிவு வருமென்று காத்திருந்து முடிவில்
விதியிதுவென்று நொந்து மாண்டோர் ஏராளம்.

சதிவெல்லக் கூடிடவும் மனதில்
உறுதியில்லா மென் இதழாய்
பொங்கி எழச் சொல்லவில்லை
உரிமை நமக்குண்டு.

கண்ணீராய்ப் பெண் வாழ்வுக்
 கரைவதில் நியாயமில்லை
கடலளவு சோகத்தை
கையளவாய் ஆக்கிடவே.

நீந்தக் கற்றல் நன்று அடிமை
வாழ்வெதற்கு நாமும் மானிடரே
கனிகொடுக்கும் மரத்துக்கு
ஆணிவேர் நாமன்றோ ?
தாக்கங்கள் அத்தனையும்
 சமூக அவலங்களாய்
ஆக்கங்களில் நாமிலையோ
 பின்னேன் சேதங்கள்.

சொந்தக் காலில் நிற்கின்ற
நிலைவர உழைத்திடுவோம்.
நினைவும் கனவும் பொதுவுடமைப்
 புதிய வேதம் செய்வோம்
எத்தனை நாள் மதிக்கின்ற
படிகல்லாய் வாழ்ந்திருக்க
சிலையல்ல நாமுலகில்
உயிருள்ளச் சித்திரங்கள்.

போன காலம் போகட்டும்
வருங்காலம் நமதாகட்டும்
வானில் பறக்க ஆசையில்லை
வாழ்வில் நாமும் வாசமுல்லை
உணர வேண்டும் இல்லை
 உணர்த்த வேண்டும்.
பொய்யா முகம் நம்மிலுண்டு
பொய் முகம் கண்டு ஓடவேண்டாம்.

பேதைப் பெண்ணே எழுந்திடுப்
புதிய பாதையிலே பயணிப்போம்
வருவதை வென்றிடுவோம்
காலம் தேய்ந்து போனாலும்
காவியமாய் நாம் வாழ
புறப்படுவோம் வென்றிடுவோம்.
தமிழ்த் தாயின் துணையோடு.

Wednesday, 21 November 2012

துளித் துளியாய் -3நந்தவனம் கண்ட
பட்டாம்பூச்சியாய்...
நடை பழகும்
கன்றுக்குட்டியாய்...
தென்றல் தீண்டிய
தேகமாய்..
தவிப்பை மறைக்கத்தெரியாது

தத்தளிக்கிறேன்
உன் ஒவ்வொரு
பார்வைக்கு முன்னும்.

இடைவிடாது
பெய்யும் மழையாய்
வார்த்தை தர
எத்தனித்து தோற்கிறேன்.

பட்டாம் பூச்சி
உன் உறவா..
பட்டுக் கன்னம்
தொட்டுப்போவதேன்.

நட்சத்திரமும்
கண்சிமிட்டி அழைக்குதே
என்னோடு கண்ணாமூச்சியாடி
ஒளியுதே..
--
ஓடும் கார்முகிலில்
உன் உருவம்....
உரசிப்பார்க்கிறாள்
நிலாப்பெண்ணும்.

நெடுந்தூரம் நீ சென்றாலும்
நினைவேனோ உன்னோடே
நித்தம் நித்தம் கதைபேசி
என் நிம்மதி குடித்தபடி.

ஒவ்வொரு நிகழ்வையும்
சேமித்து காத்திருக்கிறேன்
உன்னோடு பேச...
ஒய்யாரமாய் மௌனமே
குடியேறுகிறது .


Tuesday, 20 November 2012

நெருங்காதிரு....!சோம்பல் முறித்து
வரும் சூரியனும்
சோலைப்பூவை முகர
வரும் வண்டினமும்
மனதை மயக்கும்
மெல்லிசையும்
தொட்டழைக்கும்
தென்றலும்....
மெட்டெடுக்கும்
இலையசைவும்
தோகைவிரித்தாடும்
மயிலும்....
தொய்வில்லாதோடும்
ஆற்றுப்படுகையும்
வாழ்வு தாபத்தோடு
ஓடும் மீனும்...
தாவியணைக்கத்துடிக்கும்
கொக்கும்....
தத்தி நடக்கும் வாத்தும்
மழலை தரையில்
 பழகும் நீச்சலிலும்
அன்பாய் தலைக்கோதும்
மரக்கிளையிலும்
அடித்தோடி மறையும்
அலைக்கடலிலும்
இவைகளுடனான
என் ஸ்பரிசம்
நீங்காதிருக்கவே....என்னோடு
நெருங்கவிடாதிருக்கிறேன்
உனதன்பை.

Sunday, 18 November 2012

காதல் தூது !பூபோட்ட தாவணியில்
புது மஞ்சள் சிரிக்குதடி
தீபாவளியும் போச்சுதடி
தினுசா தான் அசத்துறியே..

புதுசாத்தான்  உடுத்திகிட்டு
பொம்மலாட்டம் போடுறியே
திசையளந்தது போதுமடி
கொஞ்ச(சு)மெனை திரும்பித்தான்
                                                 பாரேன்டி.....

காத்திருக்கிறேன் காவகாரனாட்டம்
போவதெங்கே நீயும் ஓடும்
தண்ணியாட்டம்....
மனசக் காட்டத் தெரியளடி
நானும் அலைந்தேனே
                        குடிகாரனாட்டம்...

சந்தையிலே பார்க்கையிலே
சொந்தமாக்க துடிக்கிறேனடி
பந்தபாச உள்ளவந்தான்-நானும்
பரிசம் போட வரட்டுமா ?

முன்னே  பின்னே வந்து நின்னு
பல் இளிக்க தெரியாதேடி-நீ
போகும் வழி பூத்திருக்கேன்
போதை தரும் பார்வையைத்தான்
                                    தூதுவிடேன்....!

Thursday, 15 November 2012

தானேயழிந்தாலும் தாங்கிடும் நட்பு !நல்லெண்ணம்சூடி வண்ணமாய் நட்பு
நன்மைமட்டுமணியும் உண்மை நட்பு
நன்மைதீமையிலும் கூடவரும் நட்பு
நடப்பதெதுவாயினும் கைவிடாது நட்பு!

அன்பென்றே உயிர்வாழும் ஆருயிர் நட்பு
ஆணிவேராய் தாங்குமெனில் அதுவே நட்பு
இதயத்தை நம்பியே நாணயமான நட்பு
ஈகையேயென்னாளும் அதுவுயிர் நட்பு!

உதயகீதவேதமது உயர்வான கீதமது
ஊட்டி வளர்க்கும் அன்புப் பாசமது
எதையுமெதிர் பார்க்காத நல்நேசமது
ஏணியாய் வாழுமது எட்டியே உதைத்தாலும்!

ஐவிரல் கையிணைப்பானது உருமாறும்
ஒற்றுமையாய் நின்றுவென்று காட்டும்
ஓங்கிவளர்ந்த ஆலமரம் அதுசாட்சி
ஔிவழி எதுவரினுமது அலங்காரம்!

தானேயழிந்தாலும் தாங்கிடும் அன்புமுண்டு
தவமேயிருந்தாலும் கிடைக்காமல் போவதுண்டு
சுயநலஎண்ணம்கொண்டு புகழ்பாடும் அன்புண்டு
பணம்தேடிப் பறந்தோடும் வேஷவிஷ நட்பவையே!

நட்புவேறு காதல்வேறு பிரித்தறிதல் நன்றென்பேன்
நட்பின்பெயரில் கொச்சையாகும் உறவும் தீமைகளே
ஆண் பெண்ணென்று பேதமையின்றி நட்பெனில்
அதுவே மேன்மை யதுவே உண்மை யதுவேநட்பு!

அழியாது அழியாது நட்பென்றும் அழிவதில்லை
அழகது அழகது உலகில் உயர்ந்த அழகது
சுயமில்லை சுயமில்லை நட்புக்கு சுயமில்லை
சுகமது சுகமது உண்மை நட்பு இன்பமான சுகமே!

Tuesday, 13 November 2012

மகிழ்வனைத்தும் குத்தகையெடுத்த தினம் !ஆணும் பெண்ணும் சரிசமம்
அதை உணர்த்தும் இத்தினம்

மலராய் தொடுதல் இருக்குமே
மன்னிப்பும் சரளமாய் வேண்டுமே

அன்பாய் பார்வை விரியுமே
அகிலமே அதுவென நினைக்குமே

தீயை அணைக்கும் துணிவுமே
அஃதே துரத்தியடித்ததே பகையுமே

பட்டாம்பூச்சியாய் எண்ணம் விரியுமே
புள்ளிமானாய் துள்ளியோடி மகிழுமே

கொஞ்சியழைக்கும் உறவையே
கூடி வாழும் ஒரு கூட்டிலே

அறியாமல் இருந்த அறிவுமே-இன்று
அறிந்தும் மூடர் ஆவதேன் ?

அன்னை மடி சொர்க்கம் என்றானபின்
வளர்ந்து துன்ப வலையில் வீழ்வதேன்?


பிஞ்சு மழலையர்க்கு ஓர் தினம்
மகிழ்வனைத்தையும் குத்தகையெடுத்த தினம்.


எல்லாமே அழிவுப்பாதையை நோக்கி !கொண்டாடி முடித்துவிட்டோம்-எதை?
ஒருதீயவன் அழிந்தானெனக் கூத்தாடி
ஒளிவெள்ளத்தில் ஒலியையும் இணைத்து
வான்மண்டலத்தைப் புகையால் மூடியே
பட்டென ஓர் இரைமுடித்துச் சட்டெனக்
கொண்டாடினோமே இனிதீமையிலையோ?

புவிதூய்மையானதோ?உறவு அன்பாய்
அறிவாய்ப் பண்பாய் பாசமாய்ப் பூக்குமோ?
தீமையெலாம் ஒழிந்தனவோ?நன்மைகள்
இனி நம்மையாளப் போகிறதோ?இனிமேல்
உள்ளார் இல்லான் பேதமைகள் நீங்கிடுமோ?

மதம்கொண்ட மதவாதம் சீரான பாதைகாட்டுமோ?
ஜாதியடிப்படையிலான பேதங்கள் விடைபெற்றதோ?
வறுமையும் நோயும் உடல்விட்டு மாயமானதோ?
பஞ்சபூதங்கள் நன்நெறிவழி நடக்க உறுதியெடுத்ததோ?
பசுமைவாழ பன்னீர்தெளித்து கோலமிட்டோமோ?
எங்கும் எல்லாம் அப்படியே அழிவுப்பாதைநோக்கி!

ஊர்கூடி உறவுகூடி உள்ளங்களும்கூடி அழகாயாடி
அன்பைப் பகிர்ந்து புத்தாடையுடுத்தி ஏழையுமிந்த
புன்னகையைப் பகிந்ததன்றி வேறேதுமில்லை!
தூய்மைவிதை மனதில் வளரும்வரை பயனில்லை
பண்டிகையும் கடந்தோடும் ஓர்நிகழ்வாய் மட்டும்!!

Monday, 12 November 2012

நானென்ற நம்ஆசைக்காய் !


கரைபுரண்டோடும் நீரும்
கடலைத்தேடி...

சிறகுவிரிந்த மேகமும்
மலையாழம் பார்த்து...

முட்டைவிரிந்த குஞ்சும்
இரை தேடி...

வாழ்வுதேடி சுழல்நீரில்
எதிர் நீச்சலிடும் மீனும்...

வாய்கட்டி வயிறுகட்டி
ஏர் பிடித்திழுக்கும் மாடும்.

மலர் வருடும் வண்டும்
மண்ணுக்கு உயிராய் புழுவும்.

எல்லாம்வழங்கும் காலமும்
அறிவைத்தேடும் ஞானமும்
அணையாத மெய்யன்பும்
சுகமென்றுசுமைதாங்கும!

எண்ணம்தேடும் கவிஞனும்
வம்பாய் முடியும் நல்லுறவும்
ஆசை துறந்த மனப்பாட்டும்.

நீ நான் அவன் அவள் அதுஇது
எனது உனது நமதுபிரிவுகளும்
இறைவனுண்டு இல்லவேயில்லை
இஃதேயண்மை அதுயாவும்பொய்
என்றேயியம்பி நாம்வாழ்ந்திட.

வாசமில்லாத் தேடல்களாய்
கொடுத்ததெது தெரியாது
கொண்டதெது அதுநினைவாய்
வருவதெதுவோ அறியோம்நாம்
ஆயினுமெல்லாம் நமக்காக.

நானென்ற நம்ஆசைக்காய்
பிரபஞ்சத்தில் மாயத்தேடல்கள்.
எல்லாமே ஏதோபிரதிபலனை
எதிர்நோக்கியே நன்மையும் ஏன்?
தீமையுமிணைந்த பயணங்கள்!!

Thursday, 8 November 2012

எத்தனைக் கதவுகள்....!விபரமாயுஞ்சொல்லிடவும் வேண்டும்

விரசமுமின்றியுரைத்தலும் வேண்டும்

உடலுக்கெத்தனைக் கதவுகளுண்டு
உள்ளத்தினெண்ணம் சேர்க்காமல்!

ஆண்பெண்ணென்ற பேதமைகள்
இதிலுமுண்டு வடிவங்களாய்!

கருவிழியாயிரண்டு காக்குமிமையிரண்டு
செவிவழியிரண்டாய் நாசியாயுமிரண்டு!

வாய்வழியுண்ண ஒன்றிருக்க ஜனனத்
தொப்புள்கொடி உறவாயும் காட்சி!

கழிவுகளை வெளியேற்ற இரண்டிருக்க
வேர்வைத்துளி சிந்த ஆயிரமாயிரமாய்!

முடிந்ததாவெனில் இல்லை இன்னுமுண்டு
இன்பத்துக்கென்று தனியாய்படைப்பில்!

ஆணுக்கு முடிந்தது பெண்ணுக்கு இன்னுமுண்டு
தாய்ப்பாலூட்ட தனியாய் யெத்தனையோவுண்டே!

உயிரை உள்வாங்கி வளர்த்த மட்டும் திறக்கும்
கருவறையென்ற கதவு தாய்மையின் சொத்தாக!

எங்ஙனமெப்படி நோக்கினும் பெண்ணுடம்பில்
கதவுகளும் மனதில் கனவுகளுமதிகமாய்!

உரைத்தேனென் எண்ணத்தை யதைப்
பகிர்ந்தேன் உங்களுடன் சரியா?தவறா?
கேள்வியுடன்....?

Wednesday, 7 November 2012

மவுனத்தின் மொழிபெயர்ப்பு !சிறகு விரிச்சி பறக்குதே -மனசும்
சித்தாடைக் கட்டி விரியுதே
கொத்தோட பறிச்சவன் யாரடி
கொண்டாட தேதியுந்தான் கூறடி.

சித்திரையில் முளைத்தவனோ
சினம் கொண்டே பிறந்தவனோ
கத்திரியிலும் குளிரெடுக்க
கற்கண்டாய் சொல் உதிர்ப்பவனோ?

மலர் வனமே சென்றாலும்
மணமேனோ வீசலையே-
கட்டாந்தரையில் நானும்
களையெடுக்கப் போனேனே..

கடுகுவெடிக்குமுன்னே
காதை பொத்தி நின்றேனே
களவு போனது நிஜம் தானோ
கண்ணுறக்கம் மறந்ததேனோ?

சொல்லுனக்காய்த்  தேடித்தேடி                                                            
சொப்பனத்தில் ஆழ்ந்தேனோ
மவுனத்தை மொழிபெயர்க்க
மல்யுத்தம் பயில்கின்றேன.

மன்றாடித்திண்டாடி நானும்
மயங்கித்தான் கிடக்கிறேன்!
உணர்வுக்குள் உனை  நிறுத்தி
உன்னில் எனை தேடுகின்றேன்.

Tuesday, 6 November 2012

அரிது அரிது பெண்ஜென்மம் அரிது !


எதற்காயிந்த பெண்ஜென்மம்
எத்தனைபேரின் அங்கலாய்ப்பு!
எண்ணின் பெண்ணாய்பிறத்தல்
எள்ளளவும் குறையில்லையது
எத்தனைப்பெரிய புண்ணியம்!

மழலையாய்யந்த சிரிப்பு வேதம்
தவழ்கையிலது உன்னத நாதம்
நடக்கையில் பூவின் ஆட்டம்
வளர்கையில் கண்ணின் மணி!

கொஞ்சலில் மழலைகொஞ்சும்
மிஞ்சுகையில் அப்பா தாங்கார்
நெற்றியிலே அலங்காரப் பொட்டு
இமைதனிலே கருஞசாந்திட்டு
கண்படாமல் திருஷ்டிக்கொன்று
தாமரையொன்று வீட்டிலென்று!

வளருமெல்லாம் வசந்தங்களாகவே
மொட்டென்ற மாமணியொன்று
சட்டென்று மலராய் விரியும்
பெற்றவரும் உற்றாருமங்கே
கூடிக்கும்மியடிக்கும் கோலாகலம்
மனம்மெதுவாய் மையல் பயணங்கள்!

வண்டெல்லாம் சுற்றிசுற்றி வரவுகள்
வாழ்க்கையெது புரியாத கனவுகள்
கொடிதேடும் மரமொன்றையதுயாரோ
ஏற்கனவே எழுதிவைத்த விதிவழியே
காதலி மனைவியாகி மனைவி தாயாகி
தாய்மையின்மேன்மையில் பிறப்புகள்!

அம்மா அப்பா சுற்றம் நட்பு எல்லாம்போய்
பிள்ளைக்காய் வாழ்ந்து முழுமையாய்
தனையீந்து பெண்ணாய் கொடுத்து
அரிது அரிது பெண்ஜென்மம் அரிது!


பெண்மைக்கு பெருமை சேர்த்த என் மகனுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

தென்றலின் வசந்தம் நீ
தெவிட்டாத தமிழ் இன்பம் நீ
உள்ளத்தில் தாயென உணர்த்திய
இனியவனே....
 அகிலமாளப் பிறந்தவனே
அன்பால் யாவும் வென்று
அறிவு கல்விச் செல்வம் பெற்று
ஆண்டொன்று கூடக்கூட
எம் தாயுமானவனாய் ஆனாய்
நற்பேர் புகழோடு ஆண்டுகள்
நூறு வாழ வாழ்த்துகிறேன்!


Monday, 5 November 2012

புயலோடு ஓர் பயணம் !புயலின் விரல்பிடித்து
தெருக்களின் புழுதியில்
முகம் படாது பூகம்பமாய்
கிளைக்கு கிளை தாவி
அலைகளை அன்னார்ந்து
பார்க்க வைத்து...
ஆகாயத்தில் கண்ணாமூச்சியாடி

காவிய மண்டபங்களின்
கதைகளை புரட்டிப்பார்த்து'
கண்ணகியின் சிலம்பணிந்து
காவிரியில் நீராடி...
கம்பனின் கவிகேட்டு
கட்டாந்தரையையும் ஆராய்ந்து
வரலாறுகளை திரும்பப்பார்த்து.

மின்சாரக் கம்பிகளில் நடந்து
மீன் பிடிக்கும் வலையை போர்த்தி
மரங்களின் வேர்களில்
மருதாணி பூசி மகிழ்ந்து
இடி மின்னலை அழைத்து
இன்முகமாய் நலம் விசாரித்து
இரண்டொருநாள் சுகம் போதுமென
இயல்பாகவே திரும்பியது தென்றலும்.

Friday, 2 November 2012

வேண்டவே வேண்டாம் வேறெதும் !


கலைந்தது கலைந்தது
நினைவும் கலைந்தது
தொடர்ந்தது தொடர்ந்தது
கவலை தொடர்ந்தது!
தொலைந்தது தொலைந்தது
 நிம்மதி தொலைந்தது
சிரிக்குது சிரிக்குது
காலம் கைகொட்டிச் சிரிக்குது!

வேகுது வேகுது
நெஞ்சம் வெம்பி வேகுது
கொடியது கொடியது
பிரிவுகள் பெருங்கொடியது!
உருளுது உருளுது
எண்ணமெங்கோ உருளுது
உடையுது உடையுது
இதயகண்ணாடி உடையுது!

நின்றது நின்றது
 உயிர் துடிப்பெல்லாம் நின்றது
முளைத்தது முளைத்தது
 கேள்விகள் முளைத்தது!
களைத்தது களைத்தது
நினைத்துக் களைத்தது
அணைத்தது அணைத்தது
கடமைகள் அணைத்தது!
போதும் போதும்
அன்புமட்டுமெனக்குப் போதும்
வேண்டாம் வேண்டாம்
வேறெதும்  வேண்டாம்!

வெட்கத்தின் விலை !பொம்மலாட்டம்
பார்க்கப் போனநானே
பொம்மையானேனே!

சிலம்பாட்டம்
கண்டு வந்தேநானும்
சிரிச்சி நின்னேனே!

கயிறாட்டம்
ஆடப்பார்த்து
கனவு கண்டேனே -நானும்
பகல் கனவு கண்டேனே!

கிழங்காட்டம்
நானிருந்தேன்னெனையும்
கிறங்க வச்சாயே ..
.மடியில உறங்க வச்சாயே

 சூதாட்டம்
ஆடி என்னைநீயும்
தோற்க்க வச்சாயே   ..
உன்னை ஏற்க வச்சாயே !