Saturday 30 November 2013

நன்மையும் தீமையும் !


தேடுவதுதென்னவோ அன்பைத்தான்
மனம் நாடுவதென்னவோ நட்பைத்தான்
தேன் கூட்டைக் காத்திடும் குளவியும்
மனிதனுக்குத் தேளாய் தெரியும்.

மாணிக்கத்தை காத்து நிற்கும்
பாம்பும் விஷமாய் மட்டுமே 
விறகென நினைக்கும் மரக்கிளையும்
வலி கொடுக்கும் முள்ளாய்

தாகம் தீர்க்கும் நீரும்
தம்மை அழிக்கும் அலையாய்
மோகனமாய் தீண்டும் தென்றலும் 
மோதியழிக்கும் புயலாய்

காத்து நிற்கும் வான்கொடையும்
கருகியழிக்கும் இடியாய் மின்னலாய்
இயற்கையின் படைப்பில் இரண்டுமிருக்கும்
இதில் நன்மையெது தீமையெது  ?

Friday 29 November 2013

பணியும் பனியும் !


பாவை முகம் சேமிப்பில் 
பதிந்த தடம் நினைவினிலே
வர்ணிக்க வார்த்தையுடன்
வடிவமைப்பை தேடுகிறேன்.

சொட்டுச்சொட்டாய்
பூ நனைய, சொக்கவைத்த
அந்த முகம்..
சொப்பனத்தில் எனையெழுப்பி
தேட வைத்த அந்த முகம்.

கிளையோடி காய் தழுவி
இலையாடி இடம்பெயர்ந்து
அருகம்புல்லில் படுத்துறங்கி
அழகாய் தொலைந்த பனிமுகமே.

தேடலென ஓடுகிறோம்
தேவி உனை ரசிப்பதில்லை.
உறங்கவைத்து ஓடியாடி
கண்ணாமூச்சி ஆடுகின்றாய்.

பனிமலரே உனை பார்த்திருக்க
பகலவனும் வந்து விட
ஒளி நிழலில் உடன் மாய்ந்த
உன் நினைவைத் தேடுகிறேன்.

Tuesday 19 November 2013

துளித் துளியாய் !

சப்தங்களை 
தட்டி எழுப்பும்
அதிகாலைப்பறவைகள்.

கூரை மேயும்
காலம் நெருங்கிவிட்டது
ஆடிக்காற்று.

ஏட்டுச் சுரைக்காய்
நடைமுறைக்கு உதவாதாம்
நீதியும்.. நேர்மையும்.

சொத்துக்கு சொந்தக்காரன்
உடல் திண்ணும்
மண்.

சுழற்சியில்
சூரிய சந்திரன்
என்றும் நிலையாக
ஏழையின் வறுமை.

Friday 15 November 2013

சர்க்கரையில் ஏதினிப்பு ?


அம்மிக்கல்லு ஆட்டுக்கல்லு
அழகா இருக்கும் மாம பல்லு

சீமதொர கணக்காட்டம்
சீவி நிக்கும் சிகையழகு

கொல்லப்புறம் நான் போக
கொண்டு வரும் அவன் மூக்கழக 
கொடமொளகா.

முசுமுசுக்க இலை உரச
கை தேடும் மீசையத்தான்.

அய்யனாரு சிலையாட்டம்
அச்சமறியா அவன் முகமும்.

காக்கிச்சட்ட மிடுக்காட்டம்
கஞ்சி போட்ட வேட்டிசட்டை.

கட்டி வைச்ச பூங்கொத்தா
கன்னமினிக்கும் அவன் பேச்சு.

சர்க்கரையில் ஏதினிப்பு ?
சங்கு கழுத்து மாமன் 
நிறமோ மாசிவப்பு.

பஞ்சாயத்து மேடையிலே
பார்வையெலாம் அவன் மேல.

கண்ணுபடபோகுமுன்னு
காவ காக்கும் என் இமையும்.

Sunday 10 November 2013

யாரு கண்ணு பட்டதடி !


கண்ணாமூச்சி ஆட்டமாட
கணக்குக்கு யாருமில்ல..

கால் கடுக்க காத்திருந்தேன்
காத்துங்கூட துணைக்கு வரல.

ஆட்டமெல்லாம் மறந்துடிச்சோ ?
ஆடுகளம் எங்கே தேட..

கல்லும் மண்ணும் கதை சொல்ல
கேட்ட பொழுதுகள் கனவா சொல்லு ?

திண்ணைச்சுவரும் திரும்பிபார்க்க
விம்மித்துடிப்பதை கேட்டதுண்டோ ?

அன்னம் சிந்திய வாசல் படியும்
அழகாய் சுவைத்த கூட்டாஞ்சோறும்

யாரு கண்ணு பட்டதடி
கனவாய் எல்லாம் போனதடி

ஆத்தா நீயும் போனபின்னே
எல்லாம் கூட வந்துட்டுதோ ?

அப்பா வைச்ச தென்னம்பிள்ள
அதுவும் இங்க காணவில்ல.

தப்பா எல்லாம் நடக்குதிங்கே
தட்டிக்கேட்க யாருமில்ல.

தாத்தா இருந்த வரையினிலே -அவர்
தடிக்கு பயந்து நீதி நேர்மை 
தழைச்சதிங்கே..

ஒருவர் பின்னால் ஒருவர்
போனதுபோல்...
நேர்மையும் அவர்களை
தேடிப்போனதுவோ..?

Wednesday 6 November 2013

திண்ணைப்பேச்சு !-6


கூடி நிக்கும் கூட்டமும் தான்
குறை குறையா சொல்லிடுதே..

 ஆத்தங்கரை குளத்தங்கரை
எங்கும் இதே பேச்சே...

என்னடி புள்ள வளத்த
தலை ஒரு பக்கமும்
காலொரு தினுசாவும்.

மூக்குக்கு மேல கோபமிருக்கும்
முந்தானையால் பிள்ளைக்கு
முகந்தொடைக்கவும் நேரமிருக்காது.

அந்தக் கால வழக்கத்தை
அரை நொடியில் மறந்து விட்டு

அதுவா வளரும் பிள்ளையென
அம்மிக்கல்லா இருந்துவிட்டா
அடுக்கடுக்கா வந்து சேரும் வசவுகள்.

பெற்றவரை பெரியவரை
அனுசரித்து போக தெரிஞ்சா
இந்த குறை இப்ப ஏன்டி

பிள்ள பெத்த நாளிலிருந்து
தினம் தினம் அதிகாலை
நல்லெண்ணெய் தேய்ச்சி
கை காலை பிடிச்சி விட்டு
வெந்நீரில் குளிக்க வச்சி.

சூரிய வெளிச்சத்தில் 
காட்டி நின்னு..
பானை செய்யும் பக்குவமா.

கை தலை காலுன்னு பிடிச்சிவிட
சிற்பி செய்த சிலையாட்டம்
சிரிச்சி வளரும் பிள்ளையுந்தான்

மாமியார் பேச்சை கேட்டுக்க
மனம் நோகாம நடந்துக்க.


Tuesday 5 November 2013

கவிஞர்களுக்கான அழைப்பு !


வாய்ப்புத் தேடி கனவு காணும் உறவுகளே. இதோ உங்களுக்கான அரங்கம் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டது. வாருங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க ஒரு வாய்ப்பு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.




தொடர்புக்கு : 9551547027 
E-mail : tamilkavinjarsangam@gmail.com
www.tamilkavinjarsangam.yolasite.com

பின்னலிடும் உன் நெனப்பு !


பக்கம் நின்னு பார்ப்பவரே
பார்த்து பேசி போனாலென்ன ?

காத்தடிக்க உன் மூச்சும் 
கனலாத்தான் நெருங்குதய்யா.

தூக்கத்தை துரத்திகிட்டு
தொலை தூரம் போனதய்யா.

அள்ளி முடிந்த கூந்தலிலே
பின்னலிடும் உன் நெனப்பு.

அடுக்களைக்கு நான் போக
அஞ்சரைப்பெட்டியோட கைகலப்பு.

படபடக்கும் நெஞ்சத்துல
பல நாளா தூக்கமில்ல.

பொழுது வரை காத்திருந்து
போத்திக்கிட்டு தூங்கும்மச்சான்.

புதுக்கலைய எனக்குந்தான்
சொல்லித்தந்தா என்ன மச்சான்.

அதிகாலை எழுந்து பாத்தா
வாசக்கோலமும் பேசிடுது.

அழுக்கெடுக்க நானும் போக
படிக்கல்லும் ஓடிடுது.

உன் நெனப்பே உணவாச்சி
ஊருக்கும் தெரிந்துபோச்சி.

ஒத்தையடிப் பாதையில
ஓரக்கண்ணால் பார்ப்பவரே.

ஒத்துமையா சேர்ந்து போக
ஒரு வழிய பாருமைய்யா.