Tuesday 31 July 2012

என்னவனைக் காணாமல்...!


வாசலெங்கும் தோரணமிட்டு
வாத்தியங்கள் முழங்கக்கேட்டு
வாசல் வந்தே நானும் நிக்க
வண்டாட்டம் கண்ணிரன்டு_பூச்
செண்டோட வந்து நிக்க
வாயடைத்து நானும் நின்னேன் 
வந்தவற காணலியே

மூச்சிழுத்து முனகி முனகி
முன்னும் பின்னும் ஓடிப்பிடித்து
ஓர் அணி ஜெய்க்கும் 
கபடியாட்டம் அங்கும் காணலியே.

கிட்டிப்புள் தட்டிவிட
புள் போகும் திசைநோக்கி
புயலென ஓடும் கூட்டம் (அங்கும் காணலியே)

வழுக்கு மர உச்சிதனில்
பரிசொன்னு காத்திருக்க
உசுருக்குள் புகுந்தவனை
உச்சி மரத்தில் தேடிப்பார்த்தேன் (அங்கும் காணலியே)

இரு பிரிவாய் சேர்திழுக்க
ஒரு புறமாய் வந்துசேரும்
பலம் சொல்லும் கயிறாட்டம் (அங்கும் காணலியே)

கண்கட்டி சுத்திவிட்டே
காலாட்டம் போடக்கண்டு
கதைத்திருந்த ஒரு கூட்டம்
சிரித்தடங்கும் வேளையிலே
சிறந்திடுமே உறியாட்டம் (அங்கும் காணலியே)

பருவ பெண்கள்
பல்லாங்குழி ஆட்டமாட
தூண்டிலென விழி வீச
துரத்திடுதே ஒரு கூட்டம்  (அங்கும் காணலியே)

கண்களிரண்டை கட்டிவிட்டு
தொட்டிடவே தொடர்ந்து வந்து
தூரத்தே விலகி ஓடும் கண்ணாமூச்சி . (அங்கும் காணலியே)

ஆலமர விழுதில் தொங்கி
ஆட்டமாடும் ஊஞ்சலாட்டம்  (அங்கும் காணலியே)

தத்தித் தத்தி நடந்து வந்து
தாவி குதித்தே முன்னே வரும்
சாக்கு பையாட்டம்  (அங்கும் காணலியே)

நிலா வெளிச்சம் நீண்டிருக்க
பச்சைக் குதிரை தாண்டிஆட
பார்த்திருக்கும் கூட்டமிங்கே . (அங்கும் காணலியே)

வட்டமான கூட்டத்திலே
தந்திரமாய் நுழைந்திடவே
தாளத்தோடு பாட்டிசைக்கும்
ஆடு புலி ஆட்டம் பாரு  (அங்கும் காணலியே)

வெட்டவெளி மைதானத்தில்
பட்டமிட்டு பார்த்து மகிழும்
கூட்டமுண்டு  (அங்கும் காணலியே)

எங்கு தேடியும் காணமல்
ஏங்கிப் போய் நானும் வந்தேன்
என் வீட்டுத்திண்ணையிலே
மடிக்கணினி பார்த்து நிக்கான்
மன்னவன என்ன சொல்ல?

Monday 30 July 2012

நிகழ்வனைத்தும் பொக்கிஷமாய் !



நாவசைத்து இசையெடுத்து
நாமுறங்க பாட்டெடுப்பாள்-அவள்
தூணருகே சாய்ந்துறங்க
தூளி ஆட கையசையும்!

பூம்பாதம் தானசைய
பொன்னெழிலாய் பூரிப்பாள்
நிலவதனை உடனழைத்து
நித்தம் நூறு கதை சொல்வாள்!

கோபத்தை தான் ரசித்து
கொஞ்சு மொழி பேசிடுவாள்!
பசித்திருந்தால் துடித்திடுவாள்
பால் சோறு ஊட்டிடவே-நமை சுமந்து
பாதையெங்கும் அலைந்திடுவாள்.

உச்சிதனில் குடுமியிட்டு
ஊர் பார்க்குமென திருஷ்டி பொட்டுமிட்டு
நடையதை நாட்டியமாய்
குறுநகையதை ஓவியமாய்
நிகழ்வனைத்தும் பொக்கிஷமாய்
நினைவதினில் சேமித்து..!

வாழ்நாளை நமதாக்கும்
தாய் தந்தை நலம் காப்போம்!

Sunday 29 July 2012

வாழ்வு தேடும் பயணமதில்...!


சில்லென பூங்காற்று மேனிதீண்ட
சுள்ளென சூரியனும் விரைந்து வர
கல்லென அம்மாவும் சொல்லெறிய
கதவிடுக்கில் உருண்டோடி ஒளிந்திடவே!

சலசலவெனும்  நீரோடையருகே
கலகலவெனும் பேச்சுக்குரல்
விருட்டென எழுந்து விளையாட தினம் ஓடி
இருட்டென ஆனதே கல்விகற்ற வாலிபம்!

எறும்பைப் போல் சுறுசுறுப்பாய்
ஏர்பிடிக்கும் கிழவனைப்பார்
துரும்பைப் போல் நீயிருந்தால்
துவண்டிடுமே உன் வாழ்வும்!

என்றியம்பிய எம்தாயும்
என்துணையைத் தேடித்தந்தே
எங்கு ஓடி மறைந்தனளோ?
ஏமாளியாய் நானுமிங்கு ...
வாழ்வு தேடும் பயணமதில்!

Thursday 26 July 2012

கல்வியெனும் பெயரால்.....


 காலையில் பொட்டு வைத்துப் பூச்சூடிய பின் பள்ளி செல்ல அழுத தன் குழந்தையின் கையில் ஒற்றை ருபாய் கொடுத்து  'பண்டம் வாங்கிக் கொள்' என்று சமாதானம் செய்து வழி அனுப்பிய அவளுக்கு தெரியாது.

 அடுத்த நாளே தன் பாசமகளின் நெற்றியில் அந்த ஒற்றை ரூபாயை வைத்து இறுதியாக பிணமாக...அய்யோ இதற்கு மேல் என்னால் அந்தக் காட்சியை விவரிக்க இயலவில்லை.  எனக்கே முடியவில்லை என்றால் அந்தத் தாய் மனது என்ன வேதனைபட்டிருக்கும், ஆட்டோ ஓட்டி பாடுபட்ட பணத்தில் தன் குழந்தைகளை படிக்க வைக்கும் அந்தத் தந்தையின் மனது எவ்வளவு பாடுபட்டிருக்கும். மனதைப் பாதித்த அந்த செய்தி... காட்சியை விரிக்கிறேன்...

பள்ளி வாகனங்களை கவனித்து இருகிறீர்களா, சென்னை போன்ற பெருநகரங்களில் கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசலில் வேகமாக செல்லும் ஒரு வாகனம் உண்டென்றால் அது பள்ளி வாகனமாகத் தான் இருக்கும். திடிரென்று பிரேக் போட்டு வாகனத்தை நிறுத்துகையில் தலையிலும் மார்பிலும் அடிபட்டு வந்த பல குழந்தைகளின் நிலையைப் பற்றி நான் கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் சென்னையில் நேற்று நடந்த இந்த விபத்தோ சற்றே கோரமானது, கோரமானது என்பதை விட அகோரமானது என்பது தான் மிகச் சரி.

ஸ்ருதி.. கோர விபத்தில் பலியான அந்தக் குழந்தையின் பெயர் இது தான். எத்தனை கனவுகளுடன் பிறந்த குழந்தையோ? கண் மூடித்திறக்கும் நேரத்தில் பேருந்துக்குள் இருந்த ஒழுங்காக அடைக்கப்படாத ஓட்டையின் வழியாக தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி...

 இன்று அந்தக் குடும்பமே சின்னபின்னமாகிப் போயிருக்கும் விபத்திற்குக் காரணம் பேருந்தில் இருந்த அந்த ஓட்டையா? தர்ம அடி வாங்கிய அந்த ஓட்டுநரா? சில நாட்களுக்கு முன்பு  எஃப் சி சென்ற அந்தப் பேருந்தை லஞ்சம் பெற்று முறையாக சோதனையிடாத அந்த RTO வா?  இல்லை பணம் பணம் என்று பணத்தைக் கொட்டிக் கொடுத்தால் பிணத்திற்குக் கூட பாடம் எடுக்கத் தயாராய் இருக்கும் தனியார் பள்ளியா? இவர்களை நம்பித் தானே நாமும் பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.

விபத்து என்று ஒன்று நடந்தால் மட்டும் தான் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உறக்கம் கலையும் போல! ஒரு கும்பகோணம் உங்களுக்கு போதாதா?  மீண்டும் ஒரு பள்ளி பற்றி எரிய வேண்டுமா? எத்தனை பள்ளி வாகனகள் விபத்திற்கு உள்ளாகின்றன அப்போது மட்டும் அறிக்கை விடுகிறீர்களே, அதை செயல் படுத்த உங்களுக்கு அவகாசம் இல்லையா?  அரசு ஏன் மொளனம் காக்கிறது எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் வாங்கும் நீங்கள் உயிரோடு ஏன் விளையாடுகிறீர்கள் உங்களைப் போன்ற பள்ளத் தலைமைகளும் இருக்கும் பொழுது விபத்து என்ற பெயரில் நடைபெறும் கொலைகள் மட்டும் எப்படிக் குறையும்!

அரசாங்கப் பள்ளியில் கல்வித் தரம் கேவலமாய் உள்ளது என்று தானே, பெற்றவர்கள் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என் பிள்ளைக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று தனியாரைத் நாடி  வருகிறர்கள். அய்யா!  தனியார் பள்ளிகளே அந்த அன்றாடக் கூலிகளின் கனவில் மண்வாரிப் போட்டு விடாதீர்கள். பள்ளிகள் குழந்தைகளின் வாழ்வாதாரம்  அவர்களே நாட்டின் எதிர்காலம் என்பது படிக்காத மேதை கர்மவீரர் அவர்களின் கூற்று, உம்  போன்ற படித்த முட்டாள்களுக்கு இது தெரியாமல் போனது  கேவலமாய் உள்ளது. கோடிக் கணக்காய்  செலவு செய்து பள்ளி ஆரம்பித்து போட்ட பணத்தை எடுக்கக் கற்றுக் கொண்ட உங்களைச் சொல்லி குற்றமில்லை, கல்வியைக் கொண்டு பணம் செய்யும் நிலைக்கு உங்களைத் தள்ளி அதை வேடிக்கை பார்க்கிறதே  அரசாங்கம் அவர்கள் தான் இது போன்ற அவலங்களுக்கு முழுக் காரணம்.

வரவென்று டாஸ்மாக்கை எடுத்து நடத்தும் அரசாங்கத்திற்கு செலவென்று கல்வியை எடுத்து நடத்தமுடியாமல் போனது கையாலாகத் தனமில்லாமல் வேறு என்னவாகக் கருத முடியும்?  பத்து மாதங்கள் சுமந்து பெற்ற தாயின் முன்னால் அவள் குழந்தையின் பிணமும் சில லட்சம் பணமும் வைத்தால் என்ன மன நிலை இருக்குமோ அந்த நிலைக்குத்தான் இந்நாட்டில் பலரும் தள்ளப்படுகிறார்கள், கொலைகளை செய்துவிட்டு கவனக் குறைவு விபத்து என்று காரணம் கூறி நிவாரணம் என்ற பெயரில் சில லட்சங்களைத் தரும் அரசாங்கமும் பள்ளி நிர்வாகமும்  இருக்கும் வரை கவனக் குறைவால் விபத்து என்ற பெயரில் நடைபெறும் கொலைகளும் நிற்கப் போவது இல்லை என்பது தான் உண்மை!

Tuesday 24 July 2012

நடப்பது நலமாக...!

காடாறு மாசமாச்சி நாடாறு மாசம் போச்சி
நாமபோடும் நாடகந்தான் அண்ணாச்சி-பாரில்
எல்லாமே வேஷமாச்சி அண்ணாச்சி!

கூடும் கட்டியாச்சி கூழும் குடிச்சாச்சி இதய
ஆசைமட்டும் வேகலையே அண்ணாச்சி.
மனப் பாசங்களே பொய்யாச்சி அண்ணாச்சி!
காடும் விளைஞ்சாச்சி கதிரறுக்க காலமாச்சி
களமெல்லாம் பெருக்கினேனே அண்ணாச்சி.
மனம் மட்டும் பெருக்கலையே அண்ணாச்சி!

வயசுக்கு வந்தாச்சி வாலிபம் பூத்தாச்சி
வண்டெல்லாம் மொய்க்கிறது அண்ணாச்சி.
நெஞ்சம் வாழ்வுநாடி போகிறது அண்ணாச்சி!
மண்ணுக்குள் ஒளித்திருந்த மஞ்சள் பறிச்சாச்சி
மனசுக்குள் மறைந்திருந்த கதவும் திறந்தாச்சி
காணாமல் போனேனே அண்ணாச்சி.
கடலலையாத் தவிக்கிறேனே அண்ணாச்சி!

ஜாதியென்றும் மதமென்றும் மாய்ந்து நிக்கிறாங்க
மனிதரில் எத்தனைதான் பேதமுண்டு அண்ணாச்சி
மரணத்தை வென்றவரைக் காணவில்லை அண்ணாச்சி!
நெல்லுக்கும் சாதியுண்டு கல்லிலும் பிரிவுண்டு
சொல்லியே பாடறாங்க அண்ணாச்சி இவர்
கண்திறப்பதெப்போதோ அண்ணாச்சி!

ஆச்சிகத முடிஞ்சி இப்போ சேச்சிகத வந்தாச்சி
மதங்கூட மாறறாங்க அண்ணாச்சி-முடிவில்
மானமிழந்து தவிக்கிறாங்க அண்ணாச்சி!
நன்மை தீமைஎன எல்லாம்இரண்டிரண்டா வாழுது
நட்பென்றும் பகையெனவும் அண்ணாச்சி
இவையொழியப் பாடப்போறேன் அண்ணாச்சி!

நடந்தது கனவாக்கி நடப்பது நலமாக நாம்கூடி
எழுந்து எழுதுவோமா அண்ணாச்சி .
தமிழ்பாட்டு தமிழனுயரப் பாடுவோம் அண்ணாச்சி!

Monday 23 July 2012

வசந்தங்கள் தொலைவதுமட்டும் உண்மை!


நந்தவனத்து ராசகுமாரி ரோசாப்பூ சிவப்பாக
ஆத்தாமடி உறவுவிட்டு தேவதையா வந்தாளே!
அவவந்த நேரந்தானே நஞ்சை புஞ்சையெல்லாம்
நாலத்தனையாய் பொங்கி விளைஞ்சதுவே!

அப்பன் ஆத்தா தங்கமேயெனக் கொஞ்சிப்பாடி
நிலாச்சோறு ஊட்டிய காலங்கள்!
தத்தித் தத்தி நடந்தபோது விழாமல் பின்னால் நடந்த
மூப்பன் மூப்பத்தி அத்தை மாமாக்கள்!

பட்டாம் பூச்சி பிடிக்கப்போய் வழிதவறி அழுகையிலே
அலைந்துதேடி முதுகில் சுமந்த அண்ணன்மார்!
 திருவிழாவில் அடம்பிடித்து வாங்கிய பொம்மைதனை
நெஞ்சோடணைத்து தூங்கும் நினைவுகள்!

ஆசையாய் ஆமைபிடித்துவந்து தோட்டத்துக் கிணற்றில்
வளர்த்து அகம் மகிழ்ந்த நிகழ்வுகள்!
மயிலிறகு எடுத்துவந்து புத்தகத்தில் அதைபாதுகாத்து
வளருமென நம்பிய பொய் பேதமைகள்!

ஆடுபிடித்து அதன் மடியில் சூடாக பால் குடித்து
ஒளித்துவைத்த ஞாபகங்கள்!
அண்ணனுக்காய் பீடிதிருடி
சொல்லிடுவேன் மிரட்டிய வசந்தங்கள்!

பொரியுருண்டைக்காய் நெல்திருடிக் கொடுத்து
மாட்டிக்கொண்ட ஆசைகள்!
மழைபெய்யுமுன் வீசும் மண்மணமும்மழையிலாடி
இரவெல்லாம் குளிர் ஜூரத்தில் நடுங்கியதும்!

ஓராண்டுக்கு ஓர்முறை ஊருக்கு வந்தால் அனைத்தும்
காணாமல் போய்விட்ட ஆதங்கம்!
கதைவிடாதே மம்மியென பரிகசிக்கும் பிள்ளைகள்
நகரவாழ்வுக்கு பலியாகும் கிராமங்கள்!
மாற்றமா தடுமாற்றமா வாழ்வா சீரழிவா புரியவில்லை
வசந்தங்கள் தொலைவதுமட்டும் உண்மை!

Sunday 22 July 2012

கனவின் நிழலில்!



வித்தென மனதில் வீழ்ந்து-கவி
முத்தென நீயும் முளைத்தாய்!

சொத்தென நானுமெண்ணி-நித்தம்
சொந்தமாய் ஏற்பேன் வாழ்ந்து.

சட்டென நினைவைப் பற்றி
பித்தென அலைய வைத்தாய்!

செடியில் மொட்டது காதலென்றால்
மலருமென்றே காத்திருப்பேன்!

கனவில் கட்டிய கோட்டையதை
நிஜத்தில் எங்கே தேட.

கனவது நிஜமானால் -நிகழ்
காலமது இனித்திடுமே!

Friday 20 July 2012

காத்திருந்த பொழுதில் !


அத்திப்பழம் பெருத்திருக்கு
அதிகாலை வானம் விழித்திருக்கு
தண்ணி பாச்ச போகணுமே
தலப்பா எடு சின்னப்புள்ள!

நீச்ச தண்ணி எடுத்து வாரேன்
 குடிச்சிட்டுப் போங்க மாமா!

சுட்டெரிக்கும் சூரியனால்
சுருண்டிடுமே செங்கதிரும்
சேத்து நடை வெடிக்குமுன்னே-போய்
தண்ணீர் பாச்சணுமே செல்லப்புள்ள!

நாத்து நட நானும் வரேன்
கோகிலமும் கூட வரா
சேர்ந்துபோவோம் ...
செத்த இரு மச்சான்!

ஆத்தங்கரை குளிக்கபோயி
அரைநாழி காக்க வைப்ப
எட்டுமொழ புடவ சுத்தி
என்னையும் தான் ஏங்க வைப்ப!

ஒத்த பொம்பள புறப்படுமுன்
ஒரு அறுவடையும் முடிஞ்சிடுமே
பொறுத்து வாடி பொம்மியம்மா
கண்ணே பூமியங்கே காத்திருக்கும்!

Thursday 19 July 2012

ஆடி வெள்ளி

ஆடிவெள்ளிக் கிழமை
அம்மனுக்கு விளக்கேத்தி
ஆரத்தியும் எடுத்தாச்சி!

தினம் வீடுநோக்கி உண்டியலும்
துரத்திடுதே என்ன சொல்ல
விமர்சையான விழாவென்றே
வீதியெங்கும்  சப்த்தமிட!

விலைவாசி ஏறிப்போனதும்
விதி என்றே நொந்திருக்க
வருஷத்தில் ஒருமுறைதான்
வஞ்சமில்லாது கொடு என்றான்.

அச்சுவெல்லம் இனிக்கலையே
அம்மனுக்கு மஞ்சளும் நிறுக்கலையே
சாமிகுத்தம் ஆகிபோச்சென!
சாமியாடி வந்துசொல்ல
ஆத்தா என் மீது குத்தமில்லை
என் பிழைப்புக்கிங்கே தக்க
உயர்வில்லே ஊதியமில்லே.

பச்சரிசி பொங்கலிட்டு நானும்
படையலிட்டேன் உன் வாசலிலே
பகட்டு வாழ்விற்கு வழியுமில்ல
பாத்து வாடியம்மா என் வீடுதேடி.
பாவங்களைக் காத்து வாழவையம்மா
பாவமவர் பாவைகூத்து வாழ்வில்
பாடிக்கொடம்மா தினசரியுணவு!

 இந்த விஷயத்தை தொடர்பதிவாகச் செய்தால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ஆகவே இந்தக் கருத்தை ஒட்டியும் வெட்டியும் தங்கள் சிந்தனைகளைத் தொடரும்படி சகோதரி 
நிரஞ்சனா, சகோதரி மாலதி நண்பர் சீனு மற்றும் கவிப்ரியன் ஆகியர்களை கேட்டுக்கொள்கிறேன்.

Wednesday 18 July 2012

உறக்கமென்ன மானிடரே !


உயிர்முயற்சி இருந்தால் மட்டுமே
முட்டையிலிருந்து குஞ்சும்
வெளிவர முடியும் !

கருவிலிருக்கும் குழந்தையும்
அசைவோடு இருந்தால் மட்டுமே
அகமகிழ்வாள் தாயும் !

நிலத்தில் வீழ்ந்ததும்
நிமிர்ந்தெழுந்து துள்ளி
ஓடும் கன்றுக்குட்டியையே
தாய்ப்பசுவும் சேர்த்தணைக்கும் !

பசியென்றுணர்த்த
வாய்திறந்தால் மட்டுமே
தாய்ப்பறவையும் ஊட்டிவிடும் !

மலரும் பூக்கள் எல்லாம்
மணிமகுடத்தை மட்டுமே
அலங்கரிக்க மலர்வதில்லை!

தோல்வியே முன்நின்றாலும்
துவண்டுவிடாமல் முயற்சிப்போம்
ஆமையைப் போல்.

உயிரில்லா பொருட்களையே
உழல வைக்கும் நம் இனம் !
உதிரத்தில் தமிழ் உணர்விருக்க
உறக்கமென்ன மானிடரே
உயிர்த்தெழுவாய் தமிழா
தமிழினம் வாழ்ந்திடவே!

Tuesday 17 July 2012

வழிகாட்டுதல் நம்கடமை!



பிள்ளையதை கையிலேந்தி வாழ்வுக்காய்
பிச்சை எடுக்கும் ஓர் கூட்டம்!
பட்டினியிருந்து காத்தவளும் தாய்தான்
 இங்கு பிள்ளை திருடி பட்டினி போட்டு
பிழைப்பவள் அவள் யாரோ?

அங்காடி தொடங்கி
ஆலயம் வரை அரங்கேற்றங்கள்!
சந்தை தொடங்கி சாலையோரத்திலும் !

புண்ணியமென்ற பெயரில்
இவர்கள் ....இப்புவியில்
வாழ்வை இழந்த சாபங்கள் !
அன்னதானமென்றே கொடுக்க
ஆலயத்தில் ஒரு வரிசை
அதிலும் பாவங்களுக்கிடமில்லை

இலவசமென்றே பெயர்சொல்லி
சம்பாதிக்கும் அரசாங்கமும்
சம்பளத்திற்கு இவரை
வேலைக்கமர்த்தி- வரும்
சந்ததிகள் வாழ வழிசெய்வாரோ?

பிறந்த நாளென்றே
பிச்சையிடும் ஓர் கூட்டம்
இவர்க்கு வாழ்வை பிச்சையிடுமோ?
 
இவர்களை சோம்பேறியாக்குவதே நாம்
பிச்சைியிடாது வேலை செய்ய
வழிகாட்டுதல் நம்கடமை!

Sunday 15 July 2012

கடமை கண்ணியம் கட்டுப்பாடு.


கதிரவன் மறைவதும்
விண்மீன் உருகுவதும்
வான்நிலா தேய்வதும்
நதிகள் வற்றிப்போவதும்!

கடல் உள்வாங்குவதும்
காலம் கடந்துபோவதும்
மலைகள் மண்ணாவதும்
மனம் பாலையாவதும்!

மேகம் அலைந்தோடுவதும்
மரங்கள்பட்டுச் சாய்வதும்
மலர்கள் மணம் மறப்பதும்
பறவை இறகு உதிர்ப்பதும்!

உறவுகள் பிரிவெழுதுவதும்
நீர் மீனை உண்ணுவதும்
பனிக்கட்டி கரைவதும்
நிறங்கள் தானே மாறுவதும் !

புதிதாய் ஜனன வாழ்வும்
வந்தது செலவாய் போவதும்
புறப்பட்ட இடம் திரும்புவதும்
காலத்தின் கையில் மட்டும்!

கடமை இதுவென்றுணர்ந்து
கண்ணியம் வாழ்வில் காத்து
கட்டுப்பாடுடன் வாழ்தல் நன்று .

        வணக்கம் வலைப்பதிவு தோழர்களே..வரும் ஆகஸ்டு மாதம் 19 ம் தேதி சென்னை மாணவர் மன்றத்தில் பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு ஆகி வருவது உங்களுக்கு தெரியும்.

           இந்நிகழ்ச்சி குறித்த விபரங்களை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்..

          நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக பதிவர்கள் கலந்து கொண்டு கவிதை பாட கவியரங்கம் ஏற்பாடு ஆகி வருகிறது.இக் கவியரங்கத்தில் கலந்து கொண்டு கவிதை பாடும் ஆர்வமுள்ள அன்பர்கள் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தாங்கள் கவிதை பாடுவதை உறுதி படுத்திக் கொள்ளுமாறு சொல்லியிருந்தோம். இதுவரையிலும் 15 தோழர்கள் கவிதை பாட வருவதாய் உறுதியளித்திருக்கிறார்கள்.. எனவே மேற்கொண்டு கவியரங்கத்தில் கலந்து கொண்டு கவிதை பாடும் தோழர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதி படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

           அதுமட்டுமல்லாது பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தோழர்கள் அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தாங்கள் வருவதை உறுதி செய்து வருகிறார்கள்.இச் சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தோழமைகள் தொடர்பு கொண்டு வருகையை உறுதிபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். வருகின்ற தோழர்களின் பட்டியல் முழுமையடைந்தால்தான் மேற்கொண்டு சில ஏற்பாடுகள் செய்ய வசதியாயிருக்கும்.எனவே காலம் தாழ்த்தாமல் தங்களின் வருகையை

உறுதி படுத்திக் கொள்ளுமாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம்..நன்றி..

          தங்களின் வருகையை உறுதி செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்:

      மதுமதி(தூரிகையின் தூறல்)-98941 24021

      பால கணேஷ்(மின்னல் வரிகள்)-73058 36166

      சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)-94445 12938

      புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)- 90947 66822

      சசிகலா(தென்றல்)-99410 61575
   

Friday 13 July 2012

உத்தரவின்றி...!



விழி பார்த்துப் பேசி
விரல் கோர்த்து நடந்து
முறையேதும் இல்லாமல்
முடிந்த  திருமணங்கள்!

முகம் சுளிக்க வைக்கும்
பார்வைகள்..
முன்னெதிரே முறைத்துப்
போகும் ஏளனச் சிரிப்புகள்...
தென்றலது வாசலை தீண்டுமுன்னே
தேவையெதுவென தெரியுமுன்னே!

முகம் சோர்ந்து
முன்னே வயிறும் தள்ளி
கால்  தடுமாறி நிற்க
அன்பாய் அருகிலிருந்து
அள்ளி அரவணைக்க
அன்னையவளும் இல்லாமல்
சோர்ந்து முடங்கிய  வேளையிலே
சேர்த்தணைத்து  தேற்றும்
தந்தையும் உடனில்லாது
அனாதையாய் நிற்கும் போதே
ஆறமர  யோசிக்கிறது நெஞ்சம்!

வாசலில் போய் நிற்காதே
நிலம் நோக்கி நடந்திடு
நேர்த்தியான எண்ணம் கொள்
நெஞ்சத்தில் உறுதி வை
வார்த்தையில் செழுமை வேண்டும்
விருந்தோம்பலில் சளைக்காதே
பிள்ளைகள் மாண்புறவே
தாயவளின் நன்மொழிகள் !
உள்நுழையும் காதலோ
ஒத்திவைக்கும் தேன்மொழிகள்!


Thursday 12 July 2012

பேச்சில் பெண்ணுரிமை !


பூந்தோட்டமெங்கும் ஆடும் வண்ணமலர்
சிந்தையிலோ மணம்வீசும் எண்ணமலர்
விழியிரண்டும் அலைந்தோடி காட்சிதனை
நிழற்படமாய்க் கொய்து மகிழ்கையிலே
வண்டினத்தோடு தேனீயும் போட்டிபோட்டு
தேனெடுக்க முயன்ற முயற்சி வென்றாலும்
மகரந்தம் சுமக்க இயற்கை அனுப்பிய தூதர்
அறியாமல் அவரோட்டம் அவனிவாழ்வுக்காய்!

மொட்டுவிரிந்து மலராகி மணம்பரப்பி நிற்க
இதழ் உதிர்ந்து காயாகி மறுஜென்மம் காண
ஒன்றிரண்டு மட்டும் தாய்மை வரமின்றி ஏங்கி
மொட்டுவடிவிலேயே குழந்தைக் கனவோடு
மலருக்கே இதுகொடுமை மனிதரில் இவர்கள்!
மலடியெனப் பட்டம்சூட்டி மனங்களை தீயிட்டு
படைப்பின் குறைபாட்டுக்கு பெண்ணை பலியாக்கி
நடத்தும் நாடகத்தின் பெயர்தான்-சமூகநீதியெனில்,
அந்தநீதி அழிவதுவே பொது தர்ம நீதியாகும்!

காட்சியிலோர் மாற்றம் பார்வையும் வேறாக
மங்கலமாய்ப் புறப்பட்ட திருமண ஊர்வலத்தின்
குறுக்கே ஓடிய பூனை அபசகுனம் ஆனதுபோல்
பெற்றோர்க்கு குலமகளாய் திகழ்ந்த மலர்கள்
ஊருக்குள் தேவதையாய் ஓடிய பூங்கால்கள்
வாழ்க்கைத் துணையைக் காலன் கவர்ந்ததால்
பொட்டின்றிப் பூவின்றி வெள்ளையாடையுடன்
கனவெல்லாம் போனவனோடு போட்டுப் புதைத்து
நடைபிணமாய்கண்ணீரெல்லாம் தலையணையில்
இருட்டோடு இருளாய் நாளெல்லாம் தவித்தழுது
வெளியே வந்தால் தீட்டு முண்டச்சி விதவை
அபச்சார வார்த்தைகளால் ஆயிரம் அர்சனைகள்!
விட்டொழிந்து போய்விட எண்ணி கயிறெடுக்க
அம்மா வேண்டாம்மா பிள்ளையின் அபயக்குரல்!
அவளுக்காய் இல்லை பிள்ளைக்காய் சுமைதாங்கியாய்
புன்னகையைக் கொய்தெடுத்த அந்தக் காலன் கொடியவனா?
பூமனமறியாத மாந்தரின் சயநலச் சட்டங்கள் கொடியதா?

பேச்சில் பெண்ணுரிமை ஏட்டிலவர் தேவதைகள்
இயல்பில் அடிமைவர்கம் வாழ்வில் பாலுண்ணிகள்
பேசாமடந்தைகளாய் வாழ்வையே சாபமெனஎண்ணி
வாடும் இவர்க்கெல்லாம் விடியல் மலர்ந்திடுமா?
எழுப்பிவிடயாருமில்லை எழும்பினால் பட்டங்கள்!
இதயமில்லா மானுடத்தின் ஓரக்கண் பார்வையிலே
உருகிவிழும் நட்சத்திரங்களாய் விழும் இவரின்
பாலைவாழ்வு சோலையாக பூவெல்லாம் கனியாக
சமூகத்தைக் கைகாட்டி தப்பிக்க முயலவேண்டாம்!
நான் நீ நாம் மாறின் நலம்பெறும் இவர்வாழ்வும்!!

Wednesday 11 July 2012

எங்கும் தமிழ் !



அம்மா என்றழைக்கும் அழகுபிள்ளைத் தமிழ்!
அன்பே எனவுருகும் இன்பக் காதல் தமிழ்!
ஆசை வார்த்தை தொடுக்கும் கவிதைத் தமிழ்!
ஆராய்ந்து கதை சொல்லும் காவியத் தமிழ்!

இனியதேனிசையாய் ஒலிக்கும் பாட்டுத்தமிழ்!
இறைமணம் பாடி பரவசமாக்கும் பக்தித்தமிழ்!
ஈத்தைக்காட்டில் உரசியூதும் குழலோசை தமிழ்!
ஈமச்சடங்கில் மாரடிக்க கேட்க்கும் புலம்பல் தமிழ்!

உறவெல்லாம்கூடி கூத்தாடும் கிராம குலவைத் தமிழ்!
உண்ணும் உணவூட்டப் பாடும் தாயின் ஆராட்டுத் தமிழ்!
ஊருக்கு ஊர் மருவிநின்று தமிழர்வாயில் தவழும் தமிழ்!
ஊமையாய் அழுது உவமையாய் மடியும் தமிழர் தமிழ்!

எண்ணத்தில் பூவாகி வண்ணமேந்தி ஓவியமாய் தமிழ்!
எட்டாத உயரத்தில் கட்டான மேனியுடன்மெய்த் தமிழ்!
ஏளனப்பாட்டாய் வெளிநாட்டார் பார்க்கும் தமிழ்!
ஏந்திழையாள் வயல் வெளியில்பாடும் கிராமியத் தமிழ்!

ஐந்தில் துவங்கி கற்றுக் கேட்டு ஆடிப்பாடிய பைந்தமிழ்!
ஐம்பதானபோதும் தமிழன் கல்லாத கற்பனையாய் தமிழ்!
ஔவைப் பாட்டி,வள்ளுவனார் இருவரியில் தந்த தமிழ்!
ஔடதம் என்றியம்பி நாம்பேசா அனாதை ஊமைத் தமிழ்!

அஃனிப்போர் நடக்கிறது தமிழ்வாழ வாழுமா நம் தமிழ்!
ஆஃகினை சூளுமுன் தமிழ்வாழ நினைத்தால் வாழும் தமிழ்!

Tuesday 10 July 2012

பூப் பூவாய் பூத்திருக்கு...!



வண்ணப்பூ
வாசப்பூ-வட்டமிடும்
கண்களிரண்டும் குவளைப்பூ !

எண்ணம் பூ-கவி
எழுத்தும் பூ-உன்
கன்னமிரண்டும் தாமரைப் பூ!

கனவும் பூ
கருத்தும் பூ-உன்
இதழ் உதிர்க்கும்
சொல்லோ ரோஜாப்பூ !

உணவில் பூ
உறவில் பூ-உன்
பார்வை காந்த(ல்)ப்பூ.

மனதும் பூ
மருந்தும் பூ-உன்
மவுனமோ மல்லிகைப்பூ!

Monday 9 July 2012

சிறைக்கு வெளியே...!



வண்ணப்பூ தான் நோக்க
அதனை வட்டமிடும்
வண்டினம் கவர்ந்ததென்ன?

மதியோடை சலசலக்க
ஓடும் நதியோடையும்
அழைத்ததென்ன?

ஒற்றைக்கால் தவமிருந்து
ஓரக்கண்ணால் பார்த்து நிற்க
செதில்களால் தனை மூடி
செம்மீனும் நழுவக் கண்டேன்.

அல்லி மொட்டதுவும்
இதழ் விரித்திடவே
ஆங்கே அரவமும்
நெளியக் கண்டேன்.

எழில் மிகு காட்சியெலாம்
எண்ணத்தை கவர்ந்து நிற்க
அந்தி சாயும் கதிரவனின்
அடி பற்றிப் போகும் மாடாய்
என் பயணமும்...!

Sunday 8 July 2012

கண்ணால் கவி பேசி !



இமையில் மை வைத்து
உனை இம்சிக்கும் 
எண்ணமில்லை.

வேல் விழியால்
உனை அழைத்து
என்னுள் வீழ்த்திடும் 
விந்தையுமறியேன்.

வில்லெனும் புருவத்தால்
க ணை தொடுத்தே..
கவர்ந்திடும் காந்தமுமில்லை.

தமிழில் கொஞ்சம்
வரியெடுத்து...-கிள்ளை
மொழி பேசி -பிள்ளையென
நானும் வந்தேன்.

கண்ணாளா நியும்
கண்ணால் கவி பேசி
கொங்கு தமிழாய் 
எனை நேசிப்பாயோ?

Thursday 5 July 2012

பார்வையில் ஜனனமின்றி !



ஆடி முடித்து பாடி முடிந்து
ஆசை தீர பார்த்து தீர்த்து
ஆடிபோக ஆவணி மலர
ஆராட்டுபாடி தாவணிபோக
ஆலாபலமாய் பட்டுடுத்தி
ஆசையோடு திருமணம்!

உற்றார் பெற்றார் நட்பு
சுற்றமென்று சொந்தம்கூடி
வாழத்துப்பாடி வழியனுப்ப
பிறந்த கூட்டுக்கு பிரிவெழுதி
எல்லாம் புதிதாய் ..பயம்சூழ!

காலை கதிரவன் வேறுதிசையில்
ஜன்னலின் பார்வையில் ஜனனமின்றி
காப்பி குடிடி அம்மா இல்லை
குழந்தையை தூங்க விடுடி
அரட்டும் அப்பாவுமில்லை
அடுப்பை ஏற்றி அடுத்து
என்னசெய்ய அறியாமல்நிற்க
சொல்லிக்கொடுத்து -அன்று!

ஓடியது முன்னால் வாழ்க்கை
உருண்டது பின்னால் காலம்
குழந்தைகள் கணவன் வேலை
கற்பனை கோட்டை மெதுவாய்
கனவோடு உறவாடி நிற்க
பறந்தது பத்து வருடங்களும்!

இன்பமும் துன்பமும் மாறிமாறி
நிலையற்ற வருமானத்தோடு ஓடி
மழலைகளின் எதிர் காலம் நினைத்து
இனிவழியில்லை என்றெண்ணி
கொலுசுப்பாதமும் சுமையைப் பகிர
இயந்திர கதியாய் இயல்பு வாழ்க்கை!

ஐந்தில்  கல்வி பயம்
பத்தில் பரீட்சை பயம்
பதினாறில் இளமை பயம்
இருபதில் மணவாழ்வு  பயம்
முப்பதில் எதிர்கால பயம்
நாற்பதுக்குள் தீருமா பயம்!

இனியொன்றுமில்லையென
தலைதாழ்ந்தபோது
ஆதரவாய் கைதட்டல்
நினைவுகளும் கனவுகளும்
கவிதைகளாய் துணையாக
ஏதோவாழ்வு நிம்மதி பெருமூச்சோடு!

Wednesday 4 July 2012

நீயென்ன பிறை நிலவோ?

விடையில்லா கேள்விகளே
விடைசொல்ல மாட்டாயோ?
இக்கரையில் தென்றலில்லை
அக்கரையில் புயல் மழையோ
காலத்தின் கைதிதானோ [விடை]

காலமெனும் கண்ணாடி
காட்டுகின்ற நிழலுருவில்
நீயென்ன பிறை நிலவோ
நீந்துவதுகண் நீரில்தானோ
பாலைதான் உந்தன்வீடோ![விடை]

ஆராட்டுப் பாடிய கைகள்
ஆசைவழிப் போனதாலே
சீராட்டிய இதயம் இங்கே
சிறகுவிரித்துப் போனதெங்கே
நெஞ்சத்தின் நிம்மதியெல்லாம்
கனவுகளின் சங்கமம் தானோ![விடை]

பாதைதேடிப் போகும் நெஞ்சில்
பாசங்கள் பனித்துளிப் போல
மாய்ந்தோடிப் போய்விடுமோ
மனமே மரணந்தான் உன்வழியோ
கனவே கலைந்தோடும் மேகமோ நீ![விடை]

ஆரம்பம் அழகாயில்லை
ஆசைகள் அலைகடலாக
ஆனந்த நாள் மலருமோ
காலம் கவிதைபாடுமோ
காட்சி மாலை சூடுமோ![விடை]

கலைந்தோடும் மேகம்போல
கடல் கலக்கும் நதியாய் நானும்
கரைந்தோடிப் போகின்றேன்
கரையெங்கே தேடுகிறேன்
கற்பூரமாய் எரிகின்றேன்[விடை]

பூவும் தானா பேசுது...!


அத்தை மகனேஅத்தை மகனேஆசை இல்லையா?
எனை பார்த்து பேசி போன நீயும் திரும்ப வரலையே!
அத்தை மகனேஅத்தை மகனேஆசை இல்லையா?
எனை பார்த்து பேசி போன நீயும் திரும்ப வரலையே!

பட்டுடுத்தி  நானும் நின்னேன் கசங்கிப் போனது!
பரிசம் போட வரலையேன்னு மதி மயங்கிப்போனது!
பட்டுடுத்தி  நானும் நின்னேன் கசங்கிப் போனது!
பரிசம் போட வரலையேன்னு மதி மயங்கிப்போனது!

தாழம்பூ தலைக்கு வச்சேன் தானா பேசுது
பூவும் தானா பேசுது...
தினம் மாமன் வரும் நாளை எண்ணி
மனசும் ஏங்குது.

Monday 2 July 2012

மத்தளம் !




அத்தானும் நீதானே
சட்டை பொத்தான போடாம..
நானும் பித்தாகிப் போனேனே!
                                (என் அத்தானும்)

அம்மிக்கல்லும்
கைக்கு அடங்காம
உருண்டு ஓடுதே!
உள்ளமும்  உருண்டு ஓடுதே!
                                (என் அத்தானும்)

ஆட்டுக் கல்லும்
எனை பார்த்து
அழகா சிரிக்குதே!
                         (என் அத்தானும்)

மத்தியான வேளையிலே
மத்தளம் கேட்குதே
காலி  குடமிரண்டு
மத்தளமடிக்குதே...!

               (என் அத்தானும்)

விக்கலடிக்கும் நேரத்திலும்
மனம் விம்மித்துடிக்குதே
உனை எண்ணித்துடிக்குதே!
                       (என் அத்தானும்)

குளத்துப்பக்கம்
குளிக்கப்போனேன்
மீனும் கும்மி அடிக்குதே
என் மனமும் துள்ளி குதிக்குதே !
                                   (என் அத்தானும்)

குறிப்பு :
 கவியரங்கத்தில் கலந்துகொள்ளும் தோழர்கள் 9894124021 மதுமதி(தூரிகையின் தூறல்)என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.வாசிக்கப்படும் கவிதை முப்பது வரிகளுக்கு மிகாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.