Tuesday 28 January 2014

பிள்ளையோடு பிள்ளையாய் !


குடம் குடமா நீர் ஊற்றி-வேர்
குளிர நனைய விட்டு
வளர்ந்து வந்த தென்னம்பிள்ள
வாரிசென வளர்ந்த பிள்ள.
கிளை அசைய கீற்றசைய
கீதம் கேட்கும் நெஞ்சினிலே
வருடி விடும் தென்றலாய்
வாரி இறைக்கும் பூவை பன்னீராய்..
தொண்டை நனைக்கும் இளநீராய்.
நிழலாய் காத்து நிற்கும்
நீண்ட நெடிய கதைகள் சொல்லும்
வானை முட்டும் ஆசையுடன்
வளர்ந்து விட ஆசைகொள்ளும்.
கீற்றாய் நாராய் காயாய்
அனைத்தும் கொடுத்து
பயன் தரும்...ஆசையுடனே
நம்மோடு இணைந்து வரும்..
ஆதலால் உறவுகளே
அனைவரும் பிள்ளையோடு
பிள்ளையாய் வளர்ப்போம்
தென்னம்பிள்ளையை !

Thursday 23 January 2014

சின்ன சின்ன ஆசை !


அவரைக்காய் கொடி படர
அழகாக பந்தலிட்டு
அதன் கீழே நீ அமர
அருகமர்ந்து நா பேச
ஆச வச்சேன் அருமை மச்சான் .

ஒத்தையடிப் பாதையில
எனை தொடர்ந்து நீ வரவும்
நடையும் தான் நாட்டியமாக
நாளுந்தான் ஆச வச்சேன் .

ஆள் உயர கண்ணாடி
அதன் பின்னே நான் ஒளிய
கரம் பிடித்து  நீ இழுக்க
கண் மூடி ஆச வச்சேன் .

அடுக்கடுக்கா ஆச வர
அம்மிக்கல்லா காத்திருக்கேன்
அன்பு  இருந்தா வாயேன் மச்சான்
அல்லிப் பூவா பூத்திடுவேன் .

Monday 20 January 2014

துரத்தும் நினைவுகள் !


துரத்தும் நிலவாய்
நினைவுகள்...
தூங்கிட விடாத
கனவுகள்...
நிகழ்வுகளை துரத்தி
சம்மணமிட்டு அமரும்
மௌனங்கள்...
உன் சாமத்தியத்திற்கு
முன்பு எதுவுமே
சாத்தியப்படாது தான்..
என்ன தான் செய்து
வைத்தாய்...
எதுவுமே புலப்படாது
எல்லாமே உன்னைச் சுற்றியே
தமிழே என் தாயே
தவிக்கவிடாதே எனை
தாங்கிக்கொள் உன் மடியில்.