Thursday 28 February 2013

அன்றும்...இன்றும் !


அன்பாய் தலைகோதி
ஆசையாய் வருடிவிட்டு
தாய் தந்தை உறவின் நடுவே
சேயதனை உணர்த்தும் விதமாக
கூந்தலை மூன்றாய் பிரித்து....
பின்னிப் பிணைத்து ...அம்மா
ஜடை போட்ட விதமெங்கே ?

இன்று

உதறிப் போகும் உறவுகளை
அள்ளி  முடியாக் கூந்தலும்
குறிப்பாய்  உணர்த்திப் போகுதோ ....?

Wednesday 27 February 2013

சொத்தான கனவெனக்கு !


சத்தான பேச்சுனக்கு-அதுவே
சொத்தான கனவெனக்கு...

பித்தாக அலையவிட்டு-பூங்
கொத்தாக மனதைக் கொட்டு. 

சித்திரமே நீயெனக்கு-சொற்
சத்திரமாய் ஆனாய் எதற்கு ?

கற்றிடவே பல பாடம்-உன்
சொற்ச்சொடரோ பூந்தடாகம்.

அன்னமே உன் முகமானதடி
கன்னமோ கவி பேசுதடி.

காற்றசைத்த பூங்கொடியே
கதை சொல்லிடுதே உன்நடையே.

நாற்றாடி நிற்பதுபோல் மனம்
காற்றாடிப் போவதென்ன!

ஆத்தாடி என்மனதிலென்ன
அலையாட்டம் போடறியே!

வாடிநிக்கும் பயிருக்கு
வாழ்க்கை தர வருவாயா

வான்மழையா பொழிஞ்சி நீ
வாழத்தான் வைப்பாயா!

கோழியும் கூவியாச்சு
பொழுதும் விடிஞ்சாச்சி

வாராயோ மன்னவனே
வானத்து அரசனாக


Monday 25 February 2013

காத்திருப்பு !


உச்சி வெயிலின் முன்பு
மலரின் காத்திருப்பாய்.

வறன்ட பூமியின் முன்
வானம் பார்த்த 
விவசாயின் காத்திருப்பாய்.

எலிப்பொறிக்கு முன்
பூனையின் காத்திருப்பாய்.

பனிப் போர்வையில்
மரத்தின் காத்திருப்பாய்.

ஜவுளிக்கடை வாசலில்
பொம்மையின் காத்திருப்பாய்.

இலவசங்களின் முன்பு
இன்றைய வறுமையை
தொலைத்து விடும் எண்ணத்தோடு
 நீளும் மக்களின் ..........

Friday 22 February 2013

அன்பின் தீர்ப்பு !


வீட்டுக் கூட்டம் ஊர் கூட்டம் என வீடு காலையிலே அல்லல் பட்டது.

      உறவினர்களாக அவதரித்த மனைவி முதல் மாமன்,  மச்சான்,  சித்தப்பா,  பெரியப்பா,  அத்தை,  சித்தி அனைவரும் ஏக குரலில் அந்த துரோகியை மன்னிக்கவே கூடாது என கொக்கரிக்க வீட்டுப் பிரச்சனை வீதிக்கிப் போய் ஊர்பிரச்சனையாகி மாலையில் ஊர்கூட்டத்தைக் கூட்டும் நிலை உருவானது.

பஞ்சாயத்து தலைவரின் கண்களில் அனல்பறந்தது இரண்டு பேரையும் கொண்டுவாருங்கள் என்ற கட்டளையில் கொன்று வந்தாலும் பரவாயில்லை என்கிற தொனி எதிரொலித்தது.

கைதிகளைப் போல கொண்டு வரப்பட்ட இருவரும் 'கைகட்டி நிற்க' விசாரணை ஆரம்பித்தது.

நம்ப ஜாதியென்ன, குலமென்ன கோவில் பூஜாரியின் மகன் தாழ்ந்த ஜாதிக்காரிய கட்டினா என்ன தண்டனை தெரியுமா ?

துப்பு கெட்ட பைய நம்ம குடும்பத்துல குலத்துல வேறே பொண்ணே இல்லைண்ணா இவளை இழுத்து வந்திருக்கான்.

இதுக்கெல்லாம் விசாரணையே வேண்டாம் பேசாம செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊரவிட்டே விரட்டிவிட வேண்டியது தான்.

கொஞ்சம் லட்சணமா இருந்தா கூட பரவாயில்லை கரிக்கெட்டை மாதிரி ....சே! என்ன ரசனையோ ? காதல் கத்தரிக்கா என்று ...மாமி அரற்றினாள்.'

என்ன ? பூஜாரியாரே ! பெத்த மகன்  என்றதும் கலாச்சாரம் ஆச்சாரமெல்லாம் காணமல் போயிருச்சா.. நீர்தான் தீர்ப்பு சொல்லனும்... நம்ம குலப்பெருமை கெடாம சொல்லும்.

ஆழ்ந்த சிந்தனையோடு அதுவரை அமைதியாக உறவு, உற்றார் உறவினர்,  ஊர் சொல்லும் சொல்லம்புகளைத் தாங்கிய அவர் ஆரம்பித்தார்.

பெரியவங்க எல்லாரோட கருத்துக்கும் நன்றி. இது என் வீட்டு சமாச்சாரம் கோவில்ல இருந்து சாமிய ஊர் கோலம் கொண்டு போவதைப் போல ' சாமியே சரணம்' என்று வாழ்ந்த என்னை தெருவிக்கு கொண்டுவந்துட்டிங்க.  எனக்கு தெரிஞ்சதெல்லாம் கடவுள் மட்டுந்தானுங்க மனுஷன் எழுதிய சட்டத்தில் ஒருத்தர ஒருத்தன் அடிமைப் படுத்துவது எப்படி என்கிற சித்தாந்தமே நெறஞ்சிருக்கு.  உறவுக்குள்ள போட்டி,  ஊருக்குள் சண்டை , உறவுக்கே போட்டி இப்படியென்று எங்கும் எதிலும் கறைபடிஞ்சி போயிருச்சி.  யார் ? யாரை வெல்ல ஓடுகிறோம் பெத்தவரையா ?,  மத்தவரையா ?  யாரு யார ஜெயிச்சாலும் தோக்கப் போரது ஒரு மனுஷ மனந்தாங்க ஆளுக்காலு ஏதோ பேச நீங்க நான் வெல்ல வேணும்,  என்னோட வார்த்தை ஜெயிக்க வேணுங்கிற வெறி உள்ள யாரும் எதையும் வெல்ல முடியாதுங்க.... மரணத்த வெல்லயாராவது வழிவச்சிருக்கிங்களா ?  அவங்க சொல்றதை நான் கேக்கிறேன்.

  என் பையன் ரொம்ப நல்லவனுங்க.  அந்த பொண்ணு அநாதையா நின்னப்ப கரை சேர்க்க துடுப்பாய் கைபிடிச்சிருக்கான்.  அவன் செய்தது நியாயம் தானுங்க.  நான் ஆண்டவனோட சந்நிதானத்திலே சேவகம் செய்து கிட்டு.  நல்லதை தடைசெய்ய முடியுமா ?  ஜாதி மதம் இனம் சோறு போடாதுங்க வாழ்க்கையில தேவை நிம்மதிதானுங்க.  அது அவனுக்கு கெடச்சிருக்கு...துண்டைத் தோளில் போட்டு கம்பீரமாக தன் மகனையும் மருமகளையும் கைபற்றி நடக்க ஆரம்பித்தார் அந்த அன்பு அப்பா.  இயற்கை சில்லென்ற காற்றை வீசி சிரித்தது.


Tuesday 19 February 2013

எமனை அழைக்கும் மானுட வர்க்கம் !




-- இதம் தரும் காற்றை
கட்டிட இடிபாடுகளுக்குள்
தொலைத்து விட்டு...

கடல் அலை தேடி 
ஓடும் காலமிது.

புழுதி பறக்கும் சாலையில்
உயிர் பிழைக்க
புகலிடம் தேடும் 
இயற்கை காற்றும்...

வாகன புகையில்
சிக்கிச் சிதைந்து
சின்னா பின்னப் பட்டும்
தன் பணியை செய்யும்
பிரான வாய்வாக.

வாசலில் வந்து நிற்கும்
காற்றை தாளிட்டு மூடி
வஞ்சகரை விரட்டுவது போல்
ஜன்னலுக்கும் திரைச் சீலையிட்டு
காற்றை விரட்டி..
ஏசி அறைக்குள்
எமனை அழைக்கும்
மானுட வர்க்கம்.

Sunday 17 February 2013

ஏ...புள்ள தென்றல் காத்து !



ஏ...புள்ள தென்றல் காத்து
உனப்பாத்து நாளாச்சி!
உன்னினைப்பில் களமேட்டில்
கண்ணுறக்கம் போச்சிதாயி!
வெள்ளரிப் பிஞ்சிருக்கு
மஞ்சளும் வெளஞ்சிரிச்சி
உனையிங்கே காணாம
மல்லிக்கொடி பட்டுப்போச்சி!
பேறுகால பேரச்சொல்லி
தாய்வீடு போனபிள்ள இங்க
பனங்காட்டு நரியைப்போல
பிரிவுவந்து படுத்துது தொல்ல!
பூன்னகப் பூவையணிந்து
நீகொடுத்த காந்தாரி
இனிப்பதை அள்ளித்தர
நான் வச்ச அயிரமீனும்
விரைக்குது ஏனோபுள்ள!
எப்படி நீ இருக்கே தாயி?
காத்திருக்கேன் வரவைஎண்ணி!
சித்திரையில் வரும்போது
சின்னத்தாய கூட்டிவரணும்!
அடியாத்தி மறந்துபோச்சி
அத்தைகிட்ட சொன்னதாசொல்லி
ஆட்டுகாலு சூப்புகுடிடீ!
உச்சியில நல்லெண்ண வச்சிநீயும்
உச்சிவெயில் போகாத
உனக்கது ஆவாது 
சொன்னது கேக்கவேணும்!
 நீராட ஆத்துக்கோடி
படித்துறையில் இறங்கும்போது
பாத்து காலவையிபுள்ள
பாசியிருக்கும் கவனிச்சுதாயி!
சந்தனக் கட்டச் செதுக்கி
தொட்டில்போட வச்சிருக்கேன்
தங்கமே உன்வரவையெண்ணி
ராப்பொழுதா பாத்திருக்கேன்
சீக்கிரமா வாடி புள்ள
மாமன் நான் காத்திருக்கேன்!
அச்சசசோ விட்டுப்போச்சி
இன்னுமொண்ணு சொல்லவிருக்கு....

Friday 15 February 2013

நெருங்கிடாதே தொலைந்திடுவேன் !


இருளடைந்த இதயத்திலும்
நுழையும் காற்றாகிறாய்
தீப்பொறி பார்வையால்
தேகத்தை எரிக்கிறாய்
நீ என்ன செய்தாலும்
ரசிப்பதைத் தவிர
வேறெதும் செய்ய
முடிவதில்லை.



தினம் தினம்
பார்வையால் மெல்ல
தின்றவனே...
இதயத்தை ஏன் எரித்தாய்
ஆனாலும்
இனிக்கவே செய்கிறது
உன் நினைவு .


துரத்தும் பார்வையே போதும்
நெருங்கி விடாதே..
தொலைந்து விடுவேன் உன்னில்.


சுமையென ஏதுமில்லை
சுகமாக உன் நினைவிருக்கும் வரை...







Thursday 14 February 2013

கட்டிப்போட்ட பரிசலாக !



கட்டழகி சிட்டழகி
பட்டாம்பூச்சி பேரழகி
மாமனோட மனசுக்குள்ள
தூரல்தூவிப் போவதென்ன!

சின்னத்தாயி செல்லத்தாயி
சேதியென்ன சொல்லுதாயி!
நாவுதிரிச்ச வார்த்தையிலே
நரம்பெல்லாம் நோகுதடி
ஊர்வாய் கட்டிப்போட
கயிறொன்று கொண்டுதாடி!

வாழநார் எடுத்துவந்து
பூதொடுக்க வச்சிருக்கேன்
மாலையாய் கோர்ப்பதற்கு
வானம்விட்டு வாராயோ!

காக்கா கடி கடிப்பதற்கு
மாவுருண்டை கொண்டுவாடி
கூடிவாழும் எறும்புக்கும்
கொஞ்சமதில் கொடுப்போம் புள்ள!

குற்றுயிர் குலைஉயிரா
நண்டொன்று கண்டேனடி
தன்மகவே அதையுண்ணும்
கொடுமையும் பாத்தேனடி!

காலமது நம்மை விழுங்குமுன்னே
காத்திருக்கேன் வரவையெண்ணி
கட்டிப்போட்ட பரிசலாக .

இயந்திரமாய் மனிதனின் தேடல்கள் !


இரைதேடும் அரவமாய் பார்வையேந்தி
இமைதேடும் காட்சியெனில் இருளோடு
இதயமது உறவுகொண்டே இப்புவியில்
இனிதும் தீதாகி இறக்கும் நல்லுறவும்!
இதிகாச காலத்திலும் கசப்புக்கு பஞ்சமில்லை
இடியோசையாய் தீமை சீதைக்கு சோதனை
இரப்போராய் புலவர்கள் புகழ்பாடிப் பிச்சை
இருப்பவனவனுக்கு ஆயிரம் பெண்ணடிமை
இக்காலம் கலிகாலம் கனவில்தானே வாழ்வு
இதயத்தையும் விற்கின்ற மடமையே மாண்பு!
இதயக்கூம்பினிலே உருண்டோடும் சென்னீர்
இயம்பிடும் கதைகளை யாரிடம் சொல்லியழ
இரவுமடிப் பிள்ளைகளாய் உறவு போகிறது
இறந்துபோன சாயலில் மனிதகுலம் அலைகிறது
இலையுதிர் காலமாய் மௌனங்கள் மாய்கிறது
இறவாமையெதுவென்று அறியாமை கேட்கிறது
இரவலாய் வாங்கிட நல் அன்பும் இங்கில்லை
இனிமையெனக் கொடுத்திட பாசமும் நமதில்லை
இல்லார் மனமில்லார் கொண்டவராய் இருக்க
இதயமுள்ளார் கொடுக்க ஏதுமின்றித் தவித்திருக்க
இனமானச் சண்டையிலே அரசியல் அரங்கேற
இந்தியத்தாய் கண்ணீரில் இமயமும் மூழ்கிவிட
இரக்கமும் உருக்கமும் காசுபணம் கேட்டுநிற்க
இனியில்லை வாழ்வுஎன படித்தவரும் துடிக்க
இச்சைகளும் ஆசைகளும் திராவகமேந்தி அலைய
இம்சைகளும் சோகங்களும் தொடர்கதை என்றாக
இயற்கையும் இளமையும் பாலையாய் வேஷந்தாங்க
இறப்போர் உரமாகி உருமாறிப் பிறந்து உயிரூட்ட
இன்றைமறந்தே நாளையென்ற நம்பிக்கையாய்
இரவும் பகலும் சூரிய சந்திரனுமே தானேஇயங்கிட
இயக்கமாய் இயந்திரமாய் மனிதனின் தேடல்கள்
இளைப்பாறல் எங்கே அறியாமல் போகின்றோம்
இங்கே வந்ததுண்மை அங்கே போவதும் உண்மை
இருக்கின்ற கல இறவாசெயலெது மனிதநேயம்
இதன்பொருளெது அதுவும் நம்மில் கேள்வியே!

Tuesday 12 February 2013

ஆசையதன் தேடலில் !


ஆரவாரப் பேய்வடிவில் தீமை வந்து பாடிநிற்க
ஆர்ப்பரிக்கும் அலையாக வறுமையது மடிவாழ
ஆணிவேர் பசியது ஆடுமாட்டம் தொடர்கதையே!
ஆக்கியோனினும் சரியில்லை ஏனிந்த பாகுபாடோ?
ஆக்கினையின் ஆதி மதம்பிடித்த பொய் மதம்தானோ!
ஆகாய கங்கையது தன் ஒழுக்கை நிறுத்தி விட்டால்
ஆணென்ன பெண்ணென்ன அழுக்கு மூட்டைகளே!
ஆராட்டும் சீராட்டும் இருப்பவரின் சீதனங்கள்
ஆசையும் இதிலடங்கும் எல்லாமும் மாயங்களே!
ஆவலும் காவலும் நமதென்ற நமது பண்பாடே
ஆணவமும் அடக்கமும் அன்புவழியின் உடன்பாடே!
ஆற்றாமை அறியாமை இல்லாமை கல்லாமையென்ற
ஆமைகளே துன்பந்தான் இவை அழிவு வேதந்தான்!
ஆறறிவு மனிதர்கள் சுயநல வாழ்வுக்கு ஆரம்பம் ஜாதிதான்!
ஆங்கொரு நிழலின் பயத்தில் ஆயிரம் காப்பு தெய்வங்கள்
ஆருயிரை தந்தவர்யார் அறியவே மத ஆச்சார பேதங்கள்
ஆங்காங்கே பிரிவினை விதையூன்றும் மார்க்கங்கள்
ஆசாமிசிலர் வாழ அபச்சாரமாய் கூற்று பிரிவினைகள்!
ஆக்கினையெதுவறியாமல் தீவிரமாய் போதனைகள்
ஆள்பவரும் தரமாட்டார் ஆண்டவனும் பட்டினி தீர்க்கவில்லை!
ஆடுகளின் புல்மேச்சல் உழைப்பால் வந்த பயன்கண்டேன்
ஆசைமன மேய்வுகளில் பாசங்களும் சுயம்வாழ வழியாக!
ஆரத்துக்குயிர் கொடுக்கத்தானே வண்ணபூவின் மரணங்கள்
ஆனந்தமாய் நாம் வாழ கொலைகளமேறும் நீதி இதுவிதி
ஆசையதன் தேடலுக்கு அடமானமாய் மனித மனச்சாட்சி
ஆண்டவனை சென்றடைய பலவழியில் கறை எண்ணம்
ஆழ்மன மாசுநீங்கின் அனைத்துமிங்கு நலமென்பேன்
ஆண்டானடிமை உள்ளவரை நீதியின் வாழ்வு கேள்வியே!

Sunday 10 February 2013

புரியாத புரிதல் !



உன் மனவானில்
அமாவாசை என்று தெரியாது
வாசலில் தரிசனத்திற்கு
காத்திருக்கும் நிலவு நான்...

நிதர்சனம் உணராமையால்
என்னற்ற நட்சத்திரங்கள்
ஏளனப் பார்வையுடன்.
புழுங்கிக்கொண்டிருக்கிறேன்
உன் விரலிடுக்கில் இருந்து
வெளி வரமுடியாதபடி...

இடிச்சிரிப்பில்
மின்னலாய் உமிழ்ந்து போகிறாய்
என் மீதான வெறுப்பை
எனினும்...
உன்னில் வளர்ந்தும்
தேய்ந்தும் என் நினைவுகள்.

Friday 8 February 2013

அற்பமாய் ஓர்வாழ்வு !


அற்பமாய் ஓர்வாழ்வு அடுப்பிலுரங்கும் பூனையாய்
அத்தனையும் நீர்கோடு நீரெழுதிய கவிதையாய்
அடங்காத தாகங்கள் அழுக்கான மோகங்கள்
அவசரகதி வேடமேந்தி அணியாய் பொய்முகங்கள்!

அச்சத்தில் கொஞ்சம் மிச்சம் அடுத்த தலைமுறைக்காய்
அறிவென்ற அழிவு மாலை கோர்ப்புகளாய் வளமென
அக்கினிப் பிரவேசங்கள் வரவோ துவேஷங்களாய்!
அத்தனையும் கதிகேடு அற்ப வாழ்வின் உடன்பாடு.

அரைநிர்வாணமாய் அலைகின்ற கலாச்சார சீர்கேடு!
அரக்க குணமணிந்தே அகலமதில் நம்வாழ்வோட்டம்
அனாதையாய் வாழுதிங்கே அன்பென்ற பூந்தோட்டம்!
அடிமாடு தேடுகின்ற அவலமாய்த் திரு மணங்கள்.

அடக்கமெனும் பெயர்சூடி அடிமையாய் பெண்ணினங்கள்!
அறமதன் சிரம்தாழின் நாட்டில் அவலங்கள் அரங்கமேறும்
அழகே வாழ்வாயின் வீட்டில் வறுமைதானாய் குடியேறும்!
அடிமையாருமில்லை ஒருவர்கொருவர் அன்புத்துணையே.

அதுமலரும் நாள்வரின் அன்னாள் வாழ்வில் பொன்னாளே!
அறிவில்லா குருவிகூட தனக்கென்றோர் பொற்கூடுகட்ட
அறிவில் சிறந்த மனிதனோ ஆசையினால் தானுயர
அன்பின்றி பண்பின்றி கட்டிவைக்கும் மாளிகைகள்.

அவனுடையதோ எண்ணின் அதுபாழ் மண்டபமாய்!
 அன்பை பண்பை அணிந்து  வளர்த்தல் வேண்டும் 
அழியாவரம் வேறேதுமில்லை கிடைப்பதைப் பகிர்தலும்
அன்றாடம் வாழ்ந்திட உழைத்து கொடுத்து உண்பதுமே.

Thursday 7 February 2013

சத்தமில்லாது விழுங்கிவிடு !



மண் உழுத விவசாயி
மண்ணாய் போகும் நிலை வாழின்
இந்த இரவு விடியாது போகட்டும்.

கருவறை ஆய்ந்து பார்த்து
பெண்ணை கல்லறைக்கு
அனுப்பும் பெண் கொடுமை
தொடரின்...
இந்த இரவு விடியாது போகட்டும்.

மதம் என்னும் பித்து
மனிதனை பிடித்து
மதவெறி தொடருமெனில்
இந்த இரவு விடியாது போகட்டும்.

எவரிலும் எங்கும்
 சுயநலமே வாழ்ந்திருக்க
அன்பெனும் வார்த்தையே
மனதில் இல்லாமல் போகுமெனில்
இந்த இரவு விடியாது போகட்டும்.

பச்சிளம் குழந்தைகளின்
பாலியல் கொடுமைகள்
பலாத்காரமாய் தொடருமெனில்
இந்த இரவு விடியாது போகட்டும்.

மெத்த படித்து விட்டு
மேல் நாட்டு மோகம் கொண்டு
தாய் நாட்டை மறப்பவர்
நிலை தொடருமெனின்
இந்த இரவு விடியாது போகட்டும்.

பெற்றவரை தவிக்க விட்டு
தரணியில் ஒழுக்கம் குறையுமெனில்
இந்த இரவு விடியாது போகட்டும்.

விடியாத இரவுக்கு ஏன்
சந்திர சூரியன்...

சூரியனே சுட்டெரிக்கும்
பார்வையால் தீமைகளை
அழித்து நன்மை புரிவாயோ ?
இல்லாது போயின்..
ஏ.. சந்திரனே
சத்தமில்லாது விழுங்கிவிடு
உலக உருண்டையை...

Tuesday 5 February 2013

மீனவனின் காதலி !



மழை பார்த்து நாளாச்சி
மன்னவனே 
உன் முகம் பார்த்தும் யுகமாச்சே
சாரல் வந்து நனைக்கையிலே.

சந்தணமா உன் நினைவு
மண் அரிச்ச சுவறாட்டம
மனசரிச்சி போனவறே
நெனப்பெடுத்து உடுத்திகிட்டே
நீண்ட நாளா காத்திருக்கேன்
நித்திரையும் மறந்துடுச்சே
நீ வந்த கனவதனால்...

துப்பட்டாவும் தேடிடுதே
தூரப் போகும் நிழலையுந்தான்
கண்ணடிச்சி போனவரே
கண்ணாமூச்சி ஆட்டமெதுக்கு
சொல்லிடவே வார்த்தையில்ல
சொல்லிபுட்டா நாணமில்ல
மடி சாய்ந்து நானுறங்க
நாளிருந்தா வெரசா வந்து சொல்லிப்போயேன்.

Monday 4 February 2013

என்ன காதலோ ?



உள்ளுர ஏதோ ஒரு உணர்வு
நீ வந்திருப்பதை உணர்த்தினாலும்
எதிரில் வந்து நிற்க நாணி
கதவிடுக்கில் கர்ணமடித்துக்கொண்டிருக்கும் காதல்.

கை விரல் மெதுவாக
கதவை துணைக்கழைத்து
கால்கள் ஆற்றுப்படுகையை
தொடுவதைப்போல் அசைய...

இடையோ மெல்ல மெல்ல
இருப்பதை மறந்து...
எங்கோ
இடுக்குகளில் சிக்கிக்கொண்ட
நடையை நீண்ட ஒப்பனைகளின்
சிரமத்திற்கு நடுவே...
கொலுசொலி கேட்காமலும்
கொஞ்சலும் கெஞ்சலுமாக..
உனை நெருங்க....

ச்சீ...கனவில் கூட 
உன்னருகே வர இத்தனை 
அவஸ்தையை அனுபவிக்க வேண்டி இருக்கிறதே

என்ன காதலோ ?

Sunday 3 February 2013

அக்கம் பக்கம் பேசாதவரா நீங்கள் ?

கிராமப் புறங்களில் பொதுவாக ஒரு பழக்கம் எவ்வளவு ஓடினாலும் கிடைக்கும் நேரத்தில் அக்கம் பக்கத்தில் சகஜமாக ஒருவருக்கொருவர் பேசிப் பழகி அவங்க வீட்ல என்ன குழம்பு இவங்க வீட்ல என்ன குழம்பு என்பது வரை தெரிந்திருக்கும் இது இன்றைய கால கட்டத்தில் வெட்டிப் பேச்சு வீண் வம்பு என்பது பரவலாக இருக்கும் கருத்து. இதில் எனக்கு உடன்பாடில்லை.

 என்ன வாழ்க்கை இது சம்பாதிக்கனும் சாப்பிடனும் புருசன் பொண்டாட்டி பிள்ளைகள் இவர்களுக்கு இடையே பெற்றவர்களையும் சேர்ப்பதில்லை இன்றைய உறவுகள். இதனால் கிடைப்பதென்னவோ குறுகிய மனப்பான்மை தான் இதனால் அக்கம் பக்கத்தில் யார் இருக்கிறார்கள் பெயர் ஊர் கூட தெரியாத நிலை தான் இருக்கிறது.

 கிராமப் புறங்களில் ஒரு தபால் வந்தால் இன்னாருக்கு என்று வாங்கி வைத்து கொடுப்பார்கள் இன்று நாம் வீட்டில் இருந்தாலும் அப்படி யாரையும் தெரியாதுங்க என்ற பதிலால் நான்கு தெரு சுற்றி திரிந்து நம் கைக்கு வருவதற்குள் ஒரு வழி ஆகிவிடுகிறோம்.

 இந்த சூழலில் ஒரு சம்பவம் ஒரு காம்பவுண்டில் எட்டு குடித்தனங்கள் வசித்து வந்தனர் அதில் கிராம புறத்தில் இருந்து குடிபெயர்ந்த ஒரு குடும்பத்தலைவி அங்கிருந்த மாதிரியே அக்கம் பக்கத்தில் நன்றாக பேசி பழகி வந்தாங்க. நாகரீக முறையை விரும்பும கணவர் தினமும் இது தவறு எதற்கு அக்கம் பக்கம் பேசி வம்பை விலைக்கு வாங்குகிறாய் என திட்டி வந்திருக்கிறார் இந்த நிலையில் ஒரு நாள் இரவு அவர்கள் வீட்டிற்கு ஒரு விருந்தினர் வருகிறார் தான் காலையில் சோலிங்கர் செல்வதாகவும் இவர்கள் குடும்பத்தையும் அழைக்க வந்ததாகவும் சொல்ல இந்த பெண் சரி யாருக்கும் சொல்ல வேண்டாம் கணவருக்கு தெரிந்தால் திட்டுவார் என்பதால் யாரிடமும் எந்த தகவலையும் சொல்லாமல் அதிகாலை பயணம் சென்று விடுகிறார்கள் .  பேருந்து நிலையம் வந்த பிறகு தான் தெரிகிறது கணவன் மனைவி இருவருமே தனது செல் போனை மறந்து வந்தது. சரி யார் நம்மை அழைக்கப் போகிறார்கள் என்று அப்படியே கிளம்பி விடுகிறார்கள்.  திடிரென்று உறவினர் ஒருவர் செல்லில் அழைத்துள்ளார் இருவர் செல்லும் பதிலளிக்காததால் அச்சமுற்ற உறவினர் அனைத்து உறவினருக்கும் தொடர்பு கொண்டு விசாரித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில் குழம்பி மற்ற உறவினர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு அவர்கள் இல்லம் சென்று பார்க்கிறார்கள். அக்கம் பக்கத்தில் விசாரிக்கிறார்கள் . நல்லாதான பேசிட்டு இரவு உறங்கப் போனாங்க என்ன ஆச்சி தெரிய வில்லை. காலையில் வீடு பூட்டி இருப்பதாக தகவல் கிடைக்கிறது.

 இந்த நிலையில் அவர்கள் உறவினர்களில் ஒரு குடும்பத்தினர் சிறிது நாட்களுக்கு முன்பு தான் பூட்டிய வீட்டிற்குள் இறந்து கிடந்ததை நினைவு படுத்தி பதறி ஜன்னல் கதவு துவாரங்களை ஆராய்து செல் மட்டும் அலறும் சத்தம் கேட்கிறது . மற்றபடி எந்த தகவலும் இல்லாததால் தவிக்கின்றனர். கடவுளுக்கு நேர்ந்து கொண்டெல்லாம் தேடலில் இருக்கும் நிலையில் மாலை 5 மணி அளவில் சுமார் 1400 படிகளை உடைய மலையடிவாரம் அடைந்த நண்பர் சரி பக்கத்தில் இருக்கும் உடன் பிறந்த தமக்கைக்காவது தகவலை சொல்வது சிறந்தது என நினைத்து செல்லில் அழைக்க என்ன நடந்திருக்கும் நினைத்து பாருங்கள். தகவல் அறிந்ததும் நிம்மதி ஒரு புறம் அவர்களுக்கு இருந்தாலும் காலை முதல் மாலை வரை அலைக்கழித்த நிலையால் சரியான வசவு. வீட்டிற்கு வந்ததும் அக்கம் பக்கம் முதல் உறவுகளிடையேயும் நீண்ட நாட்களுக்கு நகைச்சுவையாக அலசப்பட்டது இந்த நிகழ்வு. இந்த நிலை இப்படி தனித்திருக்கும் இக்கால குடும்ப சூழலுக்கு தேவையா என்பதை சற்றே சிந்தியுங்கள். எங்கோ தொலைவில் இருக்கும் உறவினர்களை விடவும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தான் ஆபத்தில் உதவுபவர்கள் என்பதை உணர்ந்து அளவோடு பேசி பழகி நட்புறவை வளர்ப்போம்.