Friday, 28 June 2013

ஆயுட் கால தேடல் !


காற்றின் அசைவில்
ஒவ்வொன்றாய் உதிர்க்கும் 
ரோஜா இதழாய் உன் வார்த்தைகள்
முழுவதுமாய் உதிர்த்துப்பார்க்க
ஆசையில்லை மௌனத்தையே
கொடு போதும்.
**************************************************

- உன் மவுனத்திற்கான
அர்த்தத்தை தேடுவதிலேயே
என் ஆயுள் கழிந்துவிடும் போல.
*****************************************************

தென்னங்கீற்றசைய
மெத்தையாய் 
உன் மடியிருக்க
எதையாவது 
பேசித் தொலைக்காதே
காதலுக்கு மயக்கம் 
தெளிந்து விடும்.
*******************************************************

உன் மௌனம் தான்
என்னில் .... 
கோபத்தையும்
வெட்கத்தையும்
ஒரு சேர கொடுத்துவிடுகிறது.Tuesday, 25 June 2013

எழுத நினைத்த காதல் கடிதம் (திடங்கொண்டு போராடு பரிசுப்போட்டி )


என்னை புதுப்பித்த புதியவனுக்கு  அன்புடன் சசி....
வார்த்தைகளற்ற பிரரேசத்தில் பார்வையாலே பல புரிதல்களை பரிமாறிக்கொண்ட காலம் அது. அங்கு நாம் அறிமுகமாகிக்கொண்ட போது....

அற்புதமாய் அலங்கரிக்கப்பட்டு
வடம்பிடித்து இழுக்க 
காத்திருக்கும் தேராய்
இதய வாசலில் நிற்கும்
வார்த்தைகள் உன் 
பார்வைப் புயலில் சிக்கி
திரும்ப மௌனக் கூடாரத்திற்கே 
சென்றுவிடுகின்றன.

எந்த காந்தமும் கவர்ந்து விடாத என் இதய மலரை இரும்பாக்கும் சக்தி உன் விழிகாந்தத்திற்கு எப்படி வந்தது என்றே தெரியவில்லை. 
முதன் முதலாக உனை மலர் கண்காட்சியில் வைத்தே சந்தித்தேன்.

வண்டொன்று நடக்கக் கண்டேன் 
வாஞ்சையோடு நோக்கக் கண்டேன்
வார்த்தையில் சரம் தொடுத்து 
வானவில்லுக்கு சூடக் கண்டேன் 
கம்பீரம் உன் நடையில் கண்டேன் 
 தமிழ் காதல் உந்தன் 

காந்தவிழிப் பார்வையில் கண்டேன் .

நம்மை நமக்கு அறிமுகம் செய்து வைத்ததே நண்பர்கள் தான். கேலியும் கிண்டலுமாக தொடர்ந்த நம் உறவு நம்முள் எப்படி காதலை விதைத்தது என்றே இது வரை தெரியவில்லை. நம்மில் யார் முதலில் காதலை சொன்னது என்று நண்பர்கள் கேட்கும் போது யார் என்று சட்டென சொல்ல முடியில்லை.
கிணற்றடியில்
குயிலின் கீதத்தில்
மயிலின் நடனத்தில்
மாந்தோப்பு சந்திப்பில்
மன்னார்குடி பேருந்தில்
மழலையின் சிரிப்பில்
மகரந்தப் புன்னகையில்
எங்கு தேடியும் கிடைக்காத நீ
என்னுள் எப்போது வந்தாய்!
தேடலில் கிடைத்த
வைரம் நீ...
தீண்டலில் சுகம் தரும்
தென்றலும் நீ...
மணம் வீசி அழைக்கும்
மலரும் நீயே
மயக்கியது போதும்...

ஆம் ! நம்மை அறிமுகம் செய்து வைத்த நண்பர்கள் தான் நம்மிடையே உள்ள காதலையும் நமக்கு அறிமுகப்படுத்தியது. அந்த நாள் உனக்கு நினைவிருக்கும் என்றே நினைக்கிறேன்.

நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி ராக்கி கட்டிக்கொண்டோம்சட்டென குறும்பாக சுரேஷ், அண்ணா! இங்க வாங்க!! ன்று உங்களை அழைத்து, எனையும் ருகே அழைத்து, அக்காவுக்கு இதைட்டுங்க என்றான்இதயம் படபடக்க நானும் அமைதியாக நின்றேன்உன் கோபப் பார்வையால் அவனைச் சுட்டாய்! எனக்குள் அமுதம் விட்டாய்!!


சிரித்து மழுப்புகிறாய் 
சில நேரம் 
முறைத்து மறுக்கிறாய் 
பல நேரம் 
பாசாங்கு செய்து ஓடுகிறாய் 
என்றுதான் சொல்லப்போகிறாய் ...? 
உனக்கே உன் காதலை .

அப்பப்பா அன்றிலிருந்து இரண்டு நாட்கள் காணவில்லையே உங்களை . ப்படி காதலை உங்களுக்குள்ளேயேவைத்து ஏன் தவித்துக்கொண்டிருந்தீர்கள்?
இன்னும் எத்தனை
நாட்களுக்கு மௌனத்தோடு
மல்யுத்தம் செய்யப்போகிறாய் ?
காதலை சொல்ல 
நீ தவிப்பதையும்
தாங்க முடியாதவளடா நான் !ஒவ்வொரு முறை உனை பார்க்கும் போதும் உன் பார்வைகள் உணர்த்திவிடுகின்றன எனை தேடும் உன் தவிப்பை.  உன்னை நொந்து கொள்ளும் என்னால் மட்டும் முடிகிறதா ? உன் அருகாமையில் ஓரிரு வார்த்தை பேசவும்.

உன் மூச்சுக்காற்று
உரசும் வரை உணர்ந்ததேயில்லை
தென்றலின் அருகாமையை.

பட்டாம்பூச்சி பிடித்து
மகிழும் மழலையாய்
உன் பார்வைக்கு முன்பு
நிற்க முயன்று 
தோற்றுக்கொண்டிருக்கிறேன்.

 அதற்காகவே தனி இடம் தேடித்தேடி அமர்கிறேன். நினைப்பதையெல்லாம் எழுதி உன்னிடம் கொடுத்து விட பாரேன்....

உன் நினைவுகளை
குடித்தே நிமிர்ந்து நின்று

உறங்கி விழுகிறது பேனாவும்....

நம் இருவருக்குமே பரிட்சையமான நண்பர்கள் தான் எனினும் எப்போதும் உன்னுடனே சுற்றிக்கொண்டிருக்கும் அவர்களால் என் நினைவு கூட உன்னுடன் கை கோர்த்து நடக்க அஞ்சுகிறது. தனிமையான சந்திப்பை எதிர்பார்த்து காத்திருந்த போது...
காற்றோடு .. 
கனவோடு ... 
நினைவோடு 
அலையோடு .. 
அனலோடு .. 
இப்படி எங்கெங்கோ 
சொல்லிப் பார்க்கிறேன் 
உன் கண்களோடு 
பேசமுடியாத வார்த்தைகளை .

அந்த மழைக்கால இரவும் வந்தது. எனக்காவே காத்திருந்தது போல.... நீயும் வந்தாய்!!  சின்ன சாரலுக்கும் தூரலுக்குமே திண்ணையைத் தேடி ஓடும் எனை, அன்று பலமாய் பெய்த மழை கூட கிண்டல் செய்வதைப்போல் இருந்தது.  ஆமாம்... ஏதோ கோவில் பிரகாரம் சுற்றுவதைப்போல் மெதுவாக நடந்துகொண்டிருந்தோம்.  இடிமின்னலுக்குக் கூட ஒருவரை ஒருவர் சினிமாத்தனமாக கட்டிப்பிடித்துக்கொள்ளாமல், கைகளை மட்டும் அழுந்தப் பிடித்தபடி நடக்கையில் பளிச் பளிச்சென படம் பிடித்துப் போனது வானத்து மின்னல்கள்.  அடுத்த நாள் இருவருக்குமே காய்ச்சல் வந்து நம் சந்திப்பை காட்டிக்கொடுத்தது நண்பர்களிடம். அன்று அவர்களின் கேலிப்பேச்சைக் கேட்டு என் வெட்கமும் பொய் கோபமும் என் முந்தானைக்குள் முகம் புதைத்துக் கொண்டது.

தினம் தினம் கதிரோனாய்
காட்சி தருகிறாய்எனக்கான
காட்சிகளை கவர்ந்து போகிறாய்!

மற்றொரு நாள் அவர்கள் சினிமாவிற்கு அழைத்த போதும், முதலில் நான் தயங்கினாலும் உன் அருகாமையில் இரண்டு மணி நேரம்... என்பதே எனை சம்மதிக்க வைத்தது.  பக்கத்து பக்கத்து இருக்கை... இருட்டில் உன் ஆயுள்  ரேகையை என் உள்ளங்கையில் தேடிக் கொண்டிருந்தாய்! நாம் விழிகளின் வெளிச்சத்தில் கனவுகளைக்கோர்த்துக்கொண்டிருந்தோம்

அந்த மௌன இன்பத்தில்
சொல்லப்படாத 

வார்த்தைகள் தான் 
இப்படி சொற்குவியல்களுக்கு
மத்தியில் எனை
அமர வைத்திருக்கிறது.
திரும்பத் திரும்ப தனிமையில் அசைபோட்டுக்கொண்டிருக்க எத்தனை ஆனந்த நிகழ்வுகள். அருகருகே உன் தோள் உரசி... கரம் கோர்த்து நீண்ட பயணம் போக ஆசை கொண்டு ஏங்கித் தவித்த எனக்கு , உன் பின்னால் வண்டியில் அமர்ந்து போகும் வாய்ப்பும் கிடைத்தது அப்போதெல்லாம் சிறகு இல்லாமலும் பறந்து சிகரங்களைத் தொடுகிறேன். 

உலகம் ஏன் 
உருண்டையாக
இருக்கிறது என்று
வருந்துகிறேன்.
ஆமாம் புறப்பட்ட
இடத்திலேயே 
கொண்டு வந்து 
விட்டு விடுகிறாயே ?

உனை மட்டுமே நினைத்திருக்கும் பதுமையாக செய்து விட்டாய் எனை.  இன்னும் என்ன ...என்ன செய்ய காத்திருக்கிறாய் இதய திருடா ?

இது நாள் முதல் என்றுமே அநுபவித்திராத என்னவென்றே விளக்கமுடியா இந்த இன்ப அவஸ்தைகளின் ஆரம்பம் எங்கிருந்து ... உன் கண்களில் இருந்து தான் இந்த மகிழ்ச்சியின் மூலாதாரத்தை வாங்கினேனோ ? இம்மாதிரியான பரிமாற்றங்களை உன் அருகாமையில் அமர்ந்து நீ சொல்ல சொல்ல நான் கேட்க வேண்டும் என்கிற ஆவல் என்னில் கூடிக்கொண்டே போகிறது. 

   காதல் என்கிற இந்த அற்புதமான நிகழ்விற்குள் குடிபெயர்ந்த நமக்குள் எதற்கு தயக்கம். நீ நினைப்பதையும் உன் கண்கள் உணர்த்துவதையும் எந்த விதத்திலாவது கூறி விட மாட்டாயா ? என்றே மனம் ஏங்குகிறது. 

ரகசியங்களுக்கு சொந்தக்காரனே
ராத்திரியின் நீளம் அளப்பவனே
இமைப்பதற்குள் 
நிகழ்ந்து விட்டது
என் பாலிய மரணமும்
 பருவக் காதலும்.

அலையாய் 
எண்ணங்கள் தொடர்ந்தாலும்
அமைதியாகவே நெருங்குகிறேன்.
  
     என்ன என்ன நவீன வளர்ச்சிகளை நாம் அடைந்து கொண்டிருந்தாலும் இம்மாதிரியான காதல் அவஸதைகளை கடிதமாக எழுதி நீ எனக்கும் நான் உனக்குமாய் பரிமாறிக்கொள்ளும் போது அந்த ஆனந்தத்திற்கு எல்லையேது... ?
மனதாள வந்தவனே
மர்மமாய் சிரிப்பவனே
கன்னத்தால் எனை உரசி
கனவினிலே கவர்ந்தவனே
எண்ணத்தில் தான் புகுந்து
எனை ஏதோ செய்தவனே.
சொல்ல(த்தான்) துடித்தேனே
சொக்கி தினம் வெந்தேனே.

எத்தனை எத்தனை ஆசைகள் கனவுகள் எல்லாவற்றையும் சொல்லிடவோ எழுதிடவோ நாட்களும் தாள்களும் போதாதே . வாழ்நாள் முழுவதும் அழகுத் தமிழால் காதலை வாசிப்பதும் நேசிப்பதுமாக இருப்போமே . ஆதலால் கண்ணாளா காதலை சொல்லவாவது பதில் கடிதம் எழுதிவிடு. 

இப்படிக்கு
உன் நினைவுகளையே சுவாசிப்பவள்.

Monday, 24 June 2013

புது முயற்சி !

உனக்கும் எனக்குமான 
இடைவெளியை குறைத்துக்கொள்
என்னில் பகலிலும்
இருள் நீண்டு கொண்டே போகிறது'

மழை தீண்ட காத்திருக்கும் நிலமாய்
உறக்கம் விழித்து தாயைத் தேடும் சேயாய்
உன் அருகாமையை தேடுகிறேன்.

ஓடிக்கொண்டே இருக்கிறாய் மேகமாய்
தேடிக்கொண்டே இருக்கிறேன் நானும்
உனை மழைத்துளியாய்.

உன் வருகையை பறைசாற்றிப்போகிறது
வருடிப்போகும் தென்றலதுவும்.
என்னில் உன் இருப்பிற்கான
அடையாளத்தை பத்திரப்படுத்தும்
முயற்சியில் ஆயுத்தமாகியிருக்கிறேன்.


Wednesday, 19 June 2013

என்னுயிர் தோழிக்கு !


சூரிய சந்திரனாய்
உனை நினைத்து
தினம்தினம் எதிர்பார்த்தது
எத்தனை பெரிய பிசகு.

நீ குறிஞ்சி மலர் என்பதை
எப்போது உணரப்போகிறது மனம்
காத்து தவித்து கண்ணீர்விடுத்து
அங்காலயத்துப்போகும் மனதிடம்
எப்படி சொல்லிப் புரிய வைப்பேன்.

புத்திக்கு தெரிந்ததை
உணர்வுகளிடத்தில் சொல்லி
புரியவைக்க முடியாமல்
திண்டாடுகிறேன்.

குறிஞ்சி மலரே 
உனை தரிசிக்கும் காலம் வரை
என் உயிர் காத்திருக்குமோ ?
ஆன்மா காத்துக்கிடக்கும்
காற்றோடு கலந்திருக்கும்
புழுதியாய் புதைந்திருக்கும்
என்னால் சொல்லவியாலாததை
நீயாவாது சொல்லிச்செல் அதனிடம்.

Tuesday, 18 June 2013

வந்துட்டாங்கையா....வந்துட்டாக !


அலமு : சசி....சசி ! என்ன எப்படி இருக்க பதிவுலகம் எப்படி இருக்கு ?

சசி : வாங்கோ மாமி ....வாங்கோ ! என்னதிது நான் உங்களுக்கு கம்பூட்டர் சொல்லித்தந்த நேரமோ என்னவோ அதோட காணமா போயிட்டிங்க.  என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு இருந்தேன்.. 

அலமு : நல்ல அக்கறை தாண்டி மா உனக்கு .

சசி : ஏன் மாமி எனக்கு அக்கறையே இல்லையா ?

அலமு : அது தான் பார்த்தேனே.  எங்கடா மாமிய காணோமே என்னனு தேடினியா ?

சசி : மாமி நீங்க தான் உங்க பேரனை மகளை மகனை பார்க்க போனதா மாமா சொன்னாங்க. அதனால அப்படியே இருந்துவிட்டேன். 

அலமு : அதுக்குத்தான் அப்பவே கேட்டேன். நீங்க எல்லாம் பேசுற மாதிரி எனக்கும் சொல்லி குடுடினு.

சசி : ஆமா டியூசன் வந்தா ஒழுங்கா வரனுமில்லையா ?

அலமு : என் பேரனும் என்னமோ சொன்னான்டி மா. என்னவோ பச்சை லைட்டு எரியும்... அப்ப நீ இருப்பனு நானும் வீட்ல விளக்கு கூட ஏத்தாம பார்த்துட்டே இருந்தேன்டிமா. டமால்னு ஒரு சத்தம்..

சசி : அய்யய்யோ மாமி என்னத்த போட்டு உடைச்சிங்க.

அலமு : அத ஏன்டிமா கேட்குற... இங்க இலவசமா குடுத்தாங்கனு நம்ம மூனாவது வீட்டு கோகிலா பையனோட லேப் டாப்ப விலைக்கு கொடுத்தான் அத வாங்கிட்டு போனேன். அதான்டி மா வெடிச்சிட்டுது.

சசி : பாருங்க மாமி பசங்களுக்கு படிக்க கொடுத்தா இப்படி செய்யுதுங்க. அது கூட பரவாயில்ல தெருவில வச்சிட்டு படம் பாக்குதுங்க. கேம் விளையாடுதுங்க. எங்க போனாலும் பஸ்ல ரயில்லனு கூட இல்லாம ஒரே பாட்டும் கூத்துமா சுத்துதுங்க.

அலமு : அது தாண்டிமா. அரசியல் கால் வயிறு கஞ்சிய கூட முழுசா குடிக்க முடியாத படி அரசி பருப்பு வெங்காயம் எல்லாத்தோட விலையும் ஏத்திடுவா.. இப்படி டிவி லேப் டாப்புனு காச வீணடிப்பா.

சசி : ஆமா மாமி இது என்ன நாமளும் பெட்டி கடை மாதிரி இல்ல திண்ணைல கதை பேச உட்கார்ந்துட்டோம்.

அலமு : இருக்கட்டும் விடுடி மா. இப்படி பேச முடியாம தாண்டி ஒரு மாசமா அவஸ்தப்பட்டேன். என்னத்த சொல்ல. 

சசி : ஆமா நீங்க தான  வடிவேலு சொல்ற மாதிரி நான் வெளிநாட்டுக்கு போறேன் வெளிநாட்டுக்கு போறேன்னு குதிச்சிண்டு போனிங்க.

அலமு : ரெண்டு நாள் மூனு நாள் போனமா வந்தமான்னு இருக்கனும்டிம்மா. அங்க எல்லாம் நமக்கு சரிப்படாது. மெசின் மாதிரி ஓடுறா எல்லாம்.

சசி : பணம் பணம் துட்டு மணி மணி மாமி..

அலமு : நீ ஜாலியா லீவுக்கு உங்க ஊருக்கு எல்லாம் போய் சுத்திட்டு இப்படி பாட்டெல்லாம் பாடுவடியம்மா .

சசி : ஆமா மாமி எங்க இந்த பசங்களுக்கு எங்க ஊரு பிடிக்கலையாம் மாமி . என் சின்ன மகன் அடிச்சான் பாருங்க கூத்து.

அலமு : சரியான வாலுடி அவன் என்ன பண்ணான்.

சசி : எங்க வீடு அழகா திண்ணை பக்கமா ஜன்னல் வச்சி கட்டி வரிசையா இருக்கும் இல்ல மாமி .

அலமு : ஆமாண்டி நானும் வந்திருக்கேனே அழகாத்தான் இருந்தது. அவனுக்கு என்னவாம் ?

சசி : அம்மா இது என்ன ஓட்டை ஓட்டையா இருக்கு நான் இங்க இருக்கமாட்டேன்னு திண்ணையில ஏறி நின்னுட்டான் மாமி. அதோட விட்டானா ?

அலமு : ஏன் அப்பவே கிளம்பிட்டியா ?

சசி : இல்ல மாமி அங்க கரண்டு வேற போய் போய் வருமே அப்ப வெளிய திண்ணைல தான் உட்கார்ந்திட்டு இருந்தோம். பசங்க எல்லாம் விளையாடிட்டு இருந்தாங்க. திண்ணையில ஏறி நின்னா ஓடு கைக்கு எட்டும்படியா இருந்தது . இவன் ஏறி ஓட்டை பிடிச்சிட்டு இருந்தான் மாமி. நான் ஓட்ல எதாவது பூச்சி இருக்குமேன்னு அத ஏன்டா பிடிக்கிற வேனாம்னு சொன்னேன். அதுக்கு அவன் என்ன தெரியுமா சொன்னான் தெருவில் எல்லாம் ஒரே சிரிப்பு. சசிகலா யாரு உன் பையனா இப்படி பேசுறான் அப்படின்னு எல்லாம் கேட்டாங்க.

அலமு : அப்படி என்ன தாண்டி கேட்டான் வாலு .

சசி : ஓட்டுக்கு எல்லாம் ஏன் மா ஸ்குரு போடாம அப்படியே விட்டுட்டாங்கனு கேட்குறான் மாமி. என்ன சொல்ல ?

அலமு :அஹா....அஹா  சரியான கேள்விடிமா. எப்படித்தான் சமாளிக்கிறியோ ? ஆமா கேட்டேனே பதிவுலகம் எப்படி இருக்கு ?

சசி : நல்லா இருக்கு மாமி. நேத்து கூட மஞ்சு அக்காவை புலவர் ஐயா வீட்டிற்கு சென்று பார்த்துட்டு வந்தேன். 

அலமு : துபாய்ல இருக்காங்கனு சொன்னியே அவங்களா ? இங்க வந்திருக்காங்களா ஏன்டிமா என்னையும் அழைச்சிட்டு போயிருக்கலாம் இல்லையா ?

சசி : நீங்க வந்ததே தெரியாது மாமி.  கண்ணதாசன் வந்திருந்தாங்க. அவங்களோட  நம்ம மின்னலு கணேஷ் வந்தாக அவங்களோட ஆவி வந்திருந்தாக...

அலமு : இருடிம்மா என்ன என்ன ஆவியா ?

சசி : ஆமா மாமி அவங்க பெயர் ஆனந்து அவங்க பிளாக் பெயர் ஆவி அதனால அப்படி.

அலமு : பயந்தே போனேன்டிம்மா.

சசி : அப்புறம் நம்ம சீனு அவங்க நண்பர் ரூபக் அப்புறம் ஸ்கூல் பையன் ,மதுமதி , அவங்க நண்பர் , சேட்டைக்காரன் இப்படி மொத்தமா ஒரு குரூப்பா போய் அய்யாவோட தனிமையை விரட்டி அடிச்சிட்டு வந்தோம்.

அலமு : நீ மட்டுந்தான் ஜாலியா இருந்தியா நான் கூடத்தான் உன் நண்பரை பார்த்தேன்டிமா.

சசி : யாரை ..?எப்ப..? எங்க மாமி ?

அலமு : ஏன் இத்தன கேள்வி ?

சசி : சொல்லுங்க மாமி ப்ளீஸ்...

அலமு : என் மகளைப்பார்க்க போன போது நம்ம பூரி கட்டைய (மதுரைத் தமிழன் )பார்த்தேன்டிமா.

சசி : மாமி நிஜமாவா ? என்ன சொன்னாங்க எப்படி இருக்காங்க ? 

அலமு : நல்லா பேசினாங்க . பாவம் ஆனா பூரிக்கட்டை தழும்புகளைத்தான் பார்க்க முடியள எல்லாமே உள் காயமா இருக்குமோடி?


சசி : இருக்கும் இருக்கும் மாமி ....பார்த்திங்களா நாங்க இங்க வருகிற பதிவர்களைத்தான் பார்த்து பேசுறோம் நீங்க பாருங்க வெளிநாட்டு பதிவர்களை அங்கயே போய் பார்த்துட்டு வறிங்க. ம்ம் அசத்துங்க.

முந்தைய அலமுவின் அரட்டையை ரசிக்க இங்கே  கிளிக் செய்யவும்.

Sunday, 16 June 2013

தாவும் மனது !


கைக்கு எட்டிய 
பழங்களை விடுத்து
உச்சிக்கிளையில் 
இருக்கும் செங்காய்க்காக
எம்பித் தவிக்கும் மனம்.

பூ ..பிஞ்சு என
அனைத்தும் உதிர்த்துவிட்டும்
அதனையே இலக்காகக்கொண்டு
போகும் போதும் 
வரும் போதும்
கிணற்றுத் தவளையாய்
எம்பி எம்பி குதித்தபடி....

கால சூழச்சியில்
பழுத்தே போனது
அக்காயும் மீண்டும் 
அடுத்த கிளையில்
அரும்பி நிற்கும்
அடுத்தொரு காய்க்கு
பழுப்பதற்குள் பறித்துவிட
பலாத்காரத்துடன் முயற்சித்தபடி.

Friday, 14 June 2013

பணமெனும் தீ !


வெட்டருவா தீட்டி கிட்டு
வேல முள்ள கட்டி கிட்டு

வீதியெங்கும் திரிஞ்சிபுட்டேன்
விலைக்கு வாங்க யாருமில்ல

உழைப்பிங்கே வேர்வையாச்சி
உணவுமிங்கே எங்களுக்கு கனவாச்சி

புள்ள குட்டி வீதியில
நிழலுக்கிங்கே மரமுமில்ல

காடு கழனியெங்கும் வீடாச்சி
களத்து மேடும் காணமபோச்சி -இந்த 

வரம் வேண்டி பிறக்கலையே
வாழ ஒரு வழி இல்லையே

குடி தண்ணியும் காசாச்சி
குளம் ஏரியெங்கும் வறண்டுபோச்சி

பட்ட படிப்பு படிச்சவனெல்லாம்
கூலி வேல பாத்திடுறான்

பட்டிக்காட்டு சனங்க எல்லாம்
பட்டினியில் சாகுதடி

பணம் பார்க்க பொழப்புமில்ல
பசிய விரட்ட வழியுமில்ல

காப்புக்காஞ்ச கையிருக்கு
கசங்கிப்போன வயறிருக்கு

ஏறிப்போன விலைவாசிய
இறக்கித்தர யாருமில்ல.Wednesday, 12 June 2013

பாக்காம போறியே !

 
ஆத்தோர நாணலுந்தான்
அவன் வரவை கூறிடுதே

பறிச்சி வைச்ச மொட்டெல்லாம்-திரும்பி
பார்க்கும் முன்னே மலர்ந்திடுதே

முடிஞ்சி வைச்ச கனவினிலே-சொல்ல
முன்னூறு மீதமுண்டு....

மரநிழலும் காத்திருக்கு
மனம் முழுக்க ஆசையிருக்கு

முறைச்சிப் பார்த்து போறவறே
முன்னெதிரே வந்தாயென்ன

முளைப்பாறி கட்டி வச்சேன்-உன்
முன்கோபம் தீர்ந்திடவே

நாலு வார்த்த பேசி போனா-உசுர
நாள பொழுது தாங்கிடுமே

காக்க வச்சி பார்த்திருந்தா-மனசு
காயம் பட்டுப் போகுமய்யா.

சேர்த்தனைச்ச சேறாலே
தேங்கி நிக்கும் நீரய்யா-உனக்கு

பார்த்துவச்ச பொண்ணு இவளை
திரும்பி பார்க்காம போவதேன்யா ?

Monday, 10 June 2013

எதுவது ஏனிது ?

குளிரிது மிளிருது
தளிரது வளருது

மனமது தாவுது
மகிழ்வது தேடுது

நிகழ்வது புதியது
நீந்துது மிதக்குது

சிரிக்குது சிணுங்குது
சிறகின்றி பறக்குது

கனியுது கசியுது
கமழுது மணக்குது

கனவது நினைவது
எதுவது ஏனிது ?

Friday, 7 June 2013

தென்றலோடு சில நிமிடம் !


நாற்றங்காலின் நலம் விசாரித்து
நறுமணத்தின் மேனி முகர்ந்து
வரப்பின் மடியில் இளைப்பாறி
கதிர் நுனியில் கன்னம் வருடி
சேற்றுவயலில் காலூன்றி...
கிணற்றடியில் சித்திரம் தேடி
செல்லும் அந்த தென்றல்...- அதுவும்
சொன்ன சேதி என்ன சொல்..

மாசில்லா காற்று எங்கே
மயக்கும் கிராமத்து இசையும் எங்கே
நஞ்சில்லா உணவும் எங்கே
நாம் புரண்ட ஆற்றுப்படுகை எங்கே

தேன் சுமந்த கிளைகள் எங்கே
தேனாக பாடிய குயிலுமெங்கே
வான் சுமந்த மழையெங்கே
வானம் பாடிகள் எங்கே

கிளைக்கு கிளை தாவிய மந்தி எங்கே
தென்னங்கீற்று வீடுகள் எங்கே
தெருவில் விளையாடிய குழந்தைகள் எங்கே
மஞ்சள் பூசிய மகளிர் எங்கே - மயக்கும்
மல்லிகை பூக்கள் எங்கே...

எங்கே எங்கே எத்தனை கேள்விகள்
இயற்கையை தொலைத்த 
பாவிகள் நாங்கள்
எங்கே சென்று தேடுவோம் 
உன் தேவையை தென்றலே ?

Tuesday, 4 June 2013

செய்யும் தொழிலே தெய்வம் !


சோம்பிக் கிடத்தல் நலமன்றோ
சோகம் பெருகும் தினமன்றோ
செய்யும் தொழிலே தெய்வமென்று
செய்தால் வாராதே இழிவுமின்று

மண் உழுத விவசாயி
மனம் சொல்லும் (அவனே) மண்தாயி.

நூலிழையை சேர்த்து கட்டி
நூற்றிடுவார் தறியில் பூட்டி
மானம் காக்கும் தொழிலதுவும்
மனமுவந்து செய்யின் பலனதுவும்.

உப்பு காரம் சுவை கூட்டி
உண்டு வாழ நாள் கூட்டி
பலசரக்கு விற்கும் வியாபாரி
பார் எங்கும் சிறக்கும் புகழ்பாரி.

வான் தந்த மழையதனை
வளம் சேர்க்கும் நீரதனை
குளம் கிணற்றில் தேக்கிடவே
குடும்பத்துடன் பணி செய்திடவே
ஊற்றெடுக்கும் கிணற்று நீராமே
ஊர் போற்றும் நாள் தோறுமே.

மரத்தை தட்டித் தட்டி தச்சனுமே
மனக்கண் உருவத்தை அக்கணமே
கதவு சன்னல் அழகு வடிவாக
காண்போர் எண்ணம் நிறைவாக.

சிமெண்டு சல்லி செங்கல்லும்
சீராய் கலந்து கையள்ளும்
உயர்ந்து நிற்கும் வீடும் கோபுரமே
உணர்வோர் வாழ்வில் வீசும் சாமரமே.

தண்ணீர் ஊற்றி பிசைந்தெடுத்து
தனியொரு பாண்டம் செய்தெடுத்து
குயனவன் வாழ்வதுவே - மன
குளர்ச்சியடையும் செயலதுவே.

ஆற்றோர கோரையுந்தான்
ஆகிடுதே உறங்க பாயுந்தான்.

உண்டு உறங்கி செய்ய தாராளம்
உன்னத தொழில்கள் ஏராளம்
கண்டு கேட்டு செய்திடவே
கவலை தீரும் உய்திடவே.

உழைப்பீரே வாழ்வது உயரவே
உணர்வீரே உண்மை தெரியவே.

Sunday, 2 June 2013

விழித்திரையில் நூறு கனா !செவ்விளநி பறிக்கையில
செவ்வந்தி இதழ் விரிக்கையில

ஜன்னலோர மொட்டு ஒன்னு
ஜதிநயத்யோட தயங்கி நின்னு

பாடலொன்னு முனகுதம்மா
பாயும் நதி பாதை விலகுதம்மா

நதியோர நாணலெல்லாம் வாடுதடி
நங்கை முகம் தேடி தினம் பாடுதடி

பாடும் ஊமைக்குரல் கேட்டிருச்சா ?
பாவனைப் பொருள் விளங்கிருச்சா ?

கோலமிடும் பூங்குயிலே பாரேன்
கோடி முறை என் முகத்தை

காத்திருக்கேன் ராப்பகலா
காவலேன்டி நீ வேர்பலாவா ?

விழித்திரையில் பலநூறு கனா
விடியலிங்கே எனக்கு பகல் கனவா .