Wednesday 31 July 2013

இல்ல விழாவிற்கு வருக வருகவென அழைக்கிறேன் !

பதிவுலகத் தோழமைகளுக்கு வணக்கம்.. கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர்  சந்திப்பை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.பதிவுலக வரலாற்றில் நடந்த மிக முக்கியமான சந்திப்பாக அது அமைந்தது.அந்த நினைவுகளில் இருந்து இன்னும் பல பதிவர்கள் மீளவில்லை.அதற்குள் இந்த வருட பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன.

சென்ற ஆண்டு இந்த மாபெரும் சந்திப்பை முன் நின்று நடத்திய அதே குழுதான் இந்த சந்திப்பையும் நடத்த முன் வந்துள்ளது.சென்ற ஆண்டைப் போலவே முகவும் சிறப்பாகவும், பதிவர்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் இந்த சந்திப்பு அமைய குழு நண்பர்கள் வார வாரம் சந்தித்து ஆலோசனை செய்து திட்டங்களை வகுத்து அதன் பேரில் செயல்படுத்தி வருகிறோம்.இதற்காக பல குழுக்கள் அமைக்கப்பெற்று வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.இந்த சந்திப்பிற்கு ஏற்படுத்தப் பட்ட குழு விபரங்களை இங்கே காணலாம்.

சென்ற ஆண்டு சந்திப்பின் போது பதிவர்களின் அறிமுகம், மூத்த பதிவர்களுக்கு பாராட்டு , பதிவர்களின் கவியரங்கம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என பதிவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்தததைப் போலவே இவ்வருடமும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த வருடம்  பதிவர்களின் அறிமுகம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என அடிப்படை நிகழ்வுகளோடு பதிவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்வுதனை வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பதிவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சி


ஒரு வலைப்பதிவராக மட்டும் நாம் அறியும் பதிவரின் இதர திறமைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில பதிவர்கள் தங்களின் திறமையை நிறைய மேடைகளில் வெளிப்படுத்தி வரலாம்.சில பதிவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்த மேடைகள் இல்லாமல் இருக்கலாம்.எனவே பதிவர்களின் மற்ற திறமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கோடு இந்நிகழ்ச்சி ஏற்பாடு ஆகி வருகிறது.அதாவது பாடும் திறமை, நடிக்கும் திறமை, நடனம் ஆடும் திறமை, பல குரலில் பேசி அசத்தும் திறமை, பதிவர்கள் ஒரு குழுவாக சிறு நாடகம் அமைப்பது என பதிவர்கள், தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இருத்தல் நலம்.


இதில் பங்கேற்கும் பதிவர்கள் வரும் 10.08.2013 க்குள் தங்கள் விபரங்களை 9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
நூல் வெளியீடு:

கடந்த ஆண்டு நடந்த பதிவர் சந்திப்பில்  எனது  "தென்றலின் கனவு' " கவிதை நூல் வெளியிடப்பட்டது.அதே போல் இந்த வருடமும் பதிவர்கள் தங்களின் நூலை இந்த நிகழ்வில் வெளியிடலாம். அவ்வாறு நூல்
வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 05.08.2013 க்குள் 9894124021 இந்த எண்ணிலோ அல்லது kavimadhumathi@gmail.com இந்த மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.குறிப்பிட்ட தேதிக்குள் சொன்னால் மட்டுமே நிரலில் அது சேர்க்கப்படும் என்பதை சொல்லிக்கொள்கிறோம்.


(கோவை பதிவர் அன்பு நண்பர் சங்கவி அவர்களின் கவிதை நூல் வெளியிடுவது மட்டும் உறுதியாகியிருக்கிறது) 




வருகைப் பதிவு:

கடந்த முறை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள், முறையாக தங்களின் வருகையை மின்னஞ்சல் வாயிலாக உறுதி படுத்திய பின்னரே  வருகை தருவோரின் பட்டியலில் அவர்களின் பெயரை இணைத்துக்கொண்டோம். அதைப் போலவே இந்த முறையும் பதிவர்கள் தங்களின் வருகையை தயவு கூர்ந்து மின்னஞ்சலில் உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.கடந்த முறை பதிவு செய்தவர்கள் தவிர நிறைய பதிவர்கள் சந்திப்பிற்கு வந்ததால் அவர்களை சரியான முறையில் உபசரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.எனவே வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள். உணவு மற்றும் உபசரிப்பு போன்றவை வருகைப் பதிவு செய்த பதிவர்களை வைத்தே தீர்மானிக்கப் படுவதால் தங்களின் வருகையை அவசியம் மின்னஞ்சல் வாயிலாக உறுதிபடுத்தவும்.
கீழ்க்காணும் பதிவர்களை தொடர்பு கொண்டு வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.


  -          ஆரூர் மூனா செந்தில்   
·         அஞ்சாசிங்கம் செல்வின்
·         சிவக்குமார்  மெட்ராஸ்பவன்
·         பிரபாகரன் பிலாஸபி(சென்னை)
·         தமிழ்வாசி பிரகாஷ்  மதுரை
·         சதீஷ் சங்கவி  கோவை
·         வீடு சுரேஷ்குமார்  திருப்பூர்
·         கோகுல் மகாலிங்கம்  பாண்டிச்சேரி
·         தனபாலன் - திண்டுக்கல்

நன்கொடை:





இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது.சென்றமுறை மக்கள் சந்தை கொஞ்சம் உதவியது.இந்த முறை அப்படியேதும் வாய்ப்பு இல்லை என்றேத் தெரிகிறது.. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பதிவர்கள்  மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்..பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்து  தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.

மேலதிக தகவல்கள் அடுத்த பதிவில் வெளியாகும்..பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து  தங்களது வலைப்பதிவில் எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.(இதே பதிவை அப்படியே நகலெடுத்து பதியவும் செய்யலாம்)




                                                                   மகிழ்ச்சியுடன் 

                                                                                                                              நிர்வாகக் குழு

Tuesday 30 July 2013

குடம் கொண்டு போற பெண்ணே...!


கொத்து மலர் பறித்து
கொண்டையிலே வைத்து
குனிந்து நிமிர்ந்து பார்த்துகிட்டு
குடம் கொண்டு போற பெண்ணே...
குளக்கரைக்கு நான் வரவா...
மனக்குறைய தான் சொல்லவா..?

நீ வகிடெத்து வாரிய
பின்னலிலே என் பாதை 
தொடங்குதடி...
கார்குழலில் கலந்த பின்னே
என்னில்...
கார்மேகக் காதல் கனவுகளடி...

மழை உனக்கு பிடித்திடுமே
மனமிருந்தால் நனைந்திட வா..

உன் நினைவென்னை துரத்துதடி
உன்னிலும் இச்சங்கதி நிகழ்ந்திடுதா..?

நீர் கொண்டு போகையிலே-உன்
நினைவையள்ளி நான் சுமந்தேன்.
அந்தோ... குடத்தோடு ஓர்
அல்லிப்பூ நடந்திடுதே
அதனழகை என் சொல்வேன்...

Friday 26 July 2013

காத்திருந்த கருத்த மச்சான் !


கொட்டும் அருவி அழைக்கிறதே
குளித்திடவே மனம் விழைகிறதே

நீண்ட மூக்கு கருப்பழகன்
நெடு நேரமா காத்திருக்கான்.

கண்ணாலே படமெடுக்க
கருவிழியால் முறைச்சி நிக்கான்.

அலையோடி மனசும்
அவனை நாடி ஓடிடுதே

நெருங்க விடாது நீருந்தான்
தனக்குள்ளே இழுத்திடுதே...

நீல வானம் கூட - என்
மேனி தீண்ட நீரினில்
வண்ணமாய் நீந்திடுதே...

காத்திருந்த கருத்த மச்சான்
கனத்த பெருமூச்சோடே
காத்தாட்டம் பறந்து விட்டான்
எங்கும் கண்டாக்கா சொல்வீகளா...
காலையில் ஒரு நீண்ட மூக்கு குருவி ஒன்று பார்த்தேன் தோட்டத்தில் மறுபடி வருமென்று காத்திருக்கிறேன் காணவில்லை அதனால் எழுதியது.

Thursday 25 July 2013

எல்லாம் என் நேரம்...!

என்னை மட்டும்
அருகில் நிறுத்திவிட்டு
நிமிடங்களை ஏன்
ஓடவிட்டிருக்கிறாய் ?
************************************

போட்டு வைத்த
நேரக்கணக்கின் 
அட்டவணைக்குள்
அடங்க மறுக்கிறது.
உன் நினைவு.
****************************************

காதல் என்ற பெயரில்
கனவில் துரத்தினாய்
இப்போது ....
கணவன் என்கிற பெயரில்
 நிஜத்தில் விரட்டுகிறாய்..
எல்லாம் பெண்களின் நேரம்...
*********************************************

நேர்த்தியாய் ஓடத்தெரியாத
நேரத்தை கட்டிக்கொண்டு
எனை ஏன் காக்கவைக்கிறாய்.
********************************************

சீக்கிரம் சீக்கிரம் என
நேரத்தை மட்டும் 
எத்தனை முறை தான் 
அழைத்து மடியில் 
அமர்த்துவாய்...
எனை புறந்தள்ளியபடி..
****************************************

நான் உன் 
சுண்டு விரலை மட்டும்
தான் பிடித்து நடக்கிறேன்
இந்த கடிகாரத்தை பார்
என்ன திமிர் 
உனை கட்டிக்கொண்டு
ஓடவும் செய்கிறது.
******************************************

மரணத்தின் விளிம்பு வரை'

சென்று வருகிறேன்
நீ என்னிடம் விடை
பெற்று செல்லும் போதெல்லாம்.


Tuesday 23 July 2013

முதல் கணினி அனுபவம் -தொடர் பதிவு


நான் எவ்வளவோ சொன்னேங்க... என்னைய யாரும் தொடர் பதிவுக்கு அழைச்சிடாதிங்க பிறகு வருத்தப்படுவிங்க என்று.... யாராவது கேட்டாங்களா.., இல்லையே. அதனால் வந்த விளைவே இப்பதிவு...

தலைக்கு மேல ஒரு வட்டம் சிறியதாக அப்படியே வளர்ந்து வளர்ந்து பெரியதாக வட்டங்கள் தெரியுதா... தெரியனுமே ஆமாங்க என்னுடைய ப்ளாஸ் பேக்.

எல்லா பிள்ளைகளும் பத்தாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு முடிந்ததும் எவ்வளவு ஜாலியா இருப்பாங்க.. ஊருக்கு போய் வந்து ஆடி பாடிக்கிட்டு இப்படி... ஆனா எங்க வீட்ல ஒரு ஹிட்லர் இருக்காங்க (அக்கா) யாரும் போய் போட்டுக்குடுத்திடாதிங்க மக்களே.

எங்க அக்காவின் உலகம் புத்தகம் மட்டுமே .. அதனால அவங்க கத்துக்க நினைச்சதெல்லாம் என்னைய கத்துக்க வச்சாங்க... (மண்டைல ஏறனுமே) ஆமாங்க டைப்பிங் கத்துக்க விடுமுறையில் அனுப்பினாங்க அதுவும் எப்ப காலைலயே ஆறு மணிக்கெல்லாம் அங்க இருக்கனும்.. என் வீட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் நடந்தா தான் வந்தவாசி தினமும் போனேங்க. அப்பவும் எனக்கு இந்த கம்புயூட்டர் பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாது. ஒரு வழியா தமிழ் இங்கிலீஸ் என இரண்டிலும் கால் நடையா நடக்க... கை டைப் அடிக்க உருப்படியா பாஸ் பண்ணி வீட்டிற்கு வந்தா.. 

அப்பவும் விடவில்லை என் அருமை அக்கா. தையல் கிளாஸ் போக விட்டாங்க. அதை முடிக்க பேசிக் கம்புயூட்டர் கத்துக்கனு அனுப்பினாங்க. அங்க போனா தினமும் கிளாஸ் எடுப்பாங்க நாங்க எங்க அத கவனிச்சோம் ஒரே அரட்டை.. அப்பவே கவிதை உலகத்தில் நான் தான் ராணி என்னைய சுத்தி நண்பர் கூட்டம். வாழ்த்து மடல் அது இதுன்னு எழுதிட்டு இருப்பேன்.  வாரத்தில் ஒரு நாள் தான் கம்புயூட்டர் பக்கத்தில் உட்கார வச்சி என்ன என்னமோ சொல்வாங்க பிறகு நாலு நாலு பேரா உட்கார்ந்து செய்து பார்க்க சொல்வாங்க. எதையோ செய்வோம் . அப்ப ஆசையா இருக்குங்க கம்புயூட்டர் பக்கத்திலேயே இருப்போமா என்று... நானும் கம்புயூட்டர் படிச்சேனு ஒரு சர்டிவிகேர்ட் கைல வாங்கிட்டு வந்தோம்.

அடுத்து அக்காவுக்கு திருமணம் ஆகி சென்னை வந்தாங்க. அப்பாடா இனிம நம்மை இங்க போ அங்க போனு சொல்ல யாரும் இல்லையென்ற தைரியத்தில் இருந்தா...போன நாலாவது மாசத்திலேயே அங்க என்ன செய்றிங்க தனியா நீங்க .  தம்பியும் இங்க சாப்பாட்டுக்கு கஷ்ட படுறான் நீங்க எல்லாரும் இங்கயே வந்துடுங்கனு என்னை ,அம்மா ,அப்பாவை கை கால கட்டி தூக்கிட்டு வந்து இங்க போட்டாங்க. ( ஆமாங்க எங்க ஊரை விட்டு வர மனசில்ல)

இங்க வந்தும் ஒரு டி.வி.எஸ். சோரூம்ல பில்லிங் செக்சன்ல வேலைக்கு வச்சாங்க அது முதல் தான் நமக்கும் கம்புயூட்டருக்கும் நெருக்கம் அதிகமாச்சி. என் கவிதை ஆர்வம் தான் வீட்டில் அடம் பிடித்து  கம்புயூட்டர் வாங்க வைத்தது. கேட்டதும்  கிடைத்தது. அதன் மூலம் அருமையான உறவுகளும் கிடைத்தது. 
போன வருடம் மே மாதத்திலேயே இப்படி ஒரு கவிதையும் பகிர்ந்தேன். 

மாயம் செய்தாயோ ...?

என்னில் ஏன் இந்த மாற்றம் ?
எதையோ தேடி வந்த
என்னையே திருடிக்கொண்ட
கள்வன் நீ ....!

உண்ணும் போதும் நீ
உறங்கும் போதும் நீ
எண்ணத்திலும்  நீ
எழுத்திலும் நீ ....!

கொஞ்சும் மழலைச் சிரிப்பையும்
உன்னுடனே பகிர்ந்து கொள்கிறேன் ...
என் கோபமும் -உன்
பார்வை பட்டவுடனே
பறந்து போகும் மாயம் கண்டேன் ...!

என் பசியையும் மறக்கச் செய்த
பாதகன் நீயே ஆனாய் ...
என்னில் அப்படி
என்ன மாயம் செய்தாய் ...?

எல்லாச் சடங்கிற்கும்
உறவுகள் அழைத்த போதும்
உனைப் பிரிய மனமில்லாது
மழுங்கி நிற்கிறேன் ...!

பசி நேரத்தில்
தலையில் குட்டி
ஆரோக்கியத்தை உணர்த்துகின்றாய் !
வம்பளந்த நேரமெல்லாம்
இப்போது உன் முகம் 
பார்த்தே கழிகிறது ..!

உனைக் கடந்து போகும்
நேரமெல்லாம் எனை
கண்ணடித்து அழைக்கிறாய் ..!

உண்டு உறங்கிக் கழித்த
பொழுதெல்லாம் -இன்று 
உன் அருகாமைக்காகவே ஏங்குகிறது ..!

மின்னலென என் வாழ்வில் வந்து 
மின்சாரமாய் தாக்கிய
விந்தை என்ன ..?
மின்சாரமற்ற நேரத்திலோ
உன் முகம் காணாது
சோர்ந்து போனேன் .

அவ்வளவு கருப்பா
என கோவிக்காதே ...
என்னில் வெளிச்சமே நீயென்பேன் ...!

இப்படியெல்லாம் எனைக் கவர்ந்த கள்வனை நீங்களும் பார்க்க வேண்டாமா ...?

நண்பர் தனது முதல் கணினி அனுபவத்தை தொடர் பதிவாக எழுத 
ஆகியோரை அழைக்கிறேன்.

Sunday 21 July 2013

உறவுகள் மேம்பட !


உறவுகளே உறவுகளே ஒன்று கூடுங்கள்....
ஒற்றுமையே பலம் என்றுணருங்கள்..
தந்தை தாய் எவ்வழி வந்தால் என்ன ?
தரணியில் நிலையாம் அன்பைப் பயிலுங்கள்.

அள்ள அள்ள சுரக்கும் செல்வம்
நல்ல நல்ல சேதிகள் சொல்லும்
கள்ளமில்லா உள்ளம் கொள்ளும்
கன்னித் தமிழ் அங்கே கொஞ்சும்.

மழைத்துளி ரசிக்க வைக்கும்
மண் வாசம் நுகர வைக்கும்
வானவில்லை பார்த்து மகிழ்ந்து
வட்டமடித்து கூடி விளையாட வைக்கும்.

கூட்டாஞ்சோறு ஆக்க வைக்கும்
கூடி திருவிழா பார்க்க வைக்கும்
பகிர்ந்துண்டு மகிழ வைக்கும்
பார்ப்போரை உறவாய் இணையவைக்கும்.

பாட்டன் பேத்தி கதையை கோர்க்கும்
பட்டுப் போன உறவை துளிர்க்கும்
சிரித்து நிற்கும் செம்பவழ முத்தும் (மழலை)
செழித்து வளரும் பண்பதனை கற்றும்.

விருந்தோம்பல் பழக வைக்கும்
வீட்டிற்கொரு தோட்டமமைக்கும்
தொன்றுதொட்டு வரும் ஒழுக்கமதை
தொலைத்திடாது வரும் தலைமுறை காக்கும்.

Thursday 18 July 2013

காகிதப் பூ..!

அழகிய கவிதை
தொகுப்பின் இறுதியில்
எழுதாத பக்கங்களாய்
நானிருக்கிறேன்..

 கவனிப்பாரற்று
ஒவ்வொரு முறை
உன் விரல் ஸ்பரிசத்திற்கு
ஏங்கிய படி...
காற்றின் அசைவில்
எழும்பி எழும்பி
உன் கவனத்தை 
ஈர்க்கும் பொருட்டு...

உன் முகம் பார்க்க
விடாமலும் சில 
நேரங்களில்...
பட்டென அறைந்து
மூடிவிட்டு போகிறாய்.

குறிப்புக்கென ஒதுக்கிய
என் பக்கத்தை..
குறிப்பாய் பார்க்க மறுக்கிறாய்.
என்றேனும் ஒரு நாள்
உன் அவசர கால
கிறுக்கலுக்காவது
உதவட்டும் என்றே
உயிர்ப்புடன் இருக்கிறேன்.
அச்சடித்த காகிதங்களுக்கு
நடுவே கசங்காது காத்திருக்கும்
காகிதப் பூவாய்.

Wednesday 17 July 2013

நோக்கு வர்மம் !


திறந்திருக்கும் கதவினை
பார்த்தபிறகாவது...
தெரிந்திருக்க வேண்டும்
திருடுவதற்கு ஏதுமில்லையென...

அங்குமிங்கும் பார்த்தபடி
மெல்லென அடி வைத்து
எத்தனை எத்தனை ..
புலனாய்வு செய்த பின்னும்
ஏதுமில்லையென்றானபின்.

சோர்ந்து விடாது
அடுத்து வெளியேறும்
முயற்சியில் தீவிரம் 
காட்டிக்கொண்டிருந்தது பூனை.

சீறிப்பாய்ந்த லாவகத்தில்
சிக்கியிருக்கக் கூடும்.
வாசல் கம்பிகளுக்கு நடுவே..பூனை
அதனை எப்படியாவது
விடுவிக்கும் நோக்கில் நானும்
என் பார்வையில் இருந்து
தப்பும் நோக்கில் அதுவும்.
நோக்கு வர்மத்தால் சில பல
புரிதல்கள் நிகழ்ந்தபடி.

Wednesday 10 July 2013

நீ தந்த நினைவுப் பரிசு !


நினைவுப் பரிசென எதுவும்
நாம் பகிர்ந்து கொண்டதில்லை !

நினைவால் கூட நாம்
பிரிந்திடுவோம் என்று 
நினைத்ததுமில்லை.

கண் பட்டுப் போனதுவோ.
நாம் கூடி நின்று பழகிய
காட்சிகள் பொய்யானதுவோ.

பஞ்சனை தாங்கும் கண்ணீரை
நெஞ்சனையில் தாங்க
வாராயோ...?

தொண்டைக்குழி 
அடைத்திடுதே தோள்
தட்டி ஆறுதல் கூறாயோ ?

காலமெலாம் பார்த்திருக்க
கலங்கரை விளக்கமென-உனை
நான் நினைத்தேன்...

கண்கலங்க விட்டுவிட்டு
போனதெங்கே பூமகளே
நினைந்துருகி சாவதற்கோ
நினைவதனை விட்டுச்சென்றாய்.

மனமுருகி அழைக்கின்றேன்
மனமிலலையோ வந்து சேர.
என் தேடலுனக்கு இனித்திடுதோ
ஓடி ஓடி ஒளிகின்றாய்.

கரை சேர்க்கும் ஓடமிங்கே
நீயெனக்கு ஆனபின்னே
மூழ்கவிட்டு போனதெங்கே...

தாயில்லா பிள்ளையிவள்
தயவில்லையோ தாரகையே.
தஞ்சமென மடிசேர
தவமிருக்கேன் தரணியிலே.

Wednesday 3 July 2013

இயற்கை சீரழிவு !

சிறு சிறு அலையாய்
சில் வண்டின் ரீங்காரம் 
கேட்டு தவழ்ந்து வந்த
ஏரிப்படுகையை காணோமடி...

நாணல் நிற்கும் கரையோரம்
நாணிச் சிரித்த மலர் 
வனத்தையும் பார்த்தாயோடி...

அழுக்கெடுத்த ஒரு கூட்டத்தின்
ஆலேலோ பாட்டுச் சத்தம் கேட்கலையே...

குடம் குடமா நீரெடுத்து -தண்ணி
குடிச்ச தாகம் தீரலையே..
விதைச்ச விதை முளைச்சிடவே
ஏரிப்பாசனத்துக்கும் வழியில்லையே.

காத்து  போன பலூனாட்டம்
சுருங்கிப் போன ஏரியப் பாரு
சிறு பிள்ளைகள் விளையாடும்
சறுக்குப் பாறையாட்டம் அணையப்பாரு.

அடுக்கடுக்கா மாடி வீடு
தவிச்ச வாய்க்கு தண்ணியில்ல
ஓலம் கேளு.

வாய் இருந்தா வசைபாடியிருக்கும்
கை, கால் இருந்தா தப்பி ஓடியிருக்கும்.
இயற்கையை சுரண்டிப்பிழைக்கும் மானுடமே
மனித இனமே அழிந்து போகும் 
காலம் வெகு சீக்கிரமே.

Monday 1 July 2013

அந்தி (அவன் )வரும் நேரம் !


உன்னை முழுவதுமாக
படித்து விட எண்ணுகிறேன்.
உனக்கு பிடித்தது
பிடிக்காதது... இப்படியாக...
உனக்கு என்னை 
பிடிக்கும் தெரியும்
எனக்கு உன்னை 
மட்டுமே பிடிக்குமே... தெரியுமோ ?

கனா காண இரவும்
நிலவும் தேவையில்லை
எனக்கு இப்போதெல்லாம்
உன் நினைவுடன்
இருப்பதே 
கனா காலந்தான்.

என்ன வித்தை கற்றும்
உன் விழிகளுக்கு முன்பு
என் வார்த்தை குழந்தைகள்
விளையாட மறுக்கின்றன.
பார்வையாலே மிரட்டும்
வித்தையை எங்கு கற்றாயோ ?

உன் வரவிற்கு 
காத்திருக்கும் பனித்துளியாகிறேன்
நீயோ சூரியராய் 
வந்ததும் எனை விழுங்கிவிட்டு
அனைவரையும் சுட்டெரித்துக்
கொண்டிருக்கிறாய்....

இளைப்பாற நிலவை
அழைப்பாய் அல்லவா..
வா ...வா அப்போது 
கவனித்துக்கொள்கிறேன்.

இதய வாசலுக்கும்
வானுக்குமாய் கர்ணமடித்துக்
கொண்டிருக்கிறேன்.