Wednesday, 29 February 2012

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்! (தொ.ப.)


மின்னல் வரிகள் திரு கணேஷ் அவர்கள் தொடர பதிவெழுத அழைத்தமையால் நானும் எனது பள்ளி நாட்களை திரும்பிப் பார்க்கிறேன் .
      நான் செய்த குறும்புத் தனங்களை பகிர்ந்து கொள்கிறேன் .
        எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற சொல்லிற்கு ஏற்ப எனது முதல் வகுப்பு ஆசிரியர் மதிபிற்க்குரியவர் திரு .கண்ணையா அவர்கள் .
        நானும் எனது தம்பியும் இரட்டைப்பிறவிகள் என்பதால் இருவரும் முதல் வகுப்பில் படிக்கும் போது , ஆசிரியர் திட்டியதால் அவரின் சைக்கிளில் காத்து பிடுங்கி விட்ட என் தம்பியை ஐந்து ஆறு பிள்ளைகள் தூக்கிச் சென்ற போதும் பார்த்துக்கொண்டிருத்த எனை அழைத்து அன்பு , பாசம் , நட்பு , பணிவு , கடமை , ஒற்றுமை ....இப்படி எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்ததே முதல் வகுப்பு ஆசிரியர் தான் .
               அதோடு நின்று விடாமல் அடுத்தடுத்த வகுப்புகளிலும் எங்கள் குறும்புத் தனங்கள் அளவில்லாமல்   போனது . எனக்கு பக்கத்தில் இருந்த முருகன் என்ற பையனை சிலேட்டால் அடித்து மண்டையை உடைத்த எனை அழைத்து அறிவுரை  சொன்ன ஆசிரியர்கள் .
                 அன்று முதல் அணைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நீதி நெறிக் கதைகள் , திருக்குறள் விளக்கம் , புத்தகங்கள் படிப்பது , பேச்சுத்திறனை வளர்ப்பது , ஓவியம் வரைதல் ....இப்படி அவரவர்க்கு  இருக்கும் திறனை வெளிப்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்  என்று அறிவுரைகள் சொல்வார் . ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை  இருந்த எங்கள் பள்ளியில் முதல் வகுப்பு ஆசிரியர் என்றாலே மற்ற ஆசிரியர்கள் மட்டும் அல்லாது எல்லா  பிள்ளைகளுக்கும் பிடிக்கும் விதம் நடந்து கொள்வார் .
             எங்கள் வீட்டில் இருந்து பத்து வீடு தள்ளி பள்ளிக்கூடம் என்பதால் மதிய உணவிற்கு  மட்டுமல்லாது , இரண்டு வகுப்பிற்கு நடுவே விடும் இடைவேளைகளிலும்   வீட்டிற்க்கு எனது சக தோழிகளை அழைத்து செல்வேன்  . அதற்கும் வழி இல்லாமல் போனது அந்த முதல் வகுப்பு ஆசிரியரால்  .
              புத்தக படிப்போடு மட்டும் நின்று விடாமல் மரம் நடுதல் , பள்ளி வளாகத்தை  சுத்தமாக வைத்திருத்தல் போன்ற நற்ப்பண்புகளும் சொல்லிக்கொடுத்தது ஆரம்பப் பள்ளிக்கூடமே .
             எல்லாம் வகுப்பு இறுதி தேர்வெழுதும் நேரத்தில் எல்லாரும் நல்ல படிச்சி நிறைய மதிப்பெண்கள் வாங்கி நம் பள்ளியின் பெயரை காப்பாத்தனும் என்று பிள்ளையாரிடம்   வேண்டிகோங்க என்று ஆசிரியர் கூறிக்கொண்டிருக்கும் போதே , இடையில் நான் எல்லாம் நிறைய மதிப்பெண்கள் வாங்கினால் பிள்ளையார் திரும்பி நமக்கு தேங்காய் உடைத்துவிடுவார் என்று கூறயதும் ஆசிரியர் முதற்கொண்டு அனைவருமே சிரித்து விட்டனர் .
              அடுத்து ஒன்பதாம் வகுப்பு படிக்க ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வந்தவாசியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தோம் .அப்போதே உணர்ந்து கொண்டோம் முதல் வகுப்பு ஆசிரியரின் அருமையை .
ஒன்பதாம் வகுப்பில் எனக்கு ஒரு தோழி கிடைத்தால் பெயர் ஜெகதீஸ்வரி .
அமைதியானவள் அடுத்தடுத்த வகுப்புகளில் எனக்கு சகலமுமாய் இருந்தவள் .ஒரே தெருவில் எங்கள் வீடு இருந்ததால் தினமும் எனை அவள் இரு சக்கர ஊர்தியில் அழைத்து செல்ல தவறாதவள் .
               இன்றும் ஊருக்கு செல்லும் நேரங்களில்  எங்கள் ஆரம்ப பள்ளிக்கூடத்தை பார்க்கும் போதெல்லாம் புது வடிவம் பெற்று உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் என் கண்களுக்கு தெரிவதில்லை . மரத்தடி நிழலில் எங்களை அமர வைத்து பாடம் எடுத்த அந்த அழகு மைதானமும் , ஆசிரியர்களுமே என் மனக்கண்ணில் வந்து போகின்றன .
             என் தோழியை மட்டும் காண முடியாதலால் என் தேடல் தொடர்கிறது ..
 என் அன்புத் தோழிக்கு
நியும் நானுமாய் ..
ஒன்றாய் கைகோர்த்து
நடந்து நடந்து  தேய்ந்து போன ...
சாலைகள் இப்போதுதான் ..
சரி பார்க்கப்படுகிறதாம் ,
வா சென்று பார்த்து வரலாம் ...
நம் புன்னகையும் ..
கேளிக்கையும் பாராமல் ..
பள்ளி வளாகத்தில் இருந்த ...
பாக்கு மரம் பட்டு போய் விட்டதாம் ..
வா சென்று பார்த்து வரலாம் ...
எனை உன் இதயத்தில் மட்டும் ...
சுமந்தது போதாதென ..
உன் இருசக்கர வாகனத்திலும் ..
அல்லவா சுமந்திருகிறாய் ..
என் அன்புத் தோழியே ..
எங்கிருக்கிறாய் நீயடி ..
என் தாய்க்கு பிறகு ..
என் பசி பொறுக்காதவள் ..
நியும் அல்லவா  ,
இனியவளே ..
உன்னிடத்தில் பிடித்தது ..
உன் மவுனமே என்பேன் ..
அதற்காக இப்படியா ..
நீ எங்கிருக்கிறாய் ..
என்பதை கூட தெரிவிக்காமல் ,
மவுனித்து கிடக்கிறாய் .
தேடலுடன்  அன்பு சசிகலா.
என்றென்றும் நினைக்க நினைக்க இனிக்கும் பசுமை நினைவுகள் .
               


             Monday, 27 February 2012

கோடை விடுமுறையில் நாம் ..

கோடை விடுமுறை என்றாலே இந்த பசங்கள எப்படி ஒரு மாசம் கட்டி மேக்கிறது தெரியல , என்று அலுத்துக்கொள்ளும் பெற்றோர் நிறைய உண்டு . அதிலும் நிறைய பேர் இருக்காங்க பாருங்க விடுமுறையில்  கூட அவங்கள விடாம கிபோர்ட் , நாட்டியம் , கணினி வகுப்பு இப்படி வியாபார நோக்கத்தோடு  விரட்டும் பெற்றோரும்  இருக்காங்க . 


       இவர்களுக்கு  நடுவே நம் சிறு வயது  கோடை விடுமுறையை நினைத்துப் பாருங்கள் . எத்தனை எத்தனை இனிமை நினைவுகளை அசை போடா சொல்கிறது பாருங்கள் ....
ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஐந்து, ஆறு குழந்தைகளுக்கு மேல் தான் இருப்பாங்க . கூட்டுக்குடும்ப வாழக்கை அது .

இப்போ நம்ம குழந்தைகளை பார்க்கவே ஆயா வேலைக்கு  ஆள் தேடுகிறோம் .
      திண்ணையில் அடுக்கி வைத்த அரிசி , வேர்க்கடலை , கேழ்வரகு மூட்டைகளில் எலி போட்ட  துளை போதாதென அதில் எங்க லீலையும் சேர்ந்து  எடுத்துப் போயி , குளக்கரை பக்கம் ஒரு கூட்டமே சேர்ந்து ஆக்கும் கூட்டாஞ்சோறு அவ்வளவு ருசியா இருக்கும் பாருங்க .
       அங்க ஆடு , மாடு மேக்கிரவங்க பார்த்துட்டு போயி இன்னார் பிள்ளைங்க இங்க இருக்காங்க என்று செய்தி பரவி அடி வாங்கினது வேறு விஷயம்ங்க .
        எந்த குழந்தையும் அப்பா , அம்மாவ தேடாதுங்க பசி நேரத்திற்கு ஆயா , அத்தை, பெரியம்மா , சித்தி  என்று யார் பந்தி விரித்தாலும் சரி பசியாறி விட்டு மறுபடி லீலைகள் தொடரும் .


          மாலை வேளைகளில் கைராட்டம் , ராஜா ராணி , திருடன் போலீஸ் ,கண்ணாமூச்சி , கபடி , மூக்கில்லி , கில்லி , கொல கொலையாம் முந்திரிக்காய் இப்படி விளையாட்டுப் பட்டியல் நீண்டு கொண்டே போகும் .
               மின்சாரம் தேடாத காலங்கள் . நிலவொளியில் உணவருந்தி , தெருக்களில் படுத்து தேவாரம் , திருவாசகம் கேட்டு விடிந்த பொழுதுகள் .
அடுத்து ஆயா , அத்தை வீடு என அங்கங்கு பத்து, பதினைத்து நாட்கள் தங்கி அங்கு ஒரு நண்பர் கூட்டத்தோடு கொட்டம் தொடரும் .

              விடுமுறை முடிந்து பள்ளிக்கு போனதும்  இப்படி நாம கழித்த  இனிமை நினைவுகளை பேசியே ஒரு மாத காலம் போகும் .  அடுத்த விடுமுறையை எதிர்நோக்கும் நினைவலைகள் .

 மூடிய பள்ளிக்கூடம் விளையாடும் திடலாகும், மாமா வீட்டு  பயணம் பேருந்தும் ரதமாகும், விளையாட்டே போதுமே உயிர்வாழ என்றெனவே தோன்றிடும் காலம். ம்ம்ம் நினைத்தாலே குளிர்கிறதே
என் மனது !!!

Saturday, 25 February 2012

காந்தியின் கனவும் பொய்யாய் போனதடி


ஆரோக்கியம் சமையலில் மட்டுமல்ல
ஆடையிலும் இல்லாமலே போனது
பேறு காலத்தின் போது
பிறந்த குழந்தைக்கும்
பின்னர்
கோடித் துணிக்கும்  மட்டுமே
தேடப் படுகிறது நூற்  துணிகள் .....!
கூட்டுப்  புழுவாய்
வாழ்வைத் தொடங்கி
கொஞ்சம் கொஞ்சமாய்
நூலாய் விரிந்து
அது நெசவாளரின் வாழ்வாய் மாறி ...

கஞ்சியில் நீராட்டி 
தெருவில் பாகிட்டு
தட்டி சிக்கெடுத்து ..
பாகில் கோர்க்கின்ற அழகைக் காணோமடி
கால்கள் நடன மாட
தறி நாடாவோடு கைகள் பேச
ஆடவர் பெண்டிர் இணைந்துழைத்து
அழகாய் உருபெறும்
வண்ண ஆடை அழகை
பட்டாம்  பூச்சி வேடம் பூண்டு
பறந்து திரியும் மானிடர் கூட்டம்
அறியார் இந்த வேதனையை
அவர் கணக்கில் இதுவெல்லாம்
நாகரீக மாற்றம் மட்டும் தானே
கரித்துடைக்கப் போகின்ற துணியின்
கடைசி வாழ்வு போல்
இவர் வாழ்வும் கரியாகிப் போதல் முறையோ ..?
காந்தியின் கனவும்
பொய்யாய் போனதடி
திரும்பி பார்க்க வேண்டும் .
பார்ப்பீர்களா....?

Tuesday, 21 February 2012

மகிழ்ச்சியான தருணம் .2

    பதிவுலகில் எனது வலைப்பூவிற்கு "லீப்ஸ்டர் விருது" கொடுத்த திரு .மதுமதி அவர்களே.."வெர்சடைல் பிளாகர்" விருதைக் கொடுத்த திரு .விமலன் , திரு. விச்சு அவர்களே .. உங்களிடமிருந்து விருது பெற்றதை பாக்கியமாகக் கருதுகிறேன்.இதுவரையில் எழுதியதைவிட அழகாகவும்,கருத்துச்செறிவுடன் எழுதவேண்டும் என்கிற பயம் மனதைக் கவ்வுகிறது.உங்கள் ஆசியுடன் பயணத்தைத் தொடர்கிறேன்.நன்றி!
இரண்டாவது தடவையாக திரு விமலன் அவர்கள் வழங்கிய versatile Blogger award ஐ மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன் .நான் இந்த விருதை மேலும் ஐந்து வலைதளங்களுக்கு  பரிந்துரைக்கிறேன்.
 
1       கதை , கவிதை , கட்டுரை , திரைப்பாடல்கள் மூலம் நம்மை மகிழ்விக்கும் திரு .மதுமதி அவர்களுக்கும் .

     2   தமிழின் சிறப்புகளைத் தம் கவித் திறனால் வர்ணிக்கும் எனது அன்புச் சகோதரர் வசந்த மண்டபம் திரு .மகேந்திரன் அண்ணா அவர்களுக்கும் .

    3     மரபு வழி புலவர் திரு .இராமானுசம் அவர்களுக்கும்  .

    4    தாம் பிறந்த ஊரின் பெருமை பேசும் நண்பர் திரு . சங்கவி அவர்களுக்கும் .

     5    ஆத்மா திருப்திக்காக எழுதும் திரு . தி .தமிழ் இளங்கோ   அவர்களுக்கும் . வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .
     

பாசம் மட்டும் வாழ்ந்தெதற்க்கு

“பூப் போன்ற கனவேந்தி,
வளர்த்த பைங்கிளி காண்!
புவிக்கு பாரமென்ற
புள்ளியோடு கோலமாய் !
பள்ளிக்குப் பத்திரமாய் ;
அனுப்பிவைத்துக் காத்திருந்து,
பாசமகள் வருமட்டும்
மடியில் நெருப்போடு,
வழிமேல் விழிவைத்து, வரும்வரை
வேர்த்திருந்து  கண்ணின் கண்மணியாய்,
வளர்த்த அன்பு மகள் ...!
பூப்பெய்தி மலராக,
இணைதேடும் நாடகங்கள்,
தினந்தோறும் அரங்கேற்றம்,
இல்லாதார் வாழ்வினிலே!
ஏழைகளின் எள்ளுருண்டை,
எட்டிக்காய் ஆகிறது!!! ..
பொன்னில்லா பெண்ணிங்கு;
குப்பை மேட்டு கூரையாய்!
இருப்பவன் கொண்ட பசிக்கு
இல்லாதார் இரையாவார் ...
இன்றில்லை; நாளை விடியும்,
கனவோடு காத்திருக்கும்,
வாழ்வில் விடியலலுண்டோ?
இறைவா நீயெங்கே!
பாதையும் சரியில்லை,
பணமும் கையில் இல்லை,
பாசம் மட்டும் வாழ்ந்தெதற்க்கு,
பாவம் வாழும் உலகினிலே!
 விடையில்லா கேள்வியாய்....!
எச்சிலைக்கே போராட்டம்!!
ஏழைகள் வாழ்வினிலே,
எல்லாம் கனவுகளே!

 சிலைகிருக்கும் மரியாதை,
உயிர்க்கு இங்கே இல்லையடா!
சிந்தித்தால் மரணமொன்றே,
இல்லார்க்கு சொர்கமடா!!
வழியுமில்லை ஒளியுமில்லை,
 பெண்ஜென்மம் பாவமடா!
விடியல்பேசும் வித்தகரே,
 எதுவும் தேவையில்லை,
நிம்மதி தேடுகிறோம்,
 வாழவிட்டால் அதுபோதும் !

Monday, 20 February 2012

ஆதிமுதல் அந்தம்வரை..?

        பாடல்: பணம் பந்தியிலே.
        திரைப்படம்: பணம் பந்தியிலே.
        பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
        இயற்றியவர்: கவிஞர் கா.மு. ஷெரிஃப்
        இசை: கே.வி. மஹாதேவன்
        ஆண்டு: 1961

        “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
        பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
        பிழைக்கும் மனிதனில்லே
        பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
        பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
        பிழைக்கும் மனிதனில்லே

        ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே - அவனை
        உய்ர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே
        ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே - அவனை
        உய்ர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே
        என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை
        என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை - உலகம்
        எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே

        பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
        பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
        பிழைக்கும் மனிதனில்லே

        ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத் தான் - பணம்
        அகன்று விட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மை தான்
        ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை
        ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை - இதை
        எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை

        பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
        பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
        பிழைக்கும் மனிதனில்லே

        உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு - அவர்கள்
        உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
        மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு
        மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு - நாளும்
        முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு

        பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
        பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
        பிழைக்கும் மனிதனில்லே
        பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

        எத்தனை எத்தனை உண்மைகளையும் . அனுபவங்களையும் கூறும் பாடல் வரிகள் ………..
        பண்ட மாற்று முறையில் தொடங்கி ஆரம்பித்த பண வியாபாரம் .
        தங்கம் , வெள்ளி , செம்பு,காசு வடிவம் பெற்று , மன்னர் காலம் , மக்களாட்சி என்று மாறி இப்போது வெள்ளைக் காகிதங்களாய்!!!
        அரசன் காலத்தில் பொருட்கள் வாங்க,சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்ட பணம் , ஜனநாயகத்தையே விலைபேசும் நிலையல் இன்று! ஜனநாயகமே பணத்திற்கு விற்கப்படுகிறது .
        உழைப்பவனுக்கு வியர்வை மட்டுமே சொத்தாகிறது . பணம் எந்நாளும் அவன் காணும் கனவுமட்டுமே!
        இல்லாதவரை பாடு படுத்தும் .
        இருக்கின்றவர் கையில் பாடுபடும் .உலகநீதிஇதுதானோ!!
        ஏழைகளுக்கோ என்றுமே எட்டாத தூரத்தில்?
        பணமிருந்தால் இறைவனும் கூட பாவமன்னிப்பு வழங்கி விடுவான் என்று காணிக்கை செலுத்தும் பொய்நம்பிக்கை!
        திருடிய பணத்தில் தசம் பாகம் காணிக்கையாக செலுத்தி பாவமன்னிப்புக்காய்.அலையும் மனங்கள்.
        மக்களாட்சி தத்துவத்தை விலைக்கு வாங்க சதிராடும் அரசியல்.
        கற்பையும் விலைபேசி, தன் அழகு விற்று,மாடமாளிகை வாழ்வுதேடி பணம் சேர்க்கும் மாயமான் கூட்டம் .
        தன் நிலை மறந்து வாழ போதைக்கு அடிமையாகி,பாதையைத் தொலைத்துவிட்டு வாழ்வை நரகமாக்கி அழும் பரிதாபம். மதுவும்,புகையும் பகை, நாட்டுக்கும் வீட்டிற்கும் கேடு என்று எழுதி வைத்து பணம் பார்க்கும் ஆட்சித்தத்துவங்கள்.
        நிழலையே நிஜம் என்று சினிமாவை வாழ்வென்று விற்பனை செய்து உச்சியிலே வாழும் சுகஜீவிகள்.
        பணமிருந்தால் பெற்ற தாயையும் வாங்கி விடலாம் என பேசி,உறவையும் விற்கும் மாபாதகர்கள்.
        வாழ்விற்கும் இது முதலாளி! .
        பாவத்திற்கும் இது முதலாளி!!
        பாவிக்கும் இதுவே முதலாளி!!!
        மன்னர் காலத்தில் கல்லணைகள், பெயர் நிலைக்க வானுயர்ந்தகோவில் , கலைச்சிற்பங்கள் , மக்கள் நலத்திட்டங்கள் என ஆக்க வேலைகளுக்காய் பயன்படுத்தப் பட்ட பணம், .
        இன்று சுயநலத்திற்காய்,அழிவுக்காய்,பயன்படுத்தப்படும் அவலம்! பெற்ற தாய் தந்தையை வீதிகளிலும் , பிள்ளைகளை காப்பகத்திலும் அனுப்பிவிட்டு , உறவுகளை தூக்கிஎறிந்தும்,காணிநிலத்துக்காய் நீதிமன்றத்தின் படியேறி,இறுதியில் கூலிப்படை அமர்த்தி உயிரெடுக்கும் அவல நிலை பணத்தால் அரங்கேற்ற பட்டுக்கொண்டிருக்கிறது.
        பணம் மட்டுமே வாழ்வில்லை! பணமின்றியும் வாழ்வில்லை!!ஆதிமுதல் அந்தம்வரை,கருவரை தொடங்கி,கல்லரைவரை ஆட்சிசெய்யும் பணத்தின் ஆதிக்கம் ஒழிக்க,ஏற்ற தாழ்வுகள் நீங்கி சமதர்மம் பிறக்க,அன்புடன் கூடிய வாழ்வுவேண்டும். அன்பு வாழ்கிறதா?உண்மை அன்பு ஒன்றே பணத்தை வெல்லும் ‘மாசக்தி’

Friday, 17 February 2012

காட்டுப் பூக்களைப் போலும் கவனிப்பாரற்று

“நாளெல்லாம் ஓடிக்களைத்து;
உண்டு உறங்கச் சொந்தமாய்;
குடிசையேனும் வேண்டுமென்ற ஆவலில் ..
அலைக்கழியும் மக்கள் கூட்டமிங்கே!
அவர்கள் கனவுகள் ...
காலச் சுழற்சியில் புதைக்கப் படுகின்றன
வரவை மீறிய செலவும் ,
தொடரும் துன்பத்தைப் போலும்!
பெருகிக் கொண்டே இருக்கும் விலைவாசியும் ..
விருந்தினர் வரக்கூடாது ,மின்சாரம்,
யூனிட் நான்கு , ஐந்து ரூபாய்
என அரசைப் போலும் அறிக்கை விடுக்கும்
வீட்டு முதலாளியும் ...
இந்த நடுத்தர வர்க்கத்தின்
துக்கத்தை துரத்தும்
தூக்கத்தையும் விரட்ட ..
படையெடுக்கும் கொசுக்களையும்
விரட்டவும் மின்விசிறி சுழலாது.
வீடொன்றிற்கு ஐந்து , ஆறு
குளிர் சாதனப் பெட்டிகள்...
சுரண்டி எடுக்கும் மின்சாரத்தால்

பாதிக்கப் படுவதென்னவோ
 இயற்கைத் தாயும்,
வருமைப் பிடியில் சிக்கி
சீரழியும் நடுத்தரவர்க்கமும்  தான் ”! .
மேலும்போகமுடியாமல்,
தெருவுக்கும் வரவழியின்றி.....
சுமைமட்டும் சுமக்கின்ற,
இவரென்றும்சாபங்களே!!

Wednesday, 15 February 2012

வாயில்லாப் பூச்சிசாரை சாரையாய்
எறும்பினங்கள் ஊர்வதுண்டு..
கூட்டம் கூட்டமாய் 
பறவையினம் போவதுண்டு..
மந்தை மந்தையாய் 
மானினம் வாழ்வதுண்டு..
கூடிக் குலவியே 
மீனினம் பாய்வதுண்டு..
இவையெல்லாம்
சுதந்திரமாகவே ஆடி ஓடித் திரிகின்றன..
அம்மா என்றழைத்து
துள்ளிக்குதித்தோடி
அழகாய்த் தாய்மடியில்
அமுதம் குடித்து குதூகலிக்கும்
அருமை உயிரதற்கு
மூக்கணாம் கயிறுகட்டி
உரிமைபறித்தெடுத்தோம்.
பாலைக் கறந்தெடுத்து
காசுக்காய் விற்றுவிட்டு
பட்டினியாய் அதைப்போட்டு
குலமாதா என்றழைத்தோம்..
தயிர் வெண்ணை நெய்யென்று
நிற்காமல் சாணத்தையும்
சாம்பலாய் உருமாற்றி
இறைவன் பெயரெடுத்து
விபூதியாக்கி விற்றோம்
மனிதகுலம் வாழ்வித்த
இவர்களின் ஊர்வலம்
ஊர்திகளில் நடக்கிறது.
இவை எங்கே போகின்றன..
வாழவா?மடியவா?
உற்று நோக்கினேன்..
காவுகொடுக்க கொண்டுசெல்லும்
அடிமாடுகளாய் அப்பயணம்!
உலக்கையால் தலையிலடித்து
முருகா என்பவரும்
மந்திரித்துக் கழுத்தறுத்து
அல்லாவை அழைப்பவரும்
மூக்கணாங்கயிரால் உயிர்வாங்கி
இயேசுவே என்பாரும்
கூட்டணி அமைத்திங்கே
உயிர்வாங்கும் அவலம் கண்டேன்!
மனிதஉயிர் எடுத்தல் பாவம்..
உரைக்கின்ற உத்தமர்கள்
உயிர்பறித்து உண்கின்ற
கொடுமைகள் நீதிதானா?
அடிமைப் பெண்ணினம் போல்
மிருகமாய் மனிதகுலம்
மீட்பார்யாருமில்லை!
இதயம்மட்டும் துடிக்கவில்லை
ஊனும் மாய்ந்து துடிக்கிறது
வாயில்லாப் பூச்சிகளை
காப்பாற்ற யாருக்கும் வாயில்லை.
வளர்த்தபிள்ளை ஊன்அதனை
உண்ணும் வன்மம் நமக்கெதற்கு!

Tuesday, 14 February 2012

தமிழைத் தேடுகிறேன், தமிழனைத் தேடுகிறேன் .

எங்க கிராமத்துல இருந்த வரைக்கும் , சென்னைய பற்றி பல கனவு , எதிர்பார்ப்புகள் இருந்ததுங்க . அங்கும் கிராம அம்மாக்கள் மாதிரி சாணமிட்டு கோலம் போடுவார்களா ? அங்கும் மண் தரை இருக்குமா ..?
எல்லோரிடத்திலும் பணிவா , மரியாதையா பேசுவாங்களாணு! . அத விட முக்கியமா அங்கும் தமிழ் எப்படிப் பேசுவார்கள், இப்படி பல யோசனை , நகரத்தைவிட வெளிநாடுகளின் அழகாய்த் தமிழ் பேசப்படுகிறது..
பொதுவா தாய்மொழியே சில நேரங்களில் நமக்கு புதிராகவும் , புதிதாகவும் அமைந்து விடுகிறது .


உறவுகளை அழைக்கும் முறையும் ஊருக்கு ஊர் வேறுபடுகிறது .
ஒரு முறை என் அக்காவின் இல்லத்திற்கு சென்றிருந்தேன் . அக்காவின் திருமணமான புதிது அந்த நேரம் . தெருவில் வெங்காய வியாபாரி சென்றுகொண்டிருந்தார் . வாசலில் என் மாமா வாகனம் துடைத்துக் கொண்டிருந்தார் . அக்கா "ஏங்க வெங்காயம் ...ஏங்க வெங்காயம் " என அழைக்க மாமாவோ எனை ஏன் கேட்குற வாங்க வேண்டியது தானே என்றார் . எனக்கு சிரிப்பு தாங்கல .
வெங்காய வியாபாரியையும் ஏங்க , கணவரையும் ஏங்க கிண்டலடித்த நானும் இப்போ அப்படித்தான் அழைக்கிறேன் என்ன பண்றதுங்க .
கணவரை பெயர் சொல்லி அழைப்பது இந்த காலத்தில் புதிதில்லை என்றாலும் . எங்களைப் போல கிராம வாசிகளிடத்தில் , இன்னமும் திணிக்கப் படவில்லை என்றே தான் கூறவேண்டும் .
அதே போன்று தெரிந்தவர் இல்லத்திற்கு சென்றிந்தோம் . அங்கு முதியவர் ஒருவர் "இருங்க " என்றார் எனக்கோ இருந்து போக சொல்றாங்க போல என்று நினைத்து விட்டேன் . மீண்டும் சிறிது நேரம் கழித்து அதையே சொன்னார் , ஒன்றும் விளங்க வில்லை எனக்கு பிறகே சொன்னார் சிரித்த படி உட்கார சொன்னேன் என்று .
இப்படி தமிழும் புரியாது போகிறது பல நேரங்களில் .ஒருமுறை கேரள எல்கையில் உள்ள ஊருக்கு சென்று வழிகேட்டபோது அங்கோடிப்போங்க என்றார்கள்.எங்க ஓடிப்போறது என்றுகேட்க வழிசொன்னவர் திகைத்து வீடுவரைவந்து வழிகாட்ட,........
மண்தோன்றாக் காலத்து மூத்ததமிழ்.கேட்க இனிமையாகத்தான் இருக்கிறது.தமிழ்நாட்டில் தமிழ் வாழ்கிறதா!தேய்கிறதா!!தேடிப்பார்த்தேன்,தேன்தமிழை எந்த அளவுக்கு கொச்சைப்படுத்த முடியுமோ;அந்த அளவுக்கு கொச்சைப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.
 நகரத்துக்கு நகரம்,மாவட்டத்திற்கு மாவட்டம்,கிராமத்திற்கு கிராமம்,தெருவுக்கு தெரு,வீட்டுக்கு வீடு,தமிழ் பேச்சு வழக்கில் மருவி இனியதமிழ் இன்னலை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது.
        தழிழ் மொழிக்கு வளர்பிறை காலமிது என்று மார்தட்டிப்பாடும் தமிழ்மொழிக் காவலர்கள் சிந்தையில் உலாவும் தமிழ்,இல்லங்களில் காணாமல்போய்,"அம்மா"-மம்மியாகவும்,
"அப்பா"-டாடியாகவும்   அலங்கோலப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
 தமிழ் வார்த்தைகளை உச்சரிக்க சொல்லிக் கொடுக்க புதிதாக பல்கலைக்கழகம் ஆரம்பிக்க வேண்டிய அவலம் அரங்கேறி தமிழ் தமிழனை தேடிக்கொண்டிருக்கிறது.தமிழும் ஒருகுடையின் கீழ்இல்லை,தமிழனும் ஓர் அணியாயில்லை.வார்த்தையில் வாழும் தமிழ்,வாழ்கையில் வாழாமல் போவது பரிதாபமே!
காலத்தால் அழிக்கமுடியாத தமிழை மேற்கத்திய கலாச்சாரத்தின் பெயரால் அழித்துவிட்டு தமழ்,தமிழன் என்று பெருமை பேசிபயனில்லை.


Friday, 10 February 2012

நானும் எனது ஊரும் (தொடர்பதிவு)

 தோழர் சங்கவி அவர்கள் தொடர் பதிவு எழுத அழைத்ததின் படி நானும் எனது பிறந்த ஊர் பற்றி எழுதுகிறேன் .
                           கோவிலுக்கு பெயர்போன திருவண்ணாமலை மாவட்டம், அதை அடுத்து பல  கிலோ மீட்டர் தொலைவில் “வந்தவாசி” அங்கிருந்து நடைபயண தூரத்தில் எங்கள் ஊராம் “அம்மையப்பட்டு” கிராமம்! .

ஊரின் பெயர் சொல்லும் தொழிலாக- பாய் நெய்தல் , நெசவு நெய்தல் , விவசாயம் மேலும் சிறப்பு “அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாய் கூடிவாழ்ந்து,பாரதத்தாய் பெற்ற பிள்ளைகளாய்!! .
எங்கள் கிராமத்தில் மணிவிளக்காய் கொண்டாடும் “ஊறணிப்  பொங்கல் திருவிழா” காண கண்ணிரெண்டு போதாது . . ஒவ்வொரு வீடாக மேளதாளத்துடன் ஊர்வலமாய்ச் சென்று, ஒவ்வொரு வீட்டு மகளிரையும் பொங்கல் கூடையுடன் அணி வகுத்து அழைத்து செல்லும் அழகைக் காண
        வெளி ஊரில் தங்கி இருக்கும் அன்பர்களும் தவறாமல் வந்து போவர் . அன்று இரவு உலா வரும் அம்மன் சிலையின் பூ அலங்காரத்திற்கு நிகரேதும் இருக்காது .
        கார்த்திகை திருநாளில் எங்கள் ஊர் மலைக்கு மாட்டு வண்டியிலும் , வயல் வழி நடந்தும் வந்து தவள கிரி நாதரை தரிசித்து போக வரும் மக்கள் கூட்டத்திற்கு அளவேயில்லை .
        இவ்விதம் ஒவ்வொரு பண்டிகை கால நிகழ்விலும் கரகாட்டம் , கூத்து , பள்ளிக்குழந்தைகளை பரவசப் படுத்தும் பாட்டு , நடன , இசைக் கச்சேரி,விளையாட்டுப் போட்டிகள், பரிசளிப்பு என் இரவைப் பகலாக்கும் அத்தனை நிகழ்ச்சிகளும் கலை  கட்டத் தொடங்கும் .
        என்ன அவசரமானாலும் ..
        பிடித்த பாடலை ...
        கேட்பதை போல ...
        நின்று கேட்டுவிட்டு ...
        பின்பு நகர்கிறேன் ...
        'புறப்பட தயாராய் இருக்கும் ...
        தடம் எண் 104 '..... என்ற எங்கள் ஊர் பேருந்து அறிவிப்பை .
        இப்படி எங்க ஊருக்கு போகும் பேருந்தையே அத்தனை ஆவலோடு பார்த்து செல்வேன். எனை ஊர் பற்றி எழுதச் சொன்னால் இனிமையாகத்தான் உள்ளது .
        மாமரத்து குயில் ஓசை,
        மஞ்சு விரட்டிய மைதானம்,
        மலர் தேடும் வண்டுகள்,
        ஊஞ்சல் ஆடி விழுந்த ஆலமரம்,
        ஒரே ஒரு முறை ஊருக்குள் வந்து
        போகும் ஒற்றை பேருந்து!
        குதிக்க பயந்து குதித்தோடிய
        குட்டித் திண்ணை!
        திருவிழாக் கூட்டத்தில்
        தொலைத்த பகைமை!
        தினம் தினம் நீச்சல்
        பழகிய ஆழ்கிணறு!
        ஆற்றங்கரையில் ஆக்கிய
        கூட்டாஞ்சோறு!
        ஆயாவின் சுருக்குப்பை!
        இப்படி எதுவும் இந்த பட்டினத்தில் இல்லை,
        உன்னிடம் சுட்டிகாட்டி மகிழ...

        இப்படி எனது எண்ணங்கள், எப்போதும் எனது  ஊரைப் பற்றியே இருக்கும் .

       அதிகாலைக் கதிரவனை,
      வரவேற்க காத்திருக்கும்,
      நெசவுப் பாவுஉறவணிந்த,
      எங்கள் ஊராம் "அம்மையப்பட்டு" .
      நினைக்கையில் இனிக்கிறதே!
     நெஞ்சம் நாடிப் போகிறதே!!
    ஆலமரத்தடி தனிலே,
    அழகாய் அமர்ந்த "நாகவள்ளி",
    அவளை குளிர்வித்து சீராட்ட,
     அருகே ஒட்டிய குளக்கரையும்!
     மூங்கில் காற்று தாலாட்டு பாட,
     குளத்தில் மீன்கள் கும்மியடிக்க,
     ஆனந்தவாழ்க்கை பாடியதே!
      தலைவன் இன்றி;ஒழுக்கத்தோடு,
     சாரையாய் ஊரும் எறும்புபோன்று,
     இணைபிரியா சங்கிலியாய்,
     எங்கள்வீட்டுத் திண்ணைகள்!
     வாசல் தோறும் வரவேற்கும்,
     தென்னை மரங்கள் சொரிகின்ற,
    வெள்ளைப் பன்னீர் பூத்துளிகள்!
     வழக்குரைக்க பஞ்சாயத்து ,
     ஆலமரத்து வண்டினங்கள்.
     பள்ளி வளாகம் கண்ணுற்றால்,
     பார்வையால் கவர்ந்திடும்,
     அழகு பூங்கா;"குயில்பாட்டு"
     அதனை தொடர்ந்து,
     மலையடிவாரம் காண்,!
      வாக்கால் வரப்பில் ஓடியாடும்,
     ஏரி நீரும் ; துள்ளித்தாவும்,
     தவளைகளும் .....
     ஏர் மாடு பூட்டி ,
    எதிர் காலம் வாழத்தேயும் உழவர்களும் ...
     கண்டாங்கி சேலை கட்டி,
     களையெடுக்கும் தாயின்,
      "மழலைகளை" ஆலமரத் தொட்டிலிலே
      தூங்க வைக்கும் தென்னன்காற்றும்!
     முனைப் நெல்லின் கதிர் பிடுங்கி,
     பாலை ருசிக்கும்
     சிறுவர் பட்டாளமும்!
     மீன் தேடி காத்திருக்கும் கொக்குகளும்,
     எல்லையில்லா மகிழ்ச்சி தரும்
     ஊர் விழாவும் .. மாலை நேரம்
     மலைகளின் ஆழம் தங்கிடும் மேகம் ..
     விடிந்துபார்த்தால்!
     மலை மட்டும் தனியாய் ..
    கதிரவனை தாங்கி நிற்க!!
    அன்று அப்படி!இன்று நிலைஎதுவோ?
                     
        அனைவருக்கும் தனது சொந்த ஊரைப்பற்றி நிச்சயம் எழுத வேண்டும்  என்ற எண்ணம் மனதில் இருக்கும். அதற்காகவே நான் இப்போது தொடர்  பதிவு  சார்பாக அழைக்கிறேன். நான் தொடர் பதிவிற்கு அழைதவர்களெல்லாம்   எல்லாம், நீங்களும் 10 பேரை தொடர்பதிவுக்கு அழைத்து அனைவரையும் அவர்கள் கிராமத்து நினைவுகளை மலரவைக்க வேண்டுகிறேன்.
                     வசந்த மண்டபம் மகேந்திரன்
                    அரசன் சே
                     விமலன்
                     விச்சு
                     தமிழ் இளங்கோ
                    சீனி
                   குணா தமிழ்
                   ராஜி
                  துரைடேனியல்
                  ராஜா சந்தரசேகர்
இன்னும் நிறைய நண்பர்களை அழைக்கவேண்டும் இத்தொடர்பதிவிற்கு நான் அழைத்த நண்பர்கள் அனைவரும் குறைந்த பட்சம் 10 பேரையாவது தொடர்பதிவிற்கு அழைக்க வேண்டுகிறேன்...

Thursday, 9 February 2012

மகிழ்ச்சியான தருணம்

   வலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம்.."லீப்ஸ்டர்" என்ற விருது ஜெர்மானிய நாட்டைச் சார்ந்தது.அதாவது சிறப்பாக வளர்ந்து வரும் வலைப்பதிவுகளுக்கு கொடுக்கக்கூடிய விருது ஆகும்.அந்த விருதைப் பெறுபவர் அத்தோடு நின்று விடாமல் அவருக்கு பிடித்த வளர்ந்து வரும் ஐந்து வலைப்பதிவுகளுக்கு அதை வழங்க வேண்டும்.இதுவே அதன் மரபு.

         அந்த விருதைப் பெற்ற சகோதரி ஸ்ரவாணி தோழர் மதுமதி அவர்களுக்கு கொடுத்திருக்கிறார்.அதைப் பெற்ற அவர் அவருக்குப் பிடித்த ஐவருக்கு கொடுக்க வேண்டும் அல்லவா அதன் படி அவர் அவருக்கு சிறந்ததெனப் பட்ட ஐந்து வலைப்பூக்களுக்கு அவ்விருதைக் கொடுத்தார்.அதில் எனது வலைப் பூவும் ஒன்று.நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் என்னை இன்னும் உற்சாகப்படுத்தும் அளவிலே சகோதரர் மதுமதி அவர்கள் 'லீப்ஸ்டர்'எனும் விருது கொடுத்திருப்பது மகிழ்ச்சியே.
விருதின் விதிப்படி நான் ஐந்து வலைபதிவுகளுக்கு கொடுக்க வேண்டும் அல்லவா..இதோ அந்த ஐவர்.

  • காதல் கவிதைகளால் மனதைக் கொள்ளை கொள்ளும்

1)சத்ரியன் 
manavili.blogspot.in 

கவிதைகளாலும் சமூக சேவைகளாலும் மனதை வருடுகிற சமூகக்கவிஞன்   


2)Magi Mahendiran
eerammagi.blogspot.in


பகுத்தறிவை பறைசாற்றும்


3)இடி முழக்கம் 
idimulahakkam.blogspot.in 


அனுபவப் பகிர்வுகளை அழகாக பகிர்ந்து கொள்ளும்

4)விமலன் 
vimalann7.blogspot.in 


ஜனரஞ்சக பதிவுகள் தரும்

5)விச்சு
alaiyallasunami.blogspot.in 

          தோழர்களே.. இவ்விருதினை பெற்றுக்கொண்டு அதை தங்கள் வலையில் பொருத்திய பின்பு விருதின் மைய அம்சமாக நீங்கள் உங்களுக்கு பிடித்த் வளர்ந்து வரும் வலைப்பதிவுகளுக்கு கொடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
           எனக்கு இவ்விருதினைக் கொடுத்த சகோதரர் மதுமதி அவர்களுக்கு நன்றியையும் நான் கொடுத்த ஐவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்..
நன்றி வணக்கம்..
-------------------------------------------------------------------------------------------------
அன்புடன்..

சசிகலா
-----------------------------------------------------------------------------------------
இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள தூரிகையின் தூறல் செல்லவும்.
-----------------------------------------------------------------------------------------

Wednesday, 1 February 2012

தண்ணீரின் தாகம்

“கிணரென்ற நீரூற்றின்,
கருவறையை காயப்படுத்தி,
கல்லறையாய் ஆக்கிவிட்டோம்.
ஆழ்கிணறு பெயராலே;
அவலத்தை அரங்கேற்றி ,
பூமித் தாய் மடிதன்னை,
சுடுகாடாய் மாற்றிவிட்டோம்.
காடுகளை அழித்திங்கே,
மழைத்துளி விரட்டிவிட்டோம் ,
குளமெல்லாம் சாக்கடைகள் ...
ஆற்றுப் படுகை கோபுரமாய்,
காற்று தேடும் அவலங்கள்.
ஊண்; உடை இல்ல...
அழுக்கு மட்டுமல்ல
உறுப்பிலுள்ள அழுக்குகளையும்
சுத்த படுத்தும்  நீரெங்கே !


நாவரண்டு ..
உமிழ் நீரும் சற்று ஓய்வு தேடுகையில்,
நீரை கைமோர்ந்து அள்ளிப்,
பருகும் தமிழ் குலமெங்கே.?
அடை மழையின் போதெல்லாம்
அலுத்து சலித்துகொள்கிறோம்,
மண்ணில் நடக்க மனம் கூசி!
புல்வெளி தரைக் கெல்லாம் ,
புதைகுழி தேட ...தண்ணீரின்
துணை நாடி, அறிவின்றி, ..
சிமெண்ட் சாலை அமைக்கின்றோம்
 


அழகாய் படரும் முல்லைக் கொடிக்கும்,
அடுக்கு மாடி எல்லை என்றோம்.
அலைகடல் நீர் எடுத்து,
அருந்தவும் வழியில்லை.
வானம் பொய்க்க வில்லை,
வினை நாம் விதைத்ததுவே!
அடுத்த வீட்டு தாகம் தீர்க்க,
கையளவு கொடுக்க மாட்டோம்.
அண்டை மாநிலம் நோக்கியே,
கையேந்தி நிற்கின்றோம்.
இரவில் மட்டும் இருட்டில்லை,
பகலும் இருண்டு கிடக்கிறது.
தண்ணீர் இன்றி மின்சாரம்
எங்கே தேடி ஓடுவது  ..?
சசிகலா