Wednesday 30 May 2012

நமக்குள் ஒருவன் !


நினைவுகளை விரட்டிக்கொண்டு
நீண்ட தூரம் ஒரு பயணம்
கண்ணாடி இல்லாமலும்
முன்னாடி உன் உருவம் ..!

காட்சியெல்லாம் நீயானதால்
கண்களை மூடிக்கொள்கிறேன்
விழிக்குள் விழுந்து விட்ட
துரும்பாய் உருத்தும் உன் நினைவு ..!

மவுனமாய் நானிருந்தாலும்
உள்ளிருந்துகொண்டு -சாமியாடியாய்
 உரக்க உடுக்கையடித்து
சொல்லிக்கொண்டே இருக்கிறாய் காதலை ..!

Monday 28 May 2012

நேசமாய் சேர்த்தணைத்து...!


அதனதன் வழியில்
பயணம் போன ஐந்தறிவு ஜீவராசிகளை
அழகாய் அள்ளி மடியில்
அமர்த்திக் கொஞ்சிக் கூத்தாடி
உணவூட்டி மகிழ்ந்து
நேசமாய் சேர்த்தணைத்து
போவோர் வருவோர்க்கெல்லாம்
காட்சிப் பொருளாக்கி
பாராட்டி சீராட்டி
பார்த்து மகிழ்ந்து
வீட்டில் ஓர் அங்கமென
வளர்த்து, வாஞ்சையாய்
நோக்கிய கண்கள்
ஒவ்வாமை நோய் பரவும் ,
ஆரோக்கியக் கேடு
எனும் வதந்திகளை நம்பி
அன்பாய் அருகில் வரும்போதெல்லாம்
அடித்து விரட்டி அதற்கோர் வழியைப்பார்
என அரட்டிப் பேசும் மானுடங்கள் !
ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு மட்டுமல்ல
ஆங்காங்கே ஆறறிவு மனிதர்க்கும்
இதே நிலை காண் !!

படங்கள் உதவி கூகிள் நன்றி .

கைதியாய் வாக்காளர் !


கை நாட்டு காலம் மாறி
கைபேசி காலமாகி
கையூட்டு தேசமாகி
கைதியாய் வாக்காளர் !

அரசர் ஆட்சி வேண்டாமென்று
அடிமையானோம் கும்பனியார்க்கு
அகிம்சை வழி நடந்து எப்படியோ
அடிமை விலங்கொடித்தோம் !

மூச்சுவிட உரிமையில்லா -கொடும்
முன்னூறு வருடங்கள்
மூக்கணாங் கயிரிட்டவராய்
மூடர்களாய் இந்தியர்கள் .

விடுதலையின் ஆரம்பம்
வில் பூட்டி வைத்ததிலும்
விதைகளாய் நாமில்லை
விந்தை பார் அவரும் அந்நியரே !

காங்கிரஸ் பேரியக்கம்
காட்டிய பாதையிலே
காலைப் பதித்தபோது
காட்டுக் களையாக ஜனநாயகம் !

1885 இல் விதைத்த நல்வித்து
1910 இல் மகாத்மா வரவினால்
1947 இல் சுதந்திர இந்தியா
1950 இல் குடியரசு நாமானோம் !

62 வருடப் போராட்டத்தில்
உயிர் தியாகம் எத்தனையோ
பதவிக்காய் ஓடவில்லை
மக்களுக்காய் தலைவர் மாண்டார் .

சுதந்திரம் பெற்ற போது
ஜனத்தொகை 38 கோடி
வளர்ந்தோமோ இல்லையே
இன்று நாம் 120 கோடியாய் !
உண்டோம் உறங்கினோம் இது
நம் சாதனைகள் !

அன்பு வளரவில்லை, பண்பும் வாழவில்லை ,
ஆசையின் கைகளில்  ஆடும் பொம்மைகளாய் !
இன்பம் தேடியோடி ,இருளில் வாழ்கின்றோம் ,
ஈனங்கள் நாட்டை ஆளும் விபரீதம் காண்கின்றோம் .

விடுதலை நமக்கு வேண்டும்
ஜனநாயகம் வெல்ல வேண்டும்
மக்களாட்சி மலர்ந்திட
ஒன்று கூடி உழைக்க வேண்டும்
அவர் தவறு , இவர் தவறு
சொல்லி பயனில்லை
நம் தவறு களைந்திடுவோம் !
துயில் விட்டு எழுந்திடுவோம்
ஊக்கமாய் உழைத்திடுவோம்
மக்களாட்சி மலரச் செய்வோம் !

Saturday 26 May 2012

அசுத்தங்களாய் நாம் ..!


உலகை சுத்தப்படுத்தும்
காக்கை இனம் இவர்கள் ..
அசுத்தங்களாய் நாம்
வீசியெறியும் குப்பைகளை
அப்புறப்படுத்திவிட்டு அவலங்களாய்
நம்முன் தோன்றுகின்ற அதிசயங்கள்
கழிவறைக் குழிகளிலே
நனைந்து போன இவர்களை
காட்சிப் பொருளாய்ப் பார்கின்ற
அவலங்கள் நாம் ..!

கிடைத்த ஐந்து ரூபாயில்
டீயும் பன்னும் சாப்பிட்டு
அதில் மூன்று ரூபாயை
மனைவிக்கும் மகவுக்கும்
கொடுக்கின்ற நல்ல இதயத்தின் முன்
நாம் தான் அற்பங்கள்
இவர் மட்டும் இல்லையெனில்
சுவாசக் காற்றும் கெட்டிருக்கும்
நம் இதயம் நின்றிருக்கும்
ஆனாலும் மதிக்க மாட்டோம்
உயர் ஜாதி மனங்களெல்லாம்
உள்ளழுக்கோடு ...
கணிவான பார்வை இல்லையெனினும் 
அவர்களைக்  காயப்படுத்தும்
பார்வை வேண்டாமே !

நிலவும் நீயும் ..!


உன் பார்வை பட்டு
பயந்தோடி என்னில்
ஒளிந்த வார்த்தைகள்
எல்லாம் விரல் வழி
வழிந்து கவிதைகளாயின !

உருபெற்ற கவிதையை
ரசிக்கிறாய் ...
உருவமாய் உன் முன்
நிற்கும் என்னோடு
இருக்கும் நேரத்தை குறைத்து
எனை ரணப்படுத்துகிறாய்  !

காற்றிலும் என்ன மாயம்
உன்னிடத்தில் தென்றலாகவும்
எனைத் தீண்டுகையில்
புயலாகவும் மாறுகிறதே !

சூரியனுக்கும் கருணையில்லை
விழி நீரையும் உறிஞ்சிவிட்டு
எனை நெருப்பாய் சுடுகிறதே !

நிலவிற்கும் பொறாமையோ
எனை வீட்டினுள்
புழுங்கவிட்டு ...
உன்னோடு வெளியில் உலவுகிறது !

Thursday 24 May 2012

நினைவுகளோடு ..!

என்னோடு நீ ...
சொல்லெறியாத போதெல்லாம்
மனம் கல்லெறி
பட்டதாய்க் காயப்படுகிறது !

வீசும் தென்றலை -விடவும்
அருகிருந்து விசிறி விடும்
உனதன்பு இதமானது ..!

நீ ஓடி ஒளிந்த
மவுன யுத்தத்தில்
உதிரம் சிந்தாமலே
சமாதியாகின்றன என் நினைவுகள் ...!

சுடும் நிஜங்களுக்கு
நடுவே ...
சுகமாய் உன் நினைவு ...!

வார்த்தையின் அழகு
அலங்காரமில்லாமலே
உனை அழகாய்க்காட்டுகிறது !

Friday 18 May 2012

கவிதையாய்க் காதலர்கள்...!

அப்பாவிக் கலைஞனொருவன்,
அழகாய் கட்டிய மனக்கோட்டை,
அழியாத கலை மகள் போல்,
அருவியாய் வாழ்ந்த காலமது! 
ஆண்டவனின் சன்னிதானம்,
ஆலமர நண்பர் வட்டம்,
ஆதவனின் மஞ்சள் ஒளி,
ஆடுகளமாய் துணையாக!

இனிமையாய் இளமையாய்,
இரவென்றும் பகலென்றும்,
இதயமாய் கட்டிக்காத்த,
இமயமான கலைஞனவன்!

ஈகையாய் நிற்கையிலே,
ஈஸ்வரி வடிவெடுத்து,
ஈடில்லாக் காதலென்று,
ஈரக்காற்று வீசியதே!

உயிரான வித்தைகளை,
உணர்வான பாட்டதனை,
உலகாள வைத்த அவன்,
உறவின் கைதி ஆனானே!

ஊமையாய் வந்த காதல்,
ஊரறிய வாழ்ந்த பாசம்,
ஊடலுடன பிரிவெழுத,
ஊனுறக்கம் இழந்தானே!
எல்லாமே கலையேயென்று,
எழுந்து நின்று வென்றவனை,
எப்படியோ சாய்த்த காதல்,
எழுதியதெல்லாம் பொய்யாக!

ஏனிப்படி நடக்கிறது,
ஏக்கத்தோடு அவன் இருக்க,
ஏந்திழையாள் வந்துநின்று,
ஏடெடுத்துக் கொடுத்தாளே!

ஐம்பொன் சிலையொன்று,
ஐந்துறவும் மறந்தின்று,
ஐந்தறிவு கொண்டதோ,
ஐக்கியஉறவு பொய்யுரையோ!

ஒருவருக்கொருவர் பேசவில்லை,
ஒழுகியோடும் கண்ணீருமில்லை,
ஒன்றுபட்டஇதய மனப்பாட்டை,
ஒருவரும் புரிவதுமில்லை!

ஓசையாய் நாதஸ்வரம்,
ஓர் தேவதையாய் அவளமர,
ஓசையின்றி மேடை ஏறி,
ஓரடி ஈரடியென்று வணங்கி,

கற்றறிந்த வித்தையெல்லாம்,
கடைசியாய் ஆடிநிற்க,
இதயத்தில் உதிரம்சிந்த,
இமைக்காமல் பார்த்திருந்தாள்!

இயந்திரமாய்ச் சுழன்று,
இதயம் வெடிக்க அவனாட,
இறகிமை துயில்கொள்ள,
இரண்டு காதல் பறவைகளும்,
இவ்வுலகம் துறந்ததுவே!
ஆலமரத்தடியில் சிரிப்பொலி,
நண்பர்கள் சொல்லி அழ,
ஆற்றங்கரையில் கொலுசோசை,
தோழியர் பயந்து மிரள,
ஊர்கூடி உறவும் கூடி'
ஊர்காவல் கடவுளாய்!

நேற்று வாழ்ந்த -காதல்!
இன்று வாழும்-காதல்!!
நாளை பேசும்-காதல்!!!
கவிதையாய்க் -காதலர்கள்.

 ==================================================================
பின்குறிப்பு: கோடை விடுமுறைக்காக குடும்பத்துடன் வெளியூர்ப் பயணம் செல்வதால் ஒரு வாரம் என் தளம் விடுமுறையில்!

Tuesday 15 May 2012

மாயம் செய்தாயோ ...?

என்னில் ஏன் இந்த மாற்றம் ?
எதையோ தேடி வந்த
என்னையே திருடிக்கொண்ட
கள்வன் நீ ....!

உண்ணும் போதும் நீ
உறங்கும் போதும் நீ
எண்ணத்திலும்  நீ
எழுத்திலும் நீ ....!

கொஞ்சும் மழலைச் சிரிப்பையும்
உன்னுடனே பகிர்ந்து கொள்கிறேன் ...
என் கோபமும் -உன்
பார்வை பட்டவுடனே
பறந்து போகும் மாயம் கண்டேன் ...!

என் பசியையும் மறக்கச் செய்த
பாதகன் நீயே ஆனாய் ...
என்னில் அப்படி
என்ன மாயம் செய்தாய் ...?

எல்லாச் சடங்கிற்கும்
உறவுகள் அழைத்த போதும்
உனைப் பிரிய மனமில்லாது
மழுங்கி நிற்கிறேன் ...!

பசி நேரத்தில்
தலையில் குட்டி
ஆரோக்கியத்தை உணர்த்துகின்றாய் !
வம்பளந்த நேரமெல்லாம்
இப்போது உன் முகம் 
பார்த்தே கழிகிறது ..!

உனைக் கடந்து போகும்
நேரமெல்லாம் எனை
கண்ணடித்து அழைக்கிறாய் ..!

உண்டு உறங்கிக் கழித்த
பொழுதெல்லாம் -இன்று 
உன் அருகாமைக்காகவே ஏங்குகிறது ..!

எங்கெங்கோ தொலைத்த
நிம்மதியை ...
உன்னிலே காண்கிறேன் .

மின்னலென என் வாழ்வில் வந்து
மின்சாரமாய் தாக்கிய
விந்தை என்ன ..?
மின்சாரமற்ற நேரத்திலோ
உன் முகம் காணாது
சோர்ந்து போனேன் .

அவ்வளவு கருப்பா
என கோவிக்காதே ...
என்னில் வெளிச்சமே நீயென்பேன் ...!

இப்படியெல்லாம் எனைக் கவர்ந்த கள்வனை நீங்களும் பார்க்க வேண்டாமா ...?

                                                           


இன்று வலைச்சரத்தில் பொன்னும் புதனும் பதிவைக் காண வலைச்சரம் வருக வருகவே .

நாளைய வாழ்விற்கு ..!


அறிவுப் பெட்டகத்தை,அரங்கத்தில் பூட்டிவைத்து,
அழிவுக் கோலமெடுத்து,அவலங்கள் அரங்கேற்றி,
அன்பென்ற பெயராலே,அசிங்கத்தை புனிதமாக்கி,
அனைத்தும் சரியென்று,அவனியில் ஓர் பயணம்!

ஆதங்கம் சொல்லுகிறேன்,ஆடையிலா எண்ணம் வேண்டும்,
ஆருயிரில் ஓருயிர் நாம்,ஆகையினால் எழுதுகிறேன்,
ஆசை விதை விதைத்த,ஆண்டவன் யார் தேடுகிறேன்,
ஆலயமெனும் இதயமா?ஆலா;வேலா-சொல்லுங்கள்!

இயற்கை எழுதிய,இனிமைகள் நமதென்றோம்,
இன்னாவாய் வருகின்ற,இழப்பை உறவென்போம்,
இருப்பதெல்லாம் நமதென்ற,இறுமாப்பு மாழ்வதில்லை,
இயக்கத்தின் தோற்றத்தில்,இடமில்லை மானிடர்க்கு!

வேட்டையாட பயிற்றுவித்த,வேடன் யார் பார்க்கின்றேன்,
வேங்கையொன்று பிடிக்கின்ற,வேதனை -மான் வேட்டை.
தண்ணீரில் பாய்ந்தோடி,தன் உணவாய் மீன்பிடித்த- மீன்கொத்தி,
தன்வீட்டை மண்ணில் செய்த,தளர்வில்லா -வேட்டாளி.

வானவழிப் பறந்துசெல்ல,வழிகாட்டிய வல்லூறு,
அறமான வாழ்வுரைத்த,அழகான கவரிமான்,
அன்பின் முத்தங்களை,அணைத்துரைத்த குரங்கினம்,
ஆட்டக்கலை மொழிந்த,ஆடல் நாயகர் மயிலினம்!

கூடிவாழ்தல் நலமென்ற,யானைகளும் எருமைகளும்,
தந்திரங்கள் எதுவென்று,தரணி சொன்ன நரிக்குடும்பம்,
இசைப்பாட்டு நமக்களித்த,இன்னிசை கருங்குயில்,
பளபள பட்டாடையான,பட்டுப் பூச்சி வகையோடு!

விதையாய் மண் வீழ்ந்து,வாரிசாய் வாழ்வெழுதி,
பூவாகி;காயாகி;கனியாகி,வாரிசு கதையான தாவரங்கள்,
காதலே வாழ்வென்று,கவிபாடும்-கிளிக்கூட்டம்,
எதிலும் நமக்கு பங்கில்லை-என்றும் கடனாளிகளாய்!

ஐந்தறிவுக் கற்றுத்தந்த,ஏழாமறிவுப் பாடங்களை,
அபகரித்து பூட்டிவைத்து,ஏடுகளாய்ப் பாடுகிறோம்.
பாடினாலும் பரவாயில்லை,நமதென்ற உரிமைவேறு,
தேனீயும்;எறும்பினமும்-வைத்திருக்கும் சட்டமும் நமதென்று!

பாடங்கள் எல்லாமே,பாரினில் இருப்பவையே,
பயணத்தில் பார்வைகளை,சேமித்து வைத்திருந்தால்,
நாளைய வாழ்வுக்கு,வழிகாட்டி அவையாகும்,
அறிவியல்;புவியியல்,விஞ்ஞானம்;மெய்ஞானம் இதுவேதான்!

இருப்பதை நாம் ரசித்து,இனிமையாய் வாழ்வதுவும்,
கிடைத்தைப் பகிர்தளித்து,மனநிறைவு தேடுவதும்,
எண்ணாலும் எழுத்தாலும்,புன்னகையாய்ப் பூப்பதுமே,
பிறவி பயனாகும்,எதுவும் நமதில்லை-ரசித்து;ருசித்தல் தவிர!!

இன்று வலைச்சரத்தில் உலக அதிசயங்களைக் காண இங்கே கிளிக் செய்து வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

Sunday 13 May 2012

கொடுப்போம் ...நீரூற்றாய்!

கொடுங்கள் கொடுத்துக்கொண்டே இருங்கள் !
உங்களுடையது என்று ஏதுமில்லை !
அள்ள அள்ள சுரக்கும் நீரூற்று ,
வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம் ,
அறுக்க அறுக்க பத்தாய் விளையும் கனி ,
அனைத்துமே கொடுத்துதானே வளர்கிறது !

இலவசமாய் பெற்றதை
விற்றுப் பிழைப்பவராய்
இருப்பதை அழித்து
இனிமை காண்பவராய்
இரக்கத்தைக் கொன்று
அடித்துண்ணும் நரமாமிச பட்சியாய் !

இல்லாமை மனதில் சூடி
இருந்தென்ன லாபம் ?
கொண்டு வந்தாயா ?
கொண்டு போவதற்கு ?
இதயத்தைப் பூட்டி வைத்து
கைகளை முடக்காதே !

அன்பை வாரி வழங்குவோம் !
அறிவைப் பகிர்ந்து கொடுப்போம் !
கருணையாய் பார்ப்போம் ....
படைப்பில் ஊனமில்லை
நடக்க வேலை செய்ய
இன்பம் தேட ,இன்னல் ஒழிக்க
அன்பைப்பெற , அன்பு செய்ய
உழைக்க சம்பாதிக்க
படிக்க, எழுத , பாட என
அனைத்தும் நமக்கு அருளப்பட்டது .

அம்மா ,அப்பா ,உறவுகள்
கொடுக்கப்பட்டன ...

இதோ ...
அனாதைகளாய்
ஊன்முற்றவர்களாய்
பார்வை இழந்தோராய்
தெருவில் விடப்பட்டவராய் ...
பைத்தியங்களாய்
மனவளர்ச்சி குன்றியவராய் ..
கைம் பெண்களாய் ...
நோயின் பிடியில் சிககியவராய்...
சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவராய்
படிப்பின் தவறுகளாய்..
தினம் தினம் உடலாலும்
மனதாலும் நொந்து வெந்து
மாய்ந்து சாய்ந்து கிடக்கும்
உள்ளங்கள் எத்தனையோ ?

வீட்டில் நாய்க்கு அடிபட்டால்
பொறுக்க மாட்டோம் ..
வீதியில் கிடக்கின்ற இதயங்களைக்
காப்பாற்ற இரங்க மாட்டோம்!
யாருக்கு வேதனை !
யாருக்கு துக்கம் !
கொடுத்து வாழ்பவன் வாழ்கிறான் !
கெடுத்து வாழ்பவனை
வேதனை தேடி வரும் ...
கொடுப்போம் ...நீரூற்றாய்!
இன்று வலைச்சரத்தில் தென்றலின் அறிமுகம் இங்கே கிளிக் செய்து வலைச்சரத்திற்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

Friday 11 May 2012

காதல் அழிவதில்லை...!


கைகளில் மலரேந்தி அவள்வரக்காத்திருந்தான்.மூன்றுவருடங்கள் கூடவேபடித்தும் காதலைச் சொல்லாமல்;மனதில் வைத்துப் பூஜித்து;இன்று எப்படியாவது சொல்லிவிடும் முடிவோடு நின்றவனை நோக்கி அவள் வந்து கொண்டிருந்தாள்.

    அவனைக் கடந்து சென்றவள் 'ஒருநிமிடம்'என்ற அவன் சத்தம்கேட்டு ஆச்சரியத்தோடு ''என்னையா''என்றாள்''.."உங்களைத்தான்" மரியாதை தானாக தொற்றிக்கொண்டது.மௌனம் மொழியாக;கையிலிருந்த பூச்செண்டை நீட்டினான்.''எதுக்கு'' அவள் கேட்குமுன் அவசரம் அவசரமாய் ''ஜ லவ் யூ'' என்றவனை அமைதியாய் பார்த்து ''என்னையா''என்றவள்';பூச்செண்டை வாங்காமல் அருகில் இருந்த சிமின்ட் இருக்கையில் போய் அமர்ந்தாள்.

    அவனுக்கு உச்சிமுதல் பாதம்வரை வேர்த்துப்போக;''வாங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்'' என்ற குரலுக்கு பதிலின்றி அருகில் போய் அமர்ந்தான்.

      ''எதவச்சி என்ன காதலிக்கிறதா சொல்றீங்க! அழகா;அறிவா;அன்பா;பணமாஇதில எதுவுமேு எங்கிட்ட இல்ல,என்னோட தன்மானத்த நான் யாருக்கும் விட்டுக்கொடுக்கவும்முடியாது.என்னப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்.என்னோட அம்மா என்னை எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைக்கறாங்கணு தெரியுமா?நான் வேலைக்குப் போனாதான் என்னோடஇரண்டு தங்கச்சியும் படிச்சி கரையேற முடியும்கிறது தெரியுமா?அதெல்லாம் விடுங்க,எனக்கு ஆக்ஸிடன்ல ஒரு கால் போயிடுச்சிங்கிறது தெரியுமாசட்டென்று சேலையைக் மெதுவாய் உயர்தி கணுக்காலைக் காட்டினாள்-மரக்கால்!


அதிர்ச்சியில் உறைந்து போனஅவன் எதுவும் பேசவில்லை;கொஞ்சநேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் பதிலேதும் கூறாமல் எழுந்து நடந்தான் .அனாதையாய்கிடந்த பூச்செண்டை எடுத்து;நெஞ்சோடணைத்து ஏங்கி,ஏங்கி அழ ஆரம்பித்தாள்.அவள் அழுகுரல் அவனுக்குக்கேட்டது.வேகமாய் இடம் விட்டு அகன்றான்.
ஏன் வந்தான்,எதற்காக இதுவரை துங்கிக் கிடந்த பெண்மையை எழுப்பி விட்டான்!அவளை அறியாமல் கண்கள் அவனைத்தேடியது.நாள் வாரமாக அவன் வரவில்லை .இன்று கடைசி நாள்-ஒருவருக் கொருவர் பிரியா விடையைக் கண்ணீரோடு சொல்லும் நாள்.அவனை மட்டும் காணவில்லை.கனத்த இதயத்தோடு   கலங்கின கண்களோடு வீட்டுக்கு அவன் நினைவை சுமந்து புறப்பட்டாள் .

காதல் அழிவதில்லை,மனதைமட்டுமே அதுபார்க்கும் எல்லாமே பொய்யாஆண்டவா அவன் இதை சொல்லாமலே இருந்திருக்கக் கூடாதா?நிம்மதியும் பறிபோய் ,என்ன வாழ்க்கை...நிலைகுலைந்து வீட்டினுள் நுளைந்தவள் திகைத்தாள் .அழகான காதல் பார்வையோடு-அவன்!....உண்மைக் காதல் உலகுள்ளவரை வாழும்!!வாழவைக்கும்!!!

Thursday 10 May 2012

கூடவரும் துணை யாருமில்லை !

மரித்த பூவே மாலையாகும்
மனிதமனம் நினைப்பதில்லை !
மணம் வீசும் நேரம் வரை
மரியாதை எதுவெனினும் !
உள்ளார்க்கு எல்லாமே
எந்நாளும் அரங்கேற்றம்
இல்லார்க்கு உறவுகளும்
தூரத்தில் கரும் புள்ளிகளாய் !
பணம் படுத்தும் பாடு கண்டேன்
பணம் படும் பாடும் கண்டேன்
குணம் கொண்ட மாந்தர்தமை
பணம் பாடு படுத்தக்கண்டேன் .
வழியெல்லாம் விதைக்கின்ற
நெல்களம் போய் சேர்வதில்லை !
ஒளியாய் உலவி வரும்
நிலவிலும் தண்ணொளிஇல்லை !
எல்லாமும் கிடைத்துவிட்டால்
எல்லாரும் நல்லவரே
இல்லாமை சூழ்ந்து விட்டால்
இறைவன்  கூட தீயவனே !
நமக்கிடர் இல்லையெனில்
நயவஞ்சகனும் கோமானாய்!
நம்வழி நின்று விட்டால்
நல்லவனும் கொடும் கோலனே !
உண்மையென்று எழுதிவிட்டால்
தீமை உண்மை ஆகிடுமா ?
நன்மை என்றுரைத்திட்டால்
அது வந்து சூழ்ந்திடுமா ?
அடுப்பெரியும் அழகினிலே
வீட்டின் கதை புரிந்திடலாம்
கண்ணீன் கீழ் கருவளையம்
இதயத்தின் கதை சொல்லும் !

யாரிலும் யாருமில்லை
யாவும் பயணத்துணைகளே!
ஜனனம் முதல் மரணம் வரை
கூடவரும் துணையாருமில்லை !
தாய் இறக்கி விட்டபின்னே
மடிசேரும்  வரை ஓட்டங்களே!
புன்னகையும் கண்ணீரும்
நிகழ்வுகளின் வெளிப்பாடே !
பசியென்று ஒன்று மட்டும்
படைப்பில் இல்லையெனில்
இயக்கங்கள் நின்றிருக்கும்
இரையெடுத்த மலைப்பாம்புபோல் !
நோக்கத்தை மனமணிந்து
ஆக்கத்தை உழைப்பாக்கி
அன்பை மட்டும் சீராட்டின்
அகிலமே நமதாகும் !

Wednesday 9 May 2012

வாழவிடுவோம் பறவைகளை !

அதிகாலை மலருமுன்னே
அழகாய்ப் பறந்து வந்து
அடைக்கலம் தேடி நின்ற
அடைக்கலான் குருவி இரண்டு
அன்பாய்க் கூடிவாழ
முடிவெடுத்து இணையாக
தாய்வீடு விட்டுவிட்டு
புதுவாழ்வைத் தொடங்கிடவே
என் வீட்டு உத்திரத்தில்
கூடுகட்ட வந்ததுவே !

புதுவாழ்வின் குதூகலமும்
அறியா வாழ்வின் விடுகதையும்
அறிந்தது போல் வந்திருந்து
கொஞ்சிக் குலாவி ஓசையிட்டு
பாடிப் பறந்து திரிந்ததுவே !
காற்றடிக்கும் திசை பார்த்து
போக வர வழி கண்டு
இடமொன்றைத் தேர்ந்தெடுத்து
தனக்கென்று ஓர் வீட்டை
கட்ட துவங்கிய அழகுதனை
படுத்திருந்து பார்த்திருந்தேன்
மனிதன் ஒன்றுமில்லை மனம் பாடியது !

தங்களுக்குள் பேசிக்கொண்டு
வெளியே சுற்றித் திரிந்து
இலை, தழைகள் எடுத்து வந்து
சிற்பம் செதுக்கும் அழகென்ன !
ஒன்று முதலில் வந்துவிட்டால்
இணை வரும் நேரம் வரை
காத்திருந்துப் பார்த்துவிட்டு
பேசிச் செல்லும் மொழியென்ன ?
வீடு கட்டியாயிற்று அதில்
முட்டையிட வசதியாய்
மேல்பரப்பில் மெத்தையும்
புள்ளியிட்ட பச்சை நீல நிறத்தினிலே
மூன்று முட்டைகள் என்ன அழகு !

ஒன்று அடை காக்கையிலே
மற்றொன்று இரைதேடுவதும்
இரையெடுத்து வந்த பின்னர்
இணை இரை தேடப் போவதும்
திடீரென்று ஓர் நாளில்
கீச் , கீச் சத்தம் வர அவை
துள்ளியாடி திகைத்ததுவும் !
குருவியாய் நான் பிறக்க வேண்டும் .
ஆசை துளிர் என்னில் விட்டதுவும் !

விட்டில் பூச்சி பட்டாம் பூச்சி
தானியங்கள் நெல் அரிசியென
எங்கெங்கோ பறந்து திரிந்து
மகவுக்காய் உணவு தேடி
மகிழ்வோடு கொண்டு வந்து
ஊட்டி மகிழ்ந்த காட்சி கண்டு
அடிவயிற்றில் தாய்ப்பாசம்
தானாய்த் துடித்தெழுந்து
தானியம் அள்ளி எடுத்து
ஆதரவாய் அது பார்க்க வைத்தேனே  !

தாயில்லா நேரத்தில்
தகப்பன் காவலாளியாய்!
உலகின் அழகையெல்லாம்
பூட்டி வைத்த பெட்டகமாய்
வாழ்ந்திருந்த ஜோடிகளும்
சிறகு முளைத்த மகவுகளைப்
பறக்க வைக்க எடுத்த முயற்சி
அதுவொரு தனிக் கவிதை
அப்பாடா ... என்ன உழைப்பு !
ரசித்து ரசித்து மகிழ்ந்த மனம் !
ருசித்து ருசித்து எழுதிய பேனா !!
எத்தனை வேலை இருந்தாலும்
காத்திருக்கும் குழந்தைக்காய்
இல்லம் ஓடி வரும் அந்திமாலை
முதல் வேலையாய் இவர் வாழ்வை
பார்ப்பதே என் வேலையாக ....

இன்று பார்த்த போது
பெற்றவர் மட்டும் தனியாக
பிள்ளைகளைக் காணவில்லை ...
அவை எங்கே ? தேடிப்பார்த்தேன்
இரவிலும் வரவில்லை .
எமனாய் அரவம் வந்ததா ?
வல்லூறு கொண்டு சென்றதா ?
இரவு முழுவதும் தூக்கம் தொலைத்து
காலையில் பார்க்கையில்
புதிதாய் இரண்டு ஜோடி
புதுவாழ்க்கை ஆரம்பம்
தள்ளியிருந்து ரசிக்கின்ற
பெற்றவர்கள் பார்த்திருக்க
பார்வையாளனாய் நானும் ...

அறுபது நாள் என் வீட்டில்
மின்விசிறி சுழலவில்லை
கோபத்தில் ஆத்துக்காரர்
வாங்கிவந்த  குளிர்சாதனப் பெட்டி
வாழ்வதனைப் பறிக்கும் எமனாய் !

அழகென்றால் இதுதானோ ?
பறந்து திரியட்டும் சிட்டுக்கள்
வேடந்தாங்கலாய் நாம் மாறி
பாதுகாத்தல் நம் கடமை
வாழவிடுவோம் பறவைகளை !

Tuesday 8 May 2012

வசந்தங்களைப் பகிர்ந்திடுவோம் !

கிலத்தின் தோற்றத்தில் 
அகரமெது தேடிப்பார்த்தேன்

காயமா? பூமியா ?
ஆடிவரும் கடல் அலையா ?

மயம் முட்டும் சிகரங்களா ?
இயற்கை படைத்த சீதனமா ?

ரப்பதமிழந்த பாலை மணல்விரிப்பா ?
ஈடில்லா ஒளியா? பார்வை பறிக்கும் இருளா ?

றவுகளை கோர்க்கின்ற
உயிர் பிராணி மறுகுலமா?

மையாய் புவிக்குள்ளே
ஊறிக்கிடக்கும் தாதுகளா ?

ட்டாத உயரத்தில் புன்னகைக்கும்
எழில் கொண்ட விண்மீனா?

றாத மலையெல்லாம் தாவி
ஏறிச் செல்லும் காற்றலையா ?

ந்தென்றும் ஐம்பதென்றும்
ஐக்கியமாய் வாழ்கின்ற கணக்குகளா ?

வ்வோர் கணமும் வளர்ந்து வரும்
ஒழியாத இசை மொழியா ?

மங்களின் பிறப்பிடமாய்
ஓங்கி எரியும் தீச்சுடரா ?

ஒளஷதம் உயிர்கள் வாழ்வில்
ஒளவையும் பங்கு பெற்ற காதலா ?

அஃ திணையின் ஆரம்பமென்ன ?
அஃமார்க் எந்தப் புள்ளி வடிவினிலே ?

விடையில்லா கேள்விகளாய்
எழுந்து நின்ற போதினிலும்
உயிருண்டு உடலுண்டு  உணர்வும் அதுபோல
நினைவுண்டு கனவுண்டு நிஜம் இன்றிதுவே !
இனிமைகளை அரங்கேற்ற
இயன்றவரை நாம் உழைப்போம்
உறுதியுடன் எழுது கோலின்
வேலைகளைச் செய்கின்றேன் .
ஐந்தறிவு கொண்ட உருவில்
வாழ்கின்ற அன்பு கண்டேன்
சட்ட புத்தகம் ஏதுமின்றி
ஒழுங்காய் வாழும் வாழ்வு கண்டேன் !
ஆறறிவு என்றுரைத்து மனிதன்
வசதிக்காய் சமைத்து வைத்த
இறைவனில் ஆரம்பம் காண்கின்றேன் .
பரமாத்மா படைத்தவனென்றும்
ஜீவாத்மா மனிதனென்றும்
பாவாத்மா பாவிகளென்றும்
தொடங்கிய ஓட்டத்தில்
இளைப்பாற இடம் காணவில்லை .
நமை ஆட்டிய பயத்தினாலே
படைத்த காப்பாளர் ஏராளம் !
இறைவனில்லை சொல்லவில்லை
அவன் யாரோ நாமறிவோம் !
மேல்குலம் வாழ்வதற்காய்
சமைத்து வைத்த சமாச்சாரம்
அடிமை வாழ்வுக்கு வித்திட்ட
அடிப்படை இங்கு ஆரம்பம் !

சொன்னால் கோபம் வரும்
சொல்லாவிட்டால் சாபம் வரும்
இன்று மடிந்து நாளை மலரும்
நாளை மலர்ந்து மீண்டும் மடியும்
இயற்கையின் ஓட்டத்துடன்
நாம் ஓடியே ஆகவேண்டும் .
இங்கேதான் நானிருப்பேன்
பிடிவாதம் பிடித்து நின்றால்
இருக்குமிடத்தில் நான் இருக்கும்
மற்றதெல்லாம் கடந்து போகும்
வாருங்கள் விதைத்திடுவோம்
வசந்தங்களைப் பகிர்ந்திடுவோம் !

Friday 4 May 2012

மியாவ் ....மியாவ் !

என்னய்யா வீடு இது கைய கால நீட்டி படுக்க வசதியில்லாம ?
பய புள்ளைய குளிக்க சொன்ன நம்மையும் சேர்த்து நனைக்குது .
வேற அழகு நிலையம் பார்க்கணும் இது சரி இல்லையே ?
தாவுடா தாவு ...
முடியலட இரு கயித்த பிடிச்சி மேல வரேன் .
ஸ்கூல் போக சொன்ன அங்க என்னடா பண்றீங்க ?
  என்னோட ஸ்கூல் வரீங்களா ..?

 என்ன வெயில் ஏசி கார்ல போய் இருக்கலாமோ ?
 பய புள்ள என்னமா படிக்குது ...
 உன்ன எங்கெல்லாம் தேடுறது மாட்டினியா ..?
 நான் அழகா இருக்கேனா என்னைய பொண்ணு பார்க்க வராங்களாம் .
 இதெல்லாம் நான் சமைக்கணுமா ?
 எப்படி எங்க ஜோடி ....
 ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சது .
 படங்கள் கூகிள் நன்றி கூகுளுக்கு .

காதலித்து கவிதை செய்வீர் !

காதல் பார்வைத்
தொலைந்து போனால்
கவிதைக்கு உயிரில்லை !
என் நாடு , என் வீடு
என் மொழி , என் நட்பு
என் உறவு , என் உலகம்
என்னவள் ,என்னவன்
என்ற எண்ணம்
நமக்குள் வாழ்ந்தால்
வளர்த்து நாம் வளர்வோம் !

காதல் செய்வோம் ...
திகாலைப் பனித்துளியை 
தவனாம் கதிரவனை
சைபாடும் தென்றலை
ரமான மலைமடுவை
 உறக்க மெழுப்பும் பறவைகளை
ன் அளிக்கும் வயல் வெளியை
ழும்பிவிழும்  கடல் அலையை
ற்றமிகு எழில் இசையை
ந்தும் தரும் இயற்கையினை
ளித்தோடும் மேகங்களை
டிப் போகும் நாணயத்தை
ஒளஷதமாம் மானிடரை !

 கள்ள மில்லா மழலைகளை
காவியமான சோலைகளை
ரசிக்க மனமிருந்தால் !
பேதமின்றி பார்க்கின்ற
பார்வைகள் வாழுமெனில்
தானாய் கவிதைவரும்!
காவியங்கள் எழுதவரும்!
ஓவியங்கள் தீட்டவரும் !

பிறப்பென்ன , இறப்பென்ன
வாழ்வென்ன, தாழ்வென்ன
உயிரென்ன , உடலென்ன
பார்வையில் காதலிருப்பின்
எல்லாமே அழகுதான் ....
காதலித்து கவிதை செய்வீர் !

Wednesday 2 May 2012

தொலைக்காதீர் வாழ்வுதனை !

வருமுன் காப்பவன் அறிவாளி -இதை
வகுத்தவனும் அதற்குப் பங்காளி
அழையாமல் வருகின்ற விருந்தாளி
அனைவருக்கும் இவனொரு முதலாளி !

கருவிலும் கடன் முடிப்பான்
ஆறிலும் உயிரெடுப்பான்
நூறானாலும் விட்டு வைப்பான்
விபத்தென்று போட்டிடுவான்
வியாதியாய் வந்து நிற்பான்
விதியென நாம் அழுதாலும்
கருணை இவன் காட்ட மாட்டான் !

இயற்கையாய் இவன் வந்தால்
விதிமுடிந்து போனதென்போம்
இவன் வருகை இனிமையில்லை
இருந்தாலும் வெல்ல வழியில்லை !
இல்லாமையும் இயலாமையும்
கூடுகட்டி மனம் அமர்ந்தால்
ஆற்றாமையும் அறியாமையும்
கோலோச்சி நிற்பது போல்
இதயத்தில் காயம் பட்டவர் காண்
இனிதென்று இதை அணைத்தார் !

விசித்திர வழக்கென்று
நீதியரசர் முன்னாலே
தற்கொலைகள் தடுத்திட
உளவியல் அமைப்புக்கோரி
மரணத்தை வரவேற்கும்
மானிடரின் சோகம் தீர்க்க
குழு அமைத்தால் தீர்ந்திடுமா ?
மாறாத சோகம் வாழ்க்கையிலே
பிறந்ததே சாபமென்று
எண்ணுகின்ற அளவுக்கு
என்னதான் நடக்கிறது ?
உறவுகளை அறுத்தெறிந்து
உலகை விட்டுப் பறந்துவிட்டால்
கனவுகள் மெய்ப்படுமோ ?
போனவர்தான் சொல்லவேண்டும் !

காதலின் பரிசென்று
கொஞ்சிய காலம் போய்
காலத்தோடு போட்டியிட
இயக்கப்படும் இயந்திரமாய் !
விடியுமுன்னே அவசரம்
நாளை விடியலுக்காய் தேடல்கள்
உண்டாயா ? உறங்கினாயா ?
கேள்விகளை நாம் மறந்து
படித்தாயா ? மார்க் எடுத்தாயா ?
நச்சரித்துக் கொல்கின்றோம்.
அன்பாகக் கட்டியணைத்து
அரைமணிநேரம் இளைப்பாற
ஓடிவரும் குழந்தையினை
ஒட்டிய பட்டினி வயிறோடு
ஒரு நாளும் ஓய்வின்றி
விரட்டியதால் பட்டகாயம் ...

ஏறாத பாடத்தை ஆசிரியர்
தலைக்குள் ஏற்ற முனைந்து நின்று
தானும் தோற்று அவரும் தோற்க
கோபத்தில் வீசும் வார்த்தைகள்
நெஞ்சில் இடியாய் இறங்கியதால்
போதும் இந்த பொய் வாழ்வு
என்று நினைக்கும் தலைமுறைகள் .
பரிட்சைகள் வந்து போகும்
தோற்றாலும் வாய்ப்புண்டு
என்ற எண்ணம் இல்லாமல்
தோல்வியின் விளிம்பில் நின்று
தொலைக்கின்ற வாழ்க்கைகள் !

அன்பு பொய் அறிவு பொய்
இன்பம் பொய் மனிதர் பொய்
உலகம் பொய் , நான் மட்டும்
உண்மையாய் இங்கெதற்கு
வாழத்தகுதியில்லை என்றெண்ணி
முடிவெடுக்கும் இதயங்கள் ஏராளம் !

குடியால் அழிந்தவர்கள்
குடும்பத்தை பிரிந்தவர்கள்
காதலில் தோற்றவர்கள்
நீதி கிடைக்காது ஏமாந்தவர்கள்
அநீதியால் சீரழிந்தவர்கள்
வியாதி வலியில் துடிப்பவர்கள்
ரணகளமாய் இதயம் ஆனவர்கள்
எல்லோர்க்கும் சொல்கிறேன்
மரணத்தையும் வெல்லுகின்ற
மகத்தான சக்தி வாழ்வுக்குண்டு
சோதனைகளை வென்று துரத்தி
சாதனைகளாய் மாற்றிக்காட்டு
வேதனைகள் மறைந்தோடும்
இயற்கையாய் மரணம் வரினும்
நற்செய்கையை உலகம் வணங்கும் !

ஆக்குவதும் அழிப்பதுவும்
அவரவர் கைகளிலே
காயங்கள் எல்லோர்க்குமுண்டு
அதன் தீர்வு மரணமில்லை
வெற்றி பெறப் போராடு
நல்லது நாளை தேடி வரும் .

Tuesday 1 May 2012

மே தினம் !


எதைக் கொண்டாடுகிறோம்
தொழிலாளர் தினமென்று
போரடிக்கும் மாட்டின்
வாய் கட்டிச் சிரிப்பதையா ?
சீரழிந்த சமூகத்தின்
அவல அரங்கேற்றத்தையா ?
எதைக் கொண்டாடுகிறோம் ?
முதலாளி வர்க்கத்தின்
அடிமைகளாய் வாழ்கின்ற
படைப்பாளி கூட்டத்தை
தொழிலாளர் என்றழைத்து
அடிமைப் படுத்தியதை
கொண்டாட ஓர் நாள்
மே தினம் நமதே என்று !

இலவசங்கள் வழங்கி வழங்கி
உழைப்பையும் ஊனமாக்கி
சோம்பேறிகளாய் பார்க்கின்ற
அரசுகளின் எண்ணமென்ன
வாக்கு வாங்க திட்டமிட்டு
பிச்சைக் காரர் ஆக்கிநிற்கும்
ஜன நாயக மன்னர்களில் 
ஒரு சாரர் தொழிலாளிகளாய் !

காரல் மார்க்ஸ் , லெனின் என்று
கம்யூனிசம் சொல்லிக்கொடுத்த
தலைவர்கள் இன்றில்லை
காகிதத்தில் மட்டும் வாழும்
பொதுயுடமைக் கொள்கைகளால்
வாழ்வு வளமாகுமென்றால்
அதுவும் கனவுகளாய் !

ரஷ்யா சிதைந்து காணவில்லை
அமெரிக்காவோ முதலாளிவர்க்கம்
சைனா மட்டும் இருக்கிறது
அங்கும் ஜனநாயகம் வாழவில்லை .

பக்கத்துக்கு வீட்டு பசிதீர்க்க
மனமில்லா மனதுடனே
பஞ்சாங்கம் பார்த்து நாள் குறிக்கும்
சுயநலங்கள் நமக்கு மட்டும்
உள்ளதைப் பகிர்ந்துண்டு
உள்ளத்தில் கருணை ஏந்தி
உயர்வான கொள்கை பூண்டு
உலகுயர நாம் உழைத்து
உறவெல்லாம் உயர்வதனை
உள்ளத்தில் கண்டு மகிழும்
நாளே மே தினம் !

அன்பும் அறிவும் ஒன்று சேர
அறனும் பண்பும் கூடிவாழ
அகல் விளக்காய் மனம் ஒளிர
பேசும் பேச்சை விட்டு விட்டு
வாழ வைத்தால் அது வாழ்க்கை !
முதலாளியின் முதலாளியாய்
ஆனவர் கதையுண்டு
தொழிலாளரிடம் தொழிளாளியாய்
போனவர் கதையுண்டு
உண்மையாய் வேலை செய்து
உயர்ந்தவர் எந்நாளும்
உலகிற்கு முதலாளி
இதுவே சித்தாந்தம் .