Wednesday 28 August 2013

யாராவது பார்த்திங்களா ?


நாப்புறமும் வேலியிட்டு
நடுவே ரெண்டு தென்னை வச்சி
திண்ணையில தான் படுத்து - அப்பா
தினம் வளர்த்த தென்னம்பிள்ள...

குடங்குடமா நீர் ஊத்தி
கொறையேதுமில்லாம பார்த்து
வளர்ந்த அந்த தென்னையில்
கீத்தும் ஒரு கதை சொல்லும்.
விழும் நிழலுமே 
நூறு கதை படிக்கும்.....

தேவார பாட்டுச்சத்தம்
தென்னங்காற்றில் கேட்கும் கூட்டம்
உருண்டோடும் சைக்கிலுந்தான்
இளைப்பாரும் நிழலில் நித்தம்...

பால் நுங்கு பழக்கூடை
தினம் சந்தையாகும்..
மர நிழலும் தான்...
விளையாட்டா ஒவ்வோர் குடம்
தண்ணி ஊத்து என்பாள் அம்மா...

அம்மை கண்ட நேரத்திலோ
ஆளுக்கொரு இளநி தரும்
கழனியில கூரை மேய்ந்து
களைப்பார கீத்த தரும்...
வீடு திண்னை பெருக்கவே
விளக்குமாறாகும் அதுவே தான்..

தாகம் தீர்த்து ..
தரைய பெருக்கி
நிழலும் தந்த தென்னையத்தான்
ஆளுக்கொரு மரமாக்க
அழகான தோப்பாச்சசி
அதுவே எங்க தெரு பேராச்சி.

என் ஆயி அப்பன் போனபின்னே
தென்னங்கீத்தின் அரவணைப்பை
தேடிப்போனேன்...
அடிவேரையும் புடுங்கிப்புட்டு
சிமெண்ட் சாலை சிரிக்குதடி..
பேருக்குத்தான் தோப்புத்தெரு
பெயருக்கு ஒரு மரமில்லையடி.

Sunday 25 August 2013

எம் பேர ஊருமெச்சும் !


உச்சிக்கிளையில் முருங்கக்கா
ஒடியாம பறியக்கா...
கருவாட கழுவிப்போட்டு-புளி
கரைச்சி வையேன்  கொழம்பக்கா.

எட்டு வீதி வாசமெட்டும்
எம் பேர ஊருமெச்சும்
மச்சானும் மல்லி தருவான்
மாமியா முகம் சுளிக்க..

சுண்ட வச்ச குழம்புவாசம்
நாளையும் நாக்கு கேக்கும்
அடுப்படியில் படி உருளும்
அடுத்த வீடும் வேடிக்க பார்க்கும்

அந்த கத இங்கெதுக்கு..
அம்மியில் அரைச்செடுத்த
மிளகாயுடன்..
ஆரோக்கியத்துக்கு பருப்பு சேர்த்து
கொதிக்க விட்ட சாம்பாரும்
கொதிக்கும் முன் இறக்கிய ரசமும்
தொட்டுக்க ஊறுகாயும்- கைய
தொட்டுத் தொடைக்க 
முந்தாணையும் போதும் மச்சான்..

Friday 23 August 2013

பசுமையை (பாசத்தை)தேடும் வேர்கள் !-3


பாட்டி காய் கனிகள் போன்றவற்றை சந்தையில் சென்று விற்பனை செய்து அதன் மூலம் வரும் பணத்தில் வாழ்ந்து வந்தாங்க. இப்ப பேரனும் வந்து விடவே அவன் தேவைகள் தான் அதிகமாச்சே ..
முடிந்த மட்டுமாவது பேரனை சந்தோஷப்படுத்த நினைத்த பாட்டி சந்தைக்கு செல்லும் போது பேரனையும் அழைத்து சென்று அங்கு அவனுக்கு தேவையானதை வாங்கித்தர முடிவு செய்து அவனையும் அழைத்து செல்கிறாள்..

அந்த கிராமத்தில் சந்தை கூடும் இடத்திற்கு செல்வதென்றால் ஊருக்குள் நாளொன்றுக்கு ஒரு முறையோ இரு முறையோ வந்து போகும் பேருந்தின் உதவியத்தான் நாட வேண்டியிருக்கும் . அந்த  பேருந்தின் வருகைக்கு காத்திருக்கும் நேரத்தை கணக்கிட முடியாது அப்படி பேரன் காத்திருக்கும் போது அவன் அடைந்த கோபத்திற்கு அளவு இல்லாமல் போனது.

சந்தைக்கு சென்று அவன் பாட்டியை தனியே விட்டு விட்டு அங்கும் இங்குமாக வேடிக்கை பார்க்க கிளம்பிவிடுகிறான்.  பாட்டி தான் கொண்டு வந்த பொருட்களை விற்று காசு சேகரித்து பேரனை தேடி அழைத்து நவீன உணவுகள் வாங்கி கொடுத்து அவன் சாப்பிடும் அழகை ரசிக்கிறாள்.  இறுதியில் உணவிற்கான காசு கொடுக்கவும் பாட்டிக்கு பணத்தின் மதிப்போ அல்லது கணக்கோ தெரியமல் இருப்பதை காண்கிறான். கடை ஊழியரே சரியான சில்லரையை பாட்டியிடம் தந்து அனுப்புகிறார்.

பேருந்து நிறுத்தத்தில் ஒவ்வொரு பேருந்தாக ஏறி தன் இருப்பிடம் செல்லுமா என்று கேட்டு பாட்டி கடைசியாக ஒரு பேருந்தில் பேரனை அமர வைக்கிறாள். அங்கும் தனி இடமாக ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொள்கிறான் .

அப்பேருந்தில் ஒரு குழந்தை சாக்லேட் சாப்பிடுவதை பார்த்து அது வேண்டுமென அடம்பிடிக்கிறான். பாட்டியும் கீழே இறங்கும் போது அந்த குழந்தை தூக்கி எறிந்தசாக்லேட் காகிதத்தை எடுத்து சென்று அந்த இனிப்பை வாங்கி வந்து பேரனுக்கு கீழிருந்த படியே தருகிறாள். மீதமான தன் உடமைகளை பேரனிடம் ஜன்னல் வழியாக தருகிறாள் தன்னால் சுமந்து கொண்டு ஏற முடியாததால் . பேரனோ அதை வாங்க மறுக்கிறான். உடனே பேருந்தும் புறப்பட்டு விடுகிறது. பேரன் மட்டும் வீடு வந்து சேர்கிறான் . மாலை வரை பாட்டி வராமல் போகவே பேருந்து நிறுத்தம் வந்து வந்து பார்த்து போகிறான். ஊருக்குள் வரும் கடைசி பேருந்தும் வந்து போகவே கவலையுடன் சாலையை பார்த்தபடி நிற்கிறான். தூரத்தில் பாட்டி நடந்து வருவது தெரியவே மகிழ்ச்சியடைகிறான்.

பாட்டி பேரனுக்கு வீடியோ கேம் பேட்டரியையும் தேடி வாங்கி வந்து தருகிறாள். அதை பார்க்கவும் மறுக்கிறான் பேரன். 

பேரனுக்கு தலையில் முடி அதிகம் இருப்பதை பார்த்து பாட்டியே அவனுக்கு முடி வெட்டி விடுகிறாள் கண்ணாடி பார்த்தபடி அமர்ந்திருந்த பேரன் அப்படியே தூங்கி விடுகிறான். பாட்டி முடி வெட்டி முடித்து பேரனை எழுப்ப மாடலாக வெட்டாததால் பாட்டியை கடிந்து கொண்டு தன் முகத்தை எப்படி வெளிக்காட்டுவது என்று கண்ணாடிக்கு முன்பு நின்று முகமுடி ஒத்திகையும் பார்ததபடி இருக்கிறான். பாட்டி அத்தனை குறும்பையும் ரசிக்கவே செய்கிறாள். 

அதோடு விடாமல் பேரன் தான் நகரத்தில் பெரிய பெரிய ஓட்டல்களில் சாப்பிடும் உணவு வகைகள் பற்றி பாட்டியிடம் சொல்லி அவ்வாறு சாப்பிட வேண்டுமெனவும் ஆசைப்படுவதாக சொல்லவே . பாட்டி புறப்பட்டு சென்று கோழி ஒன்றை வாங்கி வருகிறாள். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் .  வீட்டில் பேரன் திண்ணையிலேயே தூங்கிப்போனதை பார்தது அவனுக்கு மழையில் குளிருமே என்று போர்வையை எடுத்து போர்த்திவிட்டு அவன் எழுந்திருக்கும் முன்பு இறைச்சியை செய்து முடித்து பேரனை எழுப்பி உண்ணச்சொல்கிறாள். 

மசாளாப்பொருட்கள் எதுவும் சேர்க்காத அந்த உணவை அவன் இது இல்ல நான் சொன்னது . பீட்சா.. பர்கர் இப்படி பாட்டிக்கு புரியாத விவரங்களை சொல்லி அழுதுபடி உணவினை தட்டி விட்டு படுத்துவிடுகிறான்.

பாட்டியும் அமைதியாக படுத்து உறங்கிவிடுகிறாள். பின்பு சத்தமில்லாமல் எழுந்து பாட்டிக்கு தெரியாமல் சாப்பிட்டு விட்டு பாட்டியை வந்து பார்க்கிறான் .  மழையில் நனைந்து வந்ததால் பாட்டிக்கு காய்ச்சல் வந்து முனகிய படி படுத்துக்கிறாள்.  பாட்டிக்கு போர்வையை எடுத்து போர்த்திவிட்டு தலையில் ஈர டவலை ஒத்தி எடுக்கிறான். பாட்டிக்கு பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்கிறான்.


பாட்டியை பாட்டியின் அன்பை புரிந்து கொள்கிறான். பாட்டி பேரனுக்கு தாய் மொழியை கற்றுக்கொடுக்கிறாள். இருவரும் அன்நோன்யமாகும் சமயத்தில் அம்மா வந்து பிள்ளையை அழைத்து போறாங்க. பேருந்து நிறுத்தத்தில் பேரன் பாட்டியிடம் தான் வைத்திருந்த தனது புகைப்படங்களை தந்துவிட்டு பஸ் ஏறுகிறான். பின்பு பாட்டியை விட்டு செல்ல முடியாமல் ஓடி வந்து ஒட்டிக்கொள்கிறான். அம்மா திரும்பி வந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் அடுத்த விடுமுறையில் வந்து பாட்டியை பார்க்கலாம் என்று பல ஆறுதல் கூறிய பின்பே பிறிய மனமில்லாமல் பாட்டியும் பேரனும் பிரிகிறார்கள் . அவர்கள்  தவிப்பதை பார்க்க கண்கள் கலங்கி விடுகிறது. மறுபடி பாட்டி பேரனின் வரவை எதிர்பார்த்து வாழ் நாளை கடத்துகிறாள்..

இது வரை நான் பார்த்த கதை.. முற்றும்.

இந்த கதையில் வரும் பாட்டி பேசியிருந்தால் தன் மனநிலையை எப்படி சொல்வாங்க என்பதை என் கற்பனையில் எழுதியிருக்கேன் அதையும் படித்து விட்டு எப்படி இருக்கு என்று சொல்லுங்க.

நீயுறங்க 
நினைவுறங்க
நெஞ்சமட்டும் உறங்கலையே
நேத்து வர சேத்து வச்ச
நேசம் மட்டும் குறையலையே.

நாடி தளர்நது போன பின்னும்
நரை முடி கண்ட பின்னும்
ஆசைகுந்தான் திரையுமில்ல
வச்ச பாசத்தில் தான் வேசமில்ல...

பாச வலை இழுக்குதய்யா
பாவி மனம் தவிக்குதய்யா...

மண் சாலையுண்டு
சோலையுண்டு...நீயுறங்க
என் தோளுமுண்டு
இமை மூடா சாபமுண்டு
இறுதி வரை தனிமை துணையுமுண்டு...

பேரான்டி...
நீயருகே தானிருந்தா
ஓடிப்போகும் தனிமையுந்தான்.

சிந்தைக்கும் சிறகுமுளைக்க
சில்வண்டும் பறந்து வர
சிட்டாக நீயும் வந்து
சிரிச்ச முகம் காட்டிப்புட்டா
சிரிக்கி மவ என் உசிரும்
ஜென்ம மெடுத்த பயனடையும். !

Thursday 22 August 2013

பசுமையை (பாசத்தை) தேடும் வேர்கள் !-2


அந்த கிராமத்து சிறுவர்களுடன் விளையாடவும் அவனுக்கு விருப்பம் இல்லை. வீட்டில் தனியாக அமர்ந்து தான் கொண்டு வந்த விளையாட்டு பொருட்கள் பள்ளியில் கலந்து கொண்டு விளையாட்டுகளில் பரிசு பெற்ற படங்கள் இவற்றையே பார்த்தபடி இருக்கிறான்.

பாட்டிக்கு பேரனின் வீர சாகங்களை படத்தில் பார்க்க ஆவல் எழுகிறது. ஆர்வத்துடன் அந்த படங்களை எடுக்கிறாள்.. 

அதையும் பேரன் விருட்டென பிடுங்கி வைத்துக்கொண்டு ம்ஹிம் இதெல்லாம் என்னுடையது தொடாதிங்க அழுக்காகிடும் என்று மறைத்து வைத்துக்கொள்கிறான்.

பள்ளி செல்வதும் வருவதுமாக இருந்த குழந்தைக்ளு என்ன தெரியும் மற்றவருடன் பழகுவது அனுசரித்து போவது போன்ற இயல்புகள் என்று பாட்டி தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொள்கிறாள்.

சிறுவனும் விளையாடிய படியே உறங்கிப்போகிறான். 

பாட்டிக்கு தன் பால்ய விளையாட்டுகள் நினைவுக்கு வருகின்றன. பரணில் இருந்து தன் மகள் விளையாடி விட்டு உடைத்து போட்டதில் எஞ்சிய  பொருட்களை பத்திர படுத்தி வைத்திருந்தாள். அதனையும் எடுத்து மரபாச்சி பொம்மை சதுரம் முக்கோணம் செவ்வக வடிவ மரக்கடைகள் தேர் போன்றவற்றை தூசி தட்டி எடுத்து வைக்கிறாள் .
பேரனுக்கோ நவீன விளையாட்டு பொம்மைகளிலேயே நாட்டம் இருக்கிறது. பேட்டரி போட்டு இயங்கும் அசையும் பொம்மைகளை தேடுகிறான். தான் கொண்டு வந்த வீடியோ கேம்மிலும் பேட்டரி தீர்ந்து விட எரிச்சல் அடைகிறான். பாட்டியின் வீடு முழுக்க தேடுகிறேன் என்ற பெயரில் அனைத்து பொருட்களையும் எடுத்து களைத்து போடுகிறான் பயனில்லை.  பாட்டியிடம் சென்று கேட்கிறான் பாட்டிக்கு புரியாமல் போகவே கவனியாமல் துணி துவைத்த படியும் சமையல் செயத் படியும் தன் வேலையை செய்தபடி இருக்கிறாள். கோபமடைந்த சிறுவனோ பாட்டி செய்யும் வேலைகளுக்கு இடையூறாக எதாவது செய்து வைக்கிறான். என்ன செய்தாலும் பாட்டிக்கு கோபம் வருவதாக தெரியவில்லை. அழுத படி தூங்கிப்போகிறான். 

நடுசாமத்தில் அவனுக்கு வயிற்று வலி எடுக்கிறது. கழிவரை வசதியில்லாத அந்த இடத்தில் எழுந்து வயிற்றை பிடித்தபடி அழகிறான். பாட்டி எழுந்து வீட்டு திண்ணையிலேயே அமர வைத்து சிறுகுழந்தை மலத்தை அப்புற படுத்துவது போல பணி விடை செய்கிறாள். 

பேரனுக்கோ எந்த வசதியும் செய்து வைக்காமல் அப்படி என்ன செய்கிறார்கள் இவர்கள் என்ற கோபம் மட்டுமே எழுகிறது. 

மறுபடி சிறிது நேரம் கழித்து கரப்பான்பூச்சி அவன் மேல் ஊர்ந்து வருவே எழுந்து கத்த ஆரம்பிக்கிறான். பாட்டிக்கு அன்று சிவராத்திரியாகிறது. எனினும் சிறு கடுப்பையும் முகத்தில் காட்டாமல் பூச்சியை அடித்து அப்புறப்படுத்தி சுத்தமாக பெருக்கி படுக்கை விரித்து பேரனை படுக்க வைக்கிறாள்.

சலித்தபடி படுத்து உறங்கிப்போகிறான்.

இரவு முழுக்க கண் விழித்ததால் காலையில் சற்று கூடுதலாக திண்ணையிலேயே உறங்கிக்கிடக்கிறாள் பாட்டி.

எழுந்த பேரனுக்கு அசைவற்று கிடக்கும் பாட்டியை பார்க்க சற்று பயமாக இருக்கவும் செய்கிறது. தான் பாட்டியின் மீது கோபமாக இருக்கிறோம் அதனால் அவள் எப்படி இருந்தால் என்ன ? என்று நினைக்கவும் செய்கிறான். அப்படியும் இப்படியுமாக பாட்டியை வலம் வந்து சரி பாட்டி விழித்துக்கொண்டில்லை என்ற தைரியத்தில் அவள் மூக்கில் சுவாசம் வருகிறதா என்று பார்க்கிறான். அப்போதே கவனிக்கிறான் தலையில் கொண்டை ஊசி குத்தியிருப்பதை அது அவனுக்கு விசித்திர பொருளாக காட்சியளிக்கிறது. அசைவில்லாமல் அதனை உருவி எடுத்துக்கொண்டு விளையாட வெளியில் செல்கிறான். 

எங்கும் மயான அமைதி நிலவிக்கிடக்கும் கிராமம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள் . எங்குமே சிமெண்ட் சாலையோ அல்லது மாடி வீடுகளையோ அவனால் பார்க்க முடியவிலலை. ஆச்சரியத்துடன் அப்படியே சுற்றி வருகிறான். 

அந்த கிராமத்தில் அவரவர் தேவைகளை அவர்களே பூர்த்திசெய்து கொள்வது அவனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. தான் வசித்த இடத்திற்கும் இந்த கிராமத்திற்கும் உள்ள வித்தியாசங்களை வியப்புடன் நோக்குகிறான். நகரத்தில்  எதற்கெடுத்தாலும் மிஸினும் அதனை இயக்கவும் ஆட்கள் வைத்து வேலை பார்ப்பதையும் சோம்பேறித்தனம் என்பதை அறிய இயலா வயது அவனுக்கு.

பசுமை நிறைந்த வயல்கள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் உழைப்பாளிகள். அருகே மணல் மேட்டில் விளையாடும் சிறுவர்கள் இப்படி ஒவ்வொன்றாக பார்த்து வருகிறான். சிறுவர்களும் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு விளையாடுவது அவனுக்கு தெரியவில்லை. அவர்களின் விளையாட்டு அவனுக்கு புதியதாக இருக்கிறது.

தன் வீடியோ கேம்க்கு பேட்டரி எங்கு கிடைக்கும் என்பதை வயலில் வேலை பார்ப்பவர்களிடம் கேட்கிறான். அவர்கள் வரப்பில் குச்சியால் வரைபடம் வரைந்து அங்காடிக்கு வழிகாட்டுகிறார்கள். 

கடை தேடி செல்பவன் வழியில்....சிறுவர்கள்

கூட்டாஞ்சோறு ஆக்குவதும் சிறு சிறு கல்லால் வீடு கட்டி விளையாடும் அவனுக்கு கேலியாக தெரிகிறது. அவர்கள் கட்டிய வீட்டை இடித்து விட்டு சிரிக்கிறான். 

மேய்ச்சல் சிறுவன் புல் கட்டை தூக்கிக்கொண்டு நடக்க அவனை மாடு ஒன்று விரட்டுகிறது. அவனுடன் இருக்கும் அவன் தங்கை ஓடு அண்ணா ஓடு வருது மாடு வருது என்று சத்தமிடுவதை எல்லாம் வியப்புடன் நோக்குகிறான். 

ஆடு .. மாடு இவற்றையெல்லாம் புத்தகத்தில் படங்களாக கவ் .. கோட் என்று படித்தது மட்டுமே முதன் முதலாக அவையெல்லாம் உயிருடன் ஓடவும் மனிதர்களை விரட்டுவதையும் பார்க்க அவனுக்கு அதுவும் ஒரு விளையாட்டாக தெரிகிறது. 

மேய்ச்சல் சிறுவன் அடுத்த நாளும் புல் கட்டை சுமந்து செல்கையில் அவன் பின்னால் இருந்து கொண்டு முந்தைய தினம் அவன் தங்கை பயந்து ஓடு ...ஓடு மாடு விரட்டுது என்று கூறியது போல அவனும் கத்தியபடி நிற்கிறான். மேய்ச்சல் சிறுவன் கிடு கிடுவென வேகமாக ஓடி மாற்று பாதையில் சென்று திரும்பி பார்க்கிறான். மாடு எதுவும் வராததால் இவனை பார்த்தபடி சென்று விடுகிறான்.

தான் நினைத்ததை சாதித்துவிட்ட நிம்மதியில் சுழலும் சக்கரத்தை காலில் மாட்டிக்கொண்டு வீடு நோக்கி செல்கிறான். தான் வசித்த பகுதியில் வண்டிகளும் கார்களும் ஓடும் சாலையில் பயன்படுத்தும் அந்த கருவியை மேடு பள்ளமான இந்த மண் சாலையில் பயன் படுத்த முடியாது என்கிற எண்ணமும் இன்றி விரைகிறான். அவன் விளையாட்டாய் நினைத்த மாடும் அவனை விரட்ட ஆரம்பிக்கிறது. காலில் ஓட முடியாதபடி சக்கரம் இப்படியும் அப்படியுமாக தள்ளாடி ஒரு சரிவில் விழுந்தே விடுகிறான் . பின்னால் விரைந்து வரும் மாடு. கண்களை இருக மூடி கதற ஆரம்பிக்கிறான். 

தூரத்தில் இருந்து கவனித்த மேய்ச்சல் சிறுவன் குச்சி கொண்டு மாட்டினை வேறு பாதையில் திருப்பி விட்டு இவனை எழுப்பி காயங்களில் ஒட்டியிருந்த மண்னை தட்டிவிட்டு நகர்கிறான். அவன் உடன் இருந்த குட்டி நாயும் திரும்பி திரும்பி பார்த்தபடி செல்கிறது.

அடி பட்ட காயத்தின் எரிச்சலை விடவும் ஏதோ வலி அவனை அழவைக்கிறது. அழுத படி செல்கிறான்.

அழுதபடி வரும் பேரனை பார்த்து பதறிய பாட்டி அவன் கை கால் முட்டியென எங்கும் அடிபட்டிருப்பதை பார்த்து பதைக்கிறாள்.

அப்போதே மனதில் நினைக்கிறான் பேரன் தான் பாட்டிக்கென்று எந்த உதவியும் செய்ததில்லை. அவர்களின் வேலைக்கு நடுவே எவ்வளவு உபத்திரம் செய்திருக்கிறோம் என்று. பாட்டியின் செருப்பை தூக்கி எறிந்தது முதல் தன் வேலைகளையும் செய்து கொண்டு தன்னையும் பார்க்கும் பாட்டிக்கு ஊசியில் நூல் கோர்த்து கொடுப்பதைக்கூட எவ்வளவு அலச்சியமாக செய்தோம் என்று தாழ்வு மனப்பான்மையில் தலை குனிந்த படி சென்றுவிடுகிறான்.
                                                                                                                           
                                                                                                                                       தொடரும்.....


பசுமையை (பாசத்தை) தேடும் வேர்கள் !


மகன் : எங்கம்மா போகிறோம் ?  அங்கே யார் இருக்காங்க ?  இது என்னம்மா காட்டுக்குள் போகிறோம் ?..

தாய் : ச்சூ.. பாட்டி வீட்டிற்கு போகிறோம். எத்தனை முறை சொல்வது. கிராமத்தில் தானே பாட்டி வீடு இருக்கு.. வழி இப்படித்தான் இருக்கும். இங்கு ரோட் எல்லாம் கிடையாதுப்பா.

மகன் : கிராமத்து ஜனங்களின் பேச்சு வழக்கு.. அவர்களின் அழுக்கான உடம்பு..  வியந்து பார்த்தபடி கையில் இருக்கும் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தான்.

தாய் : பாட்டியிடம் சேட்டை செய்யாமல் இருக்கனும் சரியா ? இங்கு நவீன வசதிகள் இருக்காது.  ஆதலால் பாட்டியை அது வேண்டும் இது வேண்டும் என்று தொல்லை செய்யாமல் இருக்க வேண்டும் என்று எவ்வளவு கூறியும். (சிறுவன் அதை கவனித்தாக தெரியவில்லை)
பேருந்திற்குள் நிகழும் சண்டை சச்சரவுகளை பார்த்தபடி இருக்கும் போது ஒருவர் பையில் வைத்திருந்த கோழி பறந்து அமர்ந்திருப்பவர்களை அலைக்கழித்தது.  சிறுவன் பயந்து என்னம்மா இதெல்லாம் என்று அம்மாவின் மடியில் ஏறி அமர்ந்து கொண்டான். இறங்கும் இடமும் வரவே அவன் இந்த இடத்தில் நான் இருக்கவே மாட்டேன் என்று அடம் பிடித்தபடி இறங்குகிறான்.

செல்லமாக பின்பு கோபமாக பிறகு அடித்து உதைத்தும் பாட்டி வீட்டிற்கு வயல் வெளிகளை கடந்து நடக்க வைத்து அழைத்து செல்கிறாள்.

காட்சி _2

பாட்டியின் வீடு முகப்புத்தோற்றம்.  கூறை வீடு முன் புறம் மரத்தினால் செயப்பட்ட தடுப்புகள்.. அவைகளும் மழையிலும் வெய்யிலிலும் கரையான் அரித்து கிழிந்த ஆடையைப் போல் அவனுக்கு காட்சியளித்தது.  முகம் சுளித்த படி வீட்டின் உட்சுவரில் பார்வையை பதிக்கிறான். மண் சுவர் வெள்ளை பூசப்படாத சுவரில் மழை நீர் ஒழுகி ஊற்றிய சாயங்கள் .. ஆங்காங்கே சிறு சிறு பூச்சிகள் ஊர்வதையும் பார்க்கிறான்.  அவனுக்கு பூச்சிகள் என்றாலே பயம். குடிநீர் கழிப்பிடம் இப்படி அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்த இடத்தில் தாம் எப்படி இருக்கப்போகிறோம் என்று யோசித்தபடி திண்ணையில் அமர்கிறான்.

                            தாயும் - மகளும்

மகள் : அம்மா உன் பேரன் எதற்கெடுத்தாலும் அடம்பிடிப்பவன். எப்படித்தான் நீ சமாளிக்கப்போகிறாயோ ?  அவனுக்கென்று விளையாட சில பொருட்களையும் இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையான நொருக்கு தீனிகளையும் எடுத்து வந்திருக்கிறேன். அவனுக்கு கொடும்மா என்று பாட்டியிடம் கொடுக்கும் முன்பே சிறுவன் ஓடி வந்து அவற்றை வாங்கி தனி பையில் திணித்துக்கொள்கிறான். 

பாட்டிக்கோ பேச வராது.. சைகையில் தான் பார்த்துக்கொள்வதாக சிரித்தபடி மகளை வழியனுப்புகிறாள். மகள் சென்றதும் பேரனை அன்போடு வருடுகிறாள்.

பேரனோ விருட்டென தட்டி விட்டு எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல.. என்னை ஏன் அம்மாவோட அனுப்பவில்லை. நீங்க சொல்லி இருந்தா அம்மா அழைச்சி போயிருப்பாங்க இல்ல... என்று சலிப்போடு எனக்கு வரத்தெரியும் போ என்கிறான்.

பாட்டிக்கும் பேரனுக்குமிடையில் பத்து மீட்டர் இடைவெளி விட்டு நடக்கிறார்கள்.. பாட்டி சற்று தூரம் சென்று திரும்பி பார்த்ததும் வேறு பாதையில் செல்வதாக போக்கு காட்டி பின்பு பாட்டியை தொடர்நது வீடு வந்து சேர்கிறான்.

பாட்டி சாப்பிட எதைக்கொடுத்தாலும் தூக்கி எறிந்து விட்டு.. நொருக்குத்தீனிகளை உண்கிறான். வீட்டில் இருந்த டிவிப்பெட்டியை சற்று நேரம் சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுகிறான்.  அதுவும் இயங்காமல் போனதால் மறுபடி வீடியோ கேம்மை எடுத்து வைத்துக்கொண்டு அமர்கிறான்.  அவன் சேட்டைகளை பார்த்தபடி இருந்த பாட்டி மெல்ல எழுந்து மரத்தினால் செய்யப்பட்ட சட்டத்தில் இரு டின்களை மாட்டிக்கொண்டு தண்ணீர் எடுக்க செல்கிறாள். அப்போது எதிர்படும் அந்த ஊர் சிறுவன் ஒருவன் பாட்டியிடம் இவன் உங்க பேரனா ஊரில் இருந்து வந்திருக்கானா ? என்றதும் தலையசைத்து விட்டு பாட்டி செல்கிறாள்.

அந்த சிறுவன் இவன் வைத்திருக்கும் விளையாட்டு பொருட்களை ஆவலுடன் பார்த்துவிட்டு இது என்ன ? என்று தொட முயற்சிக்கிறான். அவன் உடன் வந்த குட்டி நாயும் அவனை முகர்ந்து பார்க்கிறது. பேரனுக்கு அது பிடிக்காது போகவே நாயை காலால் உதைத்து விட்டு விளையாட்டு சாமான்களையும் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றுவிடுகிறான்.
                                                                                                            தொடரும்......

இது ஒரு புரியாத பாஷையில் படம் பார்த்தபின்பு எனக்கு புரிந்ததை எழுதினேன்.  அது என்ன படம் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க. 

Tuesday 20 August 2013

மிக மிக விரைவில் நீங்கள் எதிர்பார்த்த...விழா!

நம்ம ஐயா வருவாக. சென்னை ஹீரோவும் வராக. பிறகென்ன தாடியோட நம்ம மதுமதியும் இருக்காங்க மற்றும் நம்ம பதிவர்கள் அழைப்பிதழ் எல்லாம் போட்டு அசத்தலா அழைச்சிருக்காங்க. இது நம்ம இல்ல விழாங்க யாரும் மறக்காம மறுக்காம வீடு தேடி வந்து அழைச்சதா நினைச்சி வாங்க. என்ன வெற்றிலை பாக்கு இல்லையா ? நோட் திஸ் பான்ட் வடிவமைப்பாளரே (கணேஷ் அண்ணா)

Monday 19 August 2013

உழைக்கும் வர்க்கத்தை காணோமடி !

உழைக்கும் வர்க்கத்தை காணோமடி
எங்கும் கண்டால் சொல்வாயடி.

நத்தைபோல் முதுகில் சுமந்திடுவார்
நடந்தே தொழிலிசை பாடிடுவார்

மாதமிருமுறை வந்திடுவார்
மழுங்கிய பொருளை கூர்தீட்டிடுவார்.

யாதும் ஊரென்றே சென்றிடுவார்
யாரும் கேட்க பணி செய்திடுவார்.

எஞ்சியது அவர்கென்றும் உழைப்பே
எடுப்பு சாப்பாடும் சிலநாள் மறுப்பே.

வானக் குடையின் கீழ் வாழ்ந்திடுவார்
வறுமை ஆடையையே சூடிடுவார்...

இவர்களை...
தேடித் திரியும் கண்கள் தாராளம்
தேங்கிக் கிடக்கும் பொருளோ ஏராளம்

களை எடுத்த ஒரு கூட்டம்
காணாமல் போன சங்கதியாய்
இவர்களும்...
களவு கொடுத்திருப்பாரோ...?
உழைப்பை நூறு நாள் வேலைக்கு...?

Wednesday 14 August 2013

தாயின்மணிக்கொடி நமதுயிர்கொடி !


திரும்பிப் பார்க்கின்றேன் தியாகம் திரும்பிடக் கேட்கின்றேன்!
வருந்தி அழைக்கின்றேன் தந்ததைக் காத்திடப் பாடுகிறேன்!
பெற்ற சுதந்திரம் பேணிக் காத்தல் கடமை நம்கடமை!
பெரியவர் செய்த தியாகத்தாலே விளைந்தது நம் உரிமை!

சுதந்திரமென்ற மூச்சுக் காற்றின் உருவம் தேடுகிறேன!
அகரமான அவர்களெல்லாம் வாழ்ந்தார் வழியாக!
அகிம்சை வழியில் பெற்றதாலோ இம்சை செய்கின்றோம்!
சுயநலப் பூக்களின் சுரண்டும் ஆசையில் வெந்து எரிகின்றோம்!

வீரப்பெண்மணி வேலுநாச்சியின் வீரமெங்கே யார் அபகரித்தார்!
லட்சுமி சரோஜினி கிருபாளினி ஜான்சி விஜயலட்சுமி இந்திரா!
இவர்போல் வாழ எவரையும்காணேன் ஏனிந்த இடைவெளியோ?
ஆணும் பெண்ணும் சரிசமமென்ற மேடைத் தத்துவங்கள்!

உண்மை வாழ்வில் பொய்யின் உறவாய் இதுவே நிதர்சனமாய்!
பெண்ணினம் உரிமை பெரும்நாள் மலரின் அதுவே நன்னாளாம்!
பஞ்சம் பட்டினி ஏற்றதாழ்வு மதமினமென்ற பேதங்ககொழிந்து
சமத்துவ மலர்கள் மலரும் நாளே சுதந்திரத் திருநாளாம்!

நாட்டின் சதந்திரம் பாதிவழி சுபவாழ்வே மீதியோட்டம்!
நன்மை நினைத்து உண்மையணிந்து நலமே செய்து!
தாயின்மணிக்கொடி நமதுயிர்கொடி தாங்கி நடந்திடுவோம்!

மீள் பதிவு

Saturday 3 August 2013

மகிழ்வான தருணங்கள் ! (தொடர் பதிவு)

என் அருமை அக்கா (ராஜீ) முதலில் தொடர்பதிவெழுதும் போது மறந்துட்டாங்க போல நான் சும்மா இருக்காம நான் தப்பிச்சேன் தப்பிச்சேனு சொல்லிட்டு வந்தேன். இப்ப நல்லா மாட்டிவிட்டுட்டாங்க... என்ன செய்ய ...?

அலுவலக நேரத்தில் சக ஊழியர்கள் பேஸ் புக் என்று ஏதோ அரட்டை அடிப்பதை பார்த்திருக்கிறேன். சில முறை அங்கு ஒரு செய்தித்தாள் போல எல்லா நிகழ்வுகளும் உடனுக்குடன் தெரிந்து விடுவதை பார்த்தேன். பிறகே நண்பர்கள் சொன்னார்கள் நம் உடன் படித்த பள்ளி நண்பர்களையும் இதன் மூலமாக தேடலாம் என்று. 

எனக்கு எங்க ஊரில் இருந்து வந்ததில் இருந்தே ஒரு ஏக்கம் இருந்து வந்தது. மறுபடி உடன் படித்த நண்பர்களையும் அக்கம் பக்கத்து வீட்டில் இருந்த தோழிகளையும் மறுபடி எப்போது காண்போம் என்று. யோசித்தேன் நாமும் இப்படி ஒரு பகுதி ஆரம்பித்து நமது நண்பர்களை தேடலாம் என்று முடிவு செய்தேன்.  அதன் வழிமுறைகளையும் கேட்டு முதலில் பேஸ் புக் மூலமாகவே கவிதைக்கு நான் அறிமுகமானனேன். 

முதன் முதலாக எனது கவிதை அழகான வரிகளுக்கு ஏற்ப படங்களுடன் தமிழ்த்தாயகம் என்ற குழுவில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் சென்றது. அதுவே எனக்கு முதலில் கிடைத்த முதல் பதிவின் மகிழ்ச்சி அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அக்காவிடம்  மெயில் அனுப்பி பார்க்க சொன்னேன். சக நண்பர்களின் பாராட்டுக்கு அளவேயில்லை.  கிராமத்து நினைவு என்ற தலைப்பில் வெளியான அந்த கவிதையை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

மாமரத்து குயில் ஓசை 
மஞ்சு விரட்டிய மைதானம் 
மலர் தேடும் வண்டு

ஊஞ்சல் ஆடி விழுந்த ஆலமரத்தடி ..
ஒரே ஒரு முறை ஊருக்குள் வந்து 
போகும் ஒற்றை பேருந்து 


குளிக்க பயந்து 
குதித்தோடிய 
குட்டித் திண்ணை 


திருவிழாக் கூட்டத்தில்  
தொலைத்த  பகைமை 


தினம் தினம் 
நீச்சல் 
பழகிய ஆழ்கிணறு 


ஆற்றங்கரையில் ஆக்கிய 

கூட்டாஞ்சோறு 
ஆயாவின் சுருக்குப்பை 
இப்படி எதுவும் இந்த பட்டினத்தில்  இல்லை 
உன்னிடம் சுட்டிகாட்டி மகிழ...

மகிழ்வுடன் 
சசிகலா


நான் எதிர்பார்த்த நண்பர்களை தேட முடியவில்லை என்றாலும். புதிய நண்பர்கள் சிலர் அல்ல பலர் கிடைத்தனர். பிறகு ஒரு நாள் கவிதைகளை தேடித்தேடி படித்துக்கொண்டிருந்த போது .. வசந்த மண்டபம் மகேந்திரன் அண்ணா அவர்களின் வலை என்று தெரியாமலே அவர் வரிகளை படித்து நாமும் இப்படி பதிவிட என்ன வழிமுறை இருக்கும் என்று அறியும் ஆவலுடன் அங்கு தொடர்புக்கு என்ற பக்கத்தில் இருந்த அண்ணாவின் மெயில் ஐடிக்கு மெயில் அனுப்பினேன். 

உடனே பதில் மெயிலும் அலைபேசி எண்ணும் தந்து உதவி செய்வதாக சொன்னாங்க. என்ன பெயர் தங்கள் தளத்திற்கு என்று கேட்டதும் எனக்கு என்ன சொல்வது என்று தெரியிவல்லை. சட்டென தென்றலாய் நம் வரிகள் படிப்பவர்களை சென்றடையட்டும் என்றே தென்றல் எனும் பெயரை சொன்னேன். அப்படியே தென்றல் தளத்தை ஆரம்பித்தும் கொடுத்தாங்க.  அண்ணாவிற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.

மகேந்திரன் அண்ணாவின் வலை மூலமே நிறைய நண்பர்களின் வலை பக்கங்களுக்கு சென்று படித்து கருத்தும் சொல்லி வ்ந்தேன். எனக்கு முதலில் பின்னூட்டமிட்டு வாழ்த்தியது அண்ணா பிறகு ரமணி ஐயா அந்த பின்னூட்டங்கள் தான் எனை தொடர்ந்து எழுத வைத்தன. ரமணி ஐயாவிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன.

முதன் முதலில் எனை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய மதுமதி அவர்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. வலைச்சரம் என்றால் என்ன என்றே தெரியாத எனக்கு விளக்கங்கள் சொல்லி பதிவிடுவது பற்றிய நிறைய தகவல்கள் சொன்னதோடு மட்டுமல்லாமல் தளத்தை புதுப்பிக்கவும் செய்தார். வலைச்சரம் என்பது நாம் பின்னூட்டம் மிட்டு படித்து வரும் வாசகி என்றே நினைத்திருந்த எனையும் சகோதரர் கணேஷ் சீனு ஐயாவிடம் பேசி ஒரு வார ஆசிரியராக பதிவுகள் பகிரச் செய்த சகோவிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்படியே நான் நன்றி சொல்ல ஆரம்பித்தால் முடிவே இருக்காது.... என்பதால் தொடர்ந்து தென்றல் தளத்திற்கு வருகை தந்து எனை உற்சாகப்படுத்தும் அனைத்து உறவுகளுக்கும் தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து முதல் பதிவின் சந்தோஷத்தை பகிர நானும் நண்பர்களை அழைக்கிறேன்.


Friday 2 August 2013

காதலின் புலனடக்கம் !


உன் வருகைக்காக
காத்திருக்க போவதில்லை
என் விழிகள்....

நீ வரும் பாதையில்
தவம் இருக்க போவதில்லை
என் கால்கள்.

உன்னிடம் பேச
வார்த்தைகளை 
சேகரிக்க போவதில்லை
என் உதடுகள்.

உன் அருகாமையில்
தன் துடிப்பை 
அதிகப்படுத்தப்போவதில்லை
என் இதயம்.

உணர்வுகளை கட்டுக்குள்
வைத்து..இறுக கண்களை மூடி
சாலையில்  நீ எனை 
கடந்து போகும் நேரத்தை
கடத்திக்கொண்டிருக்கிறேன்.
மூளை மட்டும் 
சொன்ன பேச்சை கேட்காமல்
முன்னே பல் இளித்து வைக்கிறது.