Friday, 31 May 2013

ஒரு ஜென்மம் போதாதே ! (உண்மைச் சம்பவம் )

தினம் தினம் காத்திருந்தேன்
திரும்பிய திசையெலாம் 
முகம் பார்த்திருந்தேன்...

இன்று நாளை என்று நானும்
நாட்களை எண்ணி வந்தேன்
வருவாய் வசந்தம் தருவாய்
என்றே காத்திருந்தேன்.

மகன் முகம் பார்த்தில்லை
மகளின் குழந்தையை தாலாட்டியதில்லை
அனுப்பி வைத்த பணத்தினிலே
அடுக்குமாடி சிரித்திருக்கு..

அன்பாய் வருடும் தென்னங்காற்றும்
உன் வரவை பார்த்திருக்கு..
உன் மடியில் தலைசாய்த்து
உணர்வையெலாம் கொட்டி அழ
ஒரு ஜென்மம் போதாதே...
ஓடோடி வா என்னவனே.

தூரெடுத்த கிணற்றைப்போல
ஊற்றெடுக்கும் உந்தன் எண்ணச்சுமை
கன்னிவெடி வெச்சது போல்
கலங்கிடுதே கண்களிரண்டும்.

உன் முகம் பார்த்துவிட்டால் 
பறந்திடுமே எந்தன் சோகம்
சீமைக்கு போன மன்னவனே
வந்தாயே உயிரற்ற சிலையாக.

தோழியின் கணவர் வெளிநாட்டில் இருந்தார். திடீரென இறந்துவிட்டார். அந்த பெண்ணின் மனம் என்ன பாடு படும்.

Thursday, 30 May 2013

அச்சாணி இல்லாத தேரோட்டம் !


அச்சாணி இல்லாத தேரோட்டம்
அவன் போய் பார்த்தான்டி முன்னோட்டம்.

தேர் ஓடும் அழகைப்பார்
தெருவெல்லாம் கூட்டம் பார் - என
கூத்தாடி அவன் சொன்னான்

தேர் நிலையை காணோமடி
தேர் ஓட ரதவீதியும் போதாதடி

வடம் பிடிக்க ஆள் சேர்த்தான்
வண்ணக் கோலம் போடச்சொன்னான்

அலங்கரிக்க பூ பறித்தான்
ஆரவார பாட்டிசைத்தான்

வர்ணத்தை குழைத்தெடுத்தே
வடிவங்கள் செய்து வைத்தான்

உறவெல்லாம் வியந்துநிக்க
ஊர் மக்கள் வேடிக்கை பார்க்க
வார்த்தைகளில் வடம் பிடித்து
இழுத்துச்சென்றான் இல்லாத
தேர் அதனை...
வாய் ஜால மன்னனடி 
வம்பிழுத்தே சிரிக்கும் 
மாயக்கண்ணனடி.


Tuesday, 28 May 2013

வண்ணங்களோடு !


குவியல்களுக்கிடையே 
பிடித்தது பிடிக்காது 
என அலசியபடி
ஏற்கனவே இருக்குமே
இருந்தால் என்ன 
புதிய வடிவமாய் 
இருக்கிறதே...

எனக்குப் பொருந்துமோ
எடுப்பாக இருக்குமோ
சம்பளக்காரனின் சட்டையை
கிழிக்கவைத்து...

புத்தம் புதிதாய் 
சுமந்து செல்கிறேன்.
எதிர்படும் ஜவுளிக்கடை
பொம்மை ஏளனமாய் 
சிரிக்கிறது.

தோழிகளின் விமர்சனங்களில்
சிக்கி கசங்கிப்போய்
அடைந்து கிடந்த பெட்டிச்
சீலைகளில் பத்தோடு 
பதினொன்றாக ...

அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில்
முதலிடம் பிடிக்க தகுதிவாய்ந்தது.
போயும் போயும் கல்யாணத்துக்கு
கட்டி வந்த கலரப்பாரு 
என்ற விமர்சனத்தில் கனத்துப் போகிறேன்.
மன எண்ணங்களை
வண்ணங்கள் காட்டுவதில்லையே
பின்பு ஏன் வண்ணங்களுக்கு முதலிடம்.


Sunday, 26 May 2013

சுகமான சுமைகள் !சுமையென்று ஏதுமில்லை -எதையும்
சுகமாக நினைத்து விட்டால்.

கனவிலோர் உருகொண்டு
கருவினிலே சுமந்திடுவாள்
தாயவளுக்கு சேயும் சுகமான சுமையே.

மண்மீதினில் நமை சுமக்கும்
பூமாதேவிக்கு ஜீவராசிகளும் 
சுகமான சுமையே.

நீருண்டு வேர்பரவி 
நிழல் கொடுக்கும் மரங்களுக்கு
காய் கனிகள் சுகமான சுமையே.

வான் மழை சேமித்து
தாகம் தீர்க்கும் நதியும்
கடலோடு சேர்வதும் 
சுகமான சுமையே.

கதிர் வாழ் நெல்மணிகள்
நிலங்களுக்கு சுகமான சுமையே.

மகனாய் மகளாய் இருக்கும் நாமும்
மனிதம் மரித்துப்போகாமல் காப்போம்.
ஈன்றவரைக் காத்திடுவோம் 
சுகமான சுமையாக.

Friday, 24 May 2013

மாய உலகம் !விழிக்குளத்தில் மீனிரண்டு
மானாட்டம் துள்ளியோடி
மதுர வீதிக் கடைதனிலே
மல்லிகையை பார்த்து நிக்க.

மனம் பறித்தவன் வந்தானோ ?
சரமாய் தொடுத்தே கையில் தந்து
சறுக்கி விழும் எண்ணத்தில்
சம்மணமிட்டு அமர்ந்தானோ ?

காவலாய் இமையோ
கொக்கரித்து தான் நிற்க
கண்ணுறக்கம் மறந்தேனே
களவு போனது நிஜம் தானோ?

எண்ணத்தில் மிதந்தபடி
ஏடுகளில் வாழ்கின்றேன்.
கன்னத்தில் பொட்டுமிட்டு
நெற்றியிலதை தேடுகிறேன்.

பாதைக்குள் பாதை தேடும்
புதுப்பாதை காதலடி...
கண்ணிரண்டும் திறந்திருந்தும்
காட்சி தேடும் மாய உலகமடி.

Wednesday, 22 May 2013

பெயர் சூட்டு விழா !


சுயசிந்தனை அறவே முடக்கி
சம்பிரதாய சடங்கில் மூழ்கி
ஏச்சிப்பிழைப்பவன்  சாமியார் .

மூளைக்கு விலங்கிட்டு
முயற்சி தனை முடமாக்கி
வாழ்பவன் சோம்பேறி.

தன்னிலையும் உணராது
முன்னுக்குப் பின் முரணாகி
முன்கோபியாய் திரிந்து
அடக்க வருபவரை மூடன் 
எனும் முட்டாள்.

தேன் சேர்க்கும் 
இனத்தினையும் அழிப்பான்...
உடலுக்கு தேவையில்லா 
பானத்தையும் குடிப்பான்
குடிகாரன்.

உற்றவர் பெற்றவர் மறந்து
உடமைகள் பலவும் இழந்து
கொண்டவளையும் பணயமாக்கும்
சூதாட்டாக்காரன்.

ஈன்றவளும் பெண்ணென்பதை 
மறந்து இச்சைக்காய் 
மலர்களைத்  தீய்க்கும் காமுகன்.

எத்தனை எத்தனை பெயர்கள்
ஏன் இந்த தீமை தரும் செயல்கள்
உணர்ந்து திருந்த சட்டம் வைத்தார்
அதையும் உலையில் போட்டே
உழன்று திரியும்...மானுடரை என்ன சொல்ல.

வென்றதை தின்று மாய்ந்து
வெகுளியாய் உள்ளம் கொண்டு
காண்பவர் முகமதிலே காட்சியாய்
சிரிப்பைக் காண சிரித்துப் போகும் 
மனிதனை பைத்தியக்காரன் என்பார்கள்.
இவர்களால் பைத்தியம் என
பெயர் சூட்டப்பட்டவர்கள்.

Monday, 20 May 2013

எல்லாமுமாய் நீயே !


பச்சை பசுந்தளிர் புல்லின்மீது
பனித்துளிப் படுத்திருக்கும்!

பாசங்கொண்ட இதயம்தனிலே
நினைவுகள் வாழ்ந்திருக்கும்!

இமைமூடினும் எண்ணமேனோ
காத்துப் பார்த்திருக்கும்!

கடந்தவையாவும் கூடஇல்லை
ஆயினும் வாழ்ந்திருக்கும்.

எங்கோ எதையோ தொலைத்த
மாயத் சோகத்தடுமாற்றம்!

ஆருயிர் ஓருயிர் என்னுயிர்தேடி
என்றும் போராட்டம்!

கனவில் நினைவில் கவிதைவடிவில்
நிழலாய் உணர்வின் வருகை!

கண்டதும் நடந்ததும் கனவா நனவா
காட்சியில் காணவில்லை!

எதையும் மறக்கவும்
உதறவும் முடியாதெனினும்
எல்லாமுமாய் நீயே
இருப்பாய் எம்தமிழே.

Sunday, 19 May 2013

அன்பே ஆயுதம் !


சோம்பல் என்ன உடன்பிறப்பா
சோறிடுவார் பார்ப்பர் உனை வெறுப்பா

உழைக்க வேணும் கையாலே
உயர வேண்டும் தொழிலாலே

பண்பாளர் காட்டிய வழியதுவே
பயணம் தொடர்ந்தால் வாராதே பழியதுவே

உனக்கென வகுத்த ஒரு பாதை
ஊர் சொல்லுக்கு கொடுக்காதே காதை

துணிவை மட்டுமே துணையெனக்கொள்
துணிந்து நின்றால் வெற்றி நிச்சயம் செல்

பணம் மட்டுமே வாழ்வல்ல -உன்
பாதையில் ஒழுக்கமிருப்பின் தாழ்வல்ல

அன்பே ஆயுதம் உணர வேண்டும்
அதிலே அகிலத்தை வெல்ல வேண்டும்.

Friday, 17 May 2013

முந்தா நாள் பார்த்த நிலா !


பொட்டுமிட்டு பூவும் வச்சி
புது மஞ்சள் தானும் தொட்டு
கன்னம் வருடப் போறேன்டி
கண்மணியே வாயேன்டி...

மூக்கில்லி ஆட்டமாட -அழகு
மூக்குத்தியாள காணோமடி
முந்தா நாள் பார்த்த நிலா
முகம் காட்ட மறுக்குதடி...

ரெட்ட சடை பின்னலிப்போ
ராக்கனவா தெரியுதடி
தென்னங்கீத்து ஓட்டையில
தேடி நிக்கேன் பிறை நிலவ- அவளோ
தேவதையா குந்திகிட்டு-எனை
தேய வச்சி பார்த்திருக்கா.Thursday, 16 May 2013

கோடையிலும் வசந்தம் !

ஆத்தங்கர காத்திருக்கு
அரசமர நிழளிருக்கு
அழுக்கெடுக்க போனபுள்ள
அர நாளா காணவில்ல.

அங்கென்ன ஒரு கூட்டம்
நடக்குது பார் கரகாட்டம்
குளிக்க வந்த கோமணான்டி
குரங்காட்டம் மரக்கிளையில்
ஆடு மேய்க்க வந்த கூட்டம்
அரை வட்டம் போட்டு நிக்க...

சோடி சேர்ந்த புது ஜோடி
சோழியாட்டம் கண்ணுருட்டி.
காவக்காரன் கொம்போடு
காடு கறவு வம்போடு
அந்தோ போகும் மாட்டைப்பிடி
அரைகூவல் கேட்டுடிச்சே...
கோடை வெயில் தாங்கலியே
இந்த பய புள்ளைங்க குசும்பு ஓயலியே.


Wednesday, 15 May 2013

எண்ணங்களோடு !


சப்தங்களை புறந்தள்ளி
சாக்கடைகளை தாண்டி
மன உளைச்சலுக்கு நடுவே
மயான அமைதி தேடும் மனம்.

அகம் தொடும் நிகழ்வுகள்
அங்காடிப் பொருளாய் காட்சிகள்
அங்குமிங்குமாய் சேமித்த வார்த்தைகள் 
தேர் இழுக்கும் வடமாய்...

எதையும் தள்ளிடவும் இயலாது
கோர்த்தனைத்தையும் சரமாக்கவும் முடியாது
உண்மைக்கென சிலவும்
தியாகமாய் பலவும்
சில பல பெருகி சிதறல்களாய்

கம்பீரமாய் விரல் சிறைக்குள்
எழுத்தாணி எழுந்து நிற்கிறது
எண்ணங்களுக்குள் தள்ளாடியபடி நான்.


Tuesday, 14 May 2013

உன் நினைவின்றி !


நீரில்லா புவியில்
நினைவில்லா உடலில்
கையால் நடந்து
காலால் உண்டு
சுவாசமின்றி வாழ்வது
எப்படி சாத்தியமோ
அவ்விதம் சாத்தியமானது
உன் நினைவின்றி வாழ்வதும்
உன்னிடம் பேசாமல் இருப்பதும்.


Monday, 13 May 2013

துளித் துளியாய் !வலிய சென்று வாங்கியது
வலிக்கும் நினைவுகள்.
பட்ட மனதை தேற்றும் விந்தை
கற்றிருப்பின் வாராயோ...?

சூரிய முத்தத்திற்கு
காத்திருக்கும் பனித்துளியாக  நான்.

உன் வசம்
வார்த்தையும் தன்னை 
இழக்கிறது நீயே பேசு.

கெஞ்சவும் கொஞ்சவும்
உரிமையுள்ளவனே
-- 
கதைக்கச் சொல்கிறாய்
எனக்கு கவிதையைத் தவிர
ஏதும் தெரியாதே.

நமக்கான நெருக்கத்தை
உணர வேண்டுமாம் பிரிவும்.
அதன் ஆசையும் நிறைவேற்ற
நான் இருக்கிறேன்...

Saturday, 4 May 2013

மௌன வேலி..!


நிலவும் ...நீயும்
என் அருகருகே தான்
இருக்கிறீர்கள்...
மன அசைவுகளை
உணராது மௌன வேலியிட்டு.

உற்று நோக்கியபடியே
உறங்கிப்போகிறேன்...
மூடிய இதழ் (இமை) 
வருட வரும்...
பட்டாம்பூச்சியாகிறாய்.

இமைக்குள் இருத்திக்கொள்ள
இதழ் விரிக்கிறேன்.
காற்றசைவுக்கே
காத்தாடியாய் பறக்கும் நீயோ
இமை அசைவிற்கு நிற்பாயா..?
பறந்தோடிப் போகிறாய்
பூத்திருக்கும் மலராகிறேன் நானும்.