Thursday 10 April 2014

முந்தி ஓடும் சனத்தப்பாரு !


ஆளுக்கொரு கட்சிக்கொடி
ஆரவார பேச்சு கேட்டுக்கோடி
முந்தி ஓடும் சனத்தப்பாரு
முழக்கமிடும் கோசத்தக்கேளு
முன்ன பின்ன சாடிகிட்டு
முகத்த நல்லா கோணிக்கிட்டு
கூட கும்பிடு போட்டுகிட்டு
கூட போகும் (ஆட்டு)மந்தையப்பாரு...
வெட்டத் துளிர்க்கும் முருங்கையாட்டம்
வேட்டிக் கரைக்கொரு கட்சியாட்டம்
கூலி கொடுத்து தலைக்குந்தான்
கூட்டம் சேர்க்கும் நாளுந்தான்
புத்தம் புதுசா வண்ணம்தான்
புதுசா உடுத்தும் குட்டிச் சுவருந்தான்.
உன்னை என்னை யார் கேட்பா ?
உண்மை ஓட்டு யார் போட்டா ?
வெள்ளிக்காசு சிரிக்குமிடம்
வெளுத்து வாங்கும் கள்ள ஓட்டுகளும்..
தோத்தவரும் ஜெயித்தவரும்
தோரணமிடும் வசவுகளும்..
என்னாளும் இது வாடிக்கைதான்
நமக்கென்ன அங்க வேடிக்கைதான்..
வேளை முடிஞ்சி போச்சிதின்னா
வேலி போட்டு போயிடுவார்...
நமக்கு என்றும்
கூலி வேல தான் மிச்சமடி...
கூடக்கும்பிடு வேண்டாமடி.

Friday 4 April 2014

இரண்டது ஒன்றானால் !



ஒற்றைக்காலில் உடல் சுமக்கும்
கொக்காகுமோ மனித இனம்.

சாலையோர மணல் தனிலே
காத்து நிற்கும் சுமை தாங்கி
ஓடியோடி சுமை சுமந்திடுமோ ?

சக்கரம் பூட்டி அச்சாணியேந்தி
சுழலுகின்ற வண்டிச் சக்கரம் காண்
இரண்டானால் அது சுமக்கும்.

உறவில் உறவும் இப்படியே
இரண்டு ஒன்றானாலது மணம்.

இரண்டது நாலானால் குடும்பம்.
நாலது எட்டானால் சமூகம்.
எட்டது விரிந்து பரந்தால் நாடு.

தனித்தனியாயோடி வெலல்
கூடாது இவ்வுலகில்..
நாம் கூடி இணைந்து வாழின் நல்வாழ்வு.

கூடி எவரும் தோற்றதில்லை
இதை மறந்தவர் வென்றதில்லை
வென்றவர் நட்பு மறப்பதில்லை.

Wednesday 2 April 2014

நிலா வரும் நேரத்தில்...

நிலவதனை பார்த்திருந்தே நில்யென்றே சொல்லிவர
களவதனை கற்றநிலா நில்லாமல் போகவர
நிழலுனக்கு ஏன்எதற்கு நீதிருடி தானெக்கு
கழன்றோடி போகுமுந்தன் களவாணி புத்தியெதற்கு ?
ஜன்னலோரு இருக்கையில ஜதிசேரும் நேரத்தில
சல்லடையாய் எனை அரித்து சாந்தமாகும் சாமத்தில
மேகத்தில் தினம் ஓடி தேகத்தை தான் மறைக்கும்-கவி
மோகத்தில் நானழைக்க கோபத்தில் தான் முறைக்கும்.

முகங்காட்டா மூடுபனி முடிவேது எனக்கு இனி
முகவரியாய் வானமினி பிறைநிலவே வந்திடு நீ.
மலைதேடி மறைகின்றாய் மனம் தேடும் நந்தவனம்
மாலை வருவாய் என்றே மருகி நிக்கும் மங்கை தினம்.