Thursday 12 July 2012

பேச்சில் பெண்ணுரிமை !


பூந்தோட்டமெங்கும் ஆடும் வண்ணமலர்
சிந்தையிலோ மணம்வீசும் எண்ணமலர்
விழியிரண்டும் அலைந்தோடி காட்சிதனை
நிழற்படமாய்க் கொய்து மகிழ்கையிலே
வண்டினத்தோடு தேனீயும் போட்டிபோட்டு
தேனெடுக்க முயன்ற முயற்சி வென்றாலும்
மகரந்தம் சுமக்க இயற்கை அனுப்பிய தூதர்
அறியாமல் அவரோட்டம் அவனிவாழ்வுக்காய்!

மொட்டுவிரிந்து மலராகி மணம்பரப்பி நிற்க
இதழ் உதிர்ந்து காயாகி மறுஜென்மம் காண
ஒன்றிரண்டு மட்டும் தாய்மை வரமின்றி ஏங்கி
மொட்டுவடிவிலேயே குழந்தைக் கனவோடு
மலருக்கே இதுகொடுமை மனிதரில் இவர்கள்!
மலடியெனப் பட்டம்சூட்டி மனங்களை தீயிட்டு
படைப்பின் குறைபாட்டுக்கு பெண்ணை பலியாக்கி
நடத்தும் நாடகத்தின் பெயர்தான்-சமூகநீதியெனில்,
அந்தநீதி அழிவதுவே பொது தர்ம நீதியாகும்!

காட்சியிலோர் மாற்றம் பார்வையும் வேறாக
மங்கலமாய்ப் புறப்பட்ட திருமண ஊர்வலத்தின்
குறுக்கே ஓடிய பூனை அபசகுனம் ஆனதுபோல்
பெற்றோர்க்கு குலமகளாய் திகழ்ந்த மலர்கள்
ஊருக்குள் தேவதையாய் ஓடிய பூங்கால்கள்
வாழ்க்கைத் துணையைக் காலன் கவர்ந்ததால்
பொட்டின்றிப் பூவின்றி வெள்ளையாடையுடன்
கனவெல்லாம் போனவனோடு போட்டுப் புதைத்து
நடைபிணமாய்கண்ணீரெல்லாம் தலையணையில்
இருட்டோடு இருளாய் நாளெல்லாம் தவித்தழுது
வெளியே வந்தால் தீட்டு முண்டச்சி விதவை
அபச்சார வார்த்தைகளால் ஆயிரம் அர்சனைகள்!
விட்டொழிந்து போய்விட எண்ணி கயிறெடுக்க
அம்மா வேண்டாம்மா பிள்ளையின் அபயக்குரல்!
அவளுக்காய் இல்லை பிள்ளைக்காய் சுமைதாங்கியாய்
புன்னகையைக் கொய்தெடுத்த அந்தக் காலன் கொடியவனா?
பூமனமறியாத மாந்தரின் சயநலச் சட்டங்கள் கொடியதா?

பேச்சில் பெண்ணுரிமை ஏட்டிலவர் தேவதைகள்
இயல்பில் அடிமைவர்கம் வாழ்வில் பாலுண்ணிகள்
பேசாமடந்தைகளாய் வாழ்வையே சாபமெனஎண்ணி
வாடும் இவர்க்கெல்லாம் விடியல் மலர்ந்திடுமா?
எழுப்பிவிடயாருமில்லை எழும்பினால் பட்டங்கள்!
இதயமில்லா மானுடத்தின் ஓரக்கண் பார்வையிலே
உருகிவிழும் நட்சத்திரங்களாய் விழும் இவரின்
பாலைவாழ்வு சோலையாக பூவெல்லாம் கனியாக
சமூகத்தைக் கைகாட்டி தப்பிக்க முயலவேண்டாம்!
நான் நீ நாம் மாறின் நலம்பெறும் இவர்வாழ்வும்!!

25 comments:

  1. மொட்டுவிரிந்து மலராகி மணம்பரப்பி நிற்க
    இதழ் உதிர்ந்து காயாகி மறுஜென்மம் காண
    ஒன்றிரண்டு மட்டும் தாய்மை வரமின்றி ஏங்கி

    உண்மைதான் அழகான கவி அக்கா...

    சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்................

    ReplyDelete
  2. சமூகத்தைக் கைகாட்டி தப்பிக்க முயலவேண்டாம்!
    நான் நீ நாம் மாறின் நலம்பெறும் இவர்வாழ்வும்!!//

    சமூக அவலங்களை இயற்கை நிகழ்வுகளோடு
    இணைத்து சொல்லிச் சென்ற பாங்கும்
    இறுதியாக தீர்வுகளுக்காக தீர்மானம் மா நாடு என
    ஏமாற்றித் திரியும் எத்தர்களுக்கு சவுக்கடி தருவது போல்
    முடித்த விதமும் அருமை அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. unmai sako...

    varuthiya varikal!

    ReplyDelete
  4. பேச்சில் பெண்ணுரிமை ஏட்டிலவர் தேவதைகள்
    இயல்பில் அடிமைவர்கம் வாழ்வில் பாலுண்ணிகள்
    பேசாமடந்தைகளாய் வாழ்வையே சாபமெனஎண்ணி
    வாடும் இவர்க்கெல்லாம் விடியல் மலர்ந்திடுமா?

    -சரியான கேள்வி. நாம் மாறினால் தான் இவை மாறும். அருமையான கவிதை. தென்றலில் வீசிய கவிதைகளில் இது தி பெஸ்ட் என்று தோன்றுகிறது. சூப்பர்மா.

    ReplyDelete
  5. // மகரந்தம் சுமக்க இயற்கை அனுப்பிய தூதர்// அறிவியலை கவிதையாகியது அருமை

    //வாடும் இவர்க்கெல்லாம் விடியல் மலர்ந்திடுமா?// ஆனால் பல மாற்றங்கள வந்துள்ளது, இன்னும் மாற வேண்டும், ஓவராக மாறியவர்கள் திருந்த வேண்டும்.

    படித்துப் பாருங்கள்

    தல போல வருமா (டூ) பில்லா டூ

    http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_13.html

    ReplyDelete
  6. உங்கள் எழுத்துக்களில் நல்ல உயிரோட்டம். வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  7. இப்படி அல்லவோ அடிக்கவேண்டும் இந்த சமுதாயத்தினை சாட்டையால், இன்னும் பழங்கதை பேசி இழந்த வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் சாதாரண உரிமையை கூட தர மறுப்பது தானாக ஏற்படுத்திக்கொண்டாலும் அதையும் ஏற்க மறுத்து அவர்களை கொடுமைப்படுத்தும் அரக்கர்கள் வாழும் பூமியாக அல்லவா இது இன்றும் இருக்கிறது...அத்தகைய வீணர்கள் ஆண்களுக்கு ஏன் அவர்களுக்கே இந்த நிலை வந்தால் மறுநாளே புதுமாப்பிள்ளை ஆக ஜொலிப்பார்கள். ஆண்களுக்கு ஒன்று பெண்களுக்கு ஒன்று என்று ஆண்களே எல்லாவற்றையும் தீர்மானிப்பது ஒருசில விஷயங்களுக்கு வேண்டுமானாலும் இது பொருந்தும்...வாழ்க்கையை இழந்த பெண்ணுக்கு மட்டும் இது ஏன் சாத்தியம் என்று தோணவில்லை ஒருசில ஆணாதிக்கம் பிடித்தவர்களுக்கு. இந்தநிலை மாறினால் மட்டுமே பெண்களின் வாழ்வு சுபிக்ஷம் அடையும்...

    அதற்கு வழிகாட்டியாய் நல்லெண்ணம் கொண்ட ஆண் மகன்கள் முன்னுக்கு வரவேண்டும். அப்போதுதான் நம் உடன் பிறக்காத சகோதரிகளின் வாழ்வு பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களாக இந்த பூமியில் வளம் வருவார்கள்... நம்மால் என்ன நல்ல விஷயங்களை செய்ய முடியுமோ அதை இந்த
    சமுதாயத்திற்காக செய்து கொண்டே இருக்கவேண்டும்... அதில் தலையாய கடமை தான் இது... பாராட்டுக்கள் சசி... உங்களின் இந்த சாடல் கண்டிப்பாக எல்லோரையும் சென்றடையும் என்ற நம்பிக்கை இருக்கிறது... உங்களின் இந்த சமுதாயப்பணி மேலும் தொடர அன்போடு வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  8. ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க..அருமை சசிகலா

    ReplyDelete
  9. தென்றல் அவ்வப்பொது புயலாய் உருமாறி
    சம்பிரதாய சட்டங்களை உடைத்தெறியும்
    ஆக்கப்பணியினை செய்கின்ற வேளையில்
    புயலாய் நெருப்பாய்க் கொட்டும் வார்த்தை
    கவிதைவடிவில் சமூக அநீதிகளுக்கெதிராய்
    பெண்ணுரிமைக்காய் கண்ணீரில் மாயும்
    சமுதாயத்திற்காய் கொடுக்கும் குரல்...
    விழவேண்டியவர்களின் காதில் விழும்!
    இதைப்படிக்கும் இரும்பு இதயங்கள் மாறும்!
    இந்தநிலையிலிருப்பவர் மனதை தாலாட்டும்!
    நன்றியில்லை நவில கோடானகோடி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. சிந்திக்க வைக்கக்கூடிய பதிவு..தென்றல் சற்று உருமாறி புயலாய் வீசுகிறதென நினைக்கிறேன்..சிறப்பு..

    ReplyDelete
  11. // பேச்சில் பெண்ணுரிமை ஏட்டிலவர் தேவதைகள்//

    நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் சமீபகாலமாக மக்களின் கண்ணோட்டத்தில் சிறிய மாற்றம் நிகழத் தொடங்கியுள்ளது. ஒருவேளை வருங்காலம் வசந்தகாலமாகலாம். அது நிச்சயம் நடக்கும்.
    கவிதைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. ஆஹா... பெண்களை ஏட்டளவில் மட்டுமே மதிப்பவர்களை சாட்டையால் அடிப்பது போல கவிதையால் அடித்திருக்கீங்கக்கா... பிரமாதம். வேறென்ன சொல்லி உங்களைப் பாராட்டறதுன்னே தெரியாம முழிச்சுட்டிருக்கேன்...

    ReplyDelete
  13. சாட்டையடிக்கவிதை என்று நினைக்கிறேன்...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. அற்புதம்! தொடர்க!

    ReplyDelete
  15. பெண்ணே பெண்ணை மதிக்கும் காலம் வரும்வரை பெண்ணடிமைத்தனம் ஒழிய வாய்ப்பில்லை தோழி. இந்த அருமையான படைப்பும் அதனுள்ளிருக்கும் ஆக்கபூர்வ சிந்தனையும் என் வாழ்த்துக்கும் வந்தனத்துக்கும் உரியவை. பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
  16. பாலைவாழ்வு சோலையாக பூவெல்லாம் கனியாக
    சமூகத்தைக் கைகாட்டி தப்பிக்க முயலவேண்டாம்!
    நான் நீ நாம் மாறின் நலம்பெறும் இவர்வாழ்வும்!

    பெண்ணடிமை தீருமட்டும் சமுதாயம் உயர்வது கேள்விக்குறியே..

    கேள்விக்குறி நிமிர்ந்து ஆச்சரியக்குறியாக அருமையான படைப்புகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  17. // பாலைவாழ்வு சோலையாக பூவெல்லாம் கனியாக
    சமூகத்தைக் கைகாட்டி தப்பிக்க முயலவேண்டாம்!
    நான் நீ நாம் மாறின் நலம்பெறும் இவர்வாழ்வும்!!//

    சமுதாயம் சிந்திக்க வேண்டிய வரிகள்!இன்று,
    சற்று மாற்றங்கள் காணப்பட்டாலும், மாற வேட்டியன அதிகம் உள்ளன! கவிதை அருமை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  18. பெண்ணுரிமை பெரும்பாலும் பேச்சில்தான் உள்ளது.தற்போது இந்த நிலை மாறி வந்தாலும் முழுவதுமாக மாற நீண்ட காலங்கள் பிடிக்கும். நல்ல கவிதை! சசிகலா மேடம்.

    ReplyDelete
  19. //பேச்சில் பெண்ணுரிமை ஏட்டிலவர் தேவதைகள்
    இயல்பில் அடிமைவர்கம் வாழ்வில் பாலுண்ணிகள்//
    வருத்தும் உண்மை. மாற்றம் ஒரு நாள் வரும்.
    அருமை சசிகலா

    ReplyDelete