Wednesday 11 July 2012

எங்கும் தமிழ் !



அம்மா என்றழைக்கும் அழகுபிள்ளைத் தமிழ்!
அன்பே எனவுருகும் இன்பக் காதல் தமிழ்!
ஆசை வார்த்தை தொடுக்கும் கவிதைத் தமிழ்!
ஆராய்ந்து கதை சொல்லும் காவியத் தமிழ்!

இனியதேனிசையாய் ஒலிக்கும் பாட்டுத்தமிழ்!
இறைமணம் பாடி பரவசமாக்கும் பக்தித்தமிழ்!
ஈத்தைக்காட்டில் உரசியூதும் குழலோசை தமிழ்!
ஈமச்சடங்கில் மாரடிக்க கேட்க்கும் புலம்பல் தமிழ்!

உறவெல்லாம்கூடி கூத்தாடும் கிராம குலவைத் தமிழ்!
உண்ணும் உணவூட்டப் பாடும் தாயின் ஆராட்டுத் தமிழ்!
ஊருக்கு ஊர் மருவிநின்று தமிழர்வாயில் தவழும் தமிழ்!
ஊமையாய் அழுது உவமையாய் மடியும் தமிழர் தமிழ்!

எண்ணத்தில் பூவாகி வண்ணமேந்தி ஓவியமாய் தமிழ்!
எட்டாத உயரத்தில் கட்டான மேனியுடன்மெய்த் தமிழ்!
ஏளனப்பாட்டாய் வெளிநாட்டார் பார்க்கும் தமிழ்!
ஏந்திழையாள் வயல் வெளியில்பாடும் கிராமியத் தமிழ்!

ஐந்தில் துவங்கி கற்றுக் கேட்டு ஆடிப்பாடிய பைந்தமிழ்!
ஐம்பதானபோதும் தமிழன் கல்லாத கற்பனையாய் தமிழ்!
ஔவைப் பாட்டி,வள்ளுவனார் இருவரியில் தந்த தமிழ்!
ஔடதம் என்றியம்பி நாம்பேசா அனாதை ஊமைத் தமிழ்!

அஃனிப்போர் நடக்கிறது தமிழ்வாழ வாழுமா நம் தமிழ்!
ஆஃகினை சூளுமுன் தமிழ்வாழ நினைத்தால் வாழும் தமிழ்!

17 comments:

  1. நெல்லைத் தமிழ், மதுரைத் தமிழ், கோவைத் தமிழ், சென்னைத் தமிழ் எனப் பலவாறாக இருந்தாலும் அன்னைத் தமிழ் என்றும் அழகே. இத்தனை வகையாய் தமிழை ரசித்துக் கவிபுனைந்திருக்கும் தென்றலின் தமிழும் அழகே. அருமையான கவிதைக்கும் இது தொடரவும் நல்வாழ்த்துக்கள் சசி.

    ReplyDelete
  2. அ முதல் ஆயுத எழுத்து வரை ஒவ்வொன்றும் இரண்டு முறை வந்திருப்பது ஒரு சிறப்பான ஒன்று...வாழ்த்துக்கள் அத்தனையும் முத்தான வரிகள்..எத்தனையோ இருக்கிறது இதுபோன்ற சிறப்பு நம் தமிழுக்கு...அதை மாலையாக தாங்கள் கோர்த்த விதம் மேலும் அழகுக்கு அழகு சேர்க்கிறது. இன்னும் பல எண்ணற்ற எண்ணமுடியாத மலைகளை தொடுக்க அன்போடு வாழ்த்துகிறேன்...அத்தனையும் எல்லோரின் இதயத்தை வாசத்தோடு வருடட்டும்..நீங்காதொரு நினைவாக நிழலாடட்டும்...

    ReplyDelete
  3. அ - ஓள... அற்புதம்.!

    தமிழ் வாழட்டும் வளரட்டும்..!

    ReplyDelete
  4. இத்தனை தமிழ் இருக்கா... அசந்து போனேன். எனக்குப் பிடிச்சது கிள்ளைத் தமிழ்தான். அழகான பா படைத்த சசிக்காவுக்கு ஒரு சல்யூட்.

    ReplyDelete
  5. // எண்ணத்தில் பூவாகி வண்ணமேந்தி ஓவியமாய் தமிழ்!
    எட்டாத உயரத்தில் கட்டான மேனியுடன்மெய்த் தமிழ்!
    ஏளனப்பாட்டாய் வெளிநாட்டார் பார்க்கும் தமிழ்!
    ஏந்திழையாள் வயல் வெளியில்பாடும் கிராமியத் தமிழ்! // அருமை நண்பரே ..அழகிய கவிதை .. தேனாக பாய்கிறது ...

    ReplyDelete
  6. நாமும் தமிழ் நம்மிலும் தமிழ்

    ஆகா அழகான கவி அக்கா.

    நம் தமிழை விட அழகு ஒன்றும் இல்லை...

    ReplyDelete
  7. தமிழின் வகைகளைச் சொல்லி வாழுமா நம் தமிழ் எனக் கேட்கும் கவிதையின் சக்தியிலேயே தமிழ் வாழ்கிறதே!
    த.ம.6

    ReplyDelete
  8. நிறைய
    நல்ல தமிழ்கள்


    தமிழை போலவே
    அழகு

    ReplyDelete
  9. தமிழுக்கும் அதைத்தந்த
    தமிழ் கவிக்கும் எனது
    தாய்த்தமிழ் வணக்கம்!

    ReplyDelete
  10. அகரம் தொடங்கி சிகரம் வரை தமிழுக்குள் நுழைந்து தமிழுக்காக ஒரு கவிதை.

    ReplyDelete
  11. அழகான தமிழைப் பேசப் பேச ஆனந்தம். அதை அழகிய கவிதையாய் சுவைக்க சுவைக்கப் பேரின்பம். ஒவ்வொரு வரியையும் ரசித்து வியந்தேன். பாராட்டுகள் சசிகலா.

    ஒ,ஓ வுக்கான வரிகள் விடுபட்டுவிட்டன போலும்... அவையும் இணைக்கப்பட்டால் கவிதையின் சிறப்பு இன்னும் மிகும் அல்லவா?

    ReplyDelete
  12. உங்கள் தமிழ் ஆர்வம் பாராட்டுக்குரியது. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. நீங்கள் குறிப்பிடும் நிகழ்வுகளும் செயல்களும் அனைத்து மொழிகளிலும் உண்டு. மற்ற மொழியினர் தமிழைக் கேலி செய்து குறிப்பிடுவதும் உண்டு. பாரதி சொன்னதுபோல் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் காணோம்’ என்ன வித்தியாசம் என்றால் நாமறிந்த மொழிகளே மிகவும் குறைவு. எனக்கும் தமிழ் மேல் உயிர். ஆனால் வெறி இல்லை.

    ReplyDelete
  13. என்றும் வாழும் தமிழ்.
    அருமையான கவிதை.

    ReplyDelete