Friday 22 February 2013

அன்பின் தீர்ப்பு !


வீட்டுக் கூட்டம் ஊர் கூட்டம் என வீடு காலையிலே அல்லல் பட்டது.

      உறவினர்களாக அவதரித்த மனைவி முதல் மாமன்,  மச்சான்,  சித்தப்பா,  பெரியப்பா,  அத்தை,  சித்தி அனைவரும் ஏக குரலில் அந்த துரோகியை மன்னிக்கவே கூடாது என கொக்கரிக்க வீட்டுப் பிரச்சனை வீதிக்கிப் போய் ஊர்பிரச்சனையாகி மாலையில் ஊர்கூட்டத்தைக் கூட்டும் நிலை உருவானது.

பஞ்சாயத்து தலைவரின் கண்களில் அனல்பறந்தது இரண்டு பேரையும் கொண்டுவாருங்கள் என்ற கட்டளையில் கொன்று வந்தாலும் பரவாயில்லை என்கிற தொனி எதிரொலித்தது.

கைதிகளைப் போல கொண்டு வரப்பட்ட இருவரும் 'கைகட்டி நிற்க' விசாரணை ஆரம்பித்தது.

நம்ப ஜாதியென்ன, குலமென்ன கோவில் பூஜாரியின் மகன் தாழ்ந்த ஜாதிக்காரிய கட்டினா என்ன தண்டனை தெரியுமா ?

துப்பு கெட்ட பைய நம்ம குடும்பத்துல குலத்துல வேறே பொண்ணே இல்லைண்ணா இவளை இழுத்து வந்திருக்கான்.

இதுக்கெல்லாம் விசாரணையே வேண்டாம் பேசாம செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊரவிட்டே விரட்டிவிட வேண்டியது தான்.

கொஞ்சம் லட்சணமா இருந்தா கூட பரவாயில்லை கரிக்கெட்டை மாதிரி ....சே! என்ன ரசனையோ ? காதல் கத்தரிக்கா என்று ...மாமி அரற்றினாள்.'

என்ன ? பூஜாரியாரே ! பெத்த மகன்  என்றதும் கலாச்சாரம் ஆச்சாரமெல்லாம் காணமல் போயிருச்சா.. நீர்தான் தீர்ப்பு சொல்லனும்... நம்ம குலப்பெருமை கெடாம சொல்லும்.

ஆழ்ந்த சிந்தனையோடு அதுவரை அமைதியாக உறவு, உற்றார் உறவினர்,  ஊர் சொல்லும் சொல்லம்புகளைத் தாங்கிய அவர் ஆரம்பித்தார்.

பெரியவங்க எல்லாரோட கருத்துக்கும் நன்றி. இது என் வீட்டு சமாச்சாரம் கோவில்ல இருந்து சாமிய ஊர் கோலம் கொண்டு போவதைப் போல ' சாமியே சரணம்' என்று வாழ்ந்த என்னை தெருவிக்கு கொண்டுவந்துட்டிங்க.  எனக்கு தெரிஞ்சதெல்லாம் கடவுள் மட்டுந்தானுங்க மனுஷன் எழுதிய சட்டத்தில் ஒருத்தர ஒருத்தன் அடிமைப் படுத்துவது எப்படி என்கிற சித்தாந்தமே நெறஞ்சிருக்கு.  உறவுக்குள்ள போட்டி,  ஊருக்குள் சண்டை , உறவுக்கே போட்டி இப்படியென்று எங்கும் எதிலும் கறைபடிஞ்சி போயிருச்சி.  யார் ? யாரை வெல்ல ஓடுகிறோம் பெத்தவரையா ?,  மத்தவரையா ?  யாரு யார ஜெயிச்சாலும் தோக்கப் போரது ஒரு மனுஷ மனந்தாங்க ஆளுக்காலு ஏதோ பேச நீங்க நான் வெல்ல வேணும்,  என்னோட வார்த்தை ஜெயிக்க வேணுங்கிற வெறி உள்ள யாரும் எதையும் வெல்ல முடியாதுங்க.... மரணத்த வெல்லயாராவது வழிவச்சிருக்கிங்களா ?  அவங்க சொல்றதை நான் கேக்கிறேன்.

  என் பையன் ரொம்ப நல்லவனுங்க.  அந்த பொண்ணு அநாதையா நின்னப்ப கரை சேர்க்க துடுப்பாய் கைபிடிச்சிருக்கான்.  அவன் செய்தது நியாயம் தானுங்க.  நான் ஆண்டவனோட சந்நிதானத்திலே சேவகம் செய்து கிட்டு.  நல்லதை தடைசெய்ய முடியுமா ?  ஜாதி மதம் இனம் சோறு போடாதுங்க வாழ்க்கையில தேவை நிம்மதிதானுங்க.  அது அவனுக்கு கெடச்சிருக்கு...துண்டைத் தோளில் போட்டு கம்பீரமாக தன் மகனையும் மருமகளையும் கைபற்றி நடக்க ஆரம்பித்தார் அந்த அன்பு அப்பா.  இயற்கை சில்லென்ற காற்றை வீசி சிரித்தது.


20 comments:

  1. அன்பை நன்கு புரிந்த அப்பா...

    ReplyDelete

  2. / பூஜாரியின் மகள் ( ? ) தாழ்ந்த ஜாதிக்காரிய கட்டினா /-சரியா.? இம்மாதிரி சச்சரவுகளுக்கு எளிதாகத் தீர்ப்பு சொல்ல முடிந்த பூசாரி இதை ஊருக்கே கொண்டு வராமல் தடுத்திருக்க முடியுமே. ஜாதி பேதம் தவறு எனக் காட்டும் கதைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. சிறுகதையாருந்தாலும் சிந்திக்க வைத்துவிட்டது !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. ஜாதி மதம் இனம் சோறு போடாதுங்க வாழ்க்கையில தேவை நிம்மதிதானுங்க...// இன்றய சூழலை அழகுற படம் பிடித்த விதம் சிறப்பு பரட்டுகள் ...

    ReplyDelete
  5. நல்ல தீர்(வு)ப்பு..!

    ReplyDelete
  6. // ஜாதி மதம் இனம் சோறு போடாதுங்க.//
    அருமையான கருத்து.சொல்லவேண்டிய நேரத்தில் சிறுகதைமூலம் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    கோவில் பூஜாரியின் 'மகள்' என்பதை மகன் என்று மாற்றிவிடுங்கள்.

    ReplyDelete
  7. அனைவரும் இந்த மனநிலையில் இருந்தால் எங்க இங்க சாதிச்சண்டையின் மதச்சண்டையும் வருது...


    இந்த கதைப்படி நமது நாடு திருந்தினால் நாமும் வல்லரசுதாங்க...

    சின்னதாய் அழகிய அர்த்தமுள்ள கதை...

    ReplyDelete
  8. என் பையன் ரொம்ப நல்லவனுங்க. அந்த பொண்ணு அநாதையா நின்னப்ப கரை சேர்க்க துடுப்பாய் கைபிடிச்சிருக்கான். அவன் செய்தது நியாயம் தானுங்க. நான் ஆண்டவனோட சந்நிதானத்திலே சேவகம் செய்து கிட்டு. நல்லதை தடைசெய்ய முடியுமா ? ஜாதி மதம் இனம் சோறு போடாதுங்க வாழ்க்கையில தேவை நிம்மதிதானுங்க. அது அவனுக்கு கெடச்சிருக்கு...துண்டைத் தோளில் போட்டு கம்பீரமாக தன் மகனையும் மருமகளையும் கைபற்றி நடக்க ஆரம்பித்தார் அந்த அன்பு அப்பா. இயற்கை சில்லென்ற காற்றை வீசி சிரித்தது.//

    அன்பு தரும் நிம்மதியான வாழ்க்கை.
    கதை அருமை. நல்லவை தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அபூர்வமான மனிதர்!
    நன்று

    ReplyDelete

  10. வணக்கம்

    சாதி சமய சழக்குகளைச்
    சாற்றும் உலகைத் துாளாக்கு!
    மோதி மிதித்துப் பகைவா்களை
    முன்னைத் தமிழின் துயா்போக்கு!
    போதி மரத்து நற்புத்தன்
    புகன்ற அன்பை வழியாக்கு!
    நீதி ஏந்திக் கமழ்தென்றல்
    நிலத்தில் வீச மகிழ்கின்றேன்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete
  11. சிறுகதை முயற்சி வெற்றி!
    கதை நல்லா இருக்கு.

    ReplyDelete
  12. நல்ல கதை.....கவிதை எழுதும் நீங்கள் கதை எழுதியது ஆச்சரியமாக இருக்கிறது.

    ReplyDelete
  13. சிறப்பான படைப்பு! சிறந்த தீர்ப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. காதலர் தின ஸ்பெஷலாக வந்திருக்க வேண்டிய அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  15. கதை கன்னி முயற்சியோ ?
    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  16. சிறுகதை முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்!நன்றி!

    ReplyDelete
  17. மனிதத்திற்கு நல்ல படிப்பினை.
    வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  18. அந்த அன்பு அப்பா. இயற்கை சில்லென்ற காற்றை வீசி சிரித்தது.

    கிராமத்தில் புயல் தவிர்க்கப்பட்டது ..

    ReplyDelete