Tuesday, 12 February 2013

ஆசையதன் தேடலில் !


ஆரவாரப் பேய்வடிவில் தீமை வந்து பாடிநிற்க
ஆர்ப்பரிக்கும் அலையாக வறுமையது மடிவாழ
ஆணிவேர் பசியது ஆடுமாட்டம் தொடர்கதையே!
ஆக்கியோனினும் சரியில்லை ஏனிந்த பாகுபாடோ?
ஆக்கினையின் ஆதி மதம்பிடித்த பொய் மதம்தானோ!
ஆகாய கங்கையது தன் ஒழுக்கை நிறுத்தி விட்டால்
ஆணென்ன பெண்ணென்ன அழுக்கு மூட்டைகளே!
ஆராட்டும் சீராட்டும் இருப்பவரின் சீதனங்கள்
ஆசையும் இதிலடங்கும் எல்லாமும் மாயங்களே!
ஆவலும் காவலும் நமதென்ற நமது பண்பாடே
ஆணவமும் அடக்கமும் அன்புவழியின் உடன்பாடே!
ஆற்றாமை அறியாமை இல்லாமை கல்லாமையென்ற
ஆமைகளே துன்பந்தான் இவை அழிவு வேதந்தான்!
ஆறறிவு மனிதர்கள் சுயநல வாழ்வுக்கு ஆரம்பம் ஜாதிதான்!
ஆங்கொரு நிழலின் பயத்தில் ஆயிரம் காப்பு தெய்வங்கள்
ஆருயிரை தந்தவர்யார் அறியவே மத ஆச்சார பேதங்கள்
ஆங்காங்கே பிரிவினை விதையூன்றும் மார்க்கங்கள்
ஆசாமிசிலர் வாழ அபச்சாரமாய் கூற்று பிரிவினைகள்!
ஆக்கினையெதுவறியாமல் தீவிரமாய் போதனைகள்
ஆள்பவரும் தரமாட்டார் ஆண்டவனும் பட்டினி தீர்க்கவில்லை!
ஆடுகளின் புல்மேச்சல் உழைப்பால் வந்த பயன்கண்டேன்
ஆசைமன மேய்வுகளில் பாசங்களும் சுயம்வாழ வழியாக!
ஆரத்துக்குயிர் கொடுக்கத்தானே வண்ணபூவின் மரணங்கள்
ஆனந்தமாய் நாம் வாழ கொலைகளமேறும் நீதி இதுவிதி
ஆசையதன் தேடலுக்கு அடமானமாய் மனித மனச்சாட்சி
ஆண்டவனை சென்றடைய பலவழியில் கறை எண்ணம்
ஆழ்மன மாசுநீங்கின் அனைத்துமிங்கு நலமென்பேன்
ஆண்டானடிமை உள்ளவரை நீதியின் வாழ்வு கேள்வியே!

17 comments:

 1. ஒவ்வொரு வரியும் நல்ல சாடல்... உண்மை... வாழ்த்துக்கள்...

  ஆ ஆ அருமை...

  ReplyDelete
 2. ஆ....

  ஆசத்தல்-ன்னு போட முடியாது...
  அதனால
  அசத்தல்...

  ReplyDelete
 3. ஆ வை வைத்து அழகான கவிதை

  ReplyDelete
 4. ஆ...ச்சரியம் உங்கள் சொல்லாட்சி!

  ReplyDelete
 5. ஆ...ச்சரியம் உங்கள் சொல்லாட்சி!

  ReplyDelete
 6. ஆசையதன் தேடலில் அளவறியும்போது
  ஆனந்தம் பொங்கிடும் தங்கிடுமே !
  ஆஹா !

  ReplyDelete
 7. ஆவேசம் கொண்டு சாடிய கவிதை!

  ஒவ்வொரு வரியும் ‘ஆ’வில் தொடங்கும்படி எழுதிய கற்பனை நன்று....

  ReplyDelete
 8. ஆகா ..
  ஆகா ..
  ஆராவாரம் செய்து பாராட்ட வேண்டிய வரிகள்
  ஆனந்தமான வரிகள்
  ஆச்சர்யம் இல்லை நீங்கள் இப்படி எழுதுவீர்கள் என்று ...

  ReplyDelete
 9. சாட்டையடி வரிகள் !

  // ஆற்றாமை அறியாமை இல்லாமை கல்லாமையென்ற
  ஆமைகளே துன்பந்தான் இவை அழிவு வேதந்தான்!//

  அருமை வரிகள்

  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
 10. ஆஹா! கவிதை மிக அருமை என சொல்ல நினைத்தேன்
  ஆனால் இதை மிஞ்சும் அற்புத கவிதைகள் படைப்பீர்கள்
  ஆதலால் அடிமோனை அருமை எனச் சொல்லி வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
 11. ஆழ்மன மாசுநீங்கின் அனைத்துமிங்கு நலமென்பேன்
  ஆண்டானடிமை உள்ளவரை நீதியின் வாழ்வு கேள்வியே!//

  நீங்கள் சொல்வது உண்மையே!
  கவிதை அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. ஆலயமணியோசையாய் நெஞ்சில்
  ஆர்ப்பரிக்கும் நல்லழகு தமிழ்!
  ஆவைத்தே கவிதைஅற்புதமாய்
  ஆராட்டு பாடியே தென்றலாய்!
  ஆட்காட்டி விரல்நீட்டியோர் போர்
  ஆகாயவிண்மீனும் வாழ்த்தும் தமிழில்!
  ஆகா அழகு பேரழகு கருவூர சொல்லாலே!

  ReplyDelete
 13. ஆ என்ற எழுத்தில் இத்தனை வரிகள், ஆ

  ஆழ்மன மாசுநீங்கின் அனைத்துமிங்கு நலமென்பேன்
  ஆண்டானடிமை உள்ளவரை நீதியின் வாழ்வு கேள்வியே!

  சரியே

  ReplyDelete
 14. ஆவுடன் தொடங்கிய ஒவ்வொரு வரியை வாசித்தும் என் வாயை நான் ‘ஆ’வென்று ஆச்சரியத்தில் பிளந்தேன்! :-)

  ReplyDelete
 15. ஆண்டான் அடிமை உள்ளவரை நீதியின் வாழ்வு மட்டுமல்ல.நீதியல்லாதாரின் வாழ்வும் கேள்விக்குறியே/

  ReplyDelete
 16. கடைசி வரி அசத்தல்...
  வாழ்த்துக்கள் சசிகலா.

  ReplyDelete