Thursday 14 February 2013

இயந்திரமாய் மனிதனின் தேடல்கள் !


இரைதேடும் அரவமாய் பார்வையேந்தி
இமைதேடும் காட்சியெனில் இருளோடு
இதயமது உறவுகொண்டே இப்புவியில்
இனிதும் தீதாகி இறக்கும் நல்லுறவும்!
இதிகாச காலத்திலும் கசப்புக்கு பஞ்சமில்லை
இடியோசையாய் தீமை சீதைக்கு சோதனை
இரப்போராய் புலவர்கள் புகழ்பாடிப் பிச்சை
இருப்பவனவனுக்கு ஆயிரம் பெண்ணடிமை
இக்காலம் கலிகாலம் கனவில்தானே வாழ்வு
இதயத்தையும் விற்கின்ற மடமையே மாண்பு!
இதயக்கூம்பினிலே உருண்டோடும் சென்னீர்
இயம்பிடும் கதைகளை யாரிடம் சொல்லியழ
இரவுமடிப் பிள்ளைகளாய் உறவு போகிறது
இறந்துபோன சாயலில் மனிதகுலம் அலைகிறது
இலையுதிர் காலமாய் மௌனங்கள் மாய்கிறது
இறவாமையெதுவென்று அறியாமை கேட்கிறது
இரவலாய் வாங்கிட நல் அன்பும் இங்கில்லை
இனிமையெனக் கொடுத்திட பாசமும் நமதில்லை
இல்லார் மனமில்லார் கொண்டவராய் இருக்க
இதயமுள்ளார் கொடுக்க ஏதுமின்றித் தவித்திருக்க
இனமானச் சண்டையிலே அரசியல் அரங்கேற
இந்தியத்தாய் கண்ணீரில் இமயமும் மூழ்கிவிட
இரக்கமும் உருக்கமும் காசுபணம் கேட்டுநிற்க
இனியில்லை வாழ்வுஎன படித்தவரும் துடிக்க
இச்சைகளும் ஆசைகளும் திராவகமேந்தி அலைய
இம்சைகளும் சோகங்களும் தொடர்கதை என்றாக
இயற்கையும் இளமையும் பாலையாய் வேஷந்தாங்க
இறப்போர் உரமாகி உருமாறிப் பிறந்து உயிரூட்ட
இன்றைமறந்தே நாளையென்ற நம்பிக்கையாய்
இரவும் பகலும் சூரிய சந்திரனுமே தானேஇயங்கிட
இயக்கமாய் இயந்திரமாய் மனிதனின் தேடல்கள்
இளைப்பாறல் எங்கே அறியாமல் போகின்றோம்
இங்கே வந்ததுண்மை அங்கே போவதும் உண்மை
இருக்கின்ற கல இறவாசெயலெது மனிதநேயம்
இதன்பொருளெது அதுவும் நம்மில் கேள்வியே!

10 comments:

  1. நேற்று ஆ... இன்று இ...

    உங்களின் தேடல்கள் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இச்சைகளும் ஆசைகளும் திராகவமேந்தி அலைய
    இம்சைகளும் சோகங்களும் தொடர்கதை என்றாக//

    கவிதையயில் இந்த வரியை படித்தவுடன் திருக்கடவூர் பெண் நினைவுக்கு வந்தாள். திராகவத்தால் உயிரை இழந்த சோகம் கவிதையில் தெரிகிறது.

    ReplyDelete
  3. இரவும் உண்டு பகலும் உண்டு இப்பூமியில்! இங்கு ஜனிப்போர் எல்லாம் நல்லவர் என்றால் நாளும் நன்மையே! அருமையான கவிதை! உங்களின் கவிதை தொகுப்பு நூலை விபிபியில் அனுப்ப முடியுமா? விலை விவரம் தெரிவித்தால் எம்.ஒ செய்தும் கொரியரில் பெற்றுக் கொள்கிறேன்! எனது இமெயில் thalir.ssb@gmail.com

    ReplyDelete
  4. புதுமையான முயற்சி...!!!
    வாழ்த்துக்கள் சசிகலா.
    த.ம.2

    ReplyDelete
  5. இயந்திரமாய் தேடலில் கண்டவைகள் இவை. நன்றாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  6. புது புது வழிகளில் கலக்குறீங்க சகோதரி....


    கவிதையும் அழகு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. என்னங்க! ஒரே உயிரெழுத்து வரிசையாப் பின்றீங்க!!

    ReplyDelete
  8. இதுவெல்லாமே இனிமை இனிமை

    ReplyDelete
  9. "இ" க்களை வைத்து அமைத்த கவிதை நன்று. வித்தியாசமான முயற்சி. தொடரக. நாளை "ஈ"?
    த.ம. 5

    ReplyDelete
  10. புதிய முயற்சிக்குப் பாராட்டுக்கள் !

    ReplyDelete