Wednesday 27 June 2012

எல்லாம் கடந்துபோகும் மாயங்களே!


கண்ணாடி நிழல்போல
காலங்கள் போகிறது
பின்னாலே ஓடினாலும்
அதுநம்மை அழைக்கிறது
முன்னோடிப் போனாலும்
துரத்திவந்துப் பிடிக்கிறது!

ஆற்றோரப் பனைமரம்
கண்ட காட்சியெல்லாம்
காணமல் போனகதையை
கவிதையாய் வடிக்கையிலே!

காலையில் பெண்ணினமாய்
மஞ்சள்பூசிதளிராக கதிரவன்
நடுநிசி சுட்டெரிக்கும் ஆதவன்
மாலை மடிகையில் சிவப்பெழுதி
தாமரையாய் ஓர் பொன்மேனி!

இரவு மலர்கையிலே வானில்
இனிமையாய் இளையநிலா
அதைப்பாடும் விண்மினிகள்
தனைத்தாங்கும்விழுதோடு
பரந்து விரிந்த ஆலமரம்!

ஊஞ்சலாடும் வாலிபங்கள்
காத்திருக்கும் கொக்கு கண்டு
வளைபதுங்கிய நண்டினம்
வயலோர வரப்பு நீரில்
தலை கவிழ்த்து நாணல்களும்!

சாரைப்பாம்பு விரட்டியோட
பறந்தோடும் வயல் எலியும்
மச்சானின் பசியாற்ற கஞ்சி
கலயம் சுமக்கும் பொன்மகளும்!

காதல் பறவைகளின் மொழியாய்
கண்ணாம் பூச்சி ஆட்டங்களும்
ஆடிப்போன காற்றலையும்
பாடிப் பறந்த பறவைகளும்!

வசந்தம் தென்றல் வேனிலென
வந்துபோன மாரி காலங்களும்
மரங்கள் செடிகள் பூத்ததுவும்
காயாய் கனியாய் வாழ்ந்ததுவும்
இன்பம் துன்பமென மாறிமாறி
இயற்கையாய் வந்துபோனதுவும்!

கண்ட ஒரே சாட்சியாய் நான் மட்டும்
தூரத்திலழகாய்  பறந்து திரியும்
பட்டாம் பூச்சியாய் நினைவுகள்
கடந்து போயின எல்லாமே
மறக்கவில்லை மனம் மட்டும்
காயங்களாய் நினைவு மட்டும்!

காலை இன்று விடிகையிலே
கையில் கோடாலியோடு நால்வர்
செங்கல் சூளை விறகுக்காக
எனை வெட்டிச் சரித்தனரே
நெடுஞ்சாண் கிடையாய் வீழ்கையில்
பனம்பழமொன்று உருண்டோடி
பக்கத்தில் குழியில் புதைந்தது
மண்ணோடு வாழ்வைத் துவங்கியதே!

காலம் கடந்து போவதைப் போல்
நானும் இன்று போகின்றேன்
இன்ப துன்பம் மட்டுமல்ல புவியில்
எல்லாம் கடந்துபோகும் மாயங்களே!


வலையுலகத் தோழமைகளுக்கு, வணக்கம். வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தோம். அந்தத் தேதியில் அரங்கம் கிடைக்காத காரணத்தால் ஆகஸ்ட் 19ம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவர் சந்திப்பு மாற்றப்பட்டுள்ளது. கவிரயங்கம், கருத்தரங்கம், சிறப்பு விருந்தினராக ஒரு பிரபலம் என்பது உள்ளிட்ட பல சுவாரஸ்ய நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டு வருகிறது. அவை பற்றிய விரிவான அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் அறிவிக்கப்படும். கவியரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபெற விருப்பமுள்ள நட்புகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நாள் : 19.08.2012 (ஞாயிற்றுக்கிழமை) இடம் : மாணவர் மன்றம், சென்னை.


15 comments:

  1. // காலம் கடந்து போவதைப் போல்
    நானும் இன்று போகின்றேன்
    இன்ப துன்பம் மட்டுமல்ல புவியில்
    எல்லாம் கடந்துபோகும் மாயங்களே!//

    வரிக்கு வரி அழகான வாழ்க்கையைப் பாற்றி கூறி கடைசி வரியில் எல்லாம் கடந்து போகும் என்ற உண்மையையும் போட்டு உடைத்து விடீர்கள்
    அழகான கவிதை.

    நானும் சந்திப்பில் கலந்துகொள்கிறேன் கண்டிப்பாக. மாணவர் மன்றம் எங்கே உள்ளது

    ReplyDelete
  2. மனதில் பதிந்த இனிய கவிதை. அருமை.

    ReplyDelete
  3. மனம் தொட்ட கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஆற்றோரப் பனைமரம் சொல்லிய
    //நெடுஞ்சாண் கிடையாய் வீழ்கையில், பனம்பழமொன்று உருண்டோடி பக்கத்தில் குழியில் புதைந்தது மண்ணோடு வாழ்வைத் துவங்கியதே!//
    என்ற வரிகளில் பிறப்பு – இறப்பு தத்துவம் அருமை!

    ReplyDelete
  5. அழகான சொல்லாடலில் அருமையான கவிதை..

    ReplyDelete
  6. நானும் கலந்துகொள்கிறேன் சசி.என்னைத் தெரிகிறதா?முடிந்தால் கண்டுபிடியுங்கள்.கவிதை அருமை..வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. நல்ல கவிதை....

    பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகள்....

    ReplyDelete
  8. அருமையான சொல்லாடல்...வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. இயற்கை நிகழ்வுகளை இனிதென அடுக்கி அழகிய கவி படைத்தீர்! அனைத்தும் அருமை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  10. எல்லாமே மாயைகள்தானே அக்கா.....

    ReplyDelete
  11. இன்ப துன்பம் மட்டுமல்ல புவியில்
    எல்லாம் கடந்துபோகும் மாயங்களே!
    -உண்மைதான்!
    காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete