Sunday 3 June 2012

ஊஞ்சலாடும் நினைவுகள் ...!


ண்ணாடியில் முகம் பார்க்கும் போதெல்லாம் இந்த முகத்தைத்தானே  வேண்டாம் என்று விரட்டியடித்தாள் ஒருத்தி .. மீண்டும் நினைவுகள் விரட்ட... நிமிர்ந்து சட்டை பொத்தானை சரி செய்தபடி நகர்ந்தான் ராகவன் .

"தம்பி மிஷினுக்கு போகணும் கொஞ்சம் ராஜாவை ஸ்கூலில் இருந்து கூட்டிட்டு வரீங்களா?" என்றாள் அண்ணி. ஒன்றும் சொல்ல முடியாதவனாய் 'ம்' என்றபடி வாசலில் நின்ற வண்டியை நோக்கி நகர்ந்தான்.

ணி அடித்து பிள்ளைகள் ஓடி வரத்தொடங்கினர் . முகப்பில் ஆசிரியைகள் நின்று முகம் பார்த்து ஒவ்வொருவராக அனுப்பிக் கொண்டிருந்தனர். ராஜாவைத் தேடிக்கொண்டிருந்தவனின் கண்களில் என்ன ஒரு ரம்மியமான காட்சி!

அவளா ...? அவளே தான்! இங்கு எப்படி..? ஆயிரம் கேள்விகளோடு அவளை நெருங்கினான்.

"நீங்க..?" என்ற குரலுக்கு சுமதி நிமிர்ந்து பார்த்து விட்டு சிலையாய் நின்றாள். "எங்க அப்பா மிஸ்" என்று பின்னாலிருந்து வந்த குரல் கேட்டு திடுக்கிட்டாள். ராஜா அவள் பதிலுக்கு காத்திராமல் ராகவனின் விரல் பிடித்து. "போலாம் பா" என்றான்.

எல்லோருக்கும் உண்டான இயல்பே அவனையும் பிடித்துக் கொள்ள, அவளைப் பார்த்த உடனே அவன் தேடல் தொடங்கியது. எதிர்பார்த்த மாதிரி கழுத்தில் தாலியும் இல்லை , காலில் மெட்டியும் இல்லை. 'சொல்ல முடியாது மதம் மாறி இருந்தாலும் இருப்பாள்! எக்கேடோ கேட்டுப் போகட்டும்'என்று நினைத்தபடி நகர்ந்தான்.

சுமதி சிலையாய் நின்றிருந்தவள் சிதைந்தே போனாள். 'எப்படி ஓடி ஓடி காதலித்தான்? அதற்குள் மறந்து விட்டானா? ஒரு குழந்தைக்கு தகப்பன் வேறு . எல்லாவற்றுக்கும நான் தானே காரணம்... வாசல் தேடி வந்த வசந்த வாழ்வை தம்பி, தங்கைகள் என்று காரணம் காட்டி விரட்டி அடித்த பாவியானேன்.' தன்னைத்தானே நொந்தபடி நின்றவளை சக தோழி தோளில் கை வைத்து, "வாடி போலாம்" என நகர்த்தவே... ஜடமாய் நகர்ந்தாள்.

'அவள் என்ன நினைத்திருப்பாள்...? எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றா? ராஜா வேறு 'அப்பா' என்று சொன்னானே... சரி. அவள் என்ன நினைத்தால் எனக்கென்ன... எப்படியோ நினைத்து விட்டு போகட்டும்.' என்று சலித்துக் கொண்டான் மனதுக்குள்.

நிகழ்வுகள் தான் நகர்த்தின அவனை! நினைவென்னவோ அவளைச் சுற்றியே இருந்தது. "நான் அம்மா பார்க்கிற மாப்பிள்ளையைத்தான் கட்டிப்பேன்" என்று முகத்தில் அடித்தாற்  போல் சொல்லி விட்டுச் சென்றாளே... 'சீ.. என்ன இது அவளை ஏன் நான் நினைக்கிறேன்?' என நொந்து கொண்டாலும் மனம் அவளையே செக்குமாடாய் சுற்றியது .

ருவரின் நினைவுகளும் சந்தித்ததில் உறக்கத்திற்கு விடுமுறை.

நிலவை அனுப்பிவிட்டு சூரியனை எதிர்பார்த்து காத்திருந்தாள் சுமதி. பள்ளிக்கு வந்ததும் ராஜாவைத் தேடினால் இருக்கைஎல்லாம் காலியாக இருந்தன. இன்னும் நேரம் ஆகவில்லையோ என அமர்ந்தால்... மலர் தேடும் வண்டாக மதி தேடி விரைந்தன சில்வண்டுகள் கூட்டம்.

ராஜாவைப் பார்த்ததும் மலர்ந்தாள். "ராஜா, யாருடா நேத்து உன்னை அழைக்க வந்தது?" என்றாள். "எங்க சித்தப்பா மிஸ்!" என்று நகர்ந்தான். அவள் மனதில் உள்ளூர சந்தோஷம் ஒட்டிக்கொண்டது. கூடவே ஒரு குற்ற உணர்ச்சியும் தொற்றிக்கொண்டது . குழந்தையிடம் விசாரணை தேவை இல்லையென நகர்ந்தாள். சின்னக் குழந்தை போல அன்றும் ராஜாவை அழைக்க ராகவன் வருவானோ என்று ஏக்கத்துடன் காத்திருந்தாள் சுமதி.

மணி அடித்தது தான் தாமதம்... பார்வை அவனை தேட ஆரம்பித்தது. ராஜாவின் அம்மாவே வந்தாள் அன்று. எதையும் கேட்கத் துணியாத மனது! "ஒரு வேளை அவருக்குத் திருமணம் ஆகியிருக்குமோ?" என அஞ்சினாள்.

னத்துப்போன நெஞ்சோடு இறுதியாய் சந்தித்த பூங்காவில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு போக எண்ணி நகர்ந்தாள். பசும் புல்தரை, வண்ணமாய் சிரித்த பூக்கள், ஆங்காங்கே அமர்ந்திருந்த காதல் ஜோடிகளையும் கடந்து அவர்கள் சந்தித்த இடத்தில அமர்ந்தாள். அவளின் வாழ்க்கையில் வசந்தம் வருமா... இல்லை, இழந்தது இழந்தது தானா.... மனம் கேள்விகளால் நிரம்பி அலைபாய்ந்து கொண்டிருந்தது, அருகில் சிறுவர்கள் ஊஞ்சலாடி விட்டுப்போன சங்கிலியில் பலகை மட்டும் ஆடிக்கொண்டிருந்தது- வெறுமையான அவளது உணர்வுகளைச் சுமந்தபடி.

28 comments:

  1. அருமையான சிறுகதை. அவர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதை படிப்பவர் விருப்பத்துக்கே விட்டு விட்டது அருமை. தொடரட்டும் தென்றலின் சிறுகதைகள் அணிவகுப்பு.

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகையும் உற்சாகம் தரும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி வசந்தமே .

      Delete
  2. அருமை அருமை எல்லாவற்றையும் விளக்கவேண்டிய
    அவசியம் நிச்சயம் இல்லை
    நெஞ்சை மிக் லேசாகக் கீறிவிட்டுப் போகும் கதை அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகையும் உற்சாகம் தரும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி ஐயா.

      Delete
  3. நிறை குடம் நீர்-
    தழும்பாது என்பார்கள்!

    உங்களை போல பெருந்தன்மை-
    உள்ளவங்களுக்கே பொருந்து!

    உங்கள் வரவுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  4. கதை அருமையாய் .., இயல்பாய் நகர்த்தப்பட்டிருக்கிறது.., முடிவை எங்களிடமே விட்டுவிட்டீர்களா ..?

    என்னை பொருத்தவரை இருவரும் அவரவர் தம் வீட்டார் சம்மதத்துடன் இணைவதே அருமையாய் இருக்கும் கதைக்க்காக ..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  5. பூசிக்கொண்டே இருக்காவிட்டால்,
    வேஷ மனம் கலைந்து நனைந்த,
    கோழியுருவம் தெரிந்துவிடுமே,
    ஆனாலும் காய்தவுடன் மீண்டும்,
    சிலிர்த்தெழும் சண்டைக் கோழியாய்!
    நிஜம் அழகு-உங்கள் படைப்புபோல்.
    நிஜமென்ன!இணைவார்களா!!
    மனம்வெம்பி மாய்வார்களா?

    ReplyDelete
    Replies
    1. நினைவுகளோடே வாழப் பழகியவர்களுக்கு நிஜம் சுடத்தான் செய்யும் .

      Delete
  6. தங்கள் கவிதைகளைப் போலவே கவிதையும் சிறப்பாக இருக்கிறது. தொடரட்டும். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  7. எனது முந்தைய கருத்துரையை “தங்கள் கவிதைகளைப் போலவே கதையும் சிறப்பாக இருக்கிறது.” என்று திருத்தி வாசிக்கவும். நன்றி!

    ReplyDelete
  8. இளைய தலைமுறையினர் பலர் மனம்விட்டு பேசாமல் இப்படித்தான் மனம் வெதும்பி ஊஞ்சல் ஆடிக்கிட்டே நிஜ வாழ்க்கையை தொலைத்து விட்டு பொய்யான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்காங்க..எல்லாம் ஈகோதான்..மனப்புளுக்கத்தோட நடமாடுற ஆட்களை அழகா கதையில சொல்லிட்டீங்க..:)

    ReplyDelete
    Replies
    1. இன்றைய தலைமுறையின் மனப்புழுக்கத்தை அழகா சொல்லிடிங்க .
      தங்கள் வருகையும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  9. கதையைப் படிக்கும்போது காதலித்து ஆண்டுகள் பலவாகி இருக்க வேண்டுமே. இன்னுமா காலம் காயத்தை ஆற்றவில்லை.?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா சொல்ல துணிவில்லா காதலில் காயம் இருக்கத் தானே செய்யும் .

      Delete
  10. எனக்கு அவர்கள் இணைவதே விருப்பம் அக்கா
    அருமையான சிறுகதை..

    இப்போது தென்றலில் வீசுகிறது....

    ReplyDelete
    Replies
    1. சரி இணையட்டும் .

      Delete
  11. அருமையான கதை.மனதை விட்டு அகல இன்னும் சில மணிநேரங்கள் எடுக்கும் சசி.......!

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோதரி .

      Delete
  12. கதையை முடிக்கவில்லையே சச்சிகலா:(
    இருவரும் இணையட்டும் சரியா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் விருப்பமே என் ஆசையும் இணையட்டுமே .

      Delete
  13. நல்ல சிறுகதை. நல்வாழ்த்து.சசிகலா.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  14. சிறுகதை சூப்பரா இருக்குக்கா. இருவரின் நினைவுகளும் சந்தித்ததில் உறக்கத்திற்கு விடுமுறை, நிலவை அனுப்பிவிட்டு சூரியனைத் தேடினாள் -இப்படி உங்க வார்த்தைகளே கவிதை மாதிரி இருக்கு கதையில கூட.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோதரி .

      Delete