Sunday 9 December 2012

கேள்விகளுக்கு விடையில்லை !



எதிர்காலம் தேடுகிறேன்
இருளாய் விரிகிறது
திரும்பிப் பார்க்கிறேன்
மலைப்பாய்த் தெரிகிறது
ஆதாம் ஏவாளென்ற
பரம்பரையில் வந்தோமா ?
குரங்கென்ற வர்கத்தின்
குலமாய் மலர்ந்தோமா ?

அணுக்களின் சேர்க்கையிலே
அவதாரம் ஆனோமா ?
தண்ணீர் படிவத்தின்
மறுபடிவம் நாம் தானா?
கேள்விக்கு விடையில்லை
தேடுகிறோம் என்னாளும்
கண்டு சொன்னாலும்
கடவுள் படைப்பென்போம்!

உலகம் நமதென்று
சட்டங்கள் எழுதிவைத்தோம்
அனைத்தும் சுயநலத்தால்
விளைந்த தீமைகளே !
கானகம் அழித்திங்கே
வானம் பொய்க்கச் செய்தோம்
கனிவளம் கொள்ளையிட்டு
பொக்கிஷம் சேர்த்து வைப்போம்.

கருவறைப் பிள்ளைகளின்
கை கால்கள் முடக்குகின்ற
அணு அரக்க சக்திகளை
நமக்காக ஆக்கிவைப்போம்.
மரங்களை வெட்டிவிட்டு
காற்றைத் தேடுகிறோம்
மனங்களைக் கிழித்தெறிந்து
உறவைத் நாடுகிறோம்.

கடல் நீர் துவர்ப்பிழந்தால்
உலகம் மயானமாகும்
மனிதன் நிலைமறந்தால்
எதிர்காலம் பாலையாகும்!
உள்ளதில் மனம் மகிழ்ந்து
நல்லதை நாம் செய்தால்
நாளை கவி பாடும்
நன்மைகள் தழைத்தோங்கும் !

படித்தும் பயனில்லை
உடுத்தியும் மானமில்லை
தடுத்தும் கேட்பதில்லை
தரணியை அழிக்கின்றோம்
நமக்குச் சொந்தமில்லா
பூமியை அழிப்பதற்கு
மனிதா உரிமையில்லை
மனமாசு கழுவி விடு.

இன்று நாமிருப்போம் -நாளை
நாம் செல்வோம் -என்றும்
வாழ்ந்திருக்கும் காலத்தை
வாழ விடு- அழிப்பதை நிறுத்தி விடு.

25 comments:

  1. // நமக்குச் சொந்தமில்லா
    பூமியை அழிப்பதற்கு
    மனிதா உரிமையில்லை//

    சுவரில்லாமல் சித்திரமில்லை என்பதை உணர்த்தும் காலத்திற்கேற்ற கவிதை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நமக்குச் சொந்தமில்லா
    பூமியை அழிப்பதற்கு
    மனிதா உரிமையில்லை
    மனமாசு கழுவி விடு///

    super line

    ReplyDelete
  3. எதை நாம் இந்த பூமியில் செய்யக்கூடாதோ அதைத்தான் போட்டிப்போட்டுக் கொண்டு செய்துக் கொண்டு இருக்கிறோம்...

    ReplyDelete
  4. கலக்கல் கவிதை!

    படித்தும் பயனில்லை
    உடுத்தியும் மானமில்லை
    தடுத்தும் கேட்பதில்லை
    தரணியை அழிக்கின்றோம்
    நமக்குச் சொந்தமில்லா
    பூமியை அழிப்பதற்கு
    மனிதா உரிமையில்லை
    மனமாசு கழுவி விடு.


    ம்ம்ம்ம் இரண்டுமுறை படித்து ரசித்த வரிகள்....

    ReplyDelete
  5. வாழ்ந்திருக்கும் காலத்தை
    வாழ விடு- அழிப்பதை நிறுத்தி விடு.

    ReplyDelete
  6. ''...இன்று நாமிருப்போம் -நாளை
    நாம் செல்வோம் -என்றும்
    வாழ்ந்திருக்கும் காலத்தை
    வாழ விடு- அழிப்பதை நிறுத்தி விடு..''
    மிக நல்ல விழிப்புணர்வு வரிகள்.
    பணி தொடர இனிய நல்வாழ்த்து.
    வேதா.இலங்காதிலகம்.

    ReplyDelete
  7. புகைப்படமே சொல்கிறது ஆயிரம் சேதிகளை...
    ரசித்த கவிதை

    ReplyDelete
  8. அழுத்தமாக எழுப்பிச் செல்லும் கேள்விகளும்
    இறுதியாகச் சொல்லிச் செல்லும் தீர்வும்
    மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. நாமே கேள்வியாய் பதிலாய்
    நாளும் பயணம் கேள்வியோடு
    நாடகம் முடியும்வரைக்காணா
    நானிலக் கனவோடு ஏனெதற்கு
    நாமறியா உறவு சாட்சிகளின்
    நாவில் வாழும் சொல்லாக...
    நாளை யாறறிவார் நற்கவிதை
    நாடும்வாழ அழகாக..நன்றி!

    ReplyDelete
  10. சுற்றுப்புறச் சூழலை எண்ணி வருந்திய மனத்தின் ஒரு கவிதை!
    (கடல் நீர் துவர்ப்பிழந்தால் > உவர்ப்பிழந்தால்)

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும்! எனது கருத்துரையில் கடல் நீர் துவர்ப்பிழந்தால் > உவர்ப்பிழந்தால் என்பதனை கைப்பு இழந்தால் (கரிப்பு இழந்தால்) என்று வாசிக்கவும்.

      Delete
  11. அருமையான விழிப்புணர்வு கவிதை! சொல்லி திருந்துவதில்லை மக்கள்! தானாக மாற வேண்டும்.

    ReplyDelete
  12. இன்று நாமிருப்போம் -நாளை
    நாம் செல்வோம் -என்றும்
    வாழ்ந்திருக்கும் காலத்தை
    வாழ விடு- அழிப்பதை நிறுத்தி விடு.// அருமைதொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. உண்மை,இயற்கையை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை

    ReplyDelete
  14. நம் சந்ததியர்க்கு ஒரு நல்ல இடத்தை விட்டுச் செல்ல வேண்டியது நம் கடமைதான்!

    ReplyDelete
  15. இன்று நாமிருப்போம் -நாளை
    நாம் செல்வோம் -என்றும்
    வாழ்ந்திருக்கும் காலத்தை
    வாழ விடு- அழிப்பதை நிறுத்தி விடு.
    >>
    நமக்கும் அழிவுண்டுன்னு மனிதன் நினைக்காததால்தான் அத்தனை தீமையும் விளையுது.

    ReplyDelete
  16. //உலகம் நமதென்று
    சட்டங்கள் எழுதிவைத்தோம்
    அனைத்தும் சுயநலத்தால்
    விளைந்த தீமைகளே !//

    உண்மை.

    சிறப்பான விழிப்புணர்வு பகிர்வு. வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
  17. நல்ல விழிப்புணர்வு கவிதை
    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
  18. எதிர்காலம் தேடுகிறேன்
    இருளாய் விரிகிறது
    திரும்பிப் பார்க்கிறேன்
    மலைப்பாய்த் தெரிகிறது

    அருமை.

    ReplyDelete
  19. // மரங்களை வெட்டிவிட்டு
    காற்றைத் தேடுகிறோம்
    மனங்களைக் கிழித்தெறிந்து
    உறவைத் நாடுகிறோம். // மிகவும் கவர்ந்த வரிகள்... அருமை ..

    ReplyDelete
  20. // இன்று நாமிருப்போம் -நாளை
    நாம் செல்வோம் -என்றும்
    வாழ்ந்திருக்கும் காலத்தை
    வாழ விடு- அழிப்பதை நிறுத்தி விடு.//

    கேள்வி கேட்டு, அதற்கு வேண்டிய பதிலைதான் இறுதியில் சொல்லி விட்டீரே சசி!

    ReplyDelete
  21. இந்தக் கேள்விகளுக்கு விடை இல்லைதான். சிந்திக்க வைக்கும் நல்ல கவிதை.

    ReplyDelete
  22. அனைத்தும் பின்பற்றவேண்டிய அறிவுரைகள்...இல்லையேல் அழிவு நிச்சயம்...

    ReplyDelete