Friday 5 October 2012

ஏழைவீட்டின் சீதனம் !



ஏழைவீட்டின் சீதனமாயிங்கே
அன்புமட்டும் வாழக்கண்டேன்!
அதுவில்லா புவிவாழ்விலவர்
கொடுத்துவைத்தவரே மெய்யிதுவே!

களனியெல்லாம் நிறைந்திருந்தும்
கஞ்சிகுடிக்க நாதியிலா ஓட்டங்கள்!
கனவானாய் பிறந்தெதற்கு நாளும்
கண்ணீரே மீதமென பயணமாயின்!

ஏழையவர் குடிசைவாழும் மண்பானை
பட்டினியாய்க் கிடக்கும் காலமுண்டு!
ஆனாலும் இவர் வீட்டில் பாசம்மட்டும்
பட்டினியாய் இருப்பதில்லை இதுவரவு!

பாலை ஒட்டகமாயிவரின் ஓட்டங்கள்
சோலைக் கிளிகளின் மன்மதப் பாட்டோடு!
சாலையோரப் பூக்கள்போல் புழுதியணிந்தும்
சகலமும் நறுமணமாய் மரணமில்லா எண்ணங்கள்!

நம்பிக்கையே இவரின் அஸ்திவாரம்
நாணயமேயிவர் கட்டிய வீடாய்!
நாளையிவர் கனவுகளெல்லாம்வெறும்
நாய்ப்பாடேயாயினும் அதுவுமான்போடு!

சாலைவிதி போலிவர் வாழ்வில் விதி
சாய்ந்தால் தூக்கவும் ஆளில்லை கதி!
எழுந்தாலிவரோடு விளையாடும் சதி
ஆனாலும் உழைப்புக்கு நிகரில்லை!

ஆகாயம் மலர்கின்ற வெள்ளிமணி இவர்தானோ?
ஆசைகள் விட்டொழித்த வண்ணமலருமிவர்தானோ?
ஆராட்டிச் சீராட்ட ஆளிருப்பின் இவர் வாழ்க்கை
ஆண்டவன் படைப்பினிலே ஆனந்தக் கவிதைதான்!

ஏழையின் சிரிப்பினிலே இறைவனுண்டு என்றார்கள்!
ஏழையின் அன்பின்முன் இறைவனும் ஒன்றுமில்லை!!

7 comments:

  1. ஏழையின் சிரிப்பினிலே இறைவனுண்டு என்றார்கள்!
    ஏழையின் அன்பின்முன் இறைவனும் ஒன்றுமில்லை!!

    அருமை//

    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  2. எளிய நடையில் அருமையான பொருள் பொதிந்த கவிதை.

    ReplyDelete
  3. அருமையான கவிதை...

    தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை...
    கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை...
    அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்...
    அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்...
    பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்-அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்...

    படம் : பாபு, முதல் வரி : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...

    ReplyDelete
  4. இவர் வீட்டில் பாசம்மட்டும்
    பட்டினியாய் இருப்பதில்லை இதுவரவு!

    ஏழைவீட்டின் சீதனமாயிங்கே
    அன்புமட்டும் வாழக்கண்டேன்

    அருமை

    ReplyDelete
  5. ஏழை வீட்டின் சீதனம் அன்பைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?
    அழகாய்ச் சொல்லும் கவிதை.

    ReplyDelete
  6. என்ன சொல்வது,
    கண்ணீர் உப்பிட்டு காவிரி நீருற்றி களையங்கள் ஆடுது சோறின்றி
    இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி கண்ணுறங்கு கண்ணுறங்கு பொன்னுலகம் கண்ணில் காணும் வரை கண்ணுறங்கு...
    என்றப் பாடல் எனக்கு நினைவுக்கு வந்தது.
    உங்களின் புகைப்படமே மனதை தொட்டுவிட்டது

    ReplyDelete