Tuesday 15 May 2012

நாளைய வாழ்விற்கு ..!


அறிவுப் பெட்டகத்தை,அரங்கத்தில் பூட்டிவைத்து,
அழிவுக் கோலமெடுத்து,அவலங்கள் அரங்கேற்றி,
அன்பென்ற பெயராலே,அசிங்கத்தை புனிதமாக்கி,
அனைத்தும் சரியென்று,அவனியில் ஓர் பயணம்!

ஆதங்கம் சொல்லுகிறேன்,ஆடையிலா எண்ணம் வேண்டும்,
ஆருயிரில் ஓருயிர் நாம்,ஆகையினால் எழுதுகிறேன்,
ஆசை விதை விதைத்த,ஆண்டவன் யார் தேடுகிறேன்,
ஆலயமெனும் இதயமா?ஆலா;வேலா-சொல்லுங்கள்!

இயற்கை எழுதிய,இனிமைகள் நமதென்றோம்,
இன்னாவாய் வருகின்ற,இழப்பை உறவென்போம்,
இருப்பதெல்லாம் நமதென்ற,இறுமாப்பு மாழ்வதில்லை,
இயக்கத்தின் தோற்றத்தில்,இடமில்லை மானிடர்க்கு!

வேட்டையாட பயிற்றுவித்த,வேடன் யார் பார்க்கின்றேன்,
வேங்கையொன்று பிடிக்கின்ற,வேதனை -மான் வேட்டை.
தண்ணீரில் பாய்ந்தோடி,தன் உணவாய் மீன்பிடித்த- மீன்கொத்தி,
தன்வீட்டை மண்ணில் செய்த,தளர்வில்லா -வேட்டாளி.

வானவழிப் பறந்துசெல்ல,வழிகாட்டிய வல்லூறு,
அறமான வாழ்வுரைத்த,அழகான கவரிமான்,
அன்பின் முத்தங்களை,அணைத்துரைத்த குரங்கினம்,
ஆட்டக்கலை மொழிந்த,ஆடல் நாயகர் மயிலினம்!

கூடிவாழ்தல் நலமென்ற,யானைகளும் எருமைகளும்,
தந்திரங்கள் எதுவென்று,தரணி சொன்ன நரிக்குடும்பம்,
இசைப்பாட்டு நமக்களித்த,இன்னிசை கருங்குயில்,
பளபள பட்டாடையான,பட்டுப் பூச்சி வகையோடு!

விதையாய் மண் வீழ்ந்து,வாரிசாய் வாழ்வெழுதி,
பூவாகி;காயாகி;கனியாகி,வாரிசு கதையான தாவரங்கள்,
காதலே வாழ்வென்று,கவிபாடும்-கிளிக்கூட்டம்,
எதிலும் நமக்கு பங்கில்லை-என்றும் கடனாளிகளாய்!

ஐந்தறிவுக் கற்றுத்தந்த,ஏழாமறிவுப் பாடங்களை,
அபகரித்து பூட்டிவைத்து,ஏடுகளாய்ப் பாடுகிறோம்.
பாடினாலும் பரவாயில்லை,நமதென்ற உரிமைவேறு,
தேனீயும்;எறும்பினமும்-வைத்திருக்கும் சட்டமும் நமதென்று!

பாடங்கள் எல்லாமே,பாரினில் இருப்பவையே,
பயணத்தில் பார்வைகளை,சேமித்து வைத்திருந்தால்,
நாளைய வாழ்வுக்கு,வழிகாட்டி அவையாகும்,
அறிவியல்;புவியியல்,விஞ்ஞானம்;மெய்ஞானம் இதுவேதான்!

இருப்பதை நாம் ரசித்து,இனிமையாய் வாழ்வதுவும்,
கிடைத்தைப் பகிர்தளித்து,மனநிறைவு தேடுவதும்,
எண்ணாலும் எழுத்தாலும்,புன்னகையாய்ப் பூப்பதுமே,
பிறவி பயனாகும்,எதுவும் நமதில்லை-ரசித்து;ருசித்தல் தவிர!!

இன்று வலைச்சரத்தில் உலக அதிசயங்களைக் காண இங்கே கிளிக் செய்து வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

24 comments:

  1. பாடங்கள் எல்லாமே,பாரினில் இருப்பவையே
    ...
    ரொம்ப சரியா சொன்னீங்க தோழி. நம்மை சுற்றியுள்ள விஷயங்களை கூர்ந்து பார்த்தாலே பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்

    ReplyDelete
    Replies
    1. சகோவின் உடன் வருகையும் விரிவான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோதரி .

      Delete
  2. பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீன்தனில் படகினைக் கண்டான் என்று பாடின கண்ணதாசன் நினைவுக்கு வந்தார் தென்றல். அருமை. நம்மைச் சுற்றிலும் கற்பதற்கு ஏராள விஷயஙகள் கொட்டித்தான் கிடக்கின்றன. வலைச்சர வாரத்தில் இங்கயும் பின்றீங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வசந்த மொழிகளால் வாழ்த்தி உற்சாகமளிக்கும் நட்புக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  3. பாடங்கள் எல்லாம் பாரினில இருப்பவையே... சூப்பராச் சொன்னீங்கக்கா.. வலைச்சரத்துல படிச்சுட்டு இங்க வந்தா அழகுக் கவிதையோட வரவேற்று அசத்தறீங்க. இந்த வாரம் பூரா உங்களை ஃபாலோ பண்றதே ஜாலியா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து பின் தொடரும் சகோதரிக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  4. //வேட்டையாட பயிற்றுவித்த,வேடன் யார் பார்க்கின்றேன்,
    வேங்கையொன்று பிடிக்கின்ற,வேதனை -மான் வேட்டை.
    தண்ணீரில் பாய்ந்தோடி,தன் உணவாய் மீன்பிடித்த- மீன்கொத்தி,
    தன்வீட்டை மண்ணில் செய்த,தளர்வில்லா -வேட்டாளி.
    //

    வார்த்தையில விளையாடுரிங்க

    ReplyDelete
    Replies
    1. விளையாட்டில் வந்து கலந்து கொண்டது கண்டு மகிழ்ச்சி . நன்றி சகோ .

      Delete
  5. எதுவும் நமதில்லை-ரசித்து;ருசித்தல் தவிர!!

    சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்..சபாஷ்..

    ReplyDelete
    Replies
    1. தொடர் வருகையால் உற்சாகமளிக்கும் சகோவிர்க்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  6. ஆறறிவு இருந்தாலும் ஐந்தறிவைவிடக் குறைவான செய்றபாடுகள்.....போட்டுத் தான்க்குங்க சசி !

    இப்போதுதான் கவனிக்கிறேன் வலைச்சர ஆசிரியர் இந்த வாரம் நீங்களா வாழ்த்துகள் தோழி !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்து உண்மையே சகோ . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  7. ம் (:
    அருமை தோழி

    ReplyDelete
    Replies
    1. தொடர் வருகையால் உற்சாகமளிக்கும் சகோவிர்க்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  8. நாளைய வாழ்விற்கு அருமையாக சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோ

    தொடரட்டும்

    ReplyDelete
  9. உஙகளின் வலைச்சரத் தொகுப்புலயும். மனசுலயும் எனக்கு இடம் கிடைச்சதுல ரொம்ப ரொம்ப சந்தோஷப்படறேன்க்கா. My Heartful Thanks!

    ReplyDelete
  10. அக்காவுக்கு றொம்ப எழுத்து வேலை கூடிப் போச்சு இந்த வாரம். வலைச் சரத்திலும் எழுத வேண்டும் தென்றலிலும் எழுத வேண்டும் அப்பப்பா எப்படித்தான் சமாளிக்கின்றீர்களோ??? நான் கேட்ட கேள்வி சரிதானே அக்கா? மற்றும் என்னை வலைச் சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி அக்கா..... ம்ம்ம் நல்லா போகுது வலைச்சரம்...குட்

    ReplyDelete
  11. //வேட்டையாட பயிற்றுவித்த,வேடன் யார் பார்க்கின்றேன்//,கூடிவாழ்தல் நலமென்ற,யானைகளும் எருமைகளும்,// அழகான வார்த்தைகளோடு கோர்த்திருக்கிறீர்கள்.ரசித்தல் சரி... ருசித்தல்.. சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் சாப்பாட்டு ராமனா?

    ReplyDelete
  12. ஐந்தறிவுக் கற்றுத்தந்த,ஏழாமறிவுப் பாடங்களை,
    அபகரித்து பூட்டிவைத்து,ஏடுகளாய்ப் பாடுகிறோம்.
    பாடினாலும் பரவாயில்லை,நமதென்ற உரிமைவேறு,
    தேனீயும்;எறும்பினமும்-வைத்திருக்கும் சட்டமும் நமதென்று!

    உரத்த சிந்தனை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்...புதிதாக எடுத்துக் கொண்ட பதவிக்கு...

    ReplyDelete
  14. கவிதை நல்லாத்தான் போகுது...ஆரம்பத்தில் சிறுவர்களுக்கான கவிதை போன்று இருந்தது....பிறகு..?? புரியல்ல...

    நாந்தான் சொல்லித்திரியிரனே எனக்கும் கவிதைக்கும்....பொருத்தம்.:)

    ReplyDelete
  15. கூடிவாழ்தல் நலமென்ற,யானைகளும் எருமைகளும்,
    தந்திரங்கள் எதுவென்று,தரணி சொன்ன நரிக்குடும்பம்,
    இசைப்பாட்டு நமக்களித்த,இன்னிசை கருங்குயில்,
    பளபள பட்டாடையான,பட்டுப் பூச்சி வகையோடு!

    விதையாய் மண் வீழ்ந்து,வாரிசாய் வாழ்வெழுதி,
    பூவாகி;காயாகி;கனியாகி,வாரிசு கதையான தாவரங்கள்,
    காதலே வாழ்வென்று,கவிபாடும்-கிளிக்கூட்டம்,
    எதிலும் நமக்கு பங்கில்லை-என்றும் கடனாளிகளாய்!

    -
    நல்ல பதிவு! நன்றி
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  16. சுற்றுச் சூழலே மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும். ஏன்?
    அனைத்துக்கும் காரணமாகும்
    கவிதையின் கரு அதுவே! நன்று!

    சா இராமாநுசம்

    ReplyDelete