Wednesday 2 May 2012

தொலைக்காதீர் வாழ்வுதனை !

வருமுன் காப்பவன் அறிவாளி -இதை
வகுத்தவனும் அதற்குப் பங்காளி
அழையாமல் வருகின்ற விருந்தாளி
அனைவருக்கும் இவனொரு முதலாளி !

கருவிலும் கடன் முடிப்பான்
ஆறிலும் உயிரெடுப்பான்
நூறானாலும் விட்டு வைப்பான்
விபத்தென்று போட்டிடுவான்
வியாதியாய் வந்து நிற்பான்
விதியென நாம் அழுதாலும்
கருணை இவன் காட்ட மாட்டான் !

இயற்கையாய் இவன் வந்தால்
விதிமுடிந்து போனதென்போம்
இவன் வருகை இனிமையில்லை
இருந்தாலும் வெல்ல வழியில்லை !
இல்லாமையும் இயலாமையும்
கூடுகட்டி மனம் அமர்ந்தால்
ஆற்றாமையும் அறியாமையும்
கோலோச்சி நிற்பது போல்
இதயத்தில் காயம் பட்டவர் காண்
இனிதென்று இதை அணைத்தார் !

விசித்திர வழக்கென்று
நீதியரசர் முன்னாலே
தற்கொலைகள் தடுத்திட
உளவியல் அமைப்புக்கோரி
மரணத்தை வரவேற்கும்
மானிடரின் சோகம் தீர்க்க
குழு அமைத்தால் தீர்ந்திடுமா ?
மாறாத சோகம் வாழ்க்கையிலே
பிறந்ததே சாபமென்று
எண்ணுகின்ற அளவுக்கு
என்னதான் நடக்கிறது ?
உறவுகளை அறுத்தெறிந்து
உலகை விட்டுப் பறந்துவிட்டால்
கனவுகள் மெய்ப்படுமோ ?
போனவர்தான் சொல்லவேண்டும் !

காதலின் பரிசென்று
கொஞ்சிய காலம் போய்
காலத்தோடு போட்டியிட
இயக்கப்படும் இயந்திரமாய் !
விடியுமுன்னே அவசரம்
நாளை விடியலுக்காய் தேடல்கள்
உண்டாயா ? உறங்கினாயா ?
கேள்விகளை நாம் மறந்து
படித்தாயா ? மார்க் எடுத்தாயா ?
நச்சரித்துக் கொல்கின்றோம்.
அன்பாகக் கட்டியணைத்து
அரைமணிநேரம் இளைப்பாற
ஓடிவரும் குழந்தையினை
ஒட்டிய பட்டினி வயிறோடு
ஒரு நாளும் ஓய்வின்றி
விரட்டியதால் பட்டகாயம் ...

ஏறாத பாடத்தை ஆசிரியர்
தலைக்குள் ஏற்ற முனைந்து நின்று
தானும் தோற்று அவரும் தோற்க
கோபத்தில் வீசும் வார்த்தைகள்
நெஞ்சில் இடியாய் இறங்கியதால்
போதும் இந்த பொய் வாழ்வு
என்று நினைக்கும் தலைமுறைகள் .
பரிட்சைகள் வந்து போகும்
தோற்றாலும் வாய்ப்புண்டு
என்ற எண்ணம் இல்லாமல்
தோல்வியின் விளிம்பில் நின்று
தொலைக்கின்ற வாழ்க்கைகள் !

அன்பு பொய் அறிவு பொய்
இன்பம் பொய் மனிதர் பொய்
உலகம் பொய் , நான் மட்டும்
உண்மையாய் இங்கெதற்கு
வாழத்தகுதியில்லை என்றெண்ணி
முடிவெடுக்கும் இதயங்கள் ஏராளம் !

குடியால் அழிந்தவர்கள்
குடும்பத்தை பிரிந்தவர்கள்
காதலில் தோற்றவர்கள்
நீதி கிடைக்காது ஏமாந்தவர்கள்
அநீதியால் சீரழிந்தவர்கள்
வியாதி வலியில் துடிப்பவர்கள்
ரணகளமாய் இதயம் ஆனவர்கள்
எல்லோர்க்கும் சொல்கிறேன்
மரணத்தையும் வெல்லுகின்ற
மகத்தான சக்தி வாழ்வுக்குண்டு
சோதனைகளை வென்று துரத்தி
சாதனைகளாய் மாற்றிக்காட்டு
வேதனைகள் மறைந்தோடும்
இயற்கையாய் மரணம் வரினும்
நற்செய்கையை உலகம் வணங்கும் !

ஆக்குவதும் அழிப்பதுவும்
அவரவர் கைகளிலே
காயங்கள் எல்லோர்க்குமுண்டு
அதன் தீர்வு மரணமில்லை
வெற்றி பெறப் போராடு
நல்லது நாளை தேடி வரும் .

37 comments:

  1. வாழ்பவன்
    ஒருபோதும் சிந்திப்பதில்லை
    மரணத்தை

    வாழ
    யோசிப்பவன் சிந்திக்கிறான்
    மரணத்தை

    கோழை
    யோசிப்பான்
    யோசிக்கும் அந்நேரத்திலும்
    போரடிக்கொண்டிருப்பான்
    வீரன்

    ReplyDelete
  2. எமனை எண்ணிப் பயப்படாமல் வாழ்ந்தவர் ஏற்றம் பெற்ற சரித்திரம் பலவுண்டு. எதற்கும் தீர்வு நாமாக வருவித்துக் கொள்ளும் மரணமல்ல... சாதிக்க இப்பூமியில் நிறைய உண்டு. அதை நோக்கி ஓரடியேனும் எடுத்து வைக்கவே முனைய வேண்டும். (எப்போதும் போல) நற்சிந்தனைகளை கிளறி விட்டுட்டீங்க தென்றல்... பிரமாதம்!

    ReplyDelete
  3. செய்தாலி...
    யோசிக்கும் நேரத்திலும் போராடிக்கொண்டிருப்பான் வீரன் நல்லதோர் உற்சாகமூட்டும் வரிகளை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  4. கணேஷ்...
    சாதிக்க இப்பூமியில் நிறைய உண்டு.// என்று தெளிவு படுத்தும் பின்னோட்டம் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி வசந்தமே .

    ReplyDelete
  5. அருமை, வாழ்த்துக்கள்.

    (தொலைக்காதீர் ) என்று திருத்தி விடுங்கள்

    விஜய்

    ReplyDelete
  6. // ஆக்குவதும் அழிப்பதுவும்
    அவரவர் கைகளிலே
    காயங்கள் எல்லோர்க்குமுண்டு
    அதன் தீர்வு மரணமில்லை
    வெற்றி பெறப் போராடு
    நல்லது நாளை தேடி வரும் //

    வேதனை நிறைந்த வாழ்க்கையில் நல்ல போதனை
    செய்யும் வரிகள்
    சா இராமாநுசம்

    ReplyDelete
  7. விஜய்...
    தங்கள் வருகையும் அவசரத்தில் நிகழ்ந்த தவறை உணர்த்தியது கண்டும் மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  8. புலவர் சா இராமாநுசம்...
    ஐயா தங்கள் வருகையும் ஆசீர்வாதமாய் அமைந்த பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா .

    ReplyDelete
  9. தற்கொலை எந்தப் பிரச்சனைக்கும் தீர்வே இல்லை.அப்படிப் பார்த்தால் உலகத்தில முக்கால்வாசிப்பேர் தற்கொலை பண்ணிக்கவேணும்.நானும்கூட !

    ReplyDelete
  10. ‘வெற்றி பெறப் போராடு
    நல்லது நாளை தேடி வரும்‘.

    என நேர்மறையாக முடித்திருக்கிறீர்கள். வாழ்க்கையில் போராடுபவர்களுக்கு வெற்றி நிச்சயம் “ஆக்குவதும் அழிப்பதுவும் அவரவர் கைகளிலே “ என்பதை எல்லோரும் உணரும்போது வாழ்வை தொலைக்க யாரும் விரும்பமாட்டார்கள்.

    ReplyDelete
  11. //ஏறாத பாடத்தை ஆசிரியர்
    தலைக்குள் ஏற்ற முனைந்து நின்று
    தானும் தோற்று அவரும் தோற்க
    கோபத்தில் வீசும் வார்த்தைகள்
    நெஞ்சில் இடியாய் இறங்கியதால்
    போதும் இந்த பொய் வாழ்வு
    என்று நினைக்கும் தலைமுறைகள்// நம் கல்விமுறை அப்படி. என்ன செய்ய? யாரை நொந்து கொள்ள?

    ReplyDelete
  12. குழந்தைகளின் வாழ்வைப் பறிக்கும் நமது கோபாவேசங்களைக் குறித்து முன்வைத்தக்கருத்துகளில் மனமொத்துப் போகிறேன். பல பச்சை மனங்களில் பாசாணம் கலக்கும் வேலையை இனியாவது நிறுத்தி அன்பால் அரவணைப்போம்.

    நல்லக் கருத்துகளை முன்வைத்து சமுதாயச் சீர்திருத்தத்துக்கு வித்திடும் தங்களுக்கு என் மனம்நிறைந்த பாராட்டுகள் தென்றல்.

    ReplyDelete
  13. வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி தோல்வி இரண்டும்தான் இருக்கும்.தோல்வியை ஒரு உந்துதலாக எடுத்துக் கொண்டு முன்னேறாமல், கோழைத்தனமான முடிவு எடுப்பது தவறுதானே.அருமையாகச் சொன்னீர்கள் சசிகலா!

    ReplyDelete
  14. வாழ்க்கை என்பது எல்லாம் கலந்திருக்கும் ஒரு கலவை நாம் பொறுப்பேற்றுத்தானே அக்கா ஆக வேண்டும்.

    ReplyDelete
  15. அக்கா உங்களுக்காக இச்சிறியவள் ஒரு விருதை பரிந்துரைத்திருக்கிறேன் மன நிறைவுடன் அதனை என் பிளாகருக்கு வந்து பெற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
  16. தற்கொலை எந்தப் பிரச்சனைக்கும் தீர்வே இல்லை...வழமை போல சமுதாயம் சிந்தனையில்...வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  17. உங்கள் வலைப்பக்கம் இப்போதுதான் முதல் வருகை. என்ன இது நீங்கள் இத்தனை சோகமாய் இவ்வளவு நீண்ட கவிதை. ஆணைவிட பெண்ணின் எழுத்துக்கள் ஆயிரம் வித்தைகள் புரியும். புரிந்துகொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஒரேநாளில் கொட்டித் தீர்த்துவிடுவதல்ல. கவிதை என்பது பாரதி சொன்னதுபோல ஆயுதம். அதுவும் ஒரு பெண்ணிற்கு வாய்த்திருப்பது எத்தனை நல்ல விஷயம். தற்கொலைகள் பற்றி எத்தனையோ எழுதிவிட்டார்கள். எல்லாவற்றிலும் ஒரு நம்பிக்கை சுடரை ஏற்றுங்கள். கவிதை நம்பிக்கையின் சூரியன். அதன் சுடர்கள் வலுவானவை. சுட்டெரிக்கும். உங்களுக்கு கவிதை சொல்லுகிற முறை நன்றாக வருகிறது. அதை உங்கள் பெண்ணினத்திற்கும் மற்றவர்க்கும் நம்பிக்கையோடு சொல்லுங்கள். உங்களைப் பற்றிய அறிமுகத்தில் பகிந்து என்று உள்ளது. அது பகிர்ந்து என்றிருக்கவேண்டும். தமிழ் தாய் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் தமிழ்த்தாய் என்று வரவேண்டும். கவிஞர்களுக்கு பிழை வரக்கூடாது. வாழ்த்துக்கள். வாய்ப்பமையும் தருணங்களில் வந்து வாசிப்பேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. அருமையான கவிதை.தோல்விகளைக் கண்டு துவளாமல்,துவம்சம் செய்யச்,தூண்டும் பதிவு.வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  19. அன்பு பொய் அறிவு பொய்
    இன்பம் பொய் மனிதர் பொய்
    உலகம் பொய் , நான் மட்டும்
    உண்மையாய் இங்கெதற்கு
    வாழத்தகுதியில்லை என்றெண்ணி
    முடிவெடுக்கும் இதயங்கள் ஏராளம் !


    என் வலைப்பூ வந்து கருத்துத் தெரிவித்தமைக்கு நன்றி சசிகலா. அமைதியாய் உங்கள் கவிதைகளை வாசிக்க வேண்டும். அங்குமிங்குமாய் நிறைய முத்துக்கள் ஒளிர்கின்றன. வாழ்த்துக்கள்

    அன்புடன் புகாரி

    ReplyDelete
  20. வழக்கம் போல நீங்கள் எழுதும் கவிதை போல இதுவும் மிக நல்ல கவிதை வந்திருக்கிறது

    ReplyDelete
  21. ஹேமா....
    தற்கொலை என்ற எண்ணமே யாருக்கும் வரக்கூடாது என்ற கருத்தை சொல்லவே இப்பதிவு தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ .

    ReplyDelete
  22. வே.நடனசபாபதி...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  23. விச்சு...
    தங்கள் கருத்து உண்மையானதே . தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  24. கீதமஞ்சரி....
    தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி சகோ .

    ReplyDelete
  25. சென்னை பித்தன்....
    தங்கள் வருகையும் தெளிவு படுத்தும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  26. எஸ்தர் சபி..
    சகோ தங்கள் வலைப் பக்கம் சென்று பார்த்தேன் . என்னவென்று புரியவில்லை . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  27. ரெவெரி...
    தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  28. ஹ ர ணி...
    தங்களின் முதல் வருகையும் தோழமையோடு தவறுகளை எடுத்துச் சொன்ன விதமும் கண்டு மகிழ்ந்தேன் . எண்ணங்களை சொல்கிறேன் தினம் தினம் செய்தித் தாளில் படிக்கும் தற்கொலை பற்றியத்தின் பாதிப்பு இது . தங்களின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  29. Kalidoss Murugaiya...
    தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  30. Buhari..
    தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  31. Avargal Unmaigal...
    தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  32. நீண்டு விடும் வாழ்வதனை
    தீண்டிப் பார்த்து வாழ்ந்துவிடு..
    தீண்ட வரும் நச்சு செயலதனை
    தாண்டி நீயும் வந்துவிடு!
    வேண்டாமய்யா உன் தற்கொலை முயற்சி
    மாண்டவர் மீள்வதில்லை
    பாண்டவர் நெஞ்சுறுதிகொண்டு
    ஆண்டாண்டு வாழ்ந்துவிடு...

    அருமையான கவிதை சகோதரி..

    ReplyDelete
  33. //காயங்கள் எல்லோர்க்குமுண்டு
    அதன் தீர்வு மரணமில்லை
    வெற்றி பெறப் போராடு
    நல்லது நாளை தேடி வரும் //

    அருமை!,

    வேதனையைக் கண்டு தாய் பயந்திருந்தால் இந்த மண்ணில் நமக்கு பிறப்பேது?.

    ReplyDelete
  34. இன்றைய சூழலில் மிக மிக அவசியமான கவிதை..

    ReplyDelete
  35. உறவுகளை அறுத்தெறிந்து
    உலகை விட்டுப் பறந்துவிட்டால்
    கனவுகள் மெய்ப்படுமோ ?//

    தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை வெளிப்படுத்திய கவிதை!நல்லதொரு பதிவிற்கு நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  36. unmai !
    arumaiyaa sonneenga!

    ReplyDelete
  37. உண்மையைச் சொன்னீர்கள் அருமையான கவிதை...

    ReplyDelete