Thursday 22 August 2013

பசுமையை (பாசத்தை) தேடும் வேர்கள் !-2


அந்த கிராமத்து சிறுவர்களுடன் விளையாடவும் அவனுக்கு விருப்பம் இல்லை. வீட்டில் தனியாக அமர்ந்து தான் கொண்டு வந்த விளையாட்டு பொருட்கள் பள்ளியில் கலந்து கொண்டு விளையாட்டுகளில் பரிசு பெற்ற படங்கள் இவற்றையே பார்த்தபடி இருக்கிறான்.

பாட்டிக்கு பேரனின் வீர சாகங்களை படத்தில் பார்க்க ஆவல் எழுகிறது. ஆர்வத்துடன் அந்த படங்களை எடுக்கிறாள்.. 

அதையும் பேரன் விருட்டென பிடுங்கி வைத்துக்கொண்டு ம்ஹிம் இதெல்லாம் என்னுடையது தொடாதிங்க அழுக்காகிடும் என்று மறைத்து வைத்துக்கொள்கிறான்.

பள்ளி செல்வதும் வருவதுமாக இருந்த குழந்தைக்ளு என்ன தெரியும் மற்றவருடன் பழகுவது அனுசரித்து போவது போன்ற இயல்புகள் என்று பாட்டி தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொள்கிறாள்.

சிறுவனும் விளையாடிய படியே உறங்கிப்போகிறான். 

பாட்டிக்கு தன் பால்ய விளையாட்டுகள் நினைவுக்கு வருகின்றன. பரணில் இருந்து தன் மகள் விளையாடி விட்டு உடைத்து போட்டதில் எஞ்சிய  பொருட்களை பத்திர படுத்தி வைத்திருந்தாள். அதனையும் எடுத்து மரபாச்சி பொம்மை சதுரம் முக்கோணம் செவ்வக வடிவ மரக்கடைகள் தேர் போன்றவற்றை தூசி தட்டி எடுத்து வைக்கிறாள் .
பேரனுக்கோ நவீன விளையாட்டு பொம்மைகளிலேயே நாட்டம் இருக்கிறது. பேட்டரி போட்டு இயங்கும் அசையும் பொம்மைகளை தேடுகிறான். தான் கொண்டு வந்த வீடியோ கேம்மிலும் பேட்டரி தீர்ந்து விட எரிச்சல் அடைகிறான். பாட்டியின் வீடு முழுக்க தேடுகிறேன் என்ற பெயரில் அனைத்து பொருட்களையும் எடுத்து களைத்து போடுகிறான் பயனில்லை.  பாட்டியிடம் சென்று கேட்கிறான் பாட்டிக்கு புரியாமல் போகவே கவனியாமல் துணி துவைத்த படியும் சமையல் செயத் படியும் தன் வேலையை செய்தபடி இருக்கிறாள். கோபமடைந்த சிறுவனோ பாட்டி செய்யும் வேலைகளுக்கு இடையூறாக எதாவது செய்து வைக்கிறான். என்ன செய்தாலும் பாட்டிக்கு கோபம் வருவதாக தெரியவில்லை. அழுத படி தூங்கிப்போகிறான். 

நடுசாமத்தில் அவனுக்கு வயிற்று வலி எடுக்கிறது. கழிவரை வசதியில்லாத அந்த இடத்தில் எழுந்து வயிற்றை பிடித்தபடி அழகிறான். பாட்டி எழுந்து வீட்டு திண்ணையிலேயே அமர வைத்து சிறுகுழந்தை மலத்தை அப்புற படுத்துவது போல பணி விடை செய்கிறாள். 

பேரனுக்கோ எந்த வசதியும் செய்து வைக்காமல் அப்படி என்ன செய்கிறார்கள் இவர்கள் என்ற கோபம் மட்டுமே எழுகிறது. 

மறுபடி சிறிது நேரம் கழித்து கரப்பான்பூச்சி அவன் மேல் ஊர்ந்து வருவே எழுந்து கத்த ஆரம்பிக்கிறான். பாட்டிக்கு அன்று சிவராத்திரியாகிறது. எனினும் சிறு கடுப்பையும் முகத்தில் காட்டாமல் பூச்சியை அடித்து அப்புறப்படுத்தி சுத்தமாக பெருக்கி படுக்கை விரித்து பேரனை படுக்க வைக்கிறாள்.

சலித்தபடி படுத்து உறங்கிப்போகிறான்.

இரவு முழுக்க கண் விழித்ததால் காலையில் சற்று கூடுதலாக திண்ணையிலேயே உறங்கிக்கிடக்கிறாள் பாட்டி.

எழுந்த பேரனுக்கு அசைவற்று கிடக்கும் பாட்டியை பார்க்க சற்று பயமாக இருக்கவும் செய்கிறது. தான் பாட்டியின் மீது கோபமாக இருக்கிறோம் அதனால் அவள் எப்படி இருந்தால் என்ன ? என்று நினைக்கவும் செய்கிறான். அப்படியும் இப்படியுமாக பாட்டியை வலம் வந்து சரி பாட்டி விழித்துக்கொண்டில்லை என்ற தைரியத்தில் அவள் மூக்கில் சுவாசம் வருகிறதா என்று பார்க்கிறான். அப்போதே கவனிக்கிறான் தலையில் கொண்டை ஊசி குத்தியிருப்பதை அது அவனுக்கு விசித்திர பொருளாக காட்சியளிக்கிறது. அசைவில்லாமல் அதனை உருவி எடுத்துக்கொண்டு விளையாட வெளியில் செல்கிறான். 

எங்கும் மயான அமைதி நிலவிக்கிடக்கும் கிராமம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள் . எங்குமே சிமெண்ட் சாலையோ அல்லது மாடி வீடுகளையோ அவனால் பார்க்க முடியவிலலை. ஆச்சரியத்துடன் அப்படியே சுற்றி வருகிறான். 

அந்த கிராமத்தில் அவரவர் தேவைகளை அவர்களே பூர்த்திசெய்து கொள்வது அவனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. தான் வசித்த இடத்திற்கும் இந்த கிராமத்திற்கும் உள்ள வித்தியாசங்களை வியப்புடன் நோக்குகிறான். நகரத்தில்  எதற்கெடுத்தாலும் மிஸினும் அதனை இயக்கவும் ஆட்கள் வைத்து வேலை பார்ப்பதையும் சோம்பேறித்தனம் என்பதை அறிய இயலா வயது அவனுக்கு.

பசுமை நிறைந்த வயல்கள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் உழைப்பாளிகள். அருகே மணல் மேட்டில் விளையாடும் சிறுவர்கள் இப்படி ஒவ்வொன்றாக பார்த்து வருகிறான். சிறுவர்களும் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு விளையாடுவது அவனுக்கு தெரியவில்லை. அவர்களின் விளையாட்டு அவனுக்கு புதியதாக இருக்கிறது.

தன் வீடியோ கேம்க்கு பேட்டரி எங்கு கிடைக்கும் என்பதை வயலில் வேலை பார்ப்பவர்களிடம் கேட்கிறான். அவர்கள் வரப்பில் குச்சியால் வரைபடம் வரைந்து அங்காடிக்கு வழிகாட்டுகிறார்கள். 

கடை தேடி செல்பவன் வழியில்....சிறுவர்கள்

கூட்டாஞ்சோறு ஆக்குவதும் சிறு சிறு கல்லால் வீடு கட்டி விளையாடும் அவனுக்கு கேலியாக தெரிகிறது. அவர்கள் கட்டிய வீட்டை இடித்து விட்டு சிரிக்கிறான். 

மேய்ச்சல் சிறுவன் புல் கட்டை தூக்கிக்கொண்டு நடக்க அவனை மாடு ஒன்று விரட்டுகிறது. அவனுடன் இருக்கும் அவன் தங்கை ஓடு அண்ணா ஓடு வருது மாடு வருது என்று சத்தமிடுவதை எல்லாம் வியப்புடன் நோக்குகிறான். 

ஆடு .. மாடு இவற்றையெல்லாம் புத்தகத்தில் படங்களாக கவ் .. கோட் என்று படித்தது மட்டுமே முதன் முதலாக அவையெல்லாம் உயிருடன் ஓடவும் மனிதர்களை விரட்டுவதையும் பார்க்க அவனுக்கு அதுவும் ஒரு விளையாட்டாக தெரிகிறது. 

மேய்ச்சல் சிறுவன் அடுத்த நாளும் புல் கட்டை சுமந்து செல்கையில் அவன் பின்னால் இருந்து கொண்டு முந்தைய தினம் அவன் தங்கை பயந்து ஓடு ...ஓடு மாடு விரட்டுது என்று கூறியது போல அவனும் கத்தியபடி நிற்கிறான். மேய்ச்சல் சிறுவன் கிடு கிடுவென வேகமாக ஓடி மாற்று பாதையில் சென்று திரும்பி பார்க்கிறான். மாடு எதுவும் வராததால் இவனை பார்த்தபடி சென்று விடுகிறான்.

தான் நினைத்ததை சாதித்துவிட்ட நிம்மதியில் சுழலும் சக்கரத்தை காலில் மாட்டிக்கொண்டு வீடு நோக்கி செல்கிறான். தான் வசித்த பகுதியில் வண்டிகளும் கார்களும் ஓடும் சாலையில் பயன்படுத்தும் அந்த கருவியை மேடு பள்ளமான இந்த மண் சாலையில் பயன் படுத்த முடியாது என்கிற எண்ணமும் இன்றி விரைகிறான். அவன் விளையாட்டாய் நினைத்த மாடும் அவனை விரட்ட ஆரம்பிக்கிறது. காலில் ஓட முடியாதபடி சக்கரம் இப்படியும் அப்படியுமாக தள்ளாடி ஒரு சரிவில் விழுந்தே விடுகிறான் . பின்னால் விரைந்து வரும் மாடு. கண்களை இருக மூடி கதற ஆரம்பிக்கிறான். 

தூரத்தில் இருந்து கவனித்த மேய்ச்சல் சிறுவன் குச்சி கொண்டு மாட்டினை வேறு பாதையில் திருப்பி விட்டு இவனை எழுப்பி காயங்களில் ஒட்டியிருந்த மண்னை தட்டிவிட்டு நகர்கிறான். அவன் உடன் இருந்த குட்டி நாயும் திரும்பி திரும்பி பார்த்தபடி செல்கிறது.

அடி பட்ட காயத்தின் எரிச்சலை விடவும் ஏதோ வலி அவனை அழவைக்கிறது. அழுத படி செல்கிறான்.

அழுதபடி வரும் பேரனை பார்த்து பதறிய பாட்டி அவன் கை கால் முட்டியென எங்கும் அடிபட்டிருப்பதை பார்த்து பதைக்கிறாள்.

அப்போதே மனதில் நினைக்கிறான் பேரன் தான் பாட்டிக்கென்று எந்த உதவியும் செய்ததில்லை. அவர்களின் வேலைக்கு நடுவே எவ்வளவு உபத்திரம் செய்திருக்கிறோம் என்று. பாட்டியின் செருப்பை தூக்கி எறிந்தது முதல் தன் வேலைகளையும் செய்து கொண்டு தன்னையும் பார்க்கும் பாட்டிக்கு ஊசியில் நூல் கோர்த்து கொடுப்பதைக்கூட எவ்வளவு அலச்சியமாக செய்தோம் என்று தாழ்வு மனப்பான்மையில் தலை குனிந்த படி சென்றுவிடுகிறான்.
                                                                                                                           
                                                                                                                                       தொடரும்.....


17 comments:

  1. நெகிழ்ச்சியான பதிவு. சிறு பிள்ளையின் போக்கு தன்னலம் போல் தோன்றினாலும் பிள்ளைகள் வளர்ந்து அறிவு பெற வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செயல்களை அப்படியே எற்றுத் தன்னலமில்லாமல் நடக்கும் பெரிய மனம் படைத்தவர்களே பெரியவர்கள். பெற்ற பிள்ளைக்கு சோறு போட எடுத்துக் கொண்ட நேரத்தைக் கூட என்னவோ உலகமகா தியாகம் செய்தது போல் பாவிக்கும் மனிதர்கள் தான் உலகில் அதிகம் என்பதை உணர்கையில், இது போன்ற பாட்டிகள் நெஞ்சைத் தொடுகிறார்கள். தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பெரியவர்களின் தன்னலமற்ற குணத்தை அழகாக சொன்னீங்க. இந்த கால பெற்றோர்களின் மனநிலையையும் சரியாக சொல்லியிருக்கிங்க. நன்றிங்க.

      Delete
    2. /// நெகிழ்ச்சியான பதிவு // வியப்பு...!

      Delete
  2. மனதைத் தொட்டு தென்றலாக வருடிச்செல்கிறது இந்தக்கதை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    தொடருங்கோ....... ;)))))

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க ஐயா.

      Delete
  3. கதை அவ்வளவுதானா? தொடருமா?

    ReplyDelete
  4. கவிதையில் இருந்து கதைக்கு மாறீட்டீங்களோ...

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் இல்லையே..

      Delete
  5. தன் பேரனை பாசத்தோடு பராமரிக்கும் பாட்டியின் நிலை உருக்கமாக இருக்கிறது இப்போது உள்ள பிள்ளைகளுக்கு பாட்டியின் அன்பும் பாசமும் பாட்டி சொல்லும் நன்னெறி கதைகளும் பழமை வாழ்க்கை முறை பண்பாடுகளும் சொல்லி வளர்க்க பாட்டிகள் வீட்டில் இல்லை அதிகமாக முதியோர் இல்லங்களில் அல்லவா இருக்கிறார்கள் கதை அருமை தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரியாக சொன்னீர்கள். இந்த கால குழந்தைகள் பலவற்றை இழக்கிறார்கள்.

      Delete
  6. கதையை அருமையாக சொல்லி செல்கிறீர்கள் சசிகலா, கிராமம் ,நகர வாழ்க்கையை சிறுவன் ஒப்பீடு செய்து பார்ப்பது , குழந்தையின் எதிர்பார்ப்பு, பாட்டியின் பெருந்தன்மை எல்லாம் அழகாய் கதையில் மிளிர்கிறது காட்சி அமைப்பு கெடாமல் நீங்கள் சொல்வதுதான் மிக சிறப்பாய் இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.
    தொடருங்கள், தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பின்னூட்டம் எனை உற்சாகமாக எழுதவைக்கிறது தோழி. மிக்க நன்றி.

      Delete
  7. புதிய உத்தியில் விமர்சனம் செய்வது போலச் சொல்லிச் செல்கிறீர்கள். அருமை. சிறுவனின் நிலையில்தான் நாம் இருக்கிறோம் போல.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சிறுவனின் நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

      Delete
  8. நகர்ப்புறம் இருந்துவிட்டு கிராமம் செல்லும்போது எல்லோருக்கும் எதிர்ப்படும் சங்கடங்கள். நன்றாகவே கட்டுரை வரைகின்றீர்கள். நீங்கள், கவிதையே என்று இராமல் கட்டுரைகளும் எழுதலாம்.

    ReplyDelete