கை நாட்டு காலம் மாறி
கைபேசி காலமாகி
கையூட்டு தேசமாகி
கைதியாய் வாக்காளர் !
அரசர் ஆட்சி வேண்டாமென்று
அடிமையானோம் கும்பனியார்க்கு
அகிம்சை வழி நடந்து எப்படியோ
அடிமை விலங்கொடித்தோம் !
மூச்சுவிட உரிமையில்லா -கொடும்
முன்னூறு வருடங்கள்
மூக்கணாங் கயிரிட்டவராய்
மூடர்களாய் இந்தியர்கள் .
விடுதலையின் ஆரம்பம்
வில் பூட்டி வைத்ததிலும்
விதைகளாய் நாமில்லை
விந்தை பார் அவரும் அந்நியரே !
காங்கிரஸ் பேரியக்கம்
காட்டிய பாதையிலே
காலைப் பதித்தபோது
காட்டுக் களையாக ஜனநாயகம் !
1885 இல் விதைத்த நல்வித்து
1910 இல் மகாத்மா வரவினால்
1947 இல் சுதந்திர இந்தியா
1950 இல் குடியரசு நாமானோம் !
62 வருடப் போராட்டத்தில்
உயிர் தியாகம் எத்தனையோ
பதவிக்காய் ஓடவில்லை
மக்களுக்காய் தலைவர் மாண்டார் .
சுதந்திரம் பெற்ற போது
ஜனத்தொகை 38 கோடி
வளர்ந்தோமோ இல்லையே
இன்று நாம் 120 கோடியாய் !
உண்டோம் உறங்கினோம் இது
நம் சாதனைகள் !
அன்பு வளரவில்லை, பண்பும் வாழவில்லை ,
ஆசையின் கைகளில் ஆடும் பொம்மைகளாய் !
இன்பம் தேடியோடி ,இருளில் வாழ்கின்றோம் ,
ஈனங்கள் நாட்டை ஆளும் விபரீதம் காண்கின்றோம் .
விடுதலை நமக்கு வேண்டும்
ஜனநாயகம் வெல்ல வேண்டும்
மக்களாட்சி மலர்ந்திட
ஒன்று கூடி உழைக்க வேண்டும்
அவர் தவறு , இவர் தவறு
சொல்லி பயனில்லை
நம் தவறு களைந்திடுவோம் !
துயில் விட்டு எழுந்திடுவோம்
ஊக்கமாய் உழைத்திடுவோம்
மக்களாட்சி மலரச் செய்வோம் !