காடாறு மாசமாச்சி நாடாறு மாசம் போச்சி
நாமபோடும் நாடகந்தான் அண்ணாச்சி-பாரில்
எல்லாமே வேஷமாச்சி அண்ணாச்சி!
கூடும் கட்டியாச்சி கூழும் குடிச்சாச்சி இதய
ஆசைமட்டும் வேகலையே அண்ணாச்சி.
மனப் பாசங்களே பொய்யாச்சி அண்ணாச்சி!
காடும் விளைஞ்சாச்சி கதிரறுக்க காலமாச்சி
களமெல்லாம் பெருக்கினேனே அண்ணாச்சி.
மனம் மட்டும் பெருக்கலையே அண்ணாச்சி!
வயசுக்கு வந்தாச்சி வாலிபம் பூத்தாச்சி
வண்டெல்லாம் மொய்க்கிறது அண்ணாச்சி.
நெஞ்சம் வாழ்வுநாடி போகிறது அண்ணாச்சி!
மண்ணுக்குள் ஒளித்திருந்த மஞ்சள் பறிச்சாச்சி
மனசுக்குள் மறைந்திருந்த கதவும் திறந்தாச்சி
காணாமல் போனேனே அண்ணாச்சி.
கடலலையாத் தவிக்கிறேனே அண்ணாச்சி!
ஜாதியென்றும் மதமென்றும் மாய்ந்து நிக்கிறாங்க
மனிதரில் எத்தனைதான் பேதமுண்டு அண்ணாச்சி
மரணத்தை வென்றவரைக் காணவில்லை அண்ணாச்சி!
நெல்லுக்கும் சாதியுண்டு கல்லிலும் பிரிவுண்டு
சொல்லியே பாடறாங்க அண்ணாச்சி இவர்
கண்திறப்பதெப்போதோ அண்ணாச்சி!
ஆச்சிகத முடிஞ்சி இப்போ சேச்சிகத வந்தாச்சி
மதங்கூட மாறறாங்க அண்ணாச்சி-முடிவில்
மானமிழந்து தவிக்கிறாங்க அண்ணாச்சி!
நன்மை தீமைஎன எல்லாம்இரண்டிரண்டா வாழுது
நட்பென்றும் பகையெனவும் அண்ணாச்சி
இவையொழியப் பாடப்போறேன் அண்ணாச்சி!
நடந்தது கனவாக்கி நடப்பது நலமாக நாம்கூடி
எழுந்து எழுதுவோமா அண்ணாச்சி .
தமிழ்பாட்டு தமிழனுயரப் பாடுவோம் அண்ணாச்சி!



