Showing posts with label உண்மை நிகழ்வு. Show all posts
Showing posts with label உண்மை நிகழ்வு. Show all posts

Friday, 31 May 2013

ஒரு ஜென்மம் போதாதே ! (உண்மைச் சம்பவம் )

தினம் தினம் காத்திருந்தேன்
திரும்பிய திசையெலாம் 
முகம் பார்த்திருந்தேன்...

இன்று நாளை என்று நானும்
நாட்களை எண்ணி வந்தேன்
வருவாய் வசந்தம் தருவாய்
என்றே காத்திருந்தேன்.

மகன் முகம் பார்த்தில்லை
மகளின் குழந்தையை தாலாட்டியதில்லை
அனுப்பி வைத்த பணத்தினிலே
அடுக்குமாடி சிரித்திருக்கு..

அன்பாய் வருடும் தென்னங்காற்றும்
உன் வரவை பார்த்திருக்கு..
உன் மடியில் தலைசாய்த்து
உணர்வையெலாம் கொட்டி அழ
ஒரு ஜென்மம் போதாதே...
ஓடோடி வா என்னவனே.

தூரெடுத்த கிணற்றைப்போல
ஊற்றெடுக்கும் உந்தன் எண்ணச்சுமை
கன்னிவெடி வெச்சது போல்
கலங்கிடுதே கண்களிரண்டும்.

உன் முகம் பார்த்துவிட்டால் 
பறந்திடுமே எந்தன் சோகம்
சீமைக்கு போன மன்னவனே
வந்தாயே உயிரற்ற சிலையாக.

தோழியின் கணவர் வெளிநாட்டில் இருந்தார். திடீரென இறந்துவிட்டார். அந்த பெண்ணின் மனம் என்ன பாடு படும்.