Thursday, 26 June 2014

நினைவூஞ்சல் !


பந்தியில முந்தி வச்சா
பார்வை பட்டு போகுமுன்னே..
முந்தியில முடிஞ்சிவைச்சேன்
முத்தான கவிதை ஒன்னு...
முன்வரிசை ராகத்தில
முத்தழகன் பேரினிக்கும்

பின்ன வரும் பல்லவியில்
பிரசேதி சொல்ல வரும்...
கட்டழகு ஆசமச்சான்
கருத்தழகு மீசமச்சான்....
கன்னக்குழி தேசத்தில-என்
கண்ணிமைய பூட்டிவச்சான்..

அவனோ
காத்தோட சேதி சொல்ல
காதோரம் உரசி நிக்கும்...
பார்த்து பேசி பழகிடத்தான்
பருவ மக(ன்) நெனப்பினிக்கும்.

Friday, 20 June 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

தோழி தேன்மதுரத் தமிழ் கேட்ட கேள்விகளுக்கு என் பதில்கள்.
1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
அது வரை இருக்கமாட்டேன். இருந்தால் அப்போதாவது உறவுகளோடு கொண்டாடுவேன்.

(இது வரை அப்படி ஒரு நாள் வருவதே தொிவதில்லை இதில் இல்லாத போது பிறந்த நாளாம் ?)

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
என் தந்தையைப்போல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க.

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
எனது இரண்டாவது மகன் செய்த சேட்டைக்காக...

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
அதுவும் நன்றாகத்தான் இருக்கிறதே.. என்று மின்சாரம் இல்லாத போது மக்கள் எப்படி இருந்தாா்கள் என்று பிள்ளைகளுக்கு சொல்வேன்.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
எப்போதும் ஒருவா்க்கு ஒருவா் விட்டுக்கொடுத்து அன்பாய் வாழ்வதே வாழ்வென்பதை சொல்வேன்.

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
வறுமை என்பதை ஒழிக்க வேண்டும் அது தானே ஒழியாது ஆதலால் அவரவா் தேவையை அவரவரே தேட வேண்டும் என்பதை வலியுறுத்துவேன்.

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
கணவரிடம் பிறகு அக்காவிடம்.

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
அதுவும் கடந்து போகும்..


9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
பட்டினத்தாா் பாடல் சொல்வேன்.

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
சாண்டில்யன் நாவல் படிப்பது , பாடல் கேட்பது.

Thursday, 19 June 2014

எங்கோடி நான் தேட.....

தொட்டிலிட்ட கனவுந்தான்
தூங்கத்தான் மறுக்குதடி...

எச்சமிட்ட கன்னத்தை
எட்டி எட்டி பார்க்குதடி...

முந்தாணைய பிடிச்சிகிட்டு
முன்னும் பின்னும் ஓடுதடி...

எப்பத்தான் மடிதருவ
ஏக்கமுடன் கேக்குதடி...

கைக்குள்ள ரேகையாட்டம்
பத்திடுச்சே மருதாணியாட்டம்..

ஆடுபுலி ஆட்டத்துக்கோ
ஆள் சேர்க்கும் தோழியாட்டம்...

நிறைகுடமா நித்திரையில்
நிதமிருக்கும் அடுக்களையில்...

பச்சரிசி பல்லாட்டம்
பருவ மக நெனப்பிருக்க..

எங்கோடி நான் தேட
என்னுள்ளே கலந்தவள..

Thursday, 10 April 2014

முந்தி ஓடும் சனத்தப்பாரு !


ஆளுக்கொரு கட்சிக்கொடி
ஆரவார பேச்சு கேட்டுக்கோடி
முந்தி ஓடும் சனத்தப்பாரு
முழக்கமிடும் கோசத்தக்கேளு
முன்ன பின்ன சாடிகிட்டு
முகத்த நல்லா கோணிக்கிட்டு
கூட கும்பிடு போட்டுகிட்டு
கூட போகும் (ஆட்டு)மந்தையப்பாரு...
வெட்டத் துளிர்க்கும் முருங்கையாட்டம்
வேட்டிக் கரைக்கொரு கட்சியாட்டம்
கூலி கொடுத்து தலைக்குந்தான்
கூட்டம் சேர்க்கும் நாளுந்தான்
புத்தம் புதுசா வண்ணம்தான்
புதுசா உடுத்தும் குட்டிச் சுவருந்தான்.
உன்னை என்னை யார் கேட்பா ?
உண்மை ஓட்டு யார் போட்டா ?
வெள்ளிக்காசு சிரிக்குமிடம்
வெளுத்து வாங்கும் கள்ள ஓட்டுகளும்..
தோத்தவரும் ஜெயித்தவரும்
தோரணமிடும் வசவுகளும்..
என்னாளும் இது வாடிக்கைதான்
நமக்கென்ன அங்க வேடிக்கைதான்..
வேளை முடிஞ்சி போச்சிதின்னா
வேலி போட்டு போயிடுவார்...
நமக்கு என்றும்
கூலி வேல தான் மிச்சமடி...
கூடக்கும்பிடு வேண்டாமடி.

Friday, 4 April 2014

இரண்டது ஒன்றானால் !



ஒற்றைக்காலில் உடல் சுமக்கும்
கொக்காகுமோ மனித இனம்.

சாலையோர மணல் தனிலே
காத்து நிற்கும் சுமை தாங்கி
ஓடியோடி சுமை சுமந்திடுமோ ?

சக்கரம் பூட்டி அச்சாணியேந்தி
சுழலுகின்ற வண்டிச் சக்கரம் காண்
இரண்டானால் அது சுமக்கும்.

உறவில் உறவும் இப்படியே
இரண்டு ஒன்றானாலது மணம்.

இரண்டது நாலானால் குடும்பம்.
நாலது எட்டானால் சமூகம்.
எட்டது விரிந்து பரந்தால் நாடு.

தனித்தனியாயோடி வெலல்
கூடாது இவ்வுலகில்..
நாம் கூடி இணைந்து வாழின் நல்வாழ்வு.

கூடி எவரும் தோற்றதில்லை
இதை மறந்தவர் வென்றதில்லை
வென்றவர் நட்பு மறப்பதில்லை.

Wednesday, 2 April 2014

நிலா வரும் நேரத்தில்...

நிலவதனை பார்த்திருந்தே நில்யென்றே சொல்லிவர
களவதனை கற்றநிலா நில்லாமல் போகவர
நிழலுனக்கு ஏன்எதற்கு நீதிருடி தானெக்கு
கழன்றோடி போகுமுந்தன் களவாணி புத்தியெதற்கு ?
ஜன்னலோரு இருக்கையில ஜதிசேரும் நேரத்தில
சல்லடையாய் எனை அரித்து சாந்தமாகும் சாமத்தில
மேகத்தில் தினம் ஓடி தேகத்தை தான் மறைக்கும்-கவி
மோகத்தில் நானழைக்க கோபத்தில் தான் முறைக்கும்.

முகங்காட்டா மூடுபனி முடிவேது எனக்கு இனி
முகவரியாய் வானமினி பிறைநிலவே வந்திடு நீ.
மலைதேடி மறைகின்றாய் மனம் தேடும் நந்தவனம்
மாலை வருவாய் என்றே மருகி நிக்கும் மங்கை தினம்.

Friday, 28 March 2014

மானும் மயிலும் !

கொத்தோட பூ பறிச்சி
கொண்டையில   தான் சொருகி..
கொல்லப்புறம் போயிருந்தேன்
கொடுக்காபுளி  பறிக்க...
பின்னாடி நிழல்வரவே
முன்னோடிப்போக துணிந்தேன்
என்னாடி கண்ணேயென
சொல்லாடி வந்தவனால்..
எங்கோடிப்போச்சுதடி
என் கோபம்...
தள்ளாடி நிக்குதடி காலும்.
அறுத்துப் போட்ட
கோழியாட்டம்..
அல்லாடுறேன் நானே...
அவனோ தப்புத்தாளம்
போட்டுக்கிட்டு..
துள்ளி ஓடுறான் மானா..
தொரத்தி வந்த
புள்ளி மானை
தொலைதூரம்
காணலையே...?
தொக்கி நிக்கும்
என் உசிரும்
பிழைச்சிடுமா ?
தோணலையே ?