Monday, 30 April 2012

வாழ்க்கை பயணத்தில் ...!

   தந்தைதாய் கட்டிவைத்த,
   கூட்டுக்குள் வாழ்ந்திருக்கும்,
   குருங் குஞ்சி மகவுகளை,
   கூர்போடக் காத்திருக்கும்,
   வட்டமிடும் வல்லூராய்,
   உலாவரும் தீமைகள்,
   வெல்லுகின்ற காலமிது!

   கிராமத்துப் பள்ளியிலே,
   முப்பது ரூபாய் ஊதியத்தில்,
   ஊழியராப் பணிபுரிந்த,
   அஃரகார வாத்தியாரின்
   வாழ்க்கை பயணமிது.
   மனைவி உயிரோடில்லை,
   பெற்றதுவும் பெண்களாய.
   துன்பம் எட்டிப்பார்கும்,
   இவர்க்கு வாழ்கையே துன்பமாய்!

   வள்ளிக்கு இருபதுவயது,
   கடைசிமகள் பத்துவயதில்,
   ஆறுநாள் நீராகாரம்
   பழகிப்போன உறவாக.
   தீபாவளி துணிமணியே
   மானம்காக்கும் போர்வையாய்.
   மேல்படிப்பு கனவாக
   மேலாடை கிழிசல்போல்.
   மானம்மட்டும் பாக்கியுண்டு,
   அதுவும் கேள்வியானால்?
   ஓட்டைக் குடமேந்தி
   தண்ணீரெடுக்கப் போனவளை,
   வல்லூரொன்று வழிமறித்து,
   ஐயர் மறுவீடு அனுப்பமாட்டார்,
   வா சின்னவீடாய் அழைத்ததனை
   அப்பாவிடம் அழுது சொல்ல,
   அரண்டுபோனார் ஆசிரியர்
   தந்தையவர் இதயத்தி்ல்,
   ஆயயிரமாயிரம் மோதல்கள்,
   இயலாமையை ஒருபக்கம்,
   வேதனை தொடர்கதையாய்.
   விட்டுச்சென்ற மனையாளின்
   புகைப்படம் வெறித்துவிட்டு,
   குடையெடுத்துப் புறப்பட்டார்
   விஷம்கொஞ்சம் வாங்கிவர!
   கதவைத்தாள் போட்டுவிட்டு,
   கண்ணீரோடு பிள்ளைகளை,
   கட்டியணைத்து முத்தமிட்டு,
   அமிர்தம்மான விஷந்தன்னை,
   குடிக்க எடுத்த வேளையிலே
   'சார்' எனறசப்தம்,கை நடுங்க,
   கதவைத்திறந்தவர்-போலீ்ஸ்
   கண்டு உறைந்துபோனார்!

  "என்னைத் தெரியலையா?
    நான்தான் சார் முகுந்தன்,
   படிக்க வைச்ச நீங்கள்தான்
   என்தெய்வம் என்றானவன்!
   வள்ளிக்குப் புரிந்தது,
   மாடு மேய்க்கும் கந்தனின்
   மகனாய் ஒதுங்கிநின்று,
   பரிதாபமாய்ப் பார்துநிற்கும்
   கீழ்ஜாதி...ஒதுக்கப்பட்டவெனறு!
   இன்ஸ்பெக்டர் முகுந்தன்,
   இதேகிராமத்தில்....சார்
   கேட்டா கோபிக்கமாட்டீங்கே,
   உங்கபொண்ணு வள்ளியை
   திருமணம் கேட்கவந்தேன்.
   சட்டென்று ஏதோஒன்று,
   இதயத்தை அடைப்பதைப்போல்,
   அவன்காலைக்கட்டி கதறி,
   விடமனம் துடிக்க-கைகூப்பி,
   உள்ளே வாப்பா என்றார்,
   வீட்டுக்கு ஒளியாய்-வள்ளிக்கு
  காவலனாய் நுழைந்தானவன்! 

Thursday, 26 April 2012

சுயநலத்தின் முதல் குழந்தை...!

   
   அகரம்முதல் சிகரம்வரை,
   ஆண்டவன்துவங்கி அடிமைவரை,
   இதயங்களும் எண்ணங்களும்,
   ஈரமற்ற கொடும் பாலையாய்,
   உண்மைகளை உண்டுவாழ்ந்து,
   ஊனமான எண்ணம் சூடி,
   எரிகின்ற பச்சைமரத்தை,
   ஏய்கின்ற காலம் பார்த்து,
   ஐம்பொன் சாமி திருட்டுபோல்,
   ஒருநாளும் திருந்தாத மனதோடு,
   ஓடுவதேன் சுயநலப் பாட்டோடு!

   சுயநலத்தின் முதல் குழந்தை,
   யார? பதில்தான் தேடுகிறேன்!
   வானில்லைப் புவியில்லை,
   நீரில்லை,மலையில்லை,
   மண்ணில்லை,மரமில்லை,
   காற்றில்லை-பாவமனிதனுமில்லை.

   எதுவுமில்லா வெறுமையின்,
   வசந்தகாலம் கொன்றுவிட்டு,
   இயற்கையெனும் விதையை,
   ஊன்றியதின் நோக்கமென்ன!
   என்பெயர் விளங்க வேண்டும்,
   எனைவணங்க கைகள் தேவை,
   என்ற சக்தியின் சுயநலத்தால்,
   நாம் வந்து வீழ்ந்தோமோ?

   முற்பிதாக்கள் செய்த பாவம்,
   முல்லைப்பூவைச் சேருவதேன்,
   அதைக்கொய்து உயிரெடுக்கும்,
   இதயமற்ற செய்கையேன்,
   பேசா மடந்தைகளை- நாம்,
   நம் உணவாய் நினைப்பதேன்,
   நமைக்காக்க சட்டங்களைத்,
   தீட்டிவைத்து அழிப்பதேன்,
   உறவென்ற பெயர்சொல்லி,
   அடிமைத்தனம் வளர்ப்பதேன்,
   எல்லாமே பொய்யுரைகள்,
   சுரண்டும் சுயநலங்கள்!

   திறந்துவிட்டால் பறந்துபோகும்,
   என்பதினால் திருமணங்கள்!
   நம்பிக்கைக்கு விலங்கிட்டு,
   அரங்கேறும் நாடகங்கள்,
   மனதைக் கேட்டால் தெரிந்துவிடும்,
   வலியைச் சுமந்து பயணங்கள்,
   பிரியங்களும்,பிரிவுகளும்,
   ஒருகூட்டுப் பறவைகளாய்,
   இறகைவெட்டிப் போட்டதனால்,
   கூண்டில் இணை ஜோடிகளாய்.
   என் உதிரம்,என் குடும்பம்,
   என்பிள்ளை,என்வீடு,
   என்சுற்றம்,என் சமூகம்,
   என்சொத்துஎன் பணம்,
   என்தேசம்,என் உலகம்,
   எனதென்றே பாடுகிறோம்,
   என் மூச்சிக் காற்றுக்கும்,
   எனக்கும் பந்தமென்ன ?
   எங்கிருந்தோ வருகிறது,
   என்னுயிர் காக்கிறது!

   எதையுமது கேட்டதில்லை,
   எப்போது அதுபோகும்,
   எனக்குச்சொல் மானுடமே!
   அடங்காத  ஆழ்கடலும்,
   அறியாத பெரும் புயலும்,
  அமிலமான எரிமலையும்,
   அறியாத தாதுக்களும் ,
   அழகாய் ஒளிரும் கதிரவனும்,
   அடியில்வாழும் பொக்கிஷமும்,
   அத்தனையும் நமதேயெனறு,
   அனைவருமே நினைக்கும்வரை,
   அத்தனையும் சுயநலமே,
  அமைதி வேண்டுமெனில்
   அழுக்கான சுயம் அழிப்போம்!
படங்கள் நன்றி கூகுளுக்கு .

முகமூடிகள்...!!


தாயின் முன்பு
கனிவோடும்  !

தந்தையின் முன்பு
தவறுகளை மறைத்தும் !

முதலாளி முன்பு
குழைந்து  நின்றும் !

கடன் கொடுத்தவன் முன்பு
கோழையாகவும் !

மனைவி முன்பு
மாயவித்தைக் காரனாகவும் !

கணவன் முன்பு
கைதியாகவும் !

உறவுகளுக்கு முன்பு
கசப்பான அனுபவங்களை
மறந்தும் !

நண்பனே ஆனாலும்
சில நேரங்களில்
நல்லது கெட்டதை
நம்முள் புதைத்தும் !

எதிரியின் முன்பு
எந்த நேரம்
கவிழ்ப்பான் என்ற பயத்தோடும் !

மரணத்தின் முன்பு
வாழ்வை பிச்சையாய் கேட்டும் !

வாழ்வெதற்கு
என்ற கேள்விக்கு
ஜாண் வயிற்றை முன் வைத்தார்கள்
அந்த ஜாண் வயிற்றுக்கா
இத்தனை முகமுடிகள் !!


Wednesday, 25 April 2012

உயிர்மூச்சின் எதிரொலியாய் ...!

உலகின் உன்னத உறவான
இல்லறத்தின் இதயமாய்
உயிர்மூச்சின் எதிரொலியாய்
கண்ணீரை துடைத்த கைகள்
உறவை மறந்து விட்டு
பிரிவெழுதிப் போகின்ற
ஊர்கோலம் கண்முன்னே !

அவள் இனிவரமாட்டாள்
நான் தான் போகவேண்டும்
கூடவே வாழ்ந்தவள்
கூடுவிட்டு ஏன் பறந்தாள்
சொல்லாமல் ஏன் பிரிந்தாள் ?
படுத்திருந்த அவள் மீது
பார்வை பதிந்தது
இன்னமும் சிரிக்கின்றாள்
எப்படி இவளால் முடிகிறது .

வாழ்ந்த காலத்தில்
வார்த்தை எதிர்த்து உதிர்த்ததில்லை
கடமையே கதியென்று
கண்ணாய் வாழ்ந்து விட்டாள்!
எது வேண்டும் கேட்ட போது
நீங்கள் போதும் என்றவள்
நிம்மதியாய் வாழ்ந்தாளா ?
அறியாத பாவியாய் நான் !

பண்ணையார் மகளை
மணம்பேசி நிற்கையிலே
ஆற்றங்கரை ஓரத்தில்
ஆலமரக் காற்றிடையில்
அன்னமாய் வந்தவளை
ஆசைமனம் தேடியோட
ஆரம்பம் காதலுடன்
தடைகளெல்லாம் தகர்த்தெறிந்து
அப்பாகாலம் போனபின்பு
அம்மாவின் அழுகையோடு
கரம்பிடித்த கோலமகள்..

கருஏந்தி மடிசுமந்து
பத்தியமிருந்து , பாதி இரவு
கண்விழித்து ...
பெண் மலரொன்று
மழலை ஈன்று
பேணிக்காத்து அவர் வாழ்வே
இவள் கனவாய்
பூச்சூடி பொட்டிட்டு
தங்கமாய் வைரமாய்
காத்து நின்று
மொட்டது மலரானதும்
மணவாளனுக்கு மாலைசூடி
சிறு பிள்ளைகள்
விளையாட்டை சீர் கொடுத்து
ரசித்துப் பார்த்து
வாழ்ந்த பெண்மை !

கட்டையாய்க் கிடக்கின்றாள்
எடுக்க நேரமாச்சி
என்கின்ற உறவினருக்கு
என்ன தெரியும் - அவர் பார்வையில்
அழுகுமுன் பிணம் எடுக்க வேண்டும் .

சாய்நாற்காலியில் வெறித்திருந்த
அவரைப் பார்த்து
அம்மாவை வழியனுப்ப
வாங்கப்பா என்றான் - மகன்
அசைவில்லை அவரினிலே
அருகில் வந்துப் பார்த்த மகள்
அலறினாள் ஐயோ என்று
எங்களுக்கு யாருமில்லை
ஏனப்பா இப்படி எங்களை அனாதையாய்
விட்டுச் சென்றீர்கள் !
பிள்ளைகள் கதறியழ
அவரும் தன் துணையோடு
அன்பென்றால் இதுதானோ ?
அறவாழ்வு மணந்தானோ
வாழ்விலும் தாழ்விலும்
இன்பத்திலும் துன்பத்திலும்
இறப்பிலும் இணையாக ...

இப்புவியில் இன்று காணும்
இல்லறங்கள் எப்படியோ ?
அத்திப் பூ பூத்தது போல்
இதைப் போன்ற உண்மைக்காதல்
சாட்சியாய் வாழ்கிறது .
வாழ்கிறோமா ? நாம் இதுபோல்
கேள்விகேட்டால் பதிலில்லை
வாழ ஆசைப்பட்டால்
அது அன்பு ..... !!

Monday, 23 April 2012

அழகு கண்ணாளா ...!


தாவணி போட்ட
தங்கமே வாடி
தனிச்சி பேசுவோம் ...
ஆத்துப் பக்கம்
நாமும் போவோம்
அழகே வாயேண்டி!

ஆற்று மணலில்
வீடு கட்டி
கொஞ்ச வழியில்ல
மணல் திருட  
மண்டிக்கிடக்கும் கூட்டம் பாரங்கே !!.

குளத்துப் பக்கம்
நாமும் போவோம்
குயிலே வாயேண்டி!

குளத்தை சீரமைக்கும்
பணியென்றே
கும்மியடிக்கும் கூட்டம் பாரங்கே!! .

ஏரிப்பக்கம்
நாமும் போவோம்
எழிலே வாயேண்டி !.

ஏரி நிலைத்தைஎல்லாம்
வீட்டு மனைகளாக்கி
ஏச்சிப் பிழைக்கும்
கூட்டம் பாரங்கே !!.

தென்னந்தோப்பு பக்கம்
போவோம் தேனே வாயேண்டி !.

கள்ளிறக்கும் கூட்டமஅங்கே
காத்துக் கிடக்குதே !.

மாந்தோப்பு பக்கம்
போவோம் மானே வாயேண்டி !.

மாங்காய் கடிக்கு
மல்லுக்கு நிற்கும்
சிறுவர் கூட்டம் பாரங்கே!! .

சோலைக் காட்டுப்
பக்கம்  போவோம்
சொர்ணமே வாயேண்டி! .

சோலைக் கதிர்
சுட்டுத் தின்ன
காத்து கிடக்கும்
காதலர் கூட்டம் பாரங்கே !!.

சினிமா பார்க்க
நாமும் போவோம்
சிட்டே வாயேண்டி!

சீண்டி பேசி
வம்பிழுக்கும் கூட்டம் பாரங்கே!! .

கோவில் புறா
பார்க்க போவோம்
கொஞ்சு புறாவே வாயேண்டி!

உண்டியல் திருட்டை
தடுக்க அங்கே
ஒருவருமில்லையே
உடுத்திப் போகும்
என் நகைக்கங்கே
காவல் யாரங்கே!! .

உன் கண்ணைப் பார்த்து
வந்த காதலுக்கு வழியும் சொல்லேண்டி! ...

கண்ணால் பேசி
கருத்தை கவரும்
அழகு கண்ணாளா ...
உன் சொல்லால் மயங்கி
உன் பின்னே நானும் வர
உன் பெஞ்சாதி  யாகனுமே !!

கல்யாணத்துக்கு முன்னே
வந்த காதலும் வேண்டாமே
கல்யாணத்துக்கு பின்னே
வரும் பெஞ்சாதி  வேண்டாமே
சந்நியாசம் தான் நானும் போறேன்
சற்றே வழி விடு!!.

சகலமும் தெரிஞ்சவனே
சந்நியாசம் வாங்கணும்
முன் கோபத்தையே
விடத்தெரியா உனக்கெதுக்கு
சந்நியாசமும் ...சம்சாரமும் !.









Saturday, 21 April 2012

அழையா விருந்தாளி ...!


அவனியில் அவதரித்த
நாள்முதல் பார்கின்றேன்
அழையா விருந்தாளிகளாய்
ஆயிரம் வாழ்வினிலே !


அழுகைக்கு குரல்கொடுத்து
வந்ததை அறிவித்தோம்
துன்பத்தின் குடியேற்றம்
ஆரம்பமாய் பார்க்கின்றோம் !

வாழ்வு வேண்டுமென கேட்டா
நாம் வந்தோம்
வந்து உதித்ததனால் நாம்
வாழ ஓடுகிறோம் !
கையை மூடி வைத்து
களத்தில் விழுந்தோம் நாம்
கையேந்தி நிற்கின்றோம்
கனவுகள் மெய்ப்படவே !

கடல் உள்வாங்கினாலும்
வெளியே கரை கடந்தாலும்
அழிவோம் என்ற பயம்
மனிதனைக் கொல்கிறது !
மனமும் இப்படித்தான்
இல்லாத உருவத்தை
கற்பனையில் சமைத்துவைத்து
நம்பிக்கையில் காத்திருக்கும்
கண்முன்னே வாழ்திருக்கும்
உயிர்களை மறந்துவிடுவோம்
கண்காணா கடவுளுக்கு
உருவங்கள் கொடுக்கின்றோம் !

கேட்டது கிடைத்து விட்டால்
வெற்றி நமதென்போம்
கேள்வியாய் அது நின்றால்
கேவலம் தோல்வி என்போம் !
எது வெற்றி , எது தோல்வி
எனதென்று எதுவுமில்லை
எல்லாமே பொதுவுடைமை
நினைவே வெற்றி என்பேன் !
காலச் சக்கரத்தின்
வேகம் அதிகமானால்
காலைக்குப் பதில் மாலை வரும்
கனவில் நிலையும் இதுவே காண்!
தீமைகள் கூடுதேடி
பறந்தோடித் திரிகிறது
தீயில் போய் வீழுமுன்
விழித்தெழுதல் நன்றென்பேன் !

நன்மையெது தீமையெது
பகுத்தறிதல் லாபமென்பேன்
பார்வையில் நன்மையானவை
நாளை தீமைஎனில் என் செய்வோம் !
ஆயத்தம் செய்துவைத்த
ஆயுதங்கள் வீணாய்ப்போன
ஆயிரம் கதைகளுண்டு
ஆனாலும் ஆயத்தம் -தேவை !
படங்கள் கூகுள் நன்றி கூகுளுக்கு .

Thursday, 19 April 2012

வாராதோ வசந்த காலம் !


மஞ்சள் பூசி நீராடி,  
 கண்டாங்கிச்  சேலை கட்டி      
 பொட்டு வைத்து பூச்சூடி
காதோரம் ஜிமிக்கி போட்டு
கழனிக்கு  போன மசசானுக்கு
கஞ்சி கொண்டு நானும் போனேன்! 

ஓரப்பார்வையாலே எனை அள்ளி        
 வந்தாயோ என்று கொஞ்சி
கஞ்சி குடிச்ச மச்சானுக்கு
களைப்பு தீர பாட்டு பாடி ...
என்னன்பே என்று மச்சான்
மயங்கிய நேரம் காதோரம் சேதி
சொல்லிகாசுமாலை கேட்டு நின்றேன்!

புன்னகை ஏக்கத்தோடு,
 மச்சான் முகம் நோக்கி
என்னை உற்றுப் பார்த்து!
காசுமாலை கேட்ட புள்ள
களையெடுக்கவும் ஆள் இல்ல
வளர்ந்து வரும் நெல்மணிக்கும்
தண்ணிபாச்ச நாதியில்லை
கால் வயிறு இனிகண்காணாது போலும் ...

அடி என் கண்ணே,
மணியேகண்ணுக்கு அழகா தெரியும்
ஜிமிக்கி கொஞ்சம் தாயேன் புள்ள!
விதை நெல்லு வாங்கின
கடனுக்குவட்டியாச்சும் கட்ட உதவும் ...
காசுமாலைக்கு ஆசைப்பட்டு
காது ஜிமிக்கியும் போனதென்ன?    
காலமெல்லாம் வராதோ வசந்தகாலம்!