Sunday, 16 June 2013

தாவும் மனது !


கைக்கு எட்டிய 
பழங்களை விடுத்து
உச்சிக்கிளையில் 
இருக்கும் செங்காய்க்காக
எம்பித் தவிக்கும் மனம்.

பூ ..பிஞ்சு என
அனைத்தும் உதிர்த்துவிட்டும்
அதனையே இலக்காகக்கொண்டு
போகும் போதும் 
வரும் போதும்
கிணற்றுத் தவளையாய்
எம்பி எம்பி குதித்தபடி....

கால சூழச்சியில்
பழுத்தே போனது
அக்காயும் மீண்டும் 
அடுத்த கிளையில்
அரும்பி நிற்கும்
அடுத்தொரு காய்க்கு
பழுப்பதற்குள் பறித்துவிட
பலாத்காரத்துடன் முயற்சித்தபடி.

Friday, 14 June 2013

பணமெனும் தீ !


வெட்டருவா தீட்டி கிட்டு
வேல முள்ள கட்டி கிட்டு

வீதியெங்கும் திரிஞ்சிபுட்டேன்
விலைக்கு வாங்க யாருமில்ல

உழைப்பிங்கே வேர்வையாச்சி
உணவுமிங்கே எங்களுக்கு கனவாச்சி

புள்ள குட்டி வீதியில
நிழலுக்கிங்கே மரமுமில்ல

காடு கழனியெங்கும் வீடாச்சி
களத்து மேடும் காணமபோச்சி -இந்த 

வரம் வேண்டி பிறக்கலையே
வாழ ஒரு வழி இல்லையே

குடி தண்ணியும் காசாச்சி
குளம் ஏரியெங்கும் வறண்டுபோச்சி

பட்ட படிப்பு படிச்சவனெல்லாம்
கூலி வேல பாத்திடுறான்

பட்டிக்காட்டு சனங்க எல்லாம்
பட்டினியில் சாகுதடி

பணம் பார்க்க பொழப்புமில்ல
பசிய விரட்ட வழியுமில்ல

காப்புக்காஞ்ச கையிருக்கு
கசங்கிப்போன வயறிருக்கு

ஏறிப்போன விலைவாசிய
இறக்கித்தர யாருமில்ல.



Wednesday, 12 June 2013

பாக்காம போறியே !

 
ஆத்தோர நாணலுந்தான்
அவன் வரவை கூறிடுதே

பறிச்சி வைச்ச மொட்டெல்லாம்-திரும்பி
பார்க்கும் முன்னே மலர்ந்திடுதே

முடிஞ்சி வைச்ச கனவினிலே-சொல்ல
முன்னூறு மீதமுண்டு....

மரநிழலும் காத்திருக்கு
மனம் முழுக்க ஆசையிருக்கு

முறைச்சிப் பார்த்து போறவறே
முன்னெதிரே வந்தாயென்ன

முளைப்பாறி கட்டி வச்சேன்-உன்
முன்கோபம் தீர்ந்திடவே

நாலு வார்த்த பேசி போனா-உசுர
நாள பொழுது தாங்கிடுமே

காக்க வச்சி பார்த்திருந்தா-மனசு
காயம் பட்டுப் போகுமய்யா.

சேர்த்தனைச்ச சேறாலே
தேங்கி நிக்கும் நீரய்யா-உனக்கு

பார்த்துவச்ச பொண்ணு இவளை
திரும்பி பார்க்காம போவதேன்யா ?

Monday, 10 June 2013

எதுவது ஏனிது ?

குளிரிது மிளிருது
தளிரது வளருது

மனமது தாவுது
மகிழ்வது தேடுது

நிகழ்வது புதியது
நீந்துது மிதக்குது

சிரிக்குது சிணுங்குது
சிறகின்றி பறக்குது

கனியுது கசியுது
கமழுது மணக்குது

கனவது நினைவது
எதுவது ஏனிது ?

Friday, 7 June 2013

தென்றலோடு சில நிமிடம் !


நாற்றங்காலின் நலம் விசாரித்து
நறுமணத்தின் மேனி முகர்ந்து
வரப்பின் மடியில் இளைப்பாறி
கதிர் நுனியில் கன்னம் வருடி
சேற்றுவயலில் காலூன்றி...
கிணற்றடியில் சித்திரம் தேடி
செல்லும் அந்த தென்றல்...- அதுவும்
சொன்ன சேதி என்ன சொல்..

மாசில்லா காற்று எங்கே
மயக்கும் கிராமத்து இசையும் எங்கே
நஞ்சில்லா உணவும் எங்கே
நாம் புரண்ட ஆற்றுப்படுகை எங்கே

தேன் சுமந்த கிளைகள் எங்கே
தேனாக பாடிய குயிலுமெங்கே
வான் சுமந்த மழையெங்கே
வானம் பாடிகள் எங்கே

கிளைக்கு கிளை தாவிய மந்தி எங்கே
தென்னங்கீற்று வீடுகள் எங்கே
தெருவில் விளையாடிய குழந்தைகள் எங்கே
மஞ்சள் பூசிய மகளிர் எங்கே - மயக்கும்
மல்லிகை பூக்கள் எங்கே...

எங்கே எங்கே எத்தனை கேள்விகள்
இயற்கையை தொலைத்த 
பாவிகள் நாங்கள்
எங்கே சென்று தேடுவோம் 
உன் தேவையை தென்றலே ?

Tuesday, 4 June 2013

செய்யும் தொழிலே தெய்வம் !


சோம்பிக் கிடத்தல் நலமன்றோ
சோகம் பெருகும் தினமன்றோ
செய்யும் தொழிலே தெய்வமென்று
செய்தால் வாராதே இழிவுமின்று

மண் உழுத விவசாயி
மனம் சொல்லும் (அவனே) மண்தாயி.

நூலிழையை சேர்த்து கட்டி
நூற்றிடுவார் தறியில் பூட்டி
மானம் காக்கும் தொழிலதுவும்
மனமுவந்து செய்யின் பலனதுவும்.

உப்பு காரம் சுவை கூட்டி
உண்டு வாழ நாள் கூட்டி
பலசரக்கு விற்கும் வியாபாரி
பார் எங்கும் சிறக்கும் புகழ்பாரி.

வான் தந்த மழையதனை
வளம் சேர்க்கும் நீரதனை
குளம் கிணற்றில் தேக்கிடவே
குடும்பத்துடன் பணி செய்திடவே
ஊற்றெடுக்கும் கிணற்று நீராமே
ஊர் போற்றும் நாள் தோறுமே.

மரத்தை தட்டித் தட்டி தச்சனுமே
மனக்கண் உருவத்தை அக்கணமே
கதவு சன்னல் அழகு வடிவாக
காண்போர் எண்ணம் நிறைவாக.

சிமெண்டு சல்லி செங்கல்லும்
சீராய் கலந்து கையள்ளும்
உயர்ந்து நிற்கும் வீடும் கோபுரமே
உணர்வோர் வாழ்வில் வீசும் சாமரமே.

தண்ணீர் ஊற்றி பிசைந்தெடுத்து
தனியொரு பாண்டம் செய்தெடுத்து
குயனவன் வாழ்வதுவே - மன
குளர்ச்சியடையும் செயலதுவே.

ஆற்றோர கோரையுந்தான்
ஆகிடுதே உறங்க பாயுந்தான்.

உண்டு உறங்கி செய்ய தாராளம்
உன்னத தொழில்கள் ஏராளம்
கண்டு கேட்டு செய்திடவே
கவலை தீரும் உய்திடவே.

உழைப்பீரே வாழ்வது உயரவே
உணர்வீரே உண்மை தெரியவே.

Sunday, 2 June 2013

விழித்திரையில் நூறு கனா !



செவ்விளநி பறிக்கையில
செவ்வந்தி இதழ் விரிக்கையில

ஜன்னலோர மொட்டு ஒன்னு
ஜதிநயத்யோட தயங்கி நின்னு

பாடலொன்னு முனகுதம்மா
பாயும் நதி பாதை விலகுதம்மா

நதியோர நாணலெல்லாம் வாடுதடி
நங்கை முகம் தேடி தினம் பாடுதடி

பாடும் ஊமைக்குரல் கேட்டிருச்சா ?
பாவனைப் பொருள் விளங்கிருச்சா ?

கோலமிடும் பூங்குயிலே பாரேன்
கோடி முறை என் முகத்தை

காத்திருக்கேன் ராப்பகலா
காவலேன்டி நீ வேர்பலாவா ?

விழித்திரையில் பலநூறு கனா
விடியலிங்கே எனக்கு பகல் கனவா .