Sunday, 19 May 2013

அன்பே ஆயுதம் !


சோம்பல் என்ன உடன்பிறப்பா
சோறிடுவார் பார்ப்பர் உனை வெறுப்பா

உழைக்க வேணும் கையாலே
உயர வேண்டும் தொழிலாலே

பண்பாளர் காட்டிய வழியதுவே
பயணம் தொடர்ந்தால் வாராதே பழியதுவே

உனக்கென வகுத்த ஒரு பாதை
ஊர் சொல்லுக்கு கொடுக்காதே காதை

துணிவை மட்டுமே துணையெனக்கொள்
துணிந்து நின்றால் வெற்றி நிச்சயம் செல்

பணம் மட்டுமே வாழ்வல்ல -உன்
பாதையில் ஒழுக்கமிருப்பின் தாழ்வல்ல

அன்பே ஆயுதம் உணர வேண்டும்
அதிலே அகிலத்தை வெல்ல வேண்டும்.

Friday, 17 May 2013

முந்தா நாள் பார்த்த நிலா !


பொட்டுமிட்டு பூவும் வச்சி
புது மஞ்சள் தானும் தொட்டு
கன்னம் வருடப் போறேன்டி
கண்மணியே வாயேன்டி...

மூக்கில்லி ஆட்டமாட -அழகு
மூக்குத்தியாள காணோமடி
முந்தா நாள் பார்த்த நிலா
முகம் காட்ட மறுக்குதடி...

ரெட்ட சடை பின்னலிப்போ
ராக்கனவா தெரியுதடி
தென்னங்கீத்து ஓட்டையில
தேடி நிக்கேன் பிறை நிலவ- அவளோ
தேவதையா குந்திகிட்டு-எனை
தேய வச்சி பார்த்திருக்கா.



Thursday, 16 May 2013

கோடையிலும் வசந்தம் !

ஆத்தங்கர காத்திருக்கு
அரசமர நிழளிருக்கு
அழுக்கெடுக்க போனபுள்ள
அர நாளா காணவில்ல.

அங்கென்ன ஒரு கூட்டம்
நடக்குது பார் கரகாட்டம்
குளிக்க வந்த கோமணான்டி
குரங்காட்டம் மரக்கிளையில்
ஆடு மேய்க்க வந்த கூட்டம்
அரை வட்டம் போட்டு நிக்க...

சோடி சேர்ந்த புது ஜோடி
சோழியாட்டம் கண்ணுருட்டி.
காவக்காரன் கொம்போடு
காடு கறவு வம்போடு
அந்தோ போகும் மாட்டைப்பிடி
அரைகூவல் கேட்டுடிச்சே...
கோடை வெயில் தாங்கலியே
இந்த பய புள்ளைங்க குசும்பு ஓயலியே.


Wednesday, 15 May 2013

எண்ணங்களோடு !


சப்தங்களை புறந்தள்ளி
சாக்கடைகளை தாண்டி
மன உளைச்சலுக்கு நடுவே
மயான அமைதி தேடும் மனம்.

அகம் தொடும் நிகழ்வுகள்
அங்காடிப் பொருளாய் காட்சிகள்
அங்குமிங்குமாய் சேமித்த வார்த்தைகள் 
தேர் இழுக்கும் வடமாய்...

எதையும் தள்ளிடவும் இயலாது
கோர்த்தனைத்தையும் சரமாக்கவும் முடியாது
உண்மைக்கென சிலவும்
தியாகமாய் பலவும்
சில பல பெருகி சிதறல்களாய்

கம்பீரமாய் விரல் சிறைக்குள்
எழுத்தாணி எழுந்து நிற்கிறது
எண்ணங்களுக்குள் தள்ளாடியபடி நான்.


Tuesday, 14 May 2013

உன் நினைவின்றி !


நீரில்லா புவியில்
நினைவில்லா உடலில்
கையால் நடந்து
காலால் உண்டு
சுவாசமின்றி வாழ்வது
எப்படி சாத்தியமோ
அவ்விதம் சாத்தியமானது
உன் நினைவின்றி வாழ்வதும்
உன்னிடம் பேசாமல் இருப்பதும்.


Monday, 13 May 2013

துளித் துளியாய் !



வலிய சென்று வாங்கியது
வலிக்கும் நினைவுகள்.
பட்ட மனதை தேற்றும் விந்தை
கற்றிருப்பின் வாராயோ...?

சூரிய முத்தத்திற்கு
காத்திருக்கும் பனித்துளியாக  நான்.

உன் வசம்
வார்த்தையும் தன்னை 
இழக்கிறது நீயே பேசு.

கெஞ்சவும் கொஞ்சவும்
உரிமையுள்ளவனே
-- 
கதைக்கச் சொல்கிறாய்
எனக்கு கவிதையைத் தவிர
ஏதும் தெரியாதே.

நமக்கான நெருக்கத்தை
உணர வேண்டுமாம் பிரிவும்.
அதன் ஆசையும் நிறைவேற்ற
நான் இருக்கிறேன்...

Saturday, 4 May 2013

மௌன வேலி..!


நிலவும் ...நீயும்
என் அருகருகே தான்
இருக்கிறீர்கள்...
மன அசைவுகளை
உணராது மௌன வேலியிட்டு.

உற்று நோக்கியபடியே
உறங்கிப்போகிறேன்...
மூடிய இதழ் (இமை) 
வருட வரும்...
பட்டாம்பூச்சியாகிறாய்.

இமைக்குள் இருத்திக்கொள்ள
இதழ் விரிக்கிறேன்.
காற்றசைவுக்கே
காத்தாடியாய் பறக்கும் நீயோ
இமை அசைவிற்கு நிற்பாயா..?
பறந்தோடிப் போகிறாய்
பூத்திருக்கும் மலராகிறேன் நானும்.