Monday, 11 March 2013
உன்னுறவு இனியும் வேண்டாமெனக்கு!
இதயத்தை கிழித்தெறிந்து
இங்குமங்கும் அலைகின்றேன்
சிதறிக்கிடக்கும் உன் முகத்தை
கண்ணீரில் சிலையாய் வடிக்கின்றேன்.
வெட்டி ஒட்டி பூசினாலும்
அழுதழுது தேற்றினாலும்
ஒட்டாத உன் முகத்தை
என்னில் ஏந்தித் திரிகின்றேன்.
காண்பவர் நகைத்து நிற்க
காணாதவரும் பகைத்துப் பேச
கொஞ்சியவனை கோபமுறச்செய்து
மிஞ்சியவரை மிரள வைத்து
ஏ... கோபமே
நீ சிதறியதே போதும்
மீண்டும் என்னில் ...
சேர்ந்து என்னெண்ணமதை
கங்கையில் கரைத்துவிடாதே.
காயங்களின் சாபங்கள்போதும்
காயதுகனிந்து விதையது
மண்வீழ்ந்து தளிர்குமுன்
மண்ணாகிப்போவதோ நினைவு
கோபமே எனையாழும் சாபமே
போ போய்விடு உன்னுறவு
இனியும் வேண்டாமெனக்கு!
Saturday, 9 March 2013
இருப்பது போதும் !
பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி
சிறகொண்ணுத் தருவாயா?
உன்னபோல நானும்பறக்க
படிச்சித்தான் கொடுப்பாயா?
அணிலண்ணா அணிலண்ணா
உனக்கெதுக்கு இந்தஆசை
அற்பஆயுள் வாழ்வெனக்கு
அறிந்துத்தான் கேட்டாயா?
கழுகங்கே காத்திருக்கு
மரமேறமுடியலையே
கூட்டுக்குள்ள எத்தனை
நாள் பட்டினியா இருப்பது
சிறகிருந்தா பறந்தோடி
கொய்யாப்பழம் தின்னலாம்!
ஆண்டவனே ஆண்டவனே
அண்ணாவுக்குத் தோகைகொடு
அதுபறந்துப் பொழைக்கட்டும்
பசியாற உண்ணக்கொடு!
கொடுத்தானே ஆண்டவனும்
வௌவாலா வேஷந்தான்
எடுத்தானே பார்வைமட்டும்
தலைகீழாய் தொங்கியதேயதுவும்
உருமாறிப்போனதுவே மனித
ஜாதியாய்ப் பாதியானதுவே!
Thursday, 7 March 2013
ஆகாயம் தொடும் முயற்சி !
போராட்டம் இல்லையெனில்-மன
தேரோட்டம் அழகில்லை
நன்று மட்டும் வாழ்வெனில்
நஞ்சறிய வாய்ப்பில்லை.
இன்பமும் வாழ்வு தான்
துன்பமும் அதன் பகுதிதான்
பிள்ளைத் தொல்லை தாய்க்கழகு
மண்ணின் மாண்பு சேய்க்கழகு
விளைந்த கதிர் தலைக்குனியும்
அதற்கது மேன்மையே.
சூறாவளியாய் சுழன்றாடும்
காட்டாற்று வெள்ள வாழ்வும்
மீனுக்கது விளையாட்டே.
முள்ளின் மீது ரோஜா வாழும்
அதனுள்ளே மணம் வாழும்
முள்ளென்பது வேலியே.
சின்னச்சின்னதாய் கூடுகட்டி
அழகாய் அதில் முட்டையிட்டு
மகவு வளர வாழ்ந்திருக்கும்
குருவியின் வாழ்வும் தியாகமே.
ஒன்றிலொன்றாய் கலப்பதும்
ஒன்றிலொன்று முளைப்பதும்
முளைத்தது வளர்வதும்
வளர்ந்தது வீழ்வதும்
யார் கையில் அறியாமல்
பதுமைகளாய் நாமுமே.
ஆனாலும் விடமாட்டோம்
ஆகாயம் தொடும் முயற்சி
நடக்கட்டும் நாடகம்
நடப்பதும் நன்மைக்கே.
Tuesday, 5 March 2013
மல்லு கட்ட அவளுமில்ல மனக்குறைய எங்க சொல்ல !'
ஏன்டி .....துலுக்காணம்
நான் போனேன் மரக்காணம்
என் வூட்டு மலைச்சிருக்கி
உலுக்காத மரம் உலுக்கி
வாங்கி வந்தா சீர்சனத்தி....
ஆத்துப்பக்கம் போகவேணாம்
அதுவாவே தொவச்செடுக்கும்
அழகான செவுர் ஒடச்சி
அதுக்கு வச்சா ஒரு பைப்பு....
கொளத்து மீன புடிச்சி வந்து
கொழம்பு வைக்க அம்மி வேணாம்
அரைச்செடுக்க மிசினிருக்காம்
அதுக்கு நாலு கிண்ணமிருக்காம்...
பச்ச மிளகாய் கடிச்சி தின்ன
பழங்கஞ்சி அலுத்திருச்சாம்
இட்லி தோசை இடியாப்பம்
அர அடுக்கு கிண்ணத்தில
குருக்கும் நெடுக்கும் கல்லுரெண்டு
ஓடி ஓடி மாவரைக்க
அதுவா கவுத்து அரைக்குமாமே
அனியாயத்த கேளு புள்ள...
தண்ணி இரைக்க கிணறுமில்ல
தாகம் தீர்க்க இளனியில்ல
இளைப்பாற நிழலுமில்ல
என்னா பொழப்பு சொல்லு புள்ள...
ஆடு மாடா சுத்தி புட்டு
நடு நிசி ஊடு வந்து
உறங்கி யெழுந்து போறா அவளும்
விருந்தாளி முகமும் பார்க்கவில்லை
அவளுக்கு.....
புருசன் முகமாவது நினைவிருக்குமா ?
சொல்லு புள்ள....
குனிந்து நிமிர்ந்து வேலசெஞ்சி
குழாய் தண்ணி எடுத்து வந்து
குழம்பு சோறு ஆக்கி வச்சி
கண்டாங்கி சேல கட்டி
கட்டு சோறு கட்டிகிட்டு
கழனி பக்கம் நாம போன
கதைய சொல்ல அவளுமில்ல
காற்றும் வீசவில்ல
என் கொரைய எங்க சொல்ல....
கேக்க கொக்குமட்டும்
உச்சிவெயிலில் ஒத்தக்காலில்
என்னப்போல அதுவுமிங்கே!
Monday, 4 March 2013
அனுபவப் பாடம் !
கடலோரம் கடலோரம்
காத்திருக்கேன் படகோரம்
அலையோடும் வேகமென்ன
அது உணர்த்தும் பாடமென்ன
நண்டோடி வளைதனைத் தேட
நாமோடி மனசாந்தி தேட
மணல் வீட்டின் அழகைப்பாரு
மலராய் சிரிக்கும் மனமே தேரு
வலை வீசி வாழ்வைத் தேடி
வாழ்விழந்தோர் விந்தை கோடி
நீர் குடித்த கடலம்மா
நீந்தப் பழகும் அலையம்மா
காற்றாடுது மனமம்மா- அதில்
கானலாய் எண்ணமம்மா
வார்தையெலாம் உதிருதம்மா அதுவே
மணல் விரிப்பாய் கிடக்குதம்மா
எழுதுகிறேன் கவிதையம்மா அதை
அலையழித்துச் சிரிக்குதம்மா
அனுபவங்கள் பாடமம்மா நாம்
காலத்தின் கைதியம்மா.
வருவார் போவார் வாழ்வம்மா
உணர்த்தும் பயணமே வழியம்மா
முள்ளும் மலரும் இருக்குமம்மா
முயற்சி மட்டுமே நமதம்மா.
Saturday, 2 March 2013
விளைச்சல் யாவும் பதராக !
பொன்னிற பூமியாய்க் காலை
மஞ்சளாடையணிந்து சோலை
சென்னிற மேனியோடு வானம்
பனித்துளி தாங்கி புல்வெளி.
மேகவெண்மேனியுள் மலை
காலைக் கதிரவன் பாட்டு
கொஞ்சும் கிளியின் ராகம்
பச்சைப் பரப்பாய் வயல்கள்.
பட்டுடுத்தியே சிட்டாய்சிட்டு
பஞ்சமெங்கே காணோம்
இயற்கையிலில்லைத் தவறு!
அழகழகாய்த் தோரணம்
அன்னத்தின் நீச்சல் சீதனம்
கள்ளமில்லாப் பார்வைகள்
கபடுகளறியா உறவுகள்!
அறிவு வளர்தோம் எதற்காக?
ஆஸ்தி தேடினோம் நமக்காக!
விதைகளில் கலந்த தீமையாலே
விளைச்சல் யாவும் பதராக!
பகிர்வும் நமக்குத் தூரமாய்
பண்பு மனதில் பாரமாய்!
தொலைத்து தொலைந்தோம்
தொலைந்து அழுகிறோம்!
எதற்காக இந்த ஓட்டங்கள்
யாருக்காயிந்த தேட்டங்கள்!
மண்ணுக்குரிமை எல்லாமும்
பெண் ஆண் பேதங்களில்லை
வந்தோம் ஆடையணியாமல்
போவோம் அதை இங்கெறிந்தே!
மஞ்சளாடையணிந்து சோலை
சென்னிற மேனியோடு வானம்
பனித்துளி தாங்கி புல்வெளி.
மேகவெண்மேனியுள் மலை
காலைக் கதிரவன் பாட்டு
கொஞ்சும் கிளியின் ராகம்
பச்சைப் பரப்பாய் வயல்கள்.
பட்டுடுத்தியே சிட்டாய்சிட்டு
பஞ்சமெங்கே காணோம்
இயற்கையிலில்லைத் தவறு!
அழகழகாய்த் தோரணம்
அன்னத்தின் நீச்சல் சீதனம்
கள்ளமில்லாப் பார்வைகள்
கபடுகளறியா உறவுகள்!
அறிவு வளர்தோம் எதற்காக?
ஆஸ்தி தேடினோம் நமக்காக!
விதைகளில் கலந்த தீமையாலே
விளைச்சல் யாவும் பதராக!
பகிர்வும் நமக்குத் தூரமாய்
பண்பு மனதில் பாரமாய்!
தொலைத்து தொலைந்தோம்
தொலைந்து அழுகிறோம்!
எதற்காக இந்த ஓட்டங்கள்
யாருக்காயிந்த தேட்டங்கள்!
மண்ணுக்குரிமை எல்லாமும்
பெண் ஆண் பேதங்களில்லை
வந்தோம் ஆடையணியாமல்
போவோம் அதை இங்கெறிந்தே!
Subscribe to:
Posts (Atom)

.jpg)


