கரைதேடும் வாழ்க்கையிலிங்கே
கரைந்தோடும் மேகமாய்
என்னினம் பெண்ணினம் !
காயங்கள் மட்டும்
மீதமாய்ச் சினேகிதமாய் !
விதையொன்று முளைக்கையிலே
சுடுநீர் ஊற்றியழிக்கும்
வினைகளே அதிகம் புவியினிலே
அதைமீறிக் கொடியானால்
கிள்ளியெறியும் வீணர்கூட்டம்.
பாலையில் மலர் பூப்பது போல்
சாலையோரத்தில் சில மணப்பூக்கள்
ஊர்திகள் மட்டுமின்றி மனித
எச்சமும் இவர்மீதுத் தூற்றலாய்.
விடிவு வருமென்று காத்திருந்து முடிவில்
விதியிதுவென்று நொந்து மாண்டோர் ஏராளம்.
சதிவெல்லக் கூடிடவும் மனதில்
உறுதியில்லா மென் இதழாய்
பொங்கி எழச் சொல்லவில்லை
உரிமை நமக்குண்டு.
கண்ணீராய்ப் பெண் வாழ்வுக்
கரைவதில் நியாயமில்லை
கடலளவு சோகத்தை
கையளவாய் ஆக்கிடவே.
நீந்தக் கற்றல் நன்று அடிமை
வாழ்வெதற்கு நாமும் மானிடரே
கனிகொடுக்கும் மரத்துக்கு
ஆணிவேர் நாமன்றோ ?
தாக்கங்கள் அத்தனையும்
சமூக அவலங்களாய்
ஆக்கங்களில் நாமிலையோ
பின்னேன் சேதங்கள்.
சொந்தக் காலில் நிற்கின்ற
நிலைவர உழைத்திடுவோம்.
நினைவும் கனவும் பொதுவுடமைப்
புதிய வேதம் செய்வோம்
எத்தனை நாள் மதிக்கின்ற
படிகல்லாய் வாழ்ந்திருக்க
சிலையல்ல நாமுலகில்
உயிருள்ளச் சித்திரங்கள்.
போன காலம் போகட்டும்
வருங்காலம் நமதாகட்டும்
வானில் பறக்க ஆசையில்லை
வாழ்வில் நாமும் வாசமுல்லை
உணர வேண்டும் இல்லை
உணர்த்த வேண்டும்.
பொய்யா முகம் நம்மிலுண்டு
பொய் முகம் கண்டு ஓடவேண்டாம்.
பேதைப் பெண்ணே எழுந்திடுப்
புதிய பாதையிலே பயணிப்போம்
வருவதை வென்றிடுவோம்
காலம் தேய்ந்து போனாலும்
காவியமாய் நாம் வாழ
புறப்படுவோம் வென்றிடுவோம்.
தமிழ்த் தாயின் துணையோடு.





