Sunday, 10 June 2012

பூவிற்றகாசும் மணமாயில்லை!

 
அருமைத் தாய்மடிதன்னில்,
அழகாய்ப் பாத்தியமைத்து,
சீரான இடைவெளியில்,
பதிகளை நட்டுவைத்து,
நீரூற்றி உயிர் கொடுத்து,
நிலமகளின் கருவறையில்,
வளர்ந்த பூங்கொடியை,
உரமிட்டு பார்த்திருந்து,
பூ பூக்க காத்திருந்தான்.
காவல்நாய் வடிவெடுத்து.                  

வேனிற்காலம் விடைபெற,
தென்றல்வந்து தாலாட்ட,
மொட்டினங்கள் தலைதூக்கி,
பனிமழையில் குளித்தகாலை,
வானத்து விண்மீன் கூட்டம்,
வாழ்த்துப் பாடிச்செல்ல,
வான்மதி மென் ஒளிபோல்,
சிந்தையில் பூங்கவிதைதந்த,
ரோஜா மலர்க் கூட்டம்,
கூடியாடிமயிலாய் நடனமட,
திருவிழாவந்த காளைகள் போல்,
வண்டினங்கள் வந்து கூட,
மணம் பரப்பி நின்றவரை,
மகிழ்ச்சியோடு அவன் பார்த்து,
குதூகலித்த அந்த நேரத்தில்,
வந்தனன்காண் எஜமானன்,
பூப்பறிக்க ஆளுடனே!
வியாபாரிக் கருணையின்றி,
பூவெல்லாம் பறித்தெடுக்க,
பரிதவித்த காவல் மனம்,
பார்வையாளன் ஆனதுவே!

கூடை கூடையாய் பூக்கள்,
சாரைசாரையாய் வண்டிகளில்,
தாரைதாரையாய் கண்ணீரோடு,
பனிமலரகள் ஊர்கோலமாய்,
அரவையிடம் நோக்கிச் செல்ல,
எஜமானன் விலைத்தொகையை,
வாங்கிமடியிலே கட்டிவிட்டு,
எருமைமாதிரி நிற்காதே,
போய் வேலையைப்பார் விரட்ட,
எதிர்பார்ப்பு ஏதுமன்றி,
கடமை செய்திட முனைந்தானே.
நாய்விற்ற காசு குரைப்பதில்லை போல்,
பூவிற்றகாசும் மணமாயில்லை-அவனுக்கு!

Friday, 8 June 2012

புரிதலின் வேகம் !


சோர்ந்த முகத்தோடும் சொப்பனங்கள் நிறைந்த கண்களோடும் இரண்டு கதவின் இடைவெளியில் கால் வைத்த படி கதவுகளின் இடைவெளியைக் கூட நிரந்தரமாக்கி ரசிப்பதில் சொற்ப மகிழ்ச்சி பெற்றிருந்தாள் சுதா .

எதிலும் விரக்தி! எல்லோர் மீதும் கோபம்! எல்லாம்  அம்மா செய்த வேலை... கல்யாணம் வேண்டாம் என்றவளையும் அழுதே சாதித்து சந்தேகப் பேர்வழி ஒருவன் தலையில் கட்டி இன்று வாழா வெட்டியாக வந்து அமர்ந்திருக்கிறேனே என்று தனக்குள்ளே வெந்து நொந்து கொண்டாள்.

மின்சாரம் இல்லாத வேளையிலேயே இப்படி மிரட்டும் எண்ணங்கள் மின்னலென வந்து போகும். மின்சாரத்தில் சொர்க்கத்தையே கண்டது போல் மகிழ்ந்திருந்தாள். அதற்குக் காரணமும் இருந்தது .

கொஞ்ச நாட்களுக்கு முன்பு கணினியில் பழக்கமான நட்பே காரணம். முதலில் எதையும் சொல்லக்கூடாது என்று இருந்தவளே கரைப்பார் கரைக்க கல்லும் தேயும் என்பது போல அவன் அன்பில் கரைத்துக்கொண்டிருந்தாள் சோகம் முழுமையும் .

கதைப்பதில் உண்டான ஆனந்தம் அவளிடம் மாற்றங்கள் பலவற்றை உண்டாக்கியது உண்மையே . அவனது அன்பான பேச்சும், அரவணைப்பாய் வரும் வார்த்தைகளும், அனுசரித்துப் போகும் விதமும் முழுவதுமாய் அவனது நினைவுகளிலேயே கட்டுண்டு இருந்தாள்.

கனவுக் காதலன் போலும் அவன் கணினிக் காதலன்! அவன் வரவிற்காய் ஏங்க ஆரம்பித்தாள். வருகை தாமதமானால் வம்பிழுக்கவும் செய்தாள். ஒரு நாள் விடுப்பு என்றாலும் உலகமே இருண்டு விட்டதாய் உணர்ந்தாள். பசி , உறக்கம் எல்லாம் மறந்து கணினியே கதி என்றிந்தாள்.

மின்விசிறி சுழல ஆரம்பித்ததும் மின்னலென ஓடி கணினி முன்பு அமர்ந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அலுவலக வேலையாக அன்பு அவன் ஊருக்கு வருவதாகவும் முதன் முறையாக அவளை நேரில் பார்க்க வருவதாகவும் பேசிக் கொண்டார்கள் .

அவள் கால்கள் தரையிலே படாமல் மிதப்பது போலவே உணர்ந்தாள். கண்ணாடி முன்பே நேரம் கழித்தாள். அலங்காரத்திற்கே  புதுசாய் அறிமுகமாகி இருந்தாள். அன்றேனும் மலர்ந்த மலராய்  அழகாய் அள்ளி முடிந்த கூந்தலும் அதில் சொருகிய ஒற்றை ரோஜாவும் அவள் அழகை இன்னும் கொஞ்சம் எடுப்பாக்கித் தான் காட்டின.

பெரும் இரைச்சலுக்கு நடுவே பேருந்து நிலையத்தில் காத்திருந்தாள் சுதா.  இருவரும் பார்த்தது இல்லை எப்படி அறிமுகம் செய்து கொள்வது, என்ன பேசுவது இப்படி சிந்தித்துக் கொண்டிருந்த வேளை கையில் இருந்த அலை பேசி ‘கண்ணா உனைத் தேடுகிறேன்’ என்றபடி சிணுங்கியது. முகத்தில் புன்முறுவல் ஒட்டிக்கொள்ள ஆன் செய்து பேசியவளின் பின்புறமிருந்து ஒலித்தது ஓர் குரல்.

பழகிய குரல் போலும் உள்ளதே என சற்றே நிதானித்து திரும்பிய அவளுக்கு படபடவென இதயம் அடித்துக்கொள்ள அவமானத்தால் வெட்கித் தலைகுனிந்தாள். உள்ளுக்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் துளைத்தன.

யாரை வேண்டாமென வெறுத்து ஒதுக்கி ஓடி வந்தாளோ... அந்த உருவமே அவள் முன்பு சிலையாய் நின்றது!

Thursday, 7 June 2012

அழிவின் ஆரம்பம் !


சினத்தை வெளிக்காட்ட
அழுகையாய் கோபத்தை
வெளிக்காட்டுகிறது குழந்தையும் !
சொல் பேச்சு கேளாமையால்
அடிப்பதாய் மிரட்டும்
அன்னையும்  தந்தையும் !
அறிவைப் புகட்டும் ஆசானும்
குட்டி உணர்த்தும் நற்குணப் பண்புகளை !
அன்பின் மிகுதியால்
அடித்து அணைக்கும் தோழனும் !
உறவின் மிகுதியால்
உரக்க குரல் கொடுக்கும் மனைவியும் !
கோபமெனும் ஓர் குணமே
இல்லா மானிடரை இங்கே காணோம்
இருப்பவரிடம் ஓர் அங்கமாகவும்
இல்லாதவனிடம் பருவ மாற்றத்தை போலும்
பாவங்களும் சாபங்களும்,
கோபத்தின் பிள்ளைகளாய்.
பாரங்களும் சோகங்களும்,
தொடரும் தொடர்கதையாய்.
அன்பால் வரும் கோபம்,
வளர வழி காட்டும்.
ஆணவத்தில் விளையும் கோபம்,
அழிவின் ஆரம்பமாய்.
நம் தவறை நாமறிந்து நம்மீது,
நாம்கொளும் கோபம்.
நம்மை சீரமைக்கும் ஆயுதமாய்.
கோபமில்லாமல் அன்பில்லை,
கோபம் மட்டும் அன்புமில்லை.

Wednesday, 6 June 2012

உடலூனம் தவறில்லை!


பார்வையற்றோர் பார்வையிலே,
பாட்டின் உருவில் காட்சிகள்.
மொழியிழந்தோர் கண்களில்,
காட்சியெல்லாம் பாடல்கள்.
நடைமெலிந்தோர் கனவுகளில்,
ஓட்டங்கள்வெறும் நிழல்களாய்,
மனம் உடைந்த மனிதனுக்கோ,
வாழ்க்கையே பெரும்பேரிடராய்!

விதைத்தவர்க்கிது விளையாட்டு,
அறுப்பவனும் கவலைப்படுவதில்லை,
முளைத்த நாள் முதலாய் இவர்கள்,
இருளின் உறவுகளாய் புவியில்,
வாழ்ந்தும் வாழா தேரைகளாய்!

தென்றல் இவரைத் தீண்டுவதில்லை,
புயலிவரை விட்டு நீங்குவதுமில்லை,
களிமண்ணில் செய்த பானைகளாய்,
அகிலத்தில் வெந்துநொந்து மாய்கின்ற,
இவர்செய்த பாவமென்ன;முன்னோர்,
செய்த தவறென்றுரைத்தலே பாவம்!
படைத்தவன் படைப்பில் இவரெல்லாம்,
உள்ளவர்கு உதாரணம் என்றாயின்,
இறைபடைப்பே தவறென்ற கொள்கை,
சரியாயென ஞானம் உரைக்கிறது.
மனமா மதியா வாழ்வைஎதுவெல்லும்,
அன்புவெனறால் அது நன்றென்பேன்!

ஊனப்பார்வைகள் அழிந்தொழிந்தால்,
ஊனமென்பது உறவுககொன்றுமில்லை,
ஊரையும் உறவையும் ஏய்க்கின்ற,
ஊனமுற்ற பொய் எண்ணங்களே,
ஊமையாய்ப் பதிவிருந்துலகில்,
ஊழிகாலமும் தீமைசெய்யும்.

உடலூனம்  தவறில்லை,
உள்ளஊனம் பெருங்கேடு!!

Tuesday, 5 June 2012

அன்பொன்றே கோவில் !


தேய்ந்துபோகும் நிலவாய்க் காதல்,
வாழ்வதில் அர்த்தமில்லை.
மண்ணில் சாய்ந்த மரமாய் மனங்கள்,
மரிப்பதில் மாட்சியில்லை.
கண்ணில் விரியும் காட்சிகள்யாவும்,
சொந்தங்கள் ஆவதில்லை.
கனவில்வந்த நிழல்பட வாழ்க்கை,
உண்மையின் பிம்பமில்லை.
கூடநடக்கும் நிழலும் கூடநம்முடன்,
இரவில் வருவதில்லை.
உறவும் பிரிவும் ஒன்றாய் இணைந்தால்,
பயணத்தில் பொருளில்லை.
பாசமும் கபடமும் கைகோர்த்து வாழ்தல்,
உண்மை வாழ்க்கையில்லை.
கொண்டுவந்ததும் கொண்டுபோவதும்,
பாவத்தின் சுவடுகளே.
விட்டுச் செல்வதும் கட்டி வைப்பதும்,
நமதில்லை சொப்பனங்களே .
விலையின்றி கொண்டதை விலைபேசி,
வலைவீசும் ஆசைகளே.
நமைக்கொல்லும் நாளை அறிந்தவர்யாரும்,
வீழார் அவனியிலே.
இருப்பதைப் பகிர்ந்து இல்லார்க்கு கொடுப்பார்,
இதயம் உள்ளவரே.
நேற்றும் நமதில்லை இன்றிலும் நாமில்லை,
நாளையும் கனவுதானே.
காயங்கள்யாவும் நாம்செய்த பாவத்தின்
பயனால் முளைத்தவையே.
காலங்களோடு போட்டி போட்டு ஓடும்,
ஓட்டத்தில் பயனிலையே.
ஒருவர்வாழ்வில் மற்றவர் ஏற்றும் தீபம்,
இதயஅன்பொன்றே.
அடுத்தவர் உயர்வில் அகம் மகிழும் மனமே,
கோவில் சொல்கின்றேன்.
தனைஅழித்து தன்குலம் வளர்த்தும்
 நண்டினம், வாழ்வதுபோல்.
அன்புக்காய் தனையே கொடுக்கின்ற வாழ்வே,
கவிதையில் தேனாகும்.
அவர்பாதம் பணிந்து அடிமையாய்வாழ நானும்.
வரமே வேண்டுகிறேன்!

Monday, 4 June 2012

சிறகுகள் பறக்கத்தான்...!


நம்மால் முடியுமென்பதும் முடியாதென்பதுவும்,
நாமறியா பகல் கனவென்ற நம்பிக்கையே.
முடிந்ததெல்லாம் நன்மையாய் முடியவில்லை,
முடியாமல் போனதெல்லாம் தீதாயும் ஆகவில்லை.

உறவுகள் பிரிவெழுதின் நம்பிக்கை துரோகமென்போம்,
காலங்கள் கடந்துபோனால் இயற்கையதுவிதிவெனபோம்.
கைவிரல் ஐந்தும் சேர்ந்திருந்தால் பிரிக்க வழி பார்ப்போம்,
தனித்தனியாய் இணைந்திருந்தால் அழகு என்றுரைப்போம்.

வயதில்லா மழலையின் வார்த்தை தேனிசையாய்,
வாலிபத்தின் மொழியெல்லாம் மயக்கும் கனிமொழியாய்,
வசந்தகால நினைவெல்லாம் நிகழ்கால தாலாட்டாய்,
நாளைய வாழ்வெல்லாம் இன்றய கனவுகளாய்!

கணக்கில் பிழையேதும் இருப்பதாயத் தெரியவில்லை,
நம்கணக்கு சரியில்லை இதுவே யதார்த்தமென்று,
அறிந்தவன் சிரித்துக் கொடுத்து வாழ்கின்றான்,
புரியாதோர் புன்னகைத் தொலைத்து மாய்கின்றார்!

சிறகுகள் பறக்கத்தான் காற்றுள்ள எல்கைவரை,
சிந்தனையும் அப்படித்தான் நினைவுள்ள காலம்வரை,
அழுகையும் சிரிப்பும் யார்சொல்லி வந்ததென,
அறிந்தவர் யாருமில்லை நினைப்பதில் லாபமில்லை.

வாழ்கின்ற காலங்கள் கடுகளவு கூட இல்லை,
வானத்தில் பறந்தாலும் நிம்மதி இல்லையெனில்,
பிறந்ததில் பயனில்லை வாழ்விலும் பொருளில்லை,
அனைத்துமே அன்புதான் அதன்வழி நிம்மதியே,
ஆதலால் அன்பு செய்து மனங்கள் வென்றிடுவோம்!
படம் உதவி கூகிள் நன்றி கூகுளுக்கு .

Sunday, 3 June 2012

ஊஞ்சலாடும் நினைவுகள் ...!


ண்ணாடியில் முகம் பார்க்கும் போதெல்லாம் இந்த முகத்தைத்தானே  வேண்டாம் என்று விரட்டியடித்தாள் ஒருத்தி .. மீண்டும் நினைவுகள் விரட்ட... நிமிர்ந்து சட்டை பொத்தானை சரி செய்தபடி நகர்ந்தான் ராகவன் .

"தம்பி மிஷினுக்கு போகணும் கொஞ்சம் ராஜாவை ஸ்கூலில் இருந்து கூட்டிட்டு வரீங்களா?" என்றாள் அண்ணி. ஒன்றும் சொல்ல முடியாதவனாய் 'ம்' என்றபடி வாசலில் நின்ற வண்டியை நோக்கி நகர்ந்தான்.

ணி அடித்து பிள்ளைகள் ஓடி வரத்தொடங்கினர் . முகப்பில் ஆசிரியைகள் நின்று முகம் பார்த்து ஒவ்வொருவராக அனுப்பிக் கொண்டிருந்தனர். ராஜாவைத் தேடிக்கொண்டிருந்தவனின் கண்களில் என்ன ஒரு ரம்மியமான காட்சி!

அவளா ...? அவளே தான்! இங்கு எப்படி..? ஆயிரம் கேள்விகளோடு அவளை நெருங்கினான்.

"நீங்க..?" என்ற குரலுக்கு சுமதி நிமிர்ந்து பார்த்து விட்டு சிலையாய் நின்றாள். "எங்க அப்பா மிஸ்" என்று பின்னாலிருந்து வந்த குரல் கேட்டு திடுக்கிட்டாள். ராஜா அவள் பதிலுக்கு காத்திராமல் ராகவனின் விரல் பிடித்து. "போலாம் பா" என்றான்.

எல்லோருக்கும் உண்டான இயல்பே அவனையும் பிடித்துக் கொள்ள, அவளைப் பார்த்த உடனே அவன் தேடல் தொடங்கியது. எதிர்பார்த்த மாதிரி கழுத்தில் தாலியும் இல்லை , காலில் மெட்டியும் இல்லை. 'சொல்ல முடியாது மதம் மாறி இருந்தாலும் இருப்பாள்! எக்கேடோ கேட்டுப் போகட்டும்'என்று நினைத்தபடி நகர்ந்தான்.

சுமதி சிலையாய் நின்றிருந்தவள் சிதைந்தே போனாள். 'எப்படி ஓடி ஓடி காதலித்தான்? அதற்குள் மறந்து விட்டானா? ஒரு குழந்தைக்கு தகப்பன் வேறு . எல்லாவற்றுக்கும நான் தானே காரணம்... வாசல் தேடி வந்த வசந்த வாழ்வை தம்பி, தங்கைகள் என்று காரணம் காட்டி விரட்டி அடித்த பாவியானேன்.' தன்னைத்தானே நொந்தபடி நின்றவளை சக தோழி தோளில் கை வைத்து, "வாடி போலாம்" என நகர்த்தவே... ஜடமாய் நகர்ந்தாள்.

'அவள் என்ன நினைத்திருப்பாள்...? எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றா? ராஜா வேறு 'அப்பா' என்று சொன்னானே... சரி. அவள் என்ன நினைத்தால் எனக்கென்ன... எப்படியோ நினைத்து விட்டு போகட்டும்.' என்று சலித்துக் கொண்டான் மனதுக்குள்.

நிகழ்வுகள் தான் நகர்த்தின அவனை! நினைவென்னவோ அவளைச் சுற்றியே இருந்தது. "நான் அம்மா பார்க்கிற மாப்பிள்ளையைத்தான் கட்டிப்பேன்" என்று முகத்தில் அடித்தாற்  போல் சொல்லி விட்டுச் சென்றாளே... 'சீ.. என்ன இது அவளை ஏன் நான் நினைக்கிறேன்?' என நொந்து கொண்டாலும் மனம் அவளையே செக்குமாடாய் சுற்றியது .

ருவரின் நினைவுகளும் சந்தித்ததில் உறக்கத்திற்கு விடுமுறை.

நிலவை அனுப்பிவிட்டு சூரியனை எதிர்பார்த்து காத்திருந்தாள் சுமதி. பள்ளிக்கு வந்ததும் ராஜாவைத் தேடினால் இருக்கைஎல்லாம் காலியாக இருந்தன. இன்னும் நேரம் ஆகவில்லையோ என அமர்ந்தால்... மலர் தேடும் வண்டாக மதி தேடி விரைந்தன சில்வண்டுகள் கூட்டம்.

ராஜாவைப் பார்த்ததும் மலர்ந்தாள். "ராஜா, யாருடா நேத்து உன்னை அழைக்க வந்தது?" என்றாள். "எங்க சித்தப்பா மிஸ்!" என்று நகர்ந்தான். அவள் மனதில் உள்ளூர சந்தோஷம் ஒட்டிக்கொண்டது. கூடவே ஒரு குற்ற உணர்ச்சியும் தொற்றிக்கொண்டது . குழந்தையிடம் விசாரணை தேவை இல்லையென நகர்ந்தாள். சின்னக் குழந்தை போல அன்றும் ராஜாவை அழைக்க ராகவன் வருவானோ என்று ஏக்கத்துடன் காத்திருந்தாள் சுமதி.

மணி அடித்தது தான் தாமதம்... பார்வை அவனை தேட ஆரம்பித்தது. ராஜாவின் அம்மாவே வந்தாள் அன்று. எதையும் கேட்கத் துணியாத மனது! "ஒரு வேளை அவருக்குத் திருமணம் ஆகியிருக்குமோ?" என அஞ்சினாள்.

னத்துப்போன நெஞ்சோடு இறுதியாய் சந்தித்த பூங்காவில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு போக எண்ணி நகர்ந்தாள். பசும் புல்தரை, வண்ணமாய் சிரித்த பூக்கள், ஆங்காங்கே அமர்ந்திருந்த காதல் ஜோடிகளையும் கடந்து அவர்கள் சந்தித்த இடத்தில அமர்ந்தாள். அவளின் வாழ்க்கையில் வசந்தம் வருமா... இல்லை, இழந்தது இழந்தது தானா.... மனம் கேள்விகளால் நிரம்பி அலைபாய்ந்து கொண்டிருந்தது, அருகில் சிறுவர்கள் ஊஞ்சலாடி விட்டுப்போன சங்கிலியில் பலகை மட்டும் ஆடிக்கொண்டிருந்தது- வெறுமையான அவளது உணர்வுகளைச் சுமந்தபடி.